Monday, June 2, 2014

வார்த்தை ஜாலங்கள் வேண்டாமே!

“ஏம்மா அழற புள்ளைய இடுப்புல வெச்சிக்கிட்டு இப்படிக் கஷ்டப்படற? அவன் என்கிட்டயும் வர மாட்டான்… நீ போயி அவனுக்கு என்ன வேணும்னு கவனி. நான் அடுப்பு வேலையக் கவனிக்கிறேன்”, மாமியாரின் குரலில் தேனொழுகும். ஹாலில் உட்கார்ந்திருக்கிற அப்பாவுக்கு இதெல்லாம் காதில் விழும். “ஆஹா, நம் பெண்ணை என்னாமா கவனிச்சுக்கிறாங்க”, என்று குளிர்ந்து போவார். அவர் போன பிறகுதானே  அன்பான அத்தையின் சுயரூபம் வெளிப்படும்!

“அச்சோ… ஒன்னைப் பாத்தா பாவமா இருக்கு. ஏன் அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு கஷ்டப்படறே? அப்படியே போட்டுட்டு நீ போய் படு. நான் பாத்துக்கறேன்”, அருமையாகச் சொல்வாள் விருந்துக்கு வந்த உறவினப் பெண். சரியென்று போட்டு விட்டுத் தூங்கி எழுந்து வந்த பின் பார்த்தால், பாத்திரங்கள் இன்னும் அப்படியே முழித்துக் கொண்டு கழுவாமல் கிடக்கும்.

“அந்த பில்லுதானே.. அதென்ன பிரமாதம். நாங்கூட நாளைக்கு அந்தப் பக்கம் போக வேண்டியிருக்கு. நானே உங்ககிட்ட வந்து வாங்கிட்டுப் போய்க் கட்டிர்றேன்”, என்று சொல்லி விட்டுச் சென்ற நண்பன் மறுநாள் வருவான் வருவான் என்று உட்கார்ந்திருந்தால், அவன் “அடடா, மறந்தே போச்சே, அப்படியே போயிட்டேனே, ரொம்ப ஸாரி”, என்பான் மறுபடி பார்க்கும் போது.

இதைப் போல எத்தனையோ பேர்களை நீங்களும் அறிந்திருக்கலாம். இனிக்க இனிக்கப் பேசுவார்கள்; பாராட்டு மழைதனில் நனைத்துக் குளிர வைப்பார்கள். ஆனால் காரியம் என்று வந்தால்தான் உண்மை சொரூபம் தெரிய வரும். என்னைப் பொறுத்த வரையில், செய்ய முடிந்தால் சொல்வேன், சொல்லி விட்டால் எப்பாடு பட்டேனும் சொன்ன  வார்த்தையைக் காப்பாற்ற முயற்சிப்பேன். அதனால்தானோ என்னவோ மற்றவர்கள் சொல்வதையும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நம்பி எடுத்துக் கொள்ளும் வழக்கம் வந்து விட்டது. இது வரை எத்தனையோ முறை சூடு பட்டுக் கொண்டு விட்டாலும், அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட வார்த்தைகள் கேட்க இதமாக இனிமையாக இருப்பதும் காரணமாக இருக்கலாம்.

உண்மையிலேயே  நம் நலனை விரும்புபவர்கள் கொஞ்சம் சூடாகச் சொன்னாலும், உண்மையைச் சொல்வார்கள். மற்றவர்கள்தான் காரியம் ஆக வேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் குஷிப்படுத்தத் தயாராக இருப்பார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை இனங்கண்டு கொள்வதும், யார் பேசுவதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்வதும் அவசியம். நாமும் நம்பிக் கெடாமல் இருக்கலாம்.

எண்ணமும், சொல்லும், செயலும் ஒன்றாக இருப்பது உத்தமம். அப்படியிருந்தால் நமக்கும் தொல்லை இல்லை, பிறருக்கும் தொல்லை இல்லை. நம் வரையிலாவது முடிந்த வரையில் அதைக் கடைப்பிடிக்க முயற்சிப்போம்.


அன்புடன்
கவிநயா

8 comments:

 1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!! எல்லோருக்குமே இந்த அனுபவம் இருந்திருக்கும்.

  ReplyDelete
 2. ரொம்ப அற்புதமாகச் சொல்லிவிட்டீர்கள்!.. எனக்கும் இதில் நிறைய அனுபவம் உண்டு.. முக்கியமாக, நம்மால் காரியம் ஆக வேண்டுமென்றால், நம் மேல் ரொம்பப் பிரியம் மாதிரி பேசுவதும், முடிந்தததும் தூக்கி எறிவதும், நிறையப் பட்டாச்!!

  இப்போதெல்லாம் கொஞ்சம் தேறிவிட்டேன்:))!... மனங்குளிரப் பேசினாலும் சரி, மனம் வலிக்கப் பேசினாலும் சரி.. அதிகம் மனதுக்குப் போக விடுவதில்லை.. அதனாலோ என்னவோ மன அமைதி அதிகம் பாதிக்கப்படுவதில்லை..

  ReplyDelete
  Replies
  1. மன அமைதி காக்கப் பழகிக் கொண்டு விட்டீர்கள் என்பது அருமையான விஷயம்.. அப்படியே தொடருங்கள் :)

   நன்றி பார்வதி!

   Delete
 3. //நம் வரையிலாவது முடிந்த வரையில் அதைக் கடைப்பிடிக்க முயற்சிப்போம்.//

  நம் செயலை எதிராளி எப்படி எதிர்கொள்வார் என்பதும் நாம் செயல்படுவதைத் தீர்மானிக்கிற மாதிரி பலநேரங்களில் அமைந்து விடுவது உண்டு. அந்த விதத்தில் எதிராளி தான் நாம் செயல்படுவதை
  தீர்மானிக்கிறார் என்றும் கொள்ளலாம். எப்படி?.. ஆடிக்கறக்கற மாட்டை ஆடிக்கற; பாடிக்கறக்கற மாட்டை பாடிக் கற என்பது மாதிரி.

  எது எப்படி இருந்தாலும் நானும் உங்கள் கட்சி தான். 'சொல்லி விட்டால் எப்பாடு பட்டேனும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற முயற்சிப்பேன்' என்பது சிறு வயதிலிருந்தே தாரக மந்திரமாய் மனசில் படிந்து விட்டது.
  அதனால் தானோ என்னவோ, சொந்த விஷயத்திற்கு செயல்படுவதை விட பிறருக்காக செயல்படுவதில் தீவிரமும், அதிக ஈடுபாடும் இயல்பாகவே ஆகிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்னதனைத்தும் மிகவும் உண்மை ஜீவி ஐயா. அனுபவத்தில் தோய்ந்த வார்த்தைகள். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா!

   Delete
 4. நம்பி ஏமாந்த கதை நம்மிடம் நிறையவே உண்டு.... :)

  ReplyDelete
  Replies
  1. அப்படியா. கீதாம்மா சொன்னது போல் இந்த அனுபவம் இல்லாதவர்கள் அரிது போலிருக்கிறது :) நன்றி வெங்கட்.

   Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)