Wednesday, November 5, 2008

அம்மா


பாலுவோட அம்மா செத்துப் போயிட்டாங்க.

நம்பவே முடியல. எங்கிட்ட எவ்வளவு அன்பா இருப்பாங்க. பாலு வேற யாருமில்ல, அவந்தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அவன் அம்மா, அவனோட சேர்த்து என்னையும் தன் மகன் மாதிரியே நடத்துவாங்க. அவங்க சமையல் எனக்கு புடிக்கும்னு தெரிஞ்சு நான் எப்ப போனாலும் ஏதாச்சும் செய்து தராம இருக்க மாட்டாங்க. எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. அவங்கள பார்க்கும்போதெல்லாம் என் அம்மாவும் எப்ப இப்பிடி முகம் நிறைய சிரிப்பாங்கன்னு ஏக்கமா இருக்கும்.

என்ன ஆயிருக்கும்? யாருக்கும் தெரியல. பாலுவுக்குக் கூட தெரியல. பாலுவோட அப்பா பெரிய வேலையில இருக்காரு. நல்ல வசதியானவங்க. அவங்களுக்கு என்ன கொறை இருக்க முடியும்னு யாருக்கும் ஊகிக்க முடியல. எட்டாவது படிக்கிற செல்லப் புள்ளைய விட்டுட்டு தற்கொலை பண்ணிக்க அவன் அம்மாவுக்கு எப்பிடி மனசு வந்துச்சோ? பாலு அழவே இல்லை. “என் மேல உண்மையான அன்பிருந்தா இப்பிடி பண்ணியிருப்பாங்களா?” அப்பிடின்னு ஒரே ஒரு தரம் சொன்னான். அவ்வளவுதான். அப்புறம் அதைப் பத்திப் பேசறதே இல்ல. அம்மாவைப் பத்தி பேச்செடுத்தாலே கண்ணும் மொகமும் செவசெவன்னு ஆயிரும் அவனுக்கு. ஒடனே அந்த எடத்த விட்டு எந்திரிச்சு போயிருவான்.

நேத்து சாயந்திரம் எங்கப்பா மறுபடியும் குடிச்சிட்டு வந்து எங்கம்மாவை நல்லா அடிச்சிட்டாரு. அவரு எவ்வளவு அடிச்சாலும் பேசுனாலும் என் அம்மாகிட்ட இருந்து ஒரு சத்தம் வராது. என் அம்மா அழுது நான் பார்த்ததில்ல. அவங்க சந்தோஷமா சிரிச்சும் பார்த்ததில்ல. என்னைப் பார்த்தா மட்டும்தான் அவங்ககிட்ட இலேசா ஒரு புன்னகை எட்டிப் பார்க்கும். அவங்க கலகலன்னு சிரிச்சு நான் பார்த்ததே இல்ல. ஒண்ணுமே நடக்காத மாதிரி இருப்பாங்க. எங்கிட்ட எப்பவும் போல ஸ்கூல்ல என்ன நடந்துச்சுன்னு கேட்டுக்கிட்டு… எனக்குப் புடிச்சதை சமைச்சுக்கிட்டு… என்னை கவனிச்சுக்கிட்டு… வீட்டு வேல பாத்துக்கிட்டு… ஒரு வேளை… என் அம்மாவும் பாலு அம்மா மாதிரி ஒரு நாள்… ம்ஹூம். என் அம்மா அப்பிடி செய்ய மாட்டாங்க. செய்யவே மாட்டாங்க. தலையை வேகமா ஆட்டி அந்த நெனப்ப ஒதறினேன்.

அன்னிக்கு சாயந்திரம் வீட்டுக்கு வந்தப்ப, எங்க வீடு முன்னாடி ஒரே கூட்டமா இருந்திச்சு. எனக்கென்னமோ ரொம்ப கலக்கமா போச்சு. எல்லாரும் என்னைய இரக்கமா பாக்கறாங்க. சில பேர் கண்ணு கலங்கியிருக்கு. மெதுவா வீட்டுக்குள்ள தயங்கித் தயங்கி போறேன். அங்க நடு வீட்ல படுத்திருக்கது… யாரு? அம்மாவா? யாரு அது? அப்பாவா அம்மாவுடைய காலைப் பிடிச்சுக்கிட்டு அழறாரு?

அவ்வளவுதான். அதுக்கு மேல பார்க்க முடியல என்னால. நான் பயந்துகிட்டே இருந்தது இன்னிக்கு நடந்துருச்சா? கண்ணை இறுக மூடிக்கிட்டு, ரெண்டு கையாலயும் மொகத்த மூடிக்கிட்டு, “அம்மாஆஆஆஆஆஆஆஆஆ” ன்னு ஒலகம் பூரா கேக்கற மாதிரி கத்தறேன்.

