"தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்" கம்பீரமான மிருதங்கத்தின் தாள கதிக்குத் தகுந்தபடி வேகமாகச் சுழன்று ஆடுகிறாள், அந்தச் சிறுமி.
கச்சிதமான பட்டுப் பாவாடை சட்டையில், கர்ப்பக்கிருகத்திலிருந்து அப்போதுதான் எழுந்து வந்த அம்மன் போல் அப்படி ஒரு அழகு! சலங்கை கட்டிய கால்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு அவயமும் அபிநயம் பிடிக்கிறது, அபிநயா என்ற அவள் பெயருக்கு ஏற்றாற்போல்.
அவள் ராதாவாக கண்ணனை வரிக்கையில் அவளோடு சேர்ந்து அனைவருக்கும் கன்னம் சிவக்கிறது, வெட்கத்தில். அவள் யசோதாவாக மாறி சின்னக் கண்ணனைக் கூப்பிடுகையில், அனைவரும் திரும்பி அந்தத் திசையில் பார்க்கிறார்கள், உண்மையாகவே அங்கே கண்ணன் நிற்பதைப் போல்; அவன் பவழ வாய் திறந்து அவளுக்கு உலகத்தைக் காண்பிக்கையில், அவளோடு சேர்ந்து அனைவரும் அந்தக் காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்து நிற்கிறார்கள். அவள் ஆட்டம் மட்டுமின்றி, பாட்டும், மிருதங்கமும், நாதஸ்வரமும் கூட அந்த அரங்கத்தில் மாயாஜாலம் போல அற்புதமாக ஒலிக்கின்றன. ஒவ்வொரு ஒலி வடிவிலும், அவளும் தன் சலங்கைகளுடன் ஏறிப் பயணம் செய்வது போன்ற பிரமை.
பார்வையாளர்கள் அனைவருக்கும் நடனம் முடிந்தது கூடத் தெரியவில்லை; இன்னும் அந்த இனிய மந்திரத்துள் கட்டுண்டு மயங்கிக் கிடக்கிறார்கள். அரங்கமெங்கும் பூரண நிசப்தம். ஒரு நிமிடம்தான். பிறகு அரங்கம் அதிரும் அளவுக்கு எழுந்த கரவொலி வானைப் பிளக்கிறது. வாத்தியக் கோஷ்டியும், அவளும் மேடைக்கு நடுவில் வந்து வணங்குகிறார்கள். ஒரே கணத்தில் சின்னஞ்சிறுமியாக மாறி, பட்டுப் பாவாடையின் இரண்டு பக்கங்களையும் விரித்துப் பிடித்துக் கொண்டு மேற்கத்திய நடன மாதர்கள் போல் தலையைக் குனிந்து வந்தனம் அபிநயிக்கிறாள், கன்னங்குழியச் சிரித்தபடி. இந்தக் குறும்புக் காரக் குழந்தையா இவ்வளவு நேரம் காதல் வயப்பட்டாள், யசோதாவாக மாறிக் கண்ணனைக் கண்டித்தாள், என்று எல்லோருக்கும் மிகவும் அதிசயமாக இருக்கிறது.
அன்று அந்த மேடையில் இருந்தவர்கள் எல்லோருமே சின்னஞ்சிறார்கள்தான். ஏன், பார்வையாளர்களிலும் பெரியவர்கள் கொஞ்சம்தான் இருக்கிறார்கள். இனி அடுத்த நிகழ்ச்சி நடக்கும் வரை அனைவரும் இந்த நிகழ்ச்சியைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். மேடையை விட்டு இறங்கியதும், அனைவரும் அருகில் வந்து வாழ்த்துச் சொன்னார்கள்.
மிருதங்கம் வாசித்த பையன் பெயர் பாலா. அவன் மட்டும் அபிநயாவின் அருகில் தங்கினான். "அபி, நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்", என்றான் தயக்கத்துடன்.
அவன் முக பாவத்தைப் பார்த்ததுமே ஏதோ வருத்தத்தில் இருக்கிறான் என்று புரிந்தது, அபிக்கு. "என்னடா ஆச்சு? சும்மா சொல்லு", என்று ஊக்குவித்தாள்.
"அது வந்து... வந்து... எனக்கு அழைப்பு வந்திடுச்சு அபி. நான் நாளைக்கே கிளம்பணும்", குரல் இலேசாக நடுங்குகிறது.
"என்னடா, நிஜமாவா சொல்ற?" அபியின் குரலிலும் கண்ணீரின் ஆரம்பம். என்ன இருந்தாலும், பாலா ஒருவன்தான் அவளுக்கு உயிர் நண்பன். அவனும் போய் விட்டால்? ஆனாலும் இது எதிர்பார்த்ததுதானே? எப்போதும் இங்கு யாராவது வருவதும் யாராவது போவதுமாகத்தான் இருக்கிறது. யாரும் எதுவும் நிரந்தரமில்லை என்பது தெரிந்த விஷயம்தானே?
