Monday, July 7, 2014

சாப்பிடத் தெரியுமா உங்களுக்கு?


(பகுதி 2)

இதைப் பற்றி முன்பு ஒரு முறை பேசியிருக்கோம்... அப்ப படிக்காதவங்க இப்ப போய் படிச்சிட்டு வாங்க!

சமீபத்தில் திரு.சுகிசிவம் அவர்கள் இதைப் பற்றிப் பேசியதைக் கேட்டேன். அவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன்:


உணவில் மூன்று விதங்கள் இருக்காம்.

முதலாவதா, வாயிலேயே உமிழ் நீரோட உதவியாலேயே செரிமானம் ஆகக் கூடிய உணவு வகைகள்.  பழங்கள் இந்த வகையைச் சேர்ந்ததாம்.

இரண்டாவதா, இரைப்பையில் போய் சீரணமாகிற உணவு வகைகள். பெரும்பாலான சமைத்த உணவுகள் இந்த வகையைச் சேர்ந்ததாம்.

மூன்றாவதா, சிறுகுடலால் மட்டுமே சீரணிக்கக் கூடிய உணவு வகைகள். எண்ணெயில் பொறித்தெடுக்கிற உணவுகள் (வடை போன்றவை) இந்த வகையைச் சேர்ந்ததாம்.

பழங்களை எப்பவும் சாப்பாட்டுக்கு அப்புறம் சாப்பிடற வழக்கம் இருக்கு. ஆனால் பழங்களை சாப்பாட்டுக்கு முன்னாடிதான் சாப்பிடணுமாம். ஏன்னா அவை வாயிலேயே சீரணிக்கப்படறதோட, அவற்றோட அமிலத் தன்மை, சாப்பாட்டை சீரணிக்கவும் உதவியா இருக்குமாம்.

இரப்பையால சீரணிக்கக் கூடிய உணவுகள் இரைப்பையை அடைஞ்சதும், உணவை அரைச்சு சீரணிக்க வசதியா இரைப்பை மேலேயும் கீழேயும் மூடிக்குமாம்.  அதனால அது மூடின பிறகு வடை போன்ற உணவுகளைச் சாப்பிட்டா அது இரைப்பை வழியா சிறு குடலுக்குப் போக முடியாம, ஏன், இரைப்பைக்கே போக முடியாம, சுத்திக்கிட்டிருக்குமாம். அதனாலதான் நெஞ்சு எரிச்சல் போன்ற கோளாறுகள் ஏற்படுது.

இந்த மாதிரி எதை, எப்ப, எப்படிச், சாப்பிடணும்னு தெரியாததாலதான் பலவிதமான வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் வருது.

அவர் சொன்ன இன்னொரு விஷயம், சாப்பிடறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாலும், பின்னாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது. அப்படிக் குடிச்சா அந்தத் தண்ணீர் வயிற்றுக்குள்ள போயி, உணவைச் செரிக்க வைக்கக் கூடிய அமிலத்தை நீர்த்துப் போக வெச்சிடுமாம். அதனாலேயும் சீரணக் கோளாறுகள் ஏற்படுமாம். அப்படி இருக்கும் போது சாப்பிடும் போது குடிக்கலாமோ? ம்ஹும்… குடிக்கவே கூடாது.

இரவு சாப்பாட்டை சூரிய அஸ்தமனத்துக்கு முன்னேயே சாப்பிட்டுடணும். அல்லது படுக்கைக்குப் போறதுக்குக் குறைஞ்சது இரண்டு மணி நேரம் முந்தி சாப்பிட்டுடணும்.

உணவை நல்லா மென்னு சாப்பிடணும். வாயிலேயே கூழாகிற வரைக்கும் மெல்லணும். அப்படிச் செய்தா உணவைச் சீரணிக்க வயிறு ரொம்பக் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேணாம்… அதனால வயிறு ரொம்பத் தொந்தரவு குடுக்காம, அமைதியா நமக்கு ஒத்துழைக்கும். (இது எங்கேயோ படிச்சது.)

