Thursday, August 28, 2008

சுயம்


(அறிவியல் புனை கதை)

"லலல்லல்லா, லலல்லல்லா", வீட்டுக்குள் நுழையும் போதே, சந்தோஷப் பாடல் உதடுகளில் விளையாட, கால்கள் அதற்கேற்ப ஜதி போடுகின்றன. செல்ல மகளின் துள்ளலைப் பார்த்து ரசித்தபடி அவளுடனே உள்ளே வருகிறார்கள், அவள் பெற்றோர், மதுமிதாவும், மதனும். "மிஸ் சென்னை" யாக அழகிப் போட்டியில் வாங்கிய கோப்பைக்கு மறுபடியும் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுக்கிறாள், இஷா. பெற்றோர் இருவர் கழுத்துக்களையும் கட்டிக் கொண்டு, முத்தமிட்டு, அவர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவிக்கிறாள்.

"அம்மா, அப்பா, நான் சீக்கிரம் கிளம்பி வர்றேன்; நீங்களும் ரெடியாகுங்க", உற்சாகமாகத் துள்ளிக் கொண்டு குளியலறையில் நுழைந்து கொள்கிறாள். அன்றைக்கு அவர்கள் மூவரும் சில குடும்ப நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் போய்க் கொண்டாடுவதாக ஏற்பாடு.

மதுவும், மதனும், அன்று முடிந்த அந்த அழகிப் போட்டியின் சிறப்பைப் பற்றிச் சிறிது நேரம் சிலாகித்துப் பேசி விட்டு, உடை மாற்றித் தயாராகவும், இஷா கீழே வரவும் சரியாக இருக்கிறது.

"அம்மா, எப்படி இருக்கு?" முன்னும் பின்னுமாகத் திரும்பி, விளம்பரப் பெண்ணைப் போல் நின்றும் நடந்தும் காட்டுகிறாள்.

"என் பெண்ணைப் போல் அழகு யாருக்காவது வருமா?" அப்போது அங்கு வந்த மதன், மகளைத் தோளோடு அணைத்து உச்சி முகர்கிறான்.

தன் பெண்ணைத் தூரத்திலேயே நின்று இன்னும் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள், மது. நல்ல ஆழச் சிவப்பில் சரிகை வேலை செய்யப்பட்ட ரெடிமேட் உடையும், அதற்கெற்றவாறு மற்ற அணிகலன்களும், சீராக வாரப்பட்ட நீண்ட கருங்கூந்தலுமாய், கண்ணைச் சுண்டியிழுக்கும் அழகுடன், அந்தப் பதினாறு வயதுக்கே உரிய உடல்வாகுமாய்... இப்படியாக நினைப்பு ஓடுகையில், நூல் பிடித்தாற்போல் இஷாவின் பிறப்பையும் பின்னால் திரும்பிப் பார்க்கிறது, மதுவின் மனசு.....

குழந்தையின் முகத்தைப் பார்த்ததும், மதுவின் முகம் சுளிக்கிறது, மிக இலேசாக. "அழகான குழந்தைகள் உத்தரவாதம்", என்ற வாசகம் விதவிதமான வடிவங்களில், அந்த மருத்துவமனை எங்கும் அறிவிப்பாய்த் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் ரமணி ராகவன், சற்றே திரும்பி அவள் கணவன் மதனின் முகத்தைக் கவனிக்கிறார். அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை; சற்று முன் மலர்ந்த முகம் அப்படியே இருக்கிறது. மதுவின் முக மாற்றத்தைக் கூட அவன் இன்னும் கவனிக்கவில்லை. ஆவலுடன் குழந்தையையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

நினைத்துப் பார்க்கையில் அவனுக்கு இன்னும் நம்பவே முடியவில்லை. இயற்கையாகக் கருத்தரித்துக் குழந்தை பெற்றுக் கொள்வது மிக மிக அரிதாகிவிட்ட இந்த இரண்டாயிரத்து இருநூறுகளில், இவர்கள் இருவருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது.

"குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது இப்படித்தான் இருப்பாள்... பத்து வயதில் இப்படி...", கணிப் பொறியைத் தட்டியபடி, ஒவ்வொரு வயதுத் தோற்றத்தையும், மதுவிற்கும், மதனுக்கும் காட்டுகிறார், ரமணி. மதுவின் முகச் சுளிப்பு இன்னும் மாறவில்லை.

