Sunday, June 6, 2010

நம்பிக்கை



இருளடைந்த கானகத்தே
இலக்கின்றி அலைந்திடினும்

திசைதெரியாப் பாதையிலே
வழிமறந்து தொலைந்திடினும்

துயர்சூழ்ந்த வாழ்க்கையினால்
மனம்துவளும் வேளையிலும்

சிற்றெறும்புப் புற்றினுள்ளும்
சூரியஒளி புகுவதுபோல்

சின்னஞ்சிறு நீர்த்துளிகள்
பெரியவெள்ளம் ஆவதுபோல்

மூங்கில்வழி நுழைந்துகாற்று
இனியகீதம் இசைப்பதுபோல்

சிறியஎழில் அகல்விளக்கு
கரும்இருளை விரட்டுதல்போல்

நம்பிக்கைசிறி திருந்துவிட்டால்
நானிலமும் வென்றிடலாம்!

--கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/notreallyunique/2634711906/sizes/m/

Tuesday, June 1, 2010

சாப்பிடத் தெரியுமா, உங்களுக்கு?

சின்னப் பிள்ளையில் யாரையாச்சும் கிண்டல் பண்றதுன்னா, “உனக்கு என்னதான் தெரியும், நல்லா சாப்பிட மட்டும் தான் தெரியும்”, அப்படின்னு சொல்றது உண்டு. ஆனா உண்மையில், நல்லா, ஒழுங்கா, சாப்பிட தெரிஞ்சவங்க ரொம்ப குறைவுன்னே தோணுது. அதை சரியா செய்தாலே நம்மை எந்த நோயும் அண்டாது!

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ அப்படின்னு சொல்வாங்க… ஏதாவது ஒரு வியாதி வந்து துன்பப் படும்போதுதான் அதனுடைய உண்மையான பொருள் புரியுது இல்லையா, ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பதைப் போல.

நாம ஆரோக்கியமா இல்லைன்னா, நாம மட்டும் கஷ்டப்படறதில்லை. நம்மை சேர்ந்தவங்களும் நமக்காக, நம்மோட சேர்ந்து பலவிதங்களில் சிரமப்படறாங்க. பல முதியோர்கள் பலவிதமா கஷ்டப்படறதையும், உறவினர்களால கூட பார்த்துக்க முடியாத அளவு துன்பப்படறதையும் பல இடங்களில் பார்க்கிறோம். வாழவும் முடியாம, சாகவும் முடியாம… எப்படிப்பட்ட வேதனை!

வயசு ஆக ஆகத்தான் ஆரோக்கியத்தின் அருமை புரியும் போல இருக்கு. பல விஷயங்கள் நம்ம கையில் இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும் நம்மால முடிஞ்ச வரைக்கும் முடிஞ்ச விஷயங்களை பண்றதுதானே நமக்கு நல்லது?



பாதி வியாதி உணவினால்தான் வருது. உணவில் இருக்கும் கிருமிகளை பத்தி மட்டும் சொல்லலை; உணவின் அளவு, சாப்பிடற நேரம், சாப்பிடற விதம், இப்படி எத்தனையோ காரணங்கள். ஏதாவது ஒண்ணு பிடிச்சிருந்ததுன்னா, அதை அளவே இல்லாம சாப்பிடறோம். பசிக்குதோ பசிக்கலையோ, எல்லா வேளையும் மூச்சு முட்ட சாப்பிடறவங்களும் இருக்காங்க.

‘உணவே மருந்து’ அப்படிங்கிறார் ஒருத்தர். எப்படி?

• உணவு, நீர், உறக்கம், மூணும் அளவோட இருக்கணும்
• ஒரு முறை சாப்பிட்டது நல்லா ஜீரணமாகி, பசித்த பிறகுதான் அடுத்த முறை சாப்பிடணும்
• உடம்புக்கு ஒத்துக் கொள்ளாத உணவு வகைகளை ஒதுக்கிடணும்
• உடம்புக்கு ஒத்துக் கொள்கிறவற்றையும் அளவோடுதான் சாப்பிடணும்
• சுவையா இருக்கேன்னு மிதமிஞ்சி சாப்பிடவே கூடாது

இதெல்லாம் நான் சொல்லலைங்க! வாழ்க்கைக்குத் தேவையான எல்லாத்தையும் சொல்லி வச்சிருக்க வள்ளுவப் பெருந்தகைதான் இதையும் சொல்லி இருக்கார், ‘மருந்து’ என்கிற அதிகாரத்தில்.

