Sunday, January 9, 2011

அணங்கின் மணவாளா!


திருப்பள்ளியெழுச்சி - 6

பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்

வணங்குகின்றார், அணங்கின் மணவாளா

செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!

இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!


பொருள்:
உமாதேவியின் மணாளனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந் துறையில் வசிக்கும் சிவபெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் மெய்யடியார்கள், தங்கள் பந்தபாசங்களை துறந்து, உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர்.கண்ணில் மை தீட்டிய பெண்களும் தங்களின் இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பினை அறுத்து ஆட்கொண்டருளும் எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!

Saturday, January 8, 2011

சிந்தனைக்கும் அரியாய்!


திருப்பள்ளியெழுச்சி - 5

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை

சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!

சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து

ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


பொருள்: குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! சிந்தனைக்கு எட்டாதவனே! நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்துபூதங்களிலும் நீயே இருக்கிறாய். நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை. இவ்வாறு உன்னைப் போற்றிப் பாடியும் ஆடியும் மகிழ்வோரைக் கண்டிருக்கிறோமே அல்லாது, உன்னை உண்மையாகக் கண்டறிந்தவர் எவரென அறிந்ததில்லை. எம்பெருமானே! நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட் கொண்டு அருள்வதற்காக, பள்ளி எழுந்தருள்வாயே!

Friday, January 7, 2011

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்


திருப்பள்ளியெழுச்சி - 4


இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


பொருள்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலைப் பொழுதில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை எழுப்பியபடி ஒருபுறம் நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங் களால் உன்னை வணங்குவோரும், தோத்திரப்பாடல்களைப் பாடுவோரும் ஒருபுறம் உன் சிறப்பைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கையில் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மலர்மாலைகளுடன் உன்னுடைய பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் பெருக பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்ந்து மயங்கியவர்களுமாக சிலர் ஒருபுறம் இருக்கிறார்கள். தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். இப்பேர்ப்பட்டவர்கள் இருக்கையில், எளியவனான எனக்கும் அருள் செய்யும் என் இறைவனே! பள்ளி எழுந்தருள்வாயே!

படத்துக்கு நன்றி: http://temple.dinamalar.com/

Thursday, January 6, 2011

யாவரும் அறிவரியாய், எமக்கு எளியாய்!



திருப்பள்ளியெழுச்சி - 3

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகைகளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றன. சங்குகள் முழங்குகின்றன. நட்சத்திரங்களின் ஒளி மங்கி, சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல இருக்கிறது. அழகிய கழல்களை அணிந்த உன் திருவடிகளை அன்போடு எனக்கு காட்டுவாயாக! தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!


படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/captain_don/368956096

Wednesday, January 5, 2011

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே!


திருப்பள்ளியெழுச்சி - 2

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! அருணன் கிழக்கு திசையை அணுகி வந்து விட்டான். உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி விட்டான். அண்ணலே! உனது கண்களைப் போன்ற மலர்கள் மலர்ந்து விட் டன. வண்டினங்கள் அவற்றில் தேன்குடிக்க திரளாக வந்து ரீங்கரிக்கின்றன. அருளாகிய செல்வத்தை அளவின்றித் தருகின்ற ஆனந்த மலையை ஒத்தவனே! அலைகடலைப் போன்ற அருட்கடலே! பள்ளி எழுந்தருள்வாயே!

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/jamieanne/5092080665

Monday, January 3, 2011

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே!

தன்னை ஆட்கொண்ட, திருபெருந்துறையில் உறையும் இறைவனுக்காக, மாணிக்கவாசகர் பாடியருளிய 10 திருப்பள்ளியெழுச்சி பாடல்களை மார்கழியின் இறுதி 10 நாட்களுக்கு இட வேண்டும் என்று தோன்றியது. எல்லாம் வல்ல அவனை வணங்கி, இன்று தொடங்கலாம்...ஓம் நமசிவாய!