"டாக்டர், இந்தக் குழந்தையைப் பத்தி எனக்குன்னு சில ஆசைகள், கனவுகள் இருக்கு...", மெதுவாக ஆரம்பிக்கிறாள், மது.

கனவிலிருந்து விழித்தாற்போல், அவள் குரலைக் கேட்டதும், அவள் பக்கம் திரும்புகிறான், மதன்.

"சொல்லுங்க, மது", அவளை ஊக்குவிக்கிறார், ரமணி.

"என் குழந்தை பெண் குழந்தையாயிருப்பது பத்தி எனக்குக் கவலை இல்ல. ஆனால் எனக்கு என் பெண் உலக அழகியாய் வரணும்னு ஆசை. ஆனா அவளுக்குப் பாருங்க - (ஐந்து வயதுப் படத்தைச் சுட்டிக் காட்டுகிறாள்) - முடி ரொம்பச் சுருட்டையாக இருக்கு. கண்ணைப் பாருங்க, கொஞ்சம் மாறுகண் போல இருக்கு. அப்புறம், இதப் பாருங்க - (பதினாறு வயதுப் படத்தைச் சுட்டுகிறாள்) - இந்தப் படத்தில் ரொம்ப குண்டா இருக்கா", வேகமாக அடுத்தடுத்த வயதுப் படங்களைப் பார்வையிடுகிறாள். எல்லாவற்றிலும் கொஞ்சம் சதைப் பிடிப்பான உடல் வாகுடன், குண்டுக் கன்னங்களுடன் இருக்கிறாள், அந்தப் படத்திலிருப்பவள்.

மதன் அதிர்ச்சியுடன் தன் மனைவியைப் பார்க்கிறான். "மது, எது எப்படி இருந்தாலும், அவ நமக்குக் கிடைச்சிருக்கிற அதிர்ஷ்டம். அவளை அப்படியே ஏத்துக்கிறதுதான் நல்லது".

"மது, இப்போதெல்லாம் இயற்கையாய்க் கருத்தரிக்கிறது ரொம்பக் குறஞ்சிட்டுது... எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை. அதனால இப்பல்லாம் யாருமே காத்திருக்கிறதோ, முயற்சி செய்யறதோ கூட இல்ல. குழந்தை வேணும்னு தோணின உடனேயே இந்த மாதிரி ஒரு மருத்துவமனைக்கு வந்துடறாங்க. என்ன நிறத்துல கண்ணு வேணும், என்ன நிறத்துல முடி இருக்கணும், என்ன உயரம் இருக்கணும், இப்படி எல்லாத்தையும் யோசிச்சுத் தீர்மானம் பண்ணி எங்கள்ட்ட கொடுத்துர்றாங்க. நாங்களும் அதுக்குத் தகுந்த மாதிரி குழந்தையை உருவாக்கித் தர்றோம். அந்த அளவுக்கு இப்ப மருத்துவமும், விஞ்ஞானமும் வளர்ச்சி அடைஞ்சிருக்கு."

"ஆனா நீங்க அப்படி இல்ல. நீங்க இவ்வளவு நாள் காத்திருந்து இயற்கையா குழந்தை வேணும்னு முயற்சி செஞ்சீங்க. அதே போல இப்ப இயற்கையாக் கர்ப்பம் தரிச்சிருக்கீங்க. உங்க கர்ப்பத்தை ஸ்கான் பண்ணி, குழந்தையைப் பத்தின விவரமெல்லாம் இப்ப உங்களுக்குக் காண்பிச்சிட்டு இருக்கேன்"

ரமணி தொடர்ந்து பேசுகிறார்:

"அதோட இந்தப் படங்கள்லாம் உங்களுக்கு ஒரு ஐடியாவுக்காகத்தான். இதே போலத்தான் அப்படியே இருப்பானு சொல்ல முடியாது. என்ன இருந்தாலும் இதெல்லாம் கணிக்கிறது ஒரு இயந்திரம்தானே? உங்க பெண் அழகியா வரணும்னா, அவ பிறந்து வளர்ந்தப்புறம், அதற்காக செய்யக்கூடிய விஷயங்கள், முயற்சிகள், எவ்வளவோ இருக்கு"

"நீங்க நினக்கிற மாதிரி மாற்றங்கள் பண்ணலாம். ஆனால் அது இயற்கையா கரு உண்டானவங்களுக்குப் பண்றது கொஞ்சம் சிரமம். நீங்க மருத்துவமனையில ஒரு வாரமாவது தங்க வேண்டி இருக்கும்; செலவும் கொஞ்சம் அதிகமாகும்"