“கண்ணா… என்ன ஆச்சு? இங்க பாரு”, அப்படின்னு என்னை யாரோ உலுக்கறாங்க. மொகத்த மூடின கையை எடுக்காம, “வேண்டாம் வேண்டாம்” அப்பிடின்னு இன்னும் கத்தறேன். “கண்ணா… இங்க பாரு… அம்மா வந்திருக்கேண்டா…கெட்ட கனவு கண்டியா?” சொல்லிக்கிட்டே என் கைய மெதுவா பிரிக்கிறாங்க அம்மா. “அம்மா…அம்மா…”, ன்னு அவங்களக் கட்டிக்கிட்டு தேம்பித் தேம்பி அழறேன். ஒண்ணும் புரியாத அம்மா என்னை இறுக்கி அணைச்சுக்கறாங்க.


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://flickr.com/photos/darksilver/149586991/sizes/m/

28 comments:

  1. தன் அம்மா பாலுவின் அம்மாவைப் போல வாய் நிறைய சிரிக்க மாட்டார்களா என்றெல்லாம் நினைத்தவன் தனக்காகவே வாழும் அம்மாவைப் புரிந்து கொண்ட விதம் அருமை. பாலு அம்மாவின் மறைவு அந்த பிஞ்சு நெஞ்சில் ஏற்படுத்திய கலக்கத்தைப் படிக்கையில் மனம் கனத்துப் போனது.

    வாழ்த்துக்கள் கவிநயா.

    ReplyDelete
  2. பெரியவங்க சண்டை குழந்தையின் மனத்தை எப்படி பாதிக்குதுன்னு அழகா சொல்லிருக்கீங்க கவிநயா.

    ReplyDelete
  3. குழந்தையின் பார்வையில் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அண்மையில் இங்கே நடந்ததின் தாக்கத்தினால் எனக்கு அந்த குழந்தைகள்தான் கண்முன் நிற்கின்றனர்.

    ReplyDelete
  4. படத்துக்காக கதையா, கதைக்காக படமா? அந்த படம் இல்லாமலிருந்தால் கதையினோட தாக்கம் கொஞ்சம் கொறஞ்சுதான் போயிருக்கும்.

    எளிமையா அழகா சொல்லியிருக்கீங்க. பாராட்டுகள்.

    ReplyDelete
  5. அம்மா நல்ல அம்மா.
    நிறைய நாள்
    இந்தப் பிள்ளையோடு இருக்கட்டும் சிரிப்பும் சீரும் வரட்டும்.
    கவிநயா , மனம் கலங்கிவிட்டது.
    வாழ்த்துகள்மா.

    ReplyDelete
  6. சின்னக்கதை தான்...ஆனால் சொல்லும் முறையும் சொன்ன சேதியும் அபாரம்..

    குடும்ப வன்முறைகள் எப்பொழுதும் பிஞ்சுகளின் உள்ளங்களில்தான் பெருந் தீயதை விதைத்துச் செல்கின்றன.

    அருமையான கதை.
    பாராட்டுக்கள் சகோதரி !

    ReplyDelete
  7. அன்பின் கவிநயா

    மனதை உருக்குகிறது - கதை

    மழலைகளின் மனதைப் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. //பாலு அம்மாவின் மறைவு அந்த பிஞ்சு நெஞ்சில் ஏற்படுத்திய கலக்கத்தைப் படிக்கையில்//

    சரியான புரிதலுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  9. //பெரியவங்க சண்டை குழந்தையின் மனத்தை எப்படி பாதிக்குதுன்னு அழகா சொல்லிருக்கீங்க கவிநயா.//

    உங்களுடையது முதல் வருகைன்னு நினைக்கிறேன். வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் நன்றிகள் பல, சின்ன அம்மிணி.

    ReplyDelete
  10. //அண்மையில் இங்கே நடந்ததின் தாக்கத்தினால் எனக்கு அந்த குழந்தைகள்தான் கண்முன் நிற்கின்றனர்.//

    ஆம் நாகு. அந்த பாதிப்பால் உருவான கதைதான் இது. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. //படத்துக்காக கதையா, கதைக்காக படமா?//

    வருக கபீரன்பன் ஐயா. கதைக்காகத்தான் படம். தேடும்போது பொருத்தமாக அமைஞ்சிடுச்சு. மிக்க நன்றி.

    ReplyDelete
  12. //நிறைய நாள்
    இந்தப் பிள்ளையோடு இருக்கட்டும் சிரிப்பும் சீரும் வரட்டும்.//

    வருக வல்லிம்மா. இதைப் போல பிள்ளைகளுக்காகவே வாழுகின்ற அம்மாக்கள் நிறையவே இருக்கிறார்கள் அம்மா. அவர்களுக்கெல்லாம் உங்கள் வாழ்த்து ஆசியாக அமையட்டும்.