எல்லோரும் நல்லா சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்தோட இருக்கணும்!


அன்புடன்
கவிநயா


Picture credit: http://www.ariix.com/depression-can-alter-eating-habits-how-to-eat-right/

Monday, June 30, 2014

உயர்த்தி

இன்றைக்கு புதுசா ஒரு தமிழ் சொல் கத்துக்கிட்டேன். “elevator” க்கு தமிழில் “உயர்த்தி”யாம்!

சமீபத்தில் எங்க அலுவலகத்தை ஒரு புது கட்டிடத்துக்கு மாத்தினாங்க. அந்தக் கட்டிடத்தில் 6 தளங்கள் இருக்கு. முதல் தளத்தில் உணவுக் கூடம் இருக்கு. மற்ற தளங்களில் வெவ்வேறு அலுவலகங்கள் இருக்கு. இங்கே இருக்கிற உயர்த்திகள் நவீன தொழில் நுட்பத்தில் இயங்கறது. எப்படின்னா… என்னால உணவுக் கூடம் இருக்கிற 1-வது தளத்துக்கும், என் அலுவலகம் இருக்கிற 3-வது தளத்துக்கும் மட்டும்தான் போக முடியும். மற்ற தளங்களுக்குப் போக முடியாது. அதே போல மற்ற தளங்களில் வேலை செய்யறவங்க, எங்க தளத்துக்கு வர முடியாது. அந்த மாதிரி உயர்த்திகளை அமைச்சிருக்காங்க. மொத்தம் 6 உயர்த்திகள் இருக்கு.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு அடையாள அட்டை  குடுத்துருவாங்க. அந்த அட்டையை scan பண்ணினா, (ஆங்கிலம் கலக்காம எழுதணும்னு ரொம்ப முயற்சி பண்ணினேன், ஆனா scan-க்கு தமிழில் என்ன தெரியலை!) நாம எந்தெந்தத் தளத்துக்குப் போக முடியுமோ, அதை மட்டும் காண்பிக்கும் – எனக்கு 1, 3. அதில் எது வேணுமோ அதை அமுக்கினா, 6 உயர்த்திகள்ல எந்த உயர்த்திக்குப் போகணும்னு (A,B,C,D,E,F) சொல்லும். அதில் ஏறினா மட்டும்தான் போக வேண்டிய இடத்துக்குப் போக முடியும். உயர்த்திக்குள்ள ஏறின பிறகு நம்மால ஏதும் செய்ய முடியாது. அதுவா நின்னாதான் உண்டு! நம் கட்டுப்பாடு இல்லாம அதுவா போறது முதல்ல ஒரு மாதிரி இருந்தது… ஆனா இப்ப பழகிடுச்சு.

அது சரி… அதுக்கென்ன இப்ப, அப்படின்னு நீங்க கேக்கறது எனக்குக் கேக்குது. அடையாள அட்டையை scan பண்ணினப்புறம், எந்த தளத்துக்குப் போகணும்னு தேர்ந்தெடுத்ததுக்கப்புறம், ஒரு நொடிதான் ஆகும், நாம் எந்த உயர்த்தியில் ஏறணும்னு அது சொல்றதுக்கு. ஆனா, அந்த ஒரு நொடிக்குள்ள கவனம் சிதறிடுது! ஒரு முறை அது என்ன சொல்லிச்சின்னே கவனிக்காம வேறெதிலேயோ ஏறப் போயிட்டேன். ஏறுறதுக்கு முன்னாடியே சுதாரிச்சிட்டேன். வேறெங்கேயோ போனாலும், அடையாள அட்டையைப் பயன்படுத்தி திரும்பி வந்துரலாம்னு வைங்க. ஆனா… அந்த சில நொடிகள் கூட கவனத்தை ஒருமுகப்படுத்தி வைக்க முடியலையேன்னு எனக்கே வெறுப்பா இருந்தது. ஆனா, என்னை மாதிரியே சில பேர் “Oh, I wasn’t paying attention”, அப்படின்னு சொல்லிட்டு திரும்ப scan பண்றதையும் பார்த்திருக்கேன். அதுல ஒரு சின்ன ஆறுதல். (அந்த ஒரு முறைக்கு அப்புறம் இப்ப கவனமா இருக்கேன்)