மது குறுக்கிடுகிறாள்: "நாங்களே அதெல்லாம் பத்திக் கவலப்படல; உங்களால முடியுமா, முடியாதான்னு மட்டும் சொல்லுங்க டாக்டர். இல்லன்னா நாங்க வேற மருத்துவமனைக்கு போறோம்"

"எங்களால கண்டிப்பா முடியும்மா. நீங்க வேண்ணா வீட்டுக்குப் போயிட்டு, உங்க கணவரோட நல்லா யோசனை பண்ணிட்டு, என்னக் கூப்பிடுங்க. அப்புறம் நம்ம மத்த ஏற்பாடுகளக் கவனிக்கலாம்", உரையாடல் முடிந்ததற்கு அடையாளாமாக எழுந்து நிற்கிறார், ரமணி.

வீட்டில் போய் யோசனை செய்ததில் மதுவின் பிடிவாதம்தான் வெல்கிறது. இப்படி சுலபமாக ஒரு வழி இருக்கும் போது, அவள் அதை மிஸ் பண்ண விரும்பவில்லை. கரு மதுவின் விருப்பம் போல் மாற்றி அமைக்கப்படுகிறது.....

"அம்மா, அம்மா", மதுவின் அருகில வந்து அவள் தோள்பட்டையைப் பிடித்து உலுக்குகிறாள், இஷா. மது வேகமாக இந்த உலகுக்குத் திரும்புகிறாள். "என்னம்மா, நீ ஒண்ணுமே சொல்லலயே?" செல்லமாகச் சிணுங்கும் மகளின் கன்னங்களை வழித்துத் திருஷ்டி கழித்தபடி, கணவன் பக்கம் திரும்புகிறாள். "மதன், நான் அன்னைக்கு கருவை மாத்தி அமைக்கச் சொன்னப்ப என் முடிவைத் தப்புன்னு சொன்னீங்களே? இப்ப பாருங்க, இஷாவை. எவ்வளவு அழகா, எவ்வளவு சந்தோஷமா இருக்கா?" பெருமிதத்துடன் கேட்கிறாள்.

மதன் அதிர்ந்து போய் அவளைப் பார்க்கிறான். இதைப் பற்றி அவர்கள் இஷாவிடம் இது வரை பேசியதில்லை. வேகமாக "சொல்ல வேண்டாம்" என்பதாக மதுவிற்குக் கண் ஜாடை காட்ட முயற்சிக்கிறான். ஆனால், தனக்கு இருந்த உற்சாகத்தில், மது அவனைக் கவனிக்கவில்லை.

"என்னம்மா சொல்றீங்க? நான் உங்களுக்கு இயற்கையாப் பொறந்தவ தானே?" புரியாமல் கேட்கும் இஷாவிற்கு, விளக்கமாக தான் கர்ப்பம் தரித்தபின் நடந்தவைகளை எடுத்துரைக்கிறாள்.

சொல்லச் சொல்ல இஷாவின் முகம் எதனால் வாடிக் கொண்டே போகிறது என்று அவளுக்குப் புரியவில்லை.

"ஏம்மா, அப்ப நான் நானாகப் பிறந்திருந்தா என்ன வெறுத்திருப்பீங்களா? நான் இப்ப அழகா உங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கிறதுனாலதான் என் மேல் பாசம் வச்சிருக்கீங்களா?" வருத்தமும் கோபமும் கலந்த குரலில் கேட்டு விட்டு வேகமாகத் தன் அறைக்குச் சென்று கதவை அறைந்து தாளிட்டுக் கொள்கிறாள். கோபத்தில் தன் அலங்காரங்களைக் கன்னா பின்னாவென்று கலைத்து வீசி எறிகிறாள். அழகுக் கிரீடமும், கோப்பையும் மூலைக்கு ஒன்றாகப் பறக்கின்றன. கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை ஒரு முறை முழுமையாகப் பார்க்கிறாள்.

வேறு யாரையோ புதிதாகப் பார்ப்பது போல் இருக்கிறது, அவளுக்கு.


--கவிநயா

இந்தக் கதை "திசைகளில்" வெளியானது.
படத்துக்கு நன்றி:
http://www.flickr.com/photos/wallyg/562980590

Sunday, August 24, 2008

தண்ணியில தாமரப்பூ...