விருந்துன்னா போதும், பலரும் எழுந்திருக்கவே முடியாத அளவு சாப்பிடுவோம்! யாராவது கை கொடுத்து தூக்கி விடணும்! அதனாலதான் இப்பல்லாம் தரையில் பந்தி வைக்காம, மேசை நாற்காலி போடறாங்களோ என்னவோ :)

ஆரொக்கியமா இருக்கணும்னா, அரை வயிறு நிரம்பற அளவுதான் சாப்பிடணும், கால் வயிறு தண்ணீர் குடிக்கணும், கால் வயிறு காலியாதான் இருக்கணும், அப்படின்னு எங்கேயோ படிச்சிருக்கேன்…

மண்ணோடு மண்ணாப் போகப் போகிற உடம்பைப் பற்றி எதுக்காக இவ்வளவு கவலைப் படணும், அப்படின்னு தோணுதில்ல? எனக்கும் அப்படித்தான் தோணும்.. முந்தில்லாம்.

உடல் நலத்தை யாரும் அலட்சியப் படுத்தக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் அவங்களுக்கு உரிய கடமைகளை நிறைவேற்றவாவது, உடல் நலத்தை கவனிச்சுக்கணும். ஆன்மீகத்தில் இருக்கிறவங்க கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. திருமூலர் சொல்லுவார்:

உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே!

இறைவன் உறையும் உடலை எப்படி அலட்சியப்படுத்த முடியும்? அரிதாகக் கிடைக்கிற மனிதப் பிறவியை தவற விட்டு விட்டால் அவனை அடைவது எப்படி?

இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கடமை இருக்கு. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? (பேப்பர் பேனா இருந்தா போதும்னு சொல்லாதீங்க :)

இனிமேல் சாப்பிடறதுக்கு முன்னாடி, இதையெல்லாம் நினைவில் வச்சுக்குவோம். சரிதானே?

அனைவரும் அளவோடு உண்டு ஆரோக்கியமாய் வாழ, மனமார்ந்த வாழ்த்துகள்!

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.thirumurugan.in/2007/06/delicious-pictures-of-indian-food.html

Thursday, May 20, 2010

அனுமந்தா அனுமந்தா...!


அனுமந்தா அனுமந்தா
அஞ்சனை மைந்தா அனுமந்தா!
அனுமந்தா அனுமந்தா
ஆஞ்ச நேயா அனுமந்தா!

ஆஞ்ச நேயா அஞ்சனை மைந்தா
அஞ்சாத வீரா அனுமந்தா!
துஞ்சாமல் அனுதினம் கண்போல ராமரை
நெஞ்சார போற்றிடும் அனுமந்தா!

கதிரவன் தன்னை பழமென்று எண்ணி
கைகளில் பிடித்தாய் அனுமந்தா!
காற்றினில் ஏறி கடலினைக் கடந்து
இலங்கையைப் பொடித்தாய் அனுமந்தா!

புத்தியில் பக்தியில் சக்தியில் உனக்கு
நிகரில்லை எவரும் அனுமந்தா!
அத்தனை இருந்தும் அடக்கத்தின் உருவாய்
திகழ்பவன் நீயே அனுமந்தா!

கருத்திட்ட வண்ணன் கமலக் கண்ணன்
கதையினைச் சொன்னால் அனுமந்தா!
கருத்துடன் அமர்ந்து கண்ணீர் பெருக
கேட்டிடு வாயே அனுமந்தா!

நெருப்பிட்ட வாலினை முடிவில் லாமல்
நீண்டிடச் செய்தாய் அனுமந்தா!
விருப்புடன் எந்தன் பக்தியும் அதுபோல்
வளர்ந்திட அருள்வாய் அனுமந்தா!


