Thursday, December 27, 2012

தத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்!

ஆருத்ரா தரிசன சிறப்புப் பதிவு.

திரு.சுப்பிரமணியம் ரவி அவர்கள் மிக அழகான நடராஜர் ஓவியங்கள் அனுப்பி இருந்தார். (படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்) அவற்றை இங்கே பிரசுரிப்பதில் மிக்க பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். அனுமதி தந்தமைக்கு, அவருக்கு நன்றிகள் பல.


அப்பனும், அம்மையும்                                                           ஊர்த்துவ தாண்டவம்



சுப்பு தாத்தா மோஹனத்தில் பாடிக் கலக்கியிருக்கிறார்! நீங்களும் கூடவே பாடிப் பாருங்களேன்! மிக்க நன்றி தாத்தா!


அண்டம் பிண்டம் அனைத்தும் அதிர்ந்திட!
கண்டம் நின்ற நீலம் மிளிர்ந்திட!
சடைவார் குழலெண் திசையில் பறந்திட!
விடைவா கனனோ விரைந்தே சுழன்றிட!

கங்கை பயந்து முடியினில் ஒடுங்கிட!
மங்கை பாகனின் மேனி ஒளிர்ந்திட!
உடுக்கை ஒலியோ உலகினை ஆக்கிட!
இடக்கை வளரும் தீ அதை அழித்திட!

வலது பாதத்தில் முயலகன் நசுங்கிட!
உலகின் தீமைகள் அவனுடன் பொசுங்கிட!
இடது பாதத்தில் அபயம் காட்டிட!
இதுவே உனது அடைக்கலம் என்றிட!

தத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்!
தித்தோம் திகதோம் திரிகிட தித்தோம்!
நித்தம் சிவன்தாள் பணிவோம் தத்தோம்!
சித்தம் சிவன்தாள் தனிலே தித்தோம்!

மான் மழுவுமாட அர வணியுமாட காற் சதங்கை யாட தத்தோம்!
வான் மதியுமாட வளர் கொன்றையாட அரைத் தோலுமாட தித்தோம்!
வான் மழையுமாட கான் மயிலுமாட பூங் கழல்களாட தத்தோம்!
தேன் மலர்களாட நகை இதழ்களாட அருள் விழிகளாட தித்தோம்!

ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய தத்தோம்!
சிவாயநமஓம் சிவாயநமஓம் சிவாயநமஓம் தித்தோம்!

தத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்!
தித்தோம் திகதோம் திரிகிட தித்தோம்!
நித்தம் சிவன்தாள் பணிவோம் தத்தோம்!
சித்தம் சிவன்தாள் தனிலே தித்தோம்!

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://natarajar.blogspot.com/2007/12/8.html

15 comments:

  1. ஆருத்ரா தரிசன சிறப்புப் பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லாயிருக்கு கவிநயா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு. மரபின் மைந்தன்.

      Delete
  3. கண்டேன், கண்டேன்,கண்டேன்,கண்டறியாதன கண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி கீதாம்மா :) நன்றி.

      Delete
  4. அற்புதமான படைப்பு இது.
    அந்த ஆடிய பாதமே
    ஆருத்ரா தரிசனத்தன்று நேரில் நர்த்தனமாடியது போல்
    ஓர் பிரமை ஏற்பட்டது.

    ஒரு ஜதியுடன் அதை இணைத்ததும் அழகு.

    ஈச்வ்ர சன்னதியில் உருகுவதும் கண்ணீர் பெருகுவதும் இயல்பே.
    நானும் பாடுகிறேன். மோஹனத்தில்.

    சுப்பு தாத்தா.
    இந்த பாடலை உங்கள் அனுமதியை எதிர்பார்த்து எனது ஆன்மீக வலையில்
    ஏற்றியிருக்கிறேன்.
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. மிகவும் உணர்வுபூர்வமாகப் பாடியிருக்கிறீர்கள் தாத்தா. அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.

      //அற்புதமான படைப்பு இது.//

      அவனருளாலே அவன் தாள் வணங்கி... நன்றி தாத்தா!

      Delete
  5. கவிநயா... சுப்பு தாத்தா சொன்னதுபோல //அற்புதமான படைப்பு இது.
    அந்த ஆடிய பாதமே ஆருத்ரா தரிசனத்தன்று நேரில் நர்த்தனமாடியது
    போல் ஓர் பிரமை ஏற்பட்டது. // உண்மை!அதோடு இந்தப்பாடலை
    அவர் பாடிக்கேட்க இன்னும் அதன் அழகு கூடி அசத்தியது! சொன்னது
    போல கூடவே பாடியும் பார்த்தேன் அமர்களம்!

    சுப்புத்தாத்தாவிற்கும் கவிநயாவிற்கும் வாழ்த்துகள்!இறைவனுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா :) பாடிப் பார்த்து அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி :)

      Delete
  6. Asaththeettinga!Kavithaiai padikkumpothe narthanam aaduvathu pola
    thonrukirathu!
    Natarajan

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு.நடராஜன்!

      Delete
  7. கூத்தனின் கூத்தைத் திறம்பட உரைத்துள்ளீர்கள். கூத்து என்றாலே களிப்பைத் தருவதுதானே! எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.
    அன்புடன்,
    சைதை முரளி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மகிழ்ச்சி கண்டு எனக்கும் மகிழ்ச்சி. மிக்க நன்றி திரு.சைதை முரளி.

      Delete
  8. திரு.சு.ரவி அவர்கள் வரைந்து தந்த அற்புதமான நடராஜர் படங்களைக் கண்டு மகிழவும், சுப்புத் தாத்தா பாடித் தந்ததை இதுவரை கேட்காதவர்கள் கேட்கவும், மீண்டும் ஒரு முறை வருகை தாருங்கள்!

    அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)