தண்ணியில தாமரப்பூ
தள்ளாடி மறுகுதடி
சேத்துவச்ச சேறுஅத
உள்ளுக்குள்ள இழுக்குதடி

சிக்கிக்கிட்ட தாமரக்கு
தப்பவழி இல்லயடி
கத்துக்கிட்ட பாடம்ஒண்ணும்
கைகுடுக்க வில்லயடி

ஆனாலும் தாமரப்பூ
அசந்துபோக வில்லயடி
மறுகித் தொவளும்போதும்
மனஞ்சளக்க வில்லயடி

மூச்சப் புடிச்சிக்கிட்டு
மேலஎட்டிப் பாக்குதடி
பச்சப் புள்ளயப்போல
பளிச்சுன்னுதான் சிரிக்குதடி!

--கவிநயா

Wednesday, August 20, 2008

மரம் வைத்தவன்


வந்த கோபத்தில் என் கையை முறித்து அவன் மேல் எறிந்தேன்.

பக்கத்தில் நின்றிருந்த புதியவன், அவசரமாக அவனை எதிர்ப்புறம் இழுத்தான். அப்படியும் அவன் மேல் கொஞ்சம் அடிபட்டதைத் தவிர்க்க முடியவில்லை. அவன் தோளைத் தடவி விட்டுக் கொண்டான். இரண்டு பேரும் நிமிர்ந்து பார்த்தார்கள்.

"இந்த மரம் ரொம்ப பலஹீனமாத்தான் இருக்கு. வெட்டுறத ரொம்ப நாள் தள்ள முடியாது", என்றான் புதியவன்.

"ஹ்ம்... அப்படித்தான் தெரியுது", யோசனையாய் என்னைப் பார்த்தபடி, ஒப்புக் கொண்டான் அவன்.

"சரி, அப்ப நான் வர்றேன். இந்தாங்க செக். மீதிப் பணம் அடுத்த வாரம் பாக்கும் போது கொடுத்துர்றேன். பத்து நாள்ல காலி பண்ணீடுவிங்களா?"

கண்கள் மின்ன புதியவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டான், "கண்டிப்பா."

புதியவனை அனுப்பி விட்டு மறுபடியும் என்னிடம் வந்தான். சுற்றி வந்து என்னைத் தடவிக் கொடுத்தான். எல்லாம் ஒரு விநாடிதான். கையிலிருந்த புதையல் நினைவுக்கு வர, விசில் அடித்தபடியே வீட்டுக்குள் சென்றான். இந்தப் பணமெல்லாம் சீட்டு விளையாட்டில் மாயமாய் மறைவதற்கு அவனுக்கு இரண்டு நாள் கூடத் தேவையில்லை.

எப்படி இருந்தவன்! அவனைச் சிறு வயது முதலே எனக்குத் தெரியும். என்றோ தூக்கி எறியப்பட்ட மாங்கொட்டையான நான், சின்னக் கன்றாக எட்டிப் பார்த்த பொழுது உலக அதிசயம் போல் ஊரையே அழைத்துக் குதூகலித்தவன் அவன். என்னோடுதான் எப்போதும் இருப்பான். ஒரு பூவையோ, பிஞ்சையோ அவனுக்குத் தெரியாமல் என்னால் ஒளித்து வைக்க முடிந்ததில்லை. ஒரு நாள் கடைக்குச் சென்ற அவன் அம்மா விபத்து ஒன்றில் சிக்கி, பிணமாகத்தான் திரும்பி வந்தாள். அது முதல் அவன் வாழ்க்கை இறங்கு முகமாகிவிட்டது. சரியாகப் படிக்கவுமில்லை. அப்பாவும் அவனைப் பார்க்கச் சகிக்காமல் இந்த வீட்டை மட்டும் விட்டு விட்டு மாரடைப்பில் போய்ச் சேர்ந்து விட்டார். சொந்த வீடு என்பதால் ஏனோ தானோ வேலைகளில் ஏதோ ஓட்டிக் கொண்டிருந்தான். என் மடியில் படுத்தபடி எவ்வளவோ அழுதிருக்கிறான். நானும் அவனுக்கு முடிந்த வரை தலை கோதி ஆறுதல் சொல்லியிருக்கிறேன். அவன் தன் கைகளால் எனக்குத் தண்ணீர் ஊற்றி வருடக் கணக்காகி விட்டது. அதனாலேயே நோய் கண்டு வாடி வதங்கி விட்டேன். இப்போது எந்தப் புண்ணியவானோ வீட்டை விற்று விட யோசனை சொல்லிக் கொடுத்திருக்கிறான். வீட்டை வாங்கும் புதியவன் என்னை வெட்டி விட்டு வீட்டைப் பெரிதாக்க திட்டம் போடுகிறான்.