--கவிநயா

Thursday, May 6, 2010

ஒற்றைக் கொலுசும், ராஜகுமாரனும்

“டம டம டம டம டம…..”

“இதனால் அறிவிக்கப் படுவது யாதெனில், இளவரசி சுந்தரி அணிந்திருந்த கால் கொலுசுகளில் ஒன்று தவறிப் போய் விட்டது. அதனைக் கண்டு பிடித்துக் கொண்டு வருபவரையே இளவரசி தன்னுடைய மணாளனாக ஏற்றுக் கொள்ளுவார்….”

“டம டம டம டம டம…..”

இப்படி ஒரு அறிவிப்பு குடுத்தா எப்படி இருக்கும், அப்படின்னு சிந்தனை ஓடுது, சுந்தரிக்கு. சின்னப் புள்ளையில இருந்தே அவளுக்கு சிண்டரெல்லா கதைன்னா ரொம்பப் புடிக்கும். அதுதான் இப்படி கற்பனை தறிகெட்டு ஓடக் காரணம். இன்னொரு காரணமும் இருக்கு…

அவளோட கொலுசைக் காணும்!

அதுவும் எப்பேற்பட்ட கொலுசு? அவ அம்மா அவளுக்காக ஆசை ஆசையா குடுத்தது. குடுத்துட்டு அவளும் போய் வேற சேர்ந்துட்டா. இனிமே பார்க்கவே முடியாதவங்க குடுக்கிற பொருளுக்கெல்லாம் மதிப்பு அதிகம் தானே.

சிண்டரெல்லாவுக்கு மாதிரிதான் சுந்தரிக்கும் பொல்லாத சித்தி ஒருத்தி இருக்கா. கிட்டத்தட்ட இவ கதையும் அதே மாதிரித்தான். அதனால தான் தன்னையும் ஒரு ராஜகுமாரன் வந்து அலாக்கா தூக்கிட்டு போயிர மாட்டானான்னு உள்ளூர ஒரு ஏக்கம் இவளுக்கு, எப்பவும். இப்ப இருக்கிற நிலைமையில அவளே வேலைக்கு போயி, அவளே பணம் சேர்த்துதான் கல்யாணம் பண்ணிக்கணும் போல.

குருட்டு யோசனை அது பாட்டுக்கு ஓடிக்கிட்டிருந்தாலும், காலும் ஒரு எடத்திலயும் நிக்கல. கடலோரமா நடந்து நடந்து பார்வையால மணலை அரிச்சிக்கிட்டேதான் இருக்கா, கொலுசுக்காக.

ஹும்… அப்படியே பணம் சேர்த்தா மட்டும் என்ன, மாப்பிள்ளை கூட அவளேதான் பார்த்துக்கணும் போல. அதுதான் அங்கே பரிதாபம். அப்பாவால ஒண்ணும் முடியாது. படுத்த படுக்கையா ஆயிட்டார். சித்தியை மீறி ஒண்ணும் பண்ண முடியாது அவரால.

இன்னிக்கு என்னமோ மனசே சரியில்லை. அதனால ஆபீசுல இருந்து சீக்கிரம் கெளம்பி, கடற்கரைக்கு வந்தா, அது இப்ப தப்பாப் போச்சே. கொலுசு இல்லாம வீட்டுக்கு போறதை நினைச்சே பார்க்க முடியல, அவளால.

“ஹலோ…. ரொம்ப நேரமா என்னமோ தேடறீங்க போல. இதையா?”

கொரல் கேட்டு ‘டக்’குன்னு திரும்பறா. அங்கே இவ கற்பனையில் வர்ற ராஜகுமாரன் போலவே…

“அடச்சீ, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிறாப்ல இருக்கு. முழிச்சுக்கோடீ”, அப்படின்னு திட்டுது, மனசு.

