Sunday, December 2, 2012

குரங்கா, குழந்தையா?


ப்பல்லாம் எல்லாப் பொருளும் கூடவே ஒரு கைந்நூலோடதானே (அதாங்க, நம்ம கூட சுத்தத் தமிழ்ல manual-ன்னு சொல்வோமே) வருது… மின் ஆட்டுக்கல்லோ (கிரைண்டர்), மின் அம்மியோ (மிக்ஸி) வாகனமோ, தொ(ல்)லைக்காட்சியோ, எது வாங்கினாலும், கூடவே ஒரு புத்தகமும் குடுத்துருவாங்க. (அதை நாம படிக்கிறோமா இல்லையாங்கிறது வேற விஷயம்!) அதே போல இந்த உலகத்தில் எப்படி வாழறதுங்கிறதுக்கு “Life For Dummies” மாதிரி ஒரு புத்தகம் இருந்தா நல்லாருக்கும்தானே!

எந்தெந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எப்படியெப்படி நடந்துக்கணும், எந்தெந்த இடத்தில் எப்படியெப்படி பேசணும், எந்தெந்த மாதிரி பிரச்சனைகளை எப்படியெப்படி தீர்க்கலாம், இதெல்லாம் சொல்லித் தர்ற மாதிரி ஒரு புத்தகம் இருந்தா? முக்கியமா, அவசர ஆபத்துக்கு யாரைக் கூப்பிடலாம் அப்படிங்கிறதுக்கு ஒரு தொலைபேசி எண்ணோ, இல்லை ஒரு மின்னஞ்சல் முகவரியோ இருந்தா? (பக்க விளைவுகள் தெரிஞ்சுதான் இறைவன் மின்னஞ்சலெல்லாம் வெச்சுக்கலை போல!)

இப்படியெல்லாம் வேடிக்கையா சொன்னாலும், நிஜமாவே ‘எப்படி வாழணும்’ அப்படின்னு பெரியவங்கல்லாம் ஏற்கனவே எழுதி வெச்சுட்டுதான் போயிருக்காங்க. ஆனா நாமதான் manual –ஐப் படிக்காமலேயே பொருட்களைப் பயன்படுத்தற ஆளுங்களாச்சே. அதே மாதிரி இங்கேயும், பெரியவங்க சொல்லி வெச்சுட்டுப் போனதையெல்லாம் கண்டுக்கிறதும் இல்ல, படிக்கிறதும் இல்ல, பயன்படுத்தறதும் இல்ல.

கண்ணன் சொன்ன கீதை அப்படிப்பட்ட புத்தகம்தான். நிறைய பெரியோர்கள் சொல்வதும் இதுதான். நாமதான் அதெல்லாம் ‘ஆன்மீகம்’ அப்படின்னும், வயசான பிறகு, ஓய்வெடுத்த பிறகு, தெரிஞ்சிக்கிட்டா போதும்னும், தள்ளி வெச்சிட்டோம்.

கொஞ்சம் பக்கத்தில் போய் பார்த்தாதான் தெரியுது… இதெல்லாம் முக்தி அடையறதுக்கான வழியோ இல்லையோ, ஆனா இதையெல்லாம் கடைப்பிடிச்சா நிச்சயமா மன அமைதியோட வாழலாம் அப்படின்னு.

எந்த மதத்தை எடுத்துக்கிட்டாலும், அதனோட போதனைகள் கிட்டத்தட்ட ஒண்ணாதான் இருக்கும். குறிப்பா நற்குணங்களை வளர்த்துக்கறது, தீய குணங்களை விட்டுத் தள்றது. புறம் பேசாம இருக்கறது. சக உயிர்களிடம் அன்பாக இருக்கறது. அறத்தின் படி நடக்கறது. இந்த மாதிரி. யோசிச்சுப் பாருங்க,  இப்படியெல்லாம் இருந்துட்டாலே மன அமைதி தன்னால வந்துடும்.

ஒரு அறைக்குள்ள நிறைய்ய தட்டுமுட்டுச் சாமான்கள் இருக்குன்னு வைங்க. ஒரு குட்டி இடம் கூட விடாம அவ்வளவு சாமான்கள் கிடக்கு. ஒண்ணு மேல ஒண்ணா கிடக்கு. அடுத்தடுத்து கிடக்கு. கதவைத் திறக்கக் கூட இடம் இல்லாம கிடக்கு. இப்படிப் பட்ட அறைக்குள்ள எப்படிப் போவீங்க? சூரிய ஒளியோ காற்றோ கூட இங்கே போக முடியாது. தூசியும் தும்பும்தான் சேர்ந்துக்கிட்டே வரும்.

நம்ம மனசுக்குள்ளயும் இப்படி நிறைய தட்டு முட்டுச் சாமான்கள் கிடக்கு. ஆசை, பாசம், எதிர்பார்ப்பு, கோபம், தாபம், வருத்தம், பொறாமை, கவலை, கண்ணீர், இப்படி எக்கச்சக்கமா கிடக்கு. இப்படி அடைச்சுக் கிடக்கிற மனசுக்குள்ள அமைதியும் ஆனந்தமும் எப்படிப் புக முடியும்?

இந்த மாதிரி அடைசல் சேரச் சேர, சுத்தம் பண்ற வேலை கஷ்டமாயிடும். தேங்கிக் கிடக்கிற தண்ணீர் சாக்கடையா மாற ரொம்ப நாளாகாது. பூட்டிக் கிடக்கிற அறைக்கும், தேங்கிக் கிடக்கிற தண்ணிக்குமே இந்த கதின்னா, நம்ம மனசு என்ன ஆகும். அதனால மனசை அப்பப்ப சுத்தம் பண்றது ரொம்ப அவசியம். அப்பதான் அமைதியும் சந்தோஷமும் மனசுக்குள்ள வர்றதுக்கு வழி ஏற்படும். இப்படிப்பட்ட கசடுகளைச் சேர்த்துக்காம இருக்கறதுக்கான வழிகளைத்தான் ஆன்மீகம் சொல்லுது.