பாலாவை இப்போதுதான் பார்த்தது போல் இருக்கிறது. அவள்தான் முதலில் இங்கு வந்தாள். வந்த புதிதில் ஒன்றுமே புரியவில்லை. முதலில் பயந்தாலும், இயல்பான தன் தைரியத்தால் சீக்கிரம் பழகி விட்டாள். அவள் வந்து சில நாட்களில் பாலா வந்தான். அவளைப் போல் அவன் தைரியமாக இல்லை. வந்த போதே பயத்திலேயே மயங்கி விழுந்து விடுவான் போல இருந்தது. இவள்தான் அவனுக்கு ஆறுதல் சொல்லி, இந்த இடத்தைப் பற்றி விளக்கித், தன் அருகிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டாள். பிறகு சீக்கிரத்தில் இருவரும் சிறந்த நண்பர்களாகி விட்டார்கள். அந்த பாலாதான் இப்போது போகிறேன் என்கிறான். துக்கம் தொண்டையை அடைக்கிறது, அபிக்கு. பாலாவுக்கு அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. இத்தனை நாளும் அபிதான் அவனுக்கே ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
வழக்கம் போல வெகு சீக்கிரம் தன்னைத் தேற்றி கொண்டு விட்டாள், அபி. "சரி, இனிமே நம்ம கவலப்படக்கூடாது. உண்மையிலேயே உனக்கு இது சந்தோஷமான விஷயம். இந்த இடத்துக்கு வந்துட்டு திரும்பிப் போற சந்தர்ப்பம் எல்லாருக்கும் எப்போதும் கிடைக்கிறதில்லன்னு உனக்குத் தெரியுமே? அதனால நீ கிளம்பற வரைக்கும், நம்ம சந்தோஷமா இருக்கணும். சரியா?" வரவழைத்து கொண்ட உற்சாகத்துடன் அவன் கையைப் பிடித்து இழுத்துச் செல்கிறாள்.
"உனக்கு அழைப்பு எப்படி வந்தது?" ஆவலுடன் கேட்கிறாள். முன்பே சிலரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறாள். இருந்தாலும் பாலாவையும் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசை.
"என் கனவில் வந்தது. என்னைப் போலவே இருக்கிறவர் ஒருத்தர், ஆனால் என்னை விடப் பெரியவர், என் கனவில வந்தார். வந்து, 'தயவு செய்து என்கிட்ட திரும்பி வந்துடு. இனி உன்னை மறக்கவே மாட்டேன்; பிரியவே மாட்டேன். இது சத்தியம்', னு சொல்லி ரொம்பக் கெஞ்சினார்"
"இங்க சில பேரெல்லாம் அவங்க கனவுல வந்த அழைப்ப நம்பாம போகாமயே இருந்திட்டாங்க. தெரியுமா? ஆனா நீ அப்படி இருக்க வேண்டாம். நீ சொல்றதப் பாக்கும் போது அவர் உண்மையாகவேதான் உன்னைக் கூப்பிடறாப்ல தோணுது", என்றாள் அபி.
அது ஒரு வினோதமான உலகம். காணாமல் போன, கண்டு கொள்ளாமல் போன, அடியோடு மறந்து போய் விட்ட பல்லாயிரம் திறமைகள் சேர்ந்து (§)தங்கியிருக்கும் உலகம். அங்கு நிறம், மொழி, இன பேதங்கள் கிடையாது. அநேகம் பேர் சிறு வயதிலேயே திறமைகளை அடையாளம் கண்டு கொள்ளாமலோ, வளர்த்துக் கொள்ளாமலோ நிராகரித்து விடும்போது, அவை எல்லாம் இங்கு வந்து வசிக்க நேரிடும். அபூர்வமாக சிலர் பெரியவர்களாகும் வரை திறமைகளை வளர்த்து விட்டுப், பிறகு அவற்றுக்குத் தீனி போட நேரமின்றி அவற்றை மறந்து விடுவது உண்டு. அந்த மாதிரி மறக்கப்பட்ட திறமைகளும் இங்குதான் வந்து சேரும். பெரியவர்களான பின் சிலர் தாங்கள் அது வரை நினைக்காமலிருந்த திறமைகளை மறுபடியும் வரவழைத்து வளர்த்துக் கொள்ள முனைகையில்தான் பாலா போன்றவர்களுக்கு மறு வாழ்வு கிடைக்கிறது.
பாலாவுக்கும் அவன் திரும்பிப் போவது குறித்து மிகவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது, அபியைப் பிரிய வேண்டும் என்பது தவிர அவனுக்கு வேறு வருத்தம் இல்லை. சிறுவர்களை விடச் சிறுமிகளுக்கு அழைப்பு வருவது இன்னும் அரிது என்பது அவனுக்கும் தெரியும். "கவலைப் படாதே, அபி. உனக்கும் ஒரு நாள் அழைப்பு வரும், பாரேன்", நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளுடன், பாலாவும் கிளம்பி விட்டான்.
அபி காத்துக் கொண்டிருக்கிறாள்.
--கவிநயா
பி.கு. இந்தக் கதை முன்பு 'திசைகளி'ல் வெளியானது.
படத்துக்கு நன்றி: http://flickr.com/photos/deep_shot/2048096515/