நம் வாழ்வில் நமக்கு எத்தனையோ உயர்த்திகள் கிடைச்சிருக்காங்க. அம்மா, அப்பாவில் தொடங்கி ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், நாம முன் பின் பார்த்திராத ஆன்மீகப் பெரியவர்கள், குடுத்து வெச்சவங்களுக்கு அவங்களுக்கே அவங்களுக்குச் சொந்தமான ஆன்மீக குரு, இப்படி எத்தனை எத்தனையோ. அவங்க சொல்றதைக் கவனமா காதில் வாங்கிக்கிட்டு அதன்படி நடக்கறவங்க, வாழ்க்கையை நல்லபடியா வாழறாங்க. அவங்க ஏதோ சொல்லிட்டுப் போறாங்க, நாம பாட்டுக்குச் செய்யறதைச் செய்வோம்னு இருந்தா கஷ்டம்தான்.

சரியான உயர்த்தியில் ஏறுகிற வரைதான் நமக்குக் கொஞ்சம் வேலை. அதுக்குப் பிறகு அதை நாம கட்டுப்படுத்தவும் முடியாது, அதே சமயம் கவலைப்படவும் தேவையில்லை. அதுவே சரியா கொண்டு போய் சேர்த்திடும். நாமும் சரியான குருவை அடையற வரை நம்ம முயற்சியைப் போடணும். ஏன்னா சீடனாகிற தகுதி வந்த பிறகுதான் குரு அமைவாராம். அப்படிச் சரியான குருவை அடைஞ்சிட்டா, நம்ம சொந்தமா ஏதும் யோசிக்க வேண்டியதில்லை. அவர் சொல்வதைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்டுட்டாப் போதும், நாமும் தானாகவே நல்ல கதியை அடைந்து விடலாம்.

அதனால் உயர்த்திகள் சொல்றதைக் கவனிக்கணும், அதன்படி நடக்கணும். அதுதான் நமக்கு நல்லது!

(இந்தப் பதிவுக்கான தூற்றுதல் எல்லாம் எங்க அலுவலகத்து உயர்த்தியையே சேரும்!)

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா

Sunday, June 22, 2014

நல்ல பிள்ளை நானு!

கன்னங் கரு மேகமே!
கண்ண நிற மேகமே!
செல்வதெங்கே மேகமே!
சொல்லிச் செல்வாய் மேகமே!

காற்று உனக்கு அன்னையோ!
கை பிடித்துச் செல்கிறாய்!
கூட்டிச் செல்லும் இடமெல்லாம்
கருணை மழை பொழிகிறாய்!

தாகத்துக்குக் கடலின் நீரைத்
தயக்கமின்றிக் குடிக்கிறாய்!
கரிக்கும் நீரைக் குடித்த போதும்
இனிக்கும் நீரைக் கொடுக்கிறாய்!

கன்னங் கரு மேகமுந்தன்
உள்ளம் மிக வெள்ளையே!
உன்னைப் பார்த்துப் பாடங் கற்றேன்,
நானும் நல்ல பிள்ளையே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://anadequatemom.wordpress.com/2012/11/14/there-are-no-words-but-im-trying/

Sunday, June 15, 2014

என்று வருவாயென...

http://seventhfairy.deviantart.com/art/WaitiNG-FOr-yOu-336571481

காவல் இருக்கின்றேன்,

காத்துக் கிடக்கின்றேன்,

வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென…

வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென!