    ReplyDelete
  13. //சின்னக்கதை தான்...ஆனால் சொல்லும் முறையும் சொன்ன சேதியும் அபாரம்..//

    ஆஹா, சிறுகதை இளவலே இப்படிச் சொன்னோன்ன சந்தோஷமாயிடுச்சு :) நன்றி ரிஷு.

    ReplyDelete
  14. //மனதை உருக்குகிறது - கதை//

    வருக சீனா ஐயா. முதல் முறையா வந்திருக்கீங்க. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete
  15. ரொம்ப நல்லா வந்திருக்குங்க...ஏதோ ஒரு நிகழ்ச்சியின் தாக்கம் என்று வேறு சொல்லியிருக்கீங்க...

    ReplyDelete
  16. பாலுவைப் பார்த்திருக்கிறீர்களா? பார்க்க வேண்டுமென்றால் மினியாபொலிஸ் வாங்க.

    ReplyDelete
  17. இயல்பாக இருக்கிறது

    வாழ்த்துகள்

    ReplyDelete
  18. அழகா சின்னதா நச்சுன்னு எழுதி இருக்கீங்க..

    ReplyDelete
  19. ஒரு விஷயம் சொல்லவா கவிநயா..
    நேத்து இந்த கதையின் முதல் வரி படிச்சிட்டு, அடுத்து தொடர்ந்து படிக்காம போயிட்டேன்.. அடுத்து படிக்க பயமா இருந்துச்சு..
    இன்னைக்கு மறுபடியும் முழுசா படிச்சேன்..

    ReplyDelete
  20. //எம்.ரிஷான் ஷெரீப் said...
    சின்னக்கதை தான்...ஆனால் சொல்லும் முறையும் சொன்ன சேதியும் அபாரம்..

    குடும்ப வன்முறைகள் எப்பொழுதும் பிஞ்சுகளின் உள்ளங்களில்தான் பெருந் தீயதை விதைத்துச் செல்கின்றன. //

    ரிப்பீட்டு..

    ReplyDelete
  21. தலைப்பை பார்த்ததும் ஆசையாக வந்தேன்..கதையின் தொடக்க வரிகளை படிக்கும் போது ஒருவித பயம்...;(

    நன்றாக எழுதியிருக்கிங்க...வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  22. //ரொம்ப நல்லா வந்திருக்குங்க...ஏதோ ஒரு நிகழ்ச்சியின் தாக்கம் என்று வேறு சொல்லியிருக்கீங்க...//

    நன்றி மௌலி. சமீபத்துல எங்க ஊர்ல ஒரு சம்பவம் நடந்தது. ரெண்டு குழந்தைகளின் தாய். அதன் தாக்கத்தால் விளைந்ததே இந்தக் கதை.

    ReplyDelete
  23. //பாலுவைப் பார்த்திருக்கிறீர்களா? பார்க்க வேண்டுமென்றால் மினியாபொலிஸ் வாங்க.//

    வருத்தம் தரும் விஷயம் குமரா. எங்க ஊர்லயும் பார்க்கலாம் :(

    ReplyDelete
  24. வாங்க சரவணகுமார். ரசிச்சதுக்கும் ரிப்பீட்டுக்கும் நன்றி.

    //நேத்து இந்த கதையின் முதல் வரி படிச்சிட்டு, அடுத்து தொடர்ந்து படிக்காம போயிட்டேன்.. அடுத்து படிக்க பயமா இருந்துச்சு..//

    அப்படியா. மன்னிச்சுக்கோங்க.
    சில விஷயங்களைத் தாங்கிக்கிறது, கதைன்னா கூட சுலபமில்லதான். திரும்ப வந்து படிச்சதுக்கு மிக்க நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  25. //தலைப்பை பார்த்ததும் ஆசையாக வந்தேன்..கதையின் தொடக்க வரிகளை படிக்கும் போது ஒருவித பயம்...;(//

    அச்சச்சோ. உங்களுக்குமா கோபி. மன்னிச்சுக்கோங்க. ரொம்ப கனமான கதையப்போ முதல் வருகை தந்திருக்கீங்க. என் எல்லாப் பதிவும் இப்படி பயமா இருக்காதுன்னு உறுதி அளிக்கிறேன் :) வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  26. //இயல்பாக இருக்கிறது//

    மிக்க நன்றி திகழ்மிளிர்.

    ReplyDelete
  27. பிரம்மாதம் கவிநயா. கதை ரொம்ப பிடித்தது. அந்தச் சிறுவனின் தவிப்பு கண்முன் நிழலாடியது. முடிவு ஆறுதலாகவும் இருந்தது.

    ReplyDelete
  28. //கதை ரொம்ப பிடித்தது.//

    மிக்க மகிழ்ச்சி ரமேஷ். மிக்க நன்றியும்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)