எண்ணம், வாக்கு, செயல் மூன்றும் ஒன்றாக இருந்தாலே மனசு தானாக சுத்தமாயிடுமாம்,  சரியாயிடுமாம்.  சொல்றதுக்கு எவ்வளவு சுலபமா இருக்கு! செய்து பார்த்தாதான் தெரியும், இந்த மூன்றும் ஒன்றாக இருக்கும்படி நடந்துக்கிறது எவ்வளவு கஷ்டம்னு.

எல்லாத்துக்கும் அடிப்படை எண்ணங்கள் தான். எண்ணங்கள் ரொம்ப வலிமை வாய்ந்ததாம். நம்முடைய போன பிறவியில் நமக்கு ஏற்பட்ட எண்ணங்களாலும், அவற்றால் ஏற்பட்ட ஆசாபாசங்களின் படியும் தான் நம்மோட இந்தப் பிறவியும்,  வாழ்க்கையும் அமையுது அப்படின்னு சொல்றார், ஸ்ரீயோகானந்தர். அந்த அளவுக்கு அடுத்த பிறவியையே நிர்ணயிக்கும் சக்தி எண்ணங்களுக்கு இருக்குன்னா, நம் இப்போதைய வாழ்க்கையில், அடுத்த நாட்களில், நிமிடங்களில் நடக்கிறதும் நம் எண்ணங்களைப் பொறுத்துதானே இருக்கு!

அதனால, நம்ம மனசுக்குள்ள அப்படி என்னதான் ஓடிக்கிட்டிருக்குன்னு அப்பப்ப திறந்து பார்க்கணும். கவனிக்கணும். ஒரு சாதாரண இயந்திரத்தில் தொடங்கி, எல்லாத்துக்குமே பராமரிப்புங்கிறது (maintenance) ரொம்ப முக்கியம். அப்பதான் அது ரொம்ப நாளைக்கு சிறப்பா உழைக்கும். அப்படி இருக்கும் போது மனசை மட்டும் கண்டுக்காம விடலாமா?

மனசு இருக்கே, அது குரங்கு மாதிரின்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா குரங்கா இருக்கறதைக் குழந்தையா மாத்தறது நம்ம கையில்தான் இருக்கு.

சரிதானே நான் சொல்றது :)

எல்லாரும் நல்லாருக்கணும்.

அன்புடன்
கவிநயா


நன்றி: வல்லமை
 


11 comments:

  1. அழகாய்ச் சொல்லியுள்ளீர்கள். உண்மைதான். நல்ல பதிவுக்கு நன்றி கவிநயா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி :)

      Delete
  2. Replies
    1. ரைட்டு! நன்றி கோபி :)
      (இளையராஜாவைப் பார்க்கும் போதெல்லாம் உங்க நினைவுதான் வருது :)

      Delete
  3. (பக்க விளைவுகள் தெரிஞ்சுதான் இறைவன் மின்னஞ்சலெல்லாம் வெச்சுக்கலை போல!)

    :-))

    ReplyDelete
  4. //ஆனா இதையெல்லாம் கடைப்பிடிச்சா நிச்சயமா மன அமைதியோட வாழலாம் அப்படின்னு.//

    Well said. சொந்த நலனுக்காவது இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி ஐயா. நன்றி :)

      Delete
  5. குரங்கா, குழந்தையா?...... நன்றாக இருந்தது. எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான் என்றாலும், நிஜம், நடப்பு என்று வரும்பொழுது இடிக்கிறது. ஒன்றாக, ஒற்றுமையாக இருக்கும் குடும்பங்களை படங்களிலோ, தொடர்களிலோ பார்த்து கண்ணீர் (!)விடும் நாம்...... சொந்தங்களை அனுசரிக்க மறுக்கிறோம்.... விருந்து வருவதை விரும்ப மறுக்கிறோம்..(அனிச்சைப்பூ....). இந்த தலைப்பைத் தொட்டுத்தான் அடுத்த படைப்பை உருவாக்க நினைத்திருக்கிறேன்.....Is that o.k.?......
    REGARDS, PLK.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் எழுத்தாளரே. முதலில் நல்லன தீயனவற்றை பகுத்தறியத் தெரிய வேண்டும். பிறர் மனம் புண்படக்கூடாது என்ற நோக்கம் (attitude) இருக்க வேண்டும். அதன் பிறகு நம் மனதை அதன் போக்கில் விடாமல் நம் போக்கிற்குப் பழக்க வேண்டும். பலருக்கும் இதற்கான நிதானமும் பொறுமையும் இருப்பதில்லை. நினைத்ததை நினைத்தவுடனே செய்து விட வேண்டும் என்ற வேகம் தான் இருக்கிறது; செய்யலாமா கூடாதா என்று தீர்மானிக்கும் விவேகம் இல்லை. என்ன செய்வது? பின்னூட்டம் நீளுவதால், இன்னொரு பதிவாகப் பிறகு தொடர்கிறேன் :)

      வாசித்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
    2. //இந்த தலைப்பைத் தொட்டுத்தான் அடுத்த படைப்பை உருவாக்க நினைத்திருக்கிறேன்.....Is that o.k.?...... //

      நல்ல பிள்ளையாக அனுமதி கேட்டதால்... granted :)

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)