நீண்டு கிடக்கும்

காலமெனும் பாதையில்

விழிகள் பதித்து –

முரண்டு பிடிக்கும்

புத்திக்குள் வித்தாக

உன்னை விதைத்து -

துவண்டு கிடக்கும்

மனக் குடிலின் வாயிலில்

மலர்கள் விரித்து –

வண்டு குடிக்கும்

மதுவாக உன்

அன்பை நினைத்து -



மண்ணூடே ஓடி

நீர் தேடும் வேர் போல -

மரம் தேடி ஓடி

கிளை சுற்றும் கொடி போல -

மடி தேடி ஓடும்

பாலுக் கழும் கன்றாக -

கடல் தேடி ஓடும்

காதல் மிகு நதியாக -

உனைத் தேடி நானும்என்

உயிர் களைத்துப் போன பின்னே…



இன்று,

என் மனக் கதவின்

ஒரு ஓரத்தில்…



காவல் இருக்கின்றேன்,

காத்துக் கிடக்கின்றேன்,

வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென…

வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென!


--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://seventhfairy.deviantart.com/art/WaitiNG-FOr-yOu-336571481


Monday, June 2, 2014

வார்த்தை ஜாலங்கள் வேண்டாமே!

“ஏம்மா அழற புள்ளைய இடுப்புல வெச்சிக்கிட்டு இப்படிக் கஷ்டப்படற? அவன் என்கிட்டயும் வர மாட்டான்… நீ போயி அவனுக்கு என்ன வேணும்னு கவனி. நான் அடுப்பு வேலையக் கவனிக்கிறேன்”, மாமியாரின் குரலில் தேனொழுகும். ஹாலில் உட்கார்ந்திருக்கிற அப்பாவுக்கு இதெல்லாம் காதில் விழும். “ஆஹா, நம் பெண்ணை என்னாமா கவனிச்சுக்கிறாங்க”, என்று குளிர்ந்து போவார். அவர் போன பிறகுதானே  அன்பான அத்தையின் சுயரூபம் வெளிப்படும்!

“அச்சோ… ஒன்னைப் பாத்தா பாவமா இருக்கு. ஏன் அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு கஷ்டப்படறே? அப்படியே போட்டுட்டு நீ போய் படு. நான் பாத்துக்கறேன்”, அருமையாகச் சொல்வாள் விருந்துக்கு வந்த உறவினப் பெண். சரியென்று போட்டு விட்டுத் தூங்கி எழுந்து வந்த பின் பார்த்தால், பாத்திரங்கள் இன்னும் அப்படியே முழித்துக் கொண்டு கழுவாமல் கிடக்கும்.

“அந்த பில்லுதானே.. அதென்ன பிரமாதம். நாங்கூட நாளைக்கு அந்தப் பக்கம் போக வேண்டியிருக்கு. நானே உங்ககிட்ட வந்து வாங்கிட்டுப் போய்க் கட்டிர்றேன்”, என்று சொல்லி விட்டுச் சென்ற நண்பன் மறுநாள் வருவான் வருவான் என்று உட்கார்ந்திருந்தால், அவன் “அடடா, மறந்தே போச்சே, அப்படியே போயிட்டேனே, ரொம்ப ஸாரி”, என்பான் மறுபடி பார்க்கும் போது.

இதைப் போல எத்தனையோ பேர்களை நீங்களும் அறிந்திருக்கலாம். இனிக்க இனிக்கப் பேசுவார்கள்; பாராட்டு மழைதனில் நனைத்துக் குளிர வைப்பார்கள். ஆனால் காரியம் என்று வந்தால்தான் உண்மை சொரூபம் தெரிய வரும். என்னைப் பொறுத்த வரையில், செய்ய முடிந்தால் சொல்வேன், சொல்லி விட்டால் எப்பாடு பட்டேனும் சொன்ன  வார்த்தையைக் காப்பாற்ற முயற்சிப்பேன். அதனால்தானோ என்னவோ மற்றவர்கள் சொல்வதையும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நம்பி எடுத்துக் கொள்ளும் வழக்கம் வந்து விட்டது. இது வரை எத்தனையோ முறை சூடு பட்டுக் கொண்டு விட்டாலும், அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட வார்த்தைகள் கேட்க இதமாக இனிமையாக இருப்பதும் காரணமாக இருக்கலாம்.

