எல்லாமே நாம பார்க்கிற விதத்தில் இருக்கு…
மனசுதான் எத்தனை விசித்திரமானது!
காரணமில்லாமயே சில சமயம் துள்ளிக் குதிக்கும்; காரணமில்லாமயே சில சமயம் கவலையில் தவிக்கும்.
அப்படிச் சொல்றது கூட தப்புதான். காரணம் தெரியாமலே அப்படின்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.
எங்கே பார்த்தாலும் வித விதமா,
நிற நிறமா, அழகழகா, மலர்களும், பச்சைப் பசேல்னு செடிகளும், கொடிகளும், மரங்களும், படுத்துப்
புரளலாம் போல புல் வெளிகளும் (அடடா, சென்னையில இருக்கீங்களா, நீங்க? அப்படின்னா ரொம்ப
ஸாரி. இதையெல்லாம் கற்பனையில் பார்த்துக்கோங்க), ஜோடி போட்டுக்கிட்டு சுத்தித் திரியற
பறவைகளும், இப்படி இதெல்லாம் நிறைஞ்சிருக்கிற வசந்த காலத்தைப் பிடிக்காதவங்க இருக்க
முடியுமா?
ஆனா வசந்த காலத்தைப் பார்த்தா
பிடிக்காத நாட்களும் இருக்கும். மனசுக்குள்ள சோக மூட்டமா இருக்கும் போது, வெளியில
வெயிலடிச்சா என்ன, மழை பெஞ்சா என்ன, பூ பூத்தா என்ன, புயலடிச்சா என்ன, அப்படின்னு வெறுப்பா
இருக்கும். ஆனா மனசு சந்தோஷமா இருக்கும் போது, நசநசன்னு மழை பெஞ்சுகிட்டே இருந்தாக்
கூட அதைப் பூத்தூவலா ஏத்துக்கிட்டு நனைஞ்சுக்கிட்டே இருக்கத் தோணும்.
ஒரு விஷயம் நடக்கும் போது அதுக்கு
நம்மோட reaction அல்லது எதிர் வினை, நம்மோட மனநிலையைப் பொறுத்துதான் இருக்கும். நாம
சந்தோஷமான மனநிலையில் இருந்தா, மற்றவங்க செய்யற பெரிய தவறுகளைக் கூடப் பெரிசு படுத்தாம,
பெருந்தன்மையா மன்னிச்சு, மறந்திடுவோம். ஆனா வருத்தத்தில் இருக்கும் போது, பிறர் செய்யற
சிறிய தவறுகளும் பூதாகாரமா தெரியும். அவங்க தவறே செய்யாட்டி கூட, ஏதோ ஒண்ணை நாமளே கண்டு
பிடிச்சு அதுக்காகக் கோவப்படுவோம், அல்லது வருத்தப்படுவோம்.
ஆக, சந்தோஷமும் வருத்தமும் நம்ம
மன நிலையிலயும், மன நிலையின் காரணமா ஏற்படற கண்ணோட்டத்திலயும்தான் இருக்கு. சுருக்கமா
சொன்னா, மஞ்சக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டு பார்த்தா எல்லாமே மஞ்சளாதான் தெரியும்.
பச்சைக் கண்ணாடி போட்டுக்கிட்டா பச்சையாதான் தெரியும்.
ஒருத்தர் நம்மை வருத்தப்படுத்திட்டாங்கன்னு
நாம நினைச்சிட்டா, அதைக் கொண்டு போய் வேற ஒருத்தர்கிட்ட காண்பிப்போம், அவங்க போய் இன்னொருத்தர்கிட்ட
காண்பிப்பாங்க, இப்படியே அது ஒரு தொத்து வியாதி மாதிரி தொடரும். “snowball effect”
ன்னு சொல்வாங்களே, அந்த மாதிரி. அப்படி இல்லாம அது நம்மகிட்ட வரும்போதே அதைத் தடுத்துட்டா,
எத்தனை பேருக்கு, எவ்வளவு நிம்மதியா இருக்கும்!
அதனால, இதைப் பற்றிய விழிப்புணர்வு
மட்டும் நமக்கு வந்திடுச்சுன்னா, நாம அந்த மாதிரி நினைக்க ஆரம்பிக்கும் போதே, நம்ம
மனசை நாமே கண்டிச்சு திசை திருப்ப முடியும். மற்றவங்க நாம எதிர்பாரா விதமா நடந்திகிட்டிருந்தா,
அவங்க அப்படி நடந்துக்கிறதுக்கு வேற ஏதாவது காரணமோ, பின்னணியோ இருக்கலாம் அப்படின்னு
நினைக்கப் பழகிக்கணும். ஆங்கிலத்தில் giving the benefit of the doubt அப்படின்னு சொல்வாங்க.
ஏன் எல்லாமே என்னாலதான்னோ, அல்லது என்னைப்பற்றியேதான்னோ நினைக்கணும்? எல்லாமே தன்னை
மையமா வெச்சுதான் நடக்குதுன்னு நினைக்கிறது ஒரு விதமான ego தான். பெரும்பாலும் நாம
வருத்தப்படறது இதனாலதான். அதனால, ego-வைக் கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு, மற்றவங்க சூழ்நிலையோ,
குணங்களோ, பழக்க வழக்கங்களோ, அவங்க கலாச்சாரமோ, இப்படி ஏதோ ஒண்ணு அவங்க நடத்தைக்குக்
காரணமா இருக்கலாம், அப்படின்னு நினைக்கப் பழகிக்கிட்டா, நமக்கும் மன அமைதி கிடைக்கும்.
கொஞ்சம் நினைச்சுப் பாருங்க,
யாராச்சும் வேணும்னே மற்றவங்க கோபப்படணும்னோ, அல்லது வருத்தப்படணும்னோ ஏதாச்சும் செய்வாங்களா என்ன? எனக்கென்னமோ
அப்படித் தோணல. சினிமாவிலயும், சீரியல்லயும் தான் அப்படில்லாம் யோசிக்கிறாங்க. அதெல்லாம்
பார்த்தா மனுஷங்க இப்படியெல்லாம் இருப்பாங்களான்னு ஆச்சர்யமா இருக்கும்.
நம்மோட எண்ணங்களையும் உணர்வுகளையும்
ஒரு அடி தள்ளி நின்னே கவனிக்கணும், அப்படின்னு பாண்டிச்சேரி அன்னை சொல்றாங்க. எந்த
ஒரு விஷயத்துக்கும் உடனடியா react பண்ணக் கூடாது. கொஞ்சம் நிதானிச்சு, கொஞ்சம் நேரம்
ஆன பிறகு, நாம என்ன சொல்லப் போறோம், அல்லது செய்யப் போறோம்னு யோசிச்சுப் பார்த்து,
அதுக்கப்புறமும் சரியா இருந்தாதான் அதைச் செய்யணும்.
கோபத்தையோ வேண்டாத எண்ணங்களையோ
அடக்க என்ன வழி சொல்றாங்க அன்னை? அதைப் பற்றி இன்னொரு நாள் பார்க்கலாம்…
எல்லோரும் நல்லாருக்கணும்!
அன்புடன்
கவிநயா