திருப்பள்ளியெழுச்சி - 1

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் அவற்றுக்கு பொருத்தமான மலர்களைத் தூவி வழிபடும்போது, உன்னுடைய திருமுகத்தில் எமக்கு அருள் புரியவென மலர்கின்ற அழகிய புன்முறுவலைக் கண்டு மகிழ்ந்து, உன்னடிகளைத் தொழுகின்றோம். எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!

Sunday, January 2, 2011

நாமம் சொல்லிப் பாடுவோம்!

ஒரே ஒரு இறைவனுக்கு எத்தனை எத்தனை பெயர்கள். எத்தனை எத்தனை உருவங்கள். எத்தனை எத்தனை மதங்கள். அவனை அடையத்தான் எத்தனை எத்தனை வழிகள்.

ஒரே அளவு சட்டை எல்லாருக்கும் பத்தறதில்லை. ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு அளவு. வெவ்வேறு ரசனை. வெவ்வேறு குணம். இரட்டையராகவே பிறந்துட்டா கூட அவங்க ரெண்டு பேரும் எவ்வளவோ வேறுபட்டிருப்பதைப் பார்க்கிறோம். பலவிதமாக வேறுபட்டிருக்கும் பக்தர்களுடைய விருப்பத்துக்கு தகுந்த மாதிரி இறைவனும் வளைஞ்சு கொடுக்கறான் அப்படிம்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஒரே ஒரு குழந்தை வச்சிருக்கவங்க என்ன செய்யறாங்க? அந்தக் குழந்தையைத்தான் ஆண்பிள்ளையாவும், பெண்பிள்ளையாவும், கிருஷ்ணனாகவும், ராதாவாகவும், முருகனாகவும், இப்படி பலவிதமா அலங்கரிச்சு சந்தோஷப்படறாங்க. அதே போல ஒரே ஒரு இறைவனைத்தான் நாமும் பலவிதமா பார்த்து சந்தோஷப்படறோம்.

நேரம் கிடைச்சா இதையும் படிச்சுப் பாருங்க...

கலியுகத்தில் இறைவனை அடைய மிகச் சிறந்த, சுலபமான வழி நாமஜெபமே என்று பல பெரியோர்களும் சொல்லியிருக்கிறாங்க. அப்பேர்ப்பட்ட இறைவனின் பல நாமங்களையும் உள்ளடக்கிய ஒரு குட்டி (பாப்பா) பாடல் உங்களுக்காக...

இறை நாமம் சொல்லி புதுவருடத்தைத் தொடங்குவோமே!


நாமந் தன்னை சொல்லுவோம்!
நாளும் துன்பம் வெல்லுவோம்!
காலன் வந்த போதிலும்
நாமம் சொல்லிப் பாடுவோம்!

விநாயகனின் நாமம் சொன்னால்
வினைக ளெல்லாம் விலகுமே!
வேலவனின் நாமம் சொன்னால்
வெற்றி வந்து சேருமே!

ராம நாமம் சொல்லிவந்தால்
ராம பாணம் காக்குமே!
கிருஷ்ணகிருஷ்ண என்று சொன்னால்
கேட்ட தெல்லாம் கிடைக்குமே!

நமசிவாய என்று சொன்னால்
நன்மை வந்து நிறையுமே!
நாராயணா என்று சொன்னால்
நல் வினைகள் விளையுமே!

அம்மாவென்று அன்பாய் சொன்னால்
அன்னை மனம் மகிழுமே!
சும்மாவேனும் சொன்னால் கூட
சொர்க்கம் வந்து சேருமே!

ஏசுநாமம் சொல்லி வந்தால்
ஏக்க மெல்லாம் தீருமே!
அல்லா வென்று சொல்லி வந்தால்
அல்லல் எல்லாம் மறையுமே!

கணந்தோறும் நாமம் சொன்னால்
கால மெல்லாம் காக்குமே!
இடைவிடாது நாமம் சொன்னால்
இப் பிறவி சிறக்குமே!



--கவிநயா

பௌளி ராகத்தில் இனிமையாகப் பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு மிக்க நன்றி.