உண்மையிலேயே  நம் நலனை விரும்புபவர்கள் கொஞ்சம் சூடாகச் சொன்னாலும், உண்மையைச் சொல்வார்கள். மற்றவர்கள்தான் காரியம் ஆக வேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் குஷிப்படுத்தத் தயாராக இருப்பார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை இனங்கண்டு கொள்வதும், யார் பேசுவதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்வதும் அவசியம். நாமும் நம்பிக் கெடாமல் இருக்கலாம்.

எண்ணமும், சொல்லும், செயலும் ஒன்றாக இருப்பது உத்தமம். அப்படியிருந்தால் நமக்கும் தொல்லை இல்லை, பிறருக்கும் தொல்லை இல்லை. நம் வரையிலாவது முடிந்த வரையில் அதைக் கடைப்பிடிக்க முயற்சிப்போம்.


அன்புடன்
கவிநயா

Thursday, May 22, 2014

பாஞ்சாலியின் சபதம்!

வெகு நாட்களுக்குப் பின் ஒரு படைப்பு... தொலைக்காட்சியில் மகாபாரதம் பார்க்க நேர்ந்ததன் பாதிப்பு... 

பாராளும் சக்கரவர்த்தியின் மனைவியான திரௌபதியின் நிலையைப் பார்க்கையில் எழுந்த தவிப்பு. துரியோதனாதியரின் அட்டூழியத்தை இப்போது பார்க்கும் போது கூட, நாமே எழுந்து சென்று நாலு போடு போடலாமா என்று நமக்கே அத்தனை ஆத்திரம் வருகையில், பீஷ்மரும் விதுரரும் துரோணரும், எப்படி இந்த அதருமத்தை இத்தனை தூரம் வளர விட்டார்கள் என்ற ஆச்சர்யமும் ஆதங்கமும் ஏற்படுகிறது. அதருமத்தை வளர விடுவதுதான் தருமமா? 

பாரதி ஏற்கனவே எழுதிவிட்டான்... அதனால் என்ன, நானும் எழுதலாம்தானே? சில நிமிடங்கள் அவன் எழுதியதை மனதிலிருந்து தள்ளி வைத்து விட்டு, இதனை வாசிக்க வேண்டுகிறேன்.


பாஞ்சாலியின் சபதம்

1.
அண்டம் நடுநடுங்க
அலை கடலும் இடம் மாற
தென்றல் காற்றதுவும்
சீற்றங் கொண்டு தடம் மாற
செய்யும் செயல் யாவும்
கைநழுவிப் புலம் மாற
வையம் முழுவதுமே
காரிருளில் தடுமாற
பெய்யும் மாமழையும்
பொய்த்து விட்டுப் போயிருக்க
உய்யும் வகையின்றி
உயிர்களெல்லாம் பரிதவிக்க
தருமம் தலை குனிய
தவமுனிவர் தவித்து நிற்க
சாத்திரம் சொன்னதெல்லாம்
நீர்த்து விட்ட பேச்சாக…!

2.
தீயில் உதித்து வந்த
தேவதைக்கும் இந்நிலையோ?
உலகை ஆள வந்த
உத்தமிக்கும் இத்துயரோ?
கண்ணிழந்த மன்னனவன்
            மனதாலும் குருடானான்;
பெண்ணின் துயர்த் தீயை
            வளர்த்து விட்ட நெய்யானான்!
சொல்லில் அடங்காத
            வேதனைக்கு வித்திட்டான்;
புல்லுக்கும் கீழான
            புத்திரரைப் பெற்றிட்டான்;
வினையை விதைத்திட்டால்
            அறுத்திடவும் வேண்டுமென
அறியாமல் அறிவிழந்தான்
            அத்தினாபுர அரசன்!