"இன்னும் எத்தனை நாளைக்கோ இந்த வாழ்வு?" நொந்தபடி சிலிர்த்துக் கொண்டதில், என் கண்ணீருடன் இலைகளும் சேர்ந்து பொலபொலவென்று உதிர்ந்தன. சில மாதங்களாகத் தொலை தேசத்திற்குச் சென்றிருந்த வானம், இப்போதுதான் நினைவு வந்தது போல் இலேசாக பூமியை நனைக்கத் துவங்குகிறது. சக்தி இழந்து விட்ட வேர்களை நீட்டி ஆவலுடன் பருகுகிறேன். நான் மறுபடியும் செழித்து வளர்ந்தால்... ஒரு வேளை... சோகத்தை உதறி விட்டு நம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கிறேன்!


--கவிநயா

இந்த கதை முன்பு 'திசைகளி'ல் வெளியானது.

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/klashback/162612875/sizes/m/

Thursday, August 14, 2008

என்னையும் ஆண்டு கொள்வாய்!

இன்றைக்கு வரலக்ஷ்மி நோன்பு. ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாருடைய 108 திவ்ய நாமாவளியில கடைசி நாமம் "ஓம் புவனேஸ்வர்யை நமஹ!" அப்படிங்கிறது. அந்த புவன மாதாவை நினைச்சு எழுதின பாடலை இங்கே பதியறேன். படத்திலும் அவளே. (படத்தை க்ளிக்கி பார்க்க மறக்க வேண்டாம்!).

அது மட்டுமில்லாம எனக்கு தோணின மெட்டுல நானே பாடியும் இருக்கேன். யாருப்பா அது... தடதடன்னு ஓடறது?! அட, ஓடாதீங்கப்பா..! ஜகன்மாதாவே கேட்கிறாதானே :) ரொம்ப சிரமமா இருந்தா கண்ணை மூடிக்கிட்டு கேளுங்க! :))


பொன்னை நிகர்த்த.wa...

பொன்னை நிகர்த்த மேனி
கோடிச் சூரியராய் ஜொலிக்க
கண்ணை நிகர்த்தவளே
உன்னைக் காணவே ஓடிவந்தேன்

புன்னகை பார்த் திருந்தேன்
உந்தன் பூமுகம் பார்த்திருந்தேன்
என்னை மறந் திருந்தேன்
உன்னை ஏற்றி மகிழ்ந்திருந்தேன்

மலர்முகம் பார்த் திருந்தேன்
முழு மதிமுகம் பார்த் திருந்தேன்
கனவினில் ஆழ்ந் திருந்தேன்
உந்தன் நினைவினில் தோய்ந்திருந்தேன்

பண்கள் பல பாடி
தினம் போற்றித் துதிக்கின்றேன்
கண்கள் திறவாயோ
அம்மா கருணை செய்வாயோ

புவி எல்லாம் ஆளுகின்ற
எழில் புவனத்தின் ஈஸ்வரியே
என்னையும் ஆண்டு கொள்வாய்
அம்மா இன்னும் தாமதம் ஏன்?

--கவிநயா

Sunday, August 10, 2008

பூ வனத்தில் வரம், இங்கே ஏக்கம்...

சமீபத்தில் பூ வனத்தில் ஜீவி ஐயா வரம் என்னும் சிறுகதை எழுதியிருந்தார். அந்தக் கதை, நீண்ட நாட்களுக்கு முன் அதே கருத்தைக் கொண்டு நான் எழுதிய இந்தக் கவிதையை நினைவுபடுத்தியது. வலைபூவில் பதிவதாக அவரிடமும் கூறியிருந்தேன். அதன்படி...ஏக்கம்

அடுத்த வீட்டுச் சிறுவன்
அறிவுக் களஞ்சியம்;
பக்கத்து வீட்டுச் சிறுமி
பாடினால் குயிலினம்;
நாத்தனாரின் புதல்வி
நாட்டியத்தில் நாயகி;
கொழுந்தனாரின் மைந்தனோ
கராத்தேயில் ப்ளாக் பெல்ட்.
என் பிள்ளைகள் இரண்டும் மட்டும்
எதிலும் இல்லையே
என்று இவள் ஏங்குகையில்,
என் பிள்ளை எதில் என்று
ஏங்க மாட்டேன் நிச்சயம்
எனக்கொரு பிள்ளை வரம்
மட்டும் கிடைத்து விட்டால்...
அதுவே பெரும் பாக்கியம்
என்று அவள் ஏங்குகிறாள்!