நீட்டின அவன் கையில் இவளோட இன்னொரு கொலுசு. அவனுக்கு நிரூபிக்கணும்னு நெனச்சோ என்னமோ, கணுக்கால் அளவு சேலையை இலேசா ஒசத்தி, இன்னொரு கொலுசை காட்டறா. அல்லது இவளே சரி பாத்துக்கறாளோ?

“ஒங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலங்க. இந்த கொலுசு எனக்கு எவ்ளோ ஸ்பெஷல் தெரியுமா”, சொல்லிக்கிட்டே கொலுசை வாங்கிக்கறா.

“அப்படியா. எவ்ளோ ஸ்பெஷல்? சொல்லுங்களேன் தெரிஞ்சுக்கறேன்”, குறும்பா வரிசைப் பல் தெரிய சிரிக்கிறான், அவன்.

குனிஞ்சு கொலுசை மாட்டிக்கிட்டிருந்தவ, ஓரக் கண்ணால அவனோட சிரிப்பை ரசிக்கிறா.

“இவன்தான் என் ராஜகுமாரனா அம்மா?”, கொலுசுகிட்ட ரகசியமா கேக்கறா.

கொலுசும் சந்தோஷத்தில் ஜல்ஜல்க்குது…


--கவிநயா

Sunday, April 25, 2010

நல்லதே நினைப்போம்!

நலந்தானே?

இப்பல்லாம் அடிக்கடி பார்க்க முடியறதில்லை, ஆசை இருந்தாலும். அதனால பதிவிடும் இடைவெளி அதிகமாகிக்கிட்டே இருக்கு, பதிவுகள் படிக்கிற இடைவெளி அதை விடவும் அதிகமாகிக்கிட்டிருக்கு :(

வலது பக்கம் ஒரு வாரமா ஓடிக்கிட்டிருக்கே, பார்த்தீங்களா?

//Wrap yourself in the thought of God. His holy Name is the power of all powers. Like a shield it deflects all negative vibrations.

- Sri Pramahamsa Yogananda//

இதைப் பற்றித்தான் இன்னிக்கு பேசப் போறோம்.

நாம் நினைக்கிற ஒவ்வொரு நினைப்புக்கும், ஒவ்வொரு எண்ணத்துக்கும், ஒரு சக்தி இருக்கு. அந்த சக்தி அந்தந்த எண்ணத்துடைய தீவிரத்தைப் பொறுத்து வேறுபடும்.

நீங்களே அனுபவத்தில் பார்த்திருப்பீங்க… எதற்காகவாவது ரொம்ப தீவிரமா, மனமுருகி பிரார்த்தனை செய்தீங்கன்னா, அது கண்டிப்பா நடக்கும். கூட்டு பிரார்த்தனைகள் எதற்காக செய்யறோம்? அத்தனை பேருடைய நல்ல எண்ணங்கள், மனம் ஒன்றி பிரார்த்திக்கும் போது ஒன்று சேர்ந்து பெரும் சக்தியாகிறது. அதனாலதான் கூட்டு பிரார்த்தனை செய்யும் பழக்கம் ஏற்பட்டது.

நல்ல எண்ணங்களுக்கு இப்படிப்பட்ட சக்தி இருப்பது போலவே, தீய எண்ணங்களுக்கும் உண்டு. ஒரு விஷயத்தை நினைச்சு ரொம்ப பயந்துகிட்டே, அல்லது ரொம்ப கவலைப் பட்டுக்கிட்டே இருந்தோம்னா, அந்த விஷயம் கண்டிப்பா நடந்துடும். ஏன்னா, நாம அந்த விஷயத்தை திரும்பத் திரும்ப நினைச்சுக்கிட்டு, பயந்துகிட்டு இருக்கிறதால, அந்த எண்ணத்தையே வலிமையுள்ளதாக ஆக்கிடறோம்; அதன் மூலம் அது நடக்கறதுக்கான வாய்ப்பை நாமே ஏற்படுத்தி தர்றோம்.