3.
ஐயோ என்றழுத
            அன்னைக்குத் துணையில்லை;
ஐவரை மாலையிட்டாள்
            ஆனாலும் பலனில்லை;
கண்ணீர் விட்டழுதாள்
            காப்பாற்று வாரில்லை;
கதறித் தானழுதாள்
            கற்பரசி திரௌபதையாள்!
விவேக விதுரரவர்
            வேதனையால் தலைகவிழ்ந்தார்;
பிதாமகர் பீஷ்மருமே
            பேசாதிருந் தாரே!
தருமத்தின் வாழ்வுதன்னை
            சூதாட்டம் கவ்வியதே;
அதருமப் பிடியினிலே
            அவையோரும் சிக்கினரே!

4.
துஷ்டன் துரியனுமே
            தம்பிக்கு ஆணையிட
துச்சாதன அரக்கன்
            துகிலுரிய வந்து விட்டான்!
வீரர் ஐவருமே
            வீணாக நின்றிருக்க
வில்லும் கதையம்பும்
            வேலையற்றுப் போயிருக்க
கதறிப் பரிதவித்த
            கண்மணியாள் திரௌபதியும்
கூவி அழைத்திட்டாள்
            கார்மேகக் கண்ணனைத்தான்;
கண்ணா கோவிந்தா
            நீயேயென் கதியென்றாள்;
துவாரகையை விட்டெனக்குத்          
            துணையாய் வா என்றழுதாள்!

5.
கூப்பிய கரமிரண்டும்
            சிரசின் மேல் வீற்றிருக்க
கூறிய சொல்லிலெல்லாம்
            ஹரி நாமம் ஒலித்திருக்க
மூடிய விழியிரண்டில்
            கண்ணீர் பெருகி வர
நாடிக் கலந்து விட்டாள்
            கண்ணனவன் திருவடியில்!
கமலத் திருவடியே
            சரணமெனக் கொண்டு விட்டாள்;
கண்ணன் தனையன்றி
            துணையில்லை என்று விட்டாள்;
செதுக்கிய சிற்பம் போல்
            சேயிழையாள் சமைந்து விட்டாள்;
ஒதுக்கி விட்டாள் அனைவரையும்
            ஒருவனையே பற்றி விட்டாள்!

6.
கண்ணன் வந்து விட்டான்
            வண்ணத் துகிலுருவில்!
பெண்ணிற் கருளிவிட்டான்
            பிரியமுடன் மனமிரங்கி!
துஷ்டத் தம்பியும்
            இழுத்துக் கொண்டிருக்கையிலே
விதவிதமாய் மேலாடை
            முளைத்தபடி இருந்ததுவே!
பட்டாய் பருத்தியாய்
            பகட்டாய்ப் பலநிறமாய்
கண்டவர் மயங்கிடவே
            மலையெனவே குவிந்ததுவே!
இழுத்துக் களைத்து விட்டான்           
            அற்பத் தம்பியுமே;
கரமிரண்டும் சோர்ந்திடவே
            நிலைகுலைந்து விழுந்து விட்டான்!

7.
துரியன் தலை கவிழ்ந்தான்
            பாண்டவரோ தலை நிமிர்ந்தார்!
போன உயிர் வந்தது போல்
            அவையோரும் விழித்தமர்ந்தார்!
பீமன் சூளுரைத்தான்
            துரியன் தொடை பிளப்பதாக!
விஜயன் சூளுரைத்தான்
            கர்ணனைத் தான் மாய்ப்பதாக!
துஷ்டர்தம் செந்நீரைப்           
            பூசிக் குளித்த பின்னே
குழல் முடிப்பேன் அதுவரையில்
            குழல் முடியேன் தானெனவே
பாஞ்சாலத் திருமகளாம்
            பாரதத்தின் நாயகியாம்
திரௌபதையும் சூளுரைத்தாள்
            திக்கெட்டும் எதிரொலிக்க!



--கவிநயா
           
           
 நன்றி: வல்லமை