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/chrisanddave/510847809/sizes/m/#cc_license

Thursday, August 7, 2008

அம்மாவோட நேயர் விருப்பம்...

"எல்லா கடவுள் மேலயும் பாட்டு எழுதியிருக்கியே, சிவன் மேல ஒண்ணு எழுதேன்", இதான் என் அம்மா என்கிட்ட போன முறை பேசும்போது சொன்னது :) அவங்களுக்காக இந்தப் பதிவு. இதுல கொஞ்சம் cheating இருக்கு! இந்த பாடல்/கவிதை முன்ன எழுதினதுதான். அம்மாவுக்கு நினைவு இருக்காதுன்னு ரொம்ப நம்பிக்கை! சில காலத்துக்கு முன்னாடி "நிலாச்சாரல்"ல பிரசுரமாச்சு. ஆனா அதுல இங்கொண்ணும் அங்கொண்ணுமா சில மாற்றங்களோட, புதிய கடைசி பத்தியோட, இங்கே பதிக்கிறேன். அவன் அருள் இருந்தா புதுசா வேற கூடிய சீக்கிரம் எழுதறேன், அம்மா :)தாண்டவம்!!

நெஞ்சில் கனன்ற நெருப்பு கண்ணில் சிவப்பாய் உமிழ்ந்திடவே!
நெற்றிக் கண்ணின் வெப்பம் புவியைப் பொசுக்கத் தகித்திடவே!
"தனதன தந்தன" நவமணி மாலைகள் நர்த்தனம் புரிந்திடவே!
"தொம் தொம் தொம்" என ஒவ்வொரு அடியிலும் அண்டங்கள் அதிர்ந்திடவே!

கற்றைக்குழ லசைந் தெட்டுத் திசையிலும் காற்றைக் கிழித்திடவே!
காற்சதங் கைமணி ஒன்றுடன் ஒன்று உரசி உயிர்த்திடவே!
"டம டம டம" வென நந்தியின் கைகளில் மேளம் முழங்கிடவே!
"தரிகிட தரிகிட" உடுக்கையின் ஒலிஉல கெங்கும் நிறைந்திடவே!

தீயன யாவையும் அஞ்சி நடுங்கி ஓடி ஒளிந்திடவே!
நல்லவர் யாவரும் போற்றித் துதித்துத் திருவடி பணிந்திடவே!
"தீம் தீம் தீம்" என பாதம் தூக்கிப் பாவங்கள் போக்கிடவே!
"ஓம் ஓம் ஓம்" என ஓதுபவர்க்கு அபயம் அளித்திடவே!

நர்த்தனம் ஆடும் நடனராஜனை காண்போம் வாருங்கள்!
பொற்பதம் பற்றி பார்வதி கணவனை துதிப்போம் வாருங்கள்!
நானிலம் போற்றும் நாயகன் அவனைப் பணிவோம் வாருங்கள்!
‘நமசிவாய’ என நாளும் பொழுதும் சொல்வோம் வாருங்கள்!

--கவிநயா

நடராஜர் படத்துக்கு நன்றி: http://www.yogaelements.com/blog/today-is-the-night-of-shiva.html

Monday, August 4, 2008

எப்போ??


விட்டு விடு தலை யாகி - அந்த
விண்ணில் பறப்பது எப்போ?

பட்ட துய ரங்கள் யாவும் - மண்ணில்
செத்து மடிவது எப்போ?

கட்டிக் கொண்டு வந்த சோறு - அதைத்
தின்று முடிப்பது எப்போ?

முட்டி முட்டி வரும் கண்ணீர் - அது
வற்றித்தான் போவது எப்போ?

சுற்றி வரும் துன்பந் தன்னை - தலை
சுற்றி எறிவது எப்போ?

பற்று ஏதும் இல்லா வாழ்வை - மனம்
பற்றிக் கொள்ளுவதும் எப்போ?


--கவிநயா

***

ஒரு அறிவிப்பு:
இனி எழுதும் அன்னை மீதான பாடல்களையும் பதிவுகளையும், கற்பூரநாயகியே கனகவல்லி வலைபூவில் பதிவதாய் இருக்கிறேன். சென்ற ஆடி வெள்ளிக்கும், இந்த ஆடிச் செவ்வாய்க்கும் பதிவுகள் இட்டிருக்கிறேன். நேரம் கிடைக்கையில் வந்து வாசித்து அன்னையின் அருள் பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.