நாம ஏதாச்சும் நினைச்சுக்கிட்டே இருக்கிற போது மேலே போகிற கந்தர்வர்கள், ‘ததாஸ்து’, அப்படின்னு சொன்னாங்கன்னா, அது பலிச்சிடுமாம். அதனால எப்பவும் நல்லதே நினைக்கணும்னு சின்ன வயசில் அம்மா சொன்னது நினைவு வருது. ‘ததாஸ்து’ சொல்லிடுவாங்களேங்கிற பயத்திலாவது நல்லதை நினைப்போமேனுதான் பெரியவங்க அப்படில்லாம் சொல்லி வச்சிருக்காங்க.

எதிர்மறை (negative) எண்ணங்களும் உணர்வுகளும் இல்லாம மனுஷன் இருக்க முடியுமா, அப்படிங்கிற கேள்வி வரலாம். அப்படி கேள்வி வரதே மனுஷன் என்கிறதாலதான்; ஆறறிவு இருக்கிறதாலதான். அதனால் அவனால் அதை கடக்கவும் முடியும் என்பது நிதர்சனம்.

இறை நம்பிக்கை உள்ளவங்களுக்கு அது இன்னும் சுலபம். ஒவ்வொரு முறையும் அப்படிப்பட்ட எண்ணம்/பயம்/உணர்வு வரும்போது இறைவனின் நாமத்தை ஜபிச்சா போதும். வேற ஒண்ணுமே செய்ய வேண்டாம்… அப்படின்னு நான் சொல்லலைங்க, ஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் சொல்றார்.

எப்படிப்பட்ட எதிர்மறை எண்ணத்தின் சக்தியையும் அழித்து விடும் திறன், இறைவனின் நாமத்திற்கு மட்டுமே உண்டு. எந்த விதமான தீங்கும் நம்மை அண்டாமல் காக்கின்ற அற்புதமான கவசம் அது, அப்படிங்கிறார், அவர். அது நம்மைப் பற்றிய பிறருடைய எதிர்மறை எண்ணமா இருந்தாலும் சரி, அல்லது நம்முடையதாகவே இருந்தாலும் சரி.

அதனால்,

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.

அன்புடன்
கவிநயா

Thursday, April 15, 2010

புத்தாண்டு வாழ்த்து!



சித்திரைத் திங்களுடன் சேதி வந்தது;
முத்திரை பதிக்கும் காலம் கூட வந்தது!

புத்தம் புது வருஷம் பிறந்து விட்டது;
நித்தம் இன்பம் தர வந்து விட்டது!

சுற்றிச் சேர்ந்த இருள் விலகி விட்டது;
வெற்றி ஒளி எங்கும் படர்ந்து விட்டது!

குற்றம் குறை மறந்து ஒன்று கூடுவோம்;
சுற்றம் சூழ வந்து சிந்து பாடுவோம்!

சற்றும்சோ ராமல் நாளும் உழைத்து வாழுவோம்;
கற்ற பாடங் களால் வாழ்வைப் பேணுவோம்!

சித்தம் எல்லாம் கனிந்த அன்பு பூணுவோம்;
யுத்தம் என்பதில்லா வையம் காணுவோம்!!


--கவிநயா

பி.கு. கொஞ்சம் தாமதமாயிருச்சு. பெரிய மனசு பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க :)

Sunday, April 4, 2010

கறுப்பு உணர்வுகள்



நினைப்பால் நிறுத்த முடியாத
சுவாசம் போல்
கட்டளைக்குப் பணியாத
கடலலை போல்
துடைத்து விட முடியாத
மையிருட்டுப் போல்
என்னுள்
பிடிவாதமாய் அப்பியிருக்கும்
சில கறுப்பு உணர்வுகள்

இரத்த விழி திறந்து
இருக்கும் இடம் மறந்து
எரித்துப் பொசுக்கிவிட எண்ணும்
கண்ணீர் மடை அவிழ்த்து
பெருகும் வெள்ளந்தனில்
முழுகி விடவும் துணியும்
கசப்பால் கைகலந்து
வெறுப்பால் வழி மறித்து
இடறித் தடுமாறச் செய்யும்
கனவில் மனம் மூடி
கவிதை மடி தேடி
சுருண்டு கொள்ளவும் விழையும்


--கவிநயா