நாம் எல்லோருமே உணர்ச்சிகளுக்கு
அடிமைதான். சந்தோஷமோ, கவலையோ, கோபமோ, சில பேரை உடனடியா பெரிய அளவில் தாக்கும். சிலர்
வெளிப்பார்வைக்கு நிதானமா தெரிஞ்சாலும், உள்ளுக்குள்ள அதிகமா பாதிக்கபடறவங்களா இருப்பாங்க.
அல்லது என்னை மாதிரின்னா ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப மனசுக்குள்ள ஓட்டிப் பாத்து
துன்பத்தை தக்க வச்சுக்கறவங்களா இருப்பாங்க.
சில சமயம் நினைச்சுப்பேன், சினிமாலேல்லாம்
ஒரே நினைப்பை, அல்லது ஒரே flash back ஐ திரும்பத் திரும்பக் காண்பிச்சா நமக்கு எப்படி
எரிச்சல் வரும்? ஆனா நாம அதைத்தானே தினம் தினம் பண்றோம் அப்படின்னு!
காலம் காலமா நமக்கு தெரிஞ்ச விஷயத்தைப்
பற்றிதான் பேசப் போறோம் இன்றைக்கு. அதாவது
உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது. கொஞ்சம் தள்ளிப் போடணும்.
சொல்லும் போது சுலபமாதானே இருக்கு. ஆனா செயல்படுத்தறது ரொம்பவே கடினம்.
குறிப்பா கோபமா இருக்கும் போது
நிச்சயம் எதுவுமே செய்யக் கூடாது, சொல்லவும் கூடாது. ஒருத்தர் மேல எக்கச்சக்கமா கோபமாவோ,
வருத்தமாவோ இருக்கும் போது, அந்த நபருக்கு நாம மின்னஞ்சலோ, செய்தியோ அனுப்பவே கூடாது.
அந்தச் சமயத்தில் நாம சொல்ற வார்த்தைகள் பின்னாடி நம்மையே வருத்தப்பட வைக்கிற சாத்தியக்
கூறுகள் அதிகம். இந்த மாதிரி செய்துட்டு, என் மேல் தவறு இல்லாத சமயங்களில் கூட, என்
இயல்பினால் நானே போய் அவர்களிடம் மன்னிப்பு கேட்ட அனுபவங்கள் எனக்கு இருக்கு. அவங்க
என் மனதை ஏதோ ஒரு காரணத்தால் புண்படுத்தியதாலதான் கோபமே வந்திருக்கு. அது நியாயமாகவே
இருந்தாலும், அந்தக் கோபத்தில் நான் ஏதோ சொல்லப் போய் அது திரும்ப அவங்க மனதைப் புண்படுத்தியிருக்கும்
இல்லையா? இதுக்கு முதலிலேயே ஒழுங்கா நிதானிச்சிருக்கலாமேன்னு பிறகு தோணியிருக்கு. பொதுவாகவே, நம்மை யாராச்சும் ‘சுருக்’குன்னு ஏதாச்சும்
சொல்லிட்டா, உடனடியா அந்த ‘சுருக்’கை நாம திருப்பிக் கொடுத்துடணும்னு தோணும்! இந்தப்
பழக்கத்தைக் கஷ்டப்பட்டுதான் மாத்திக்கணும்.
திரு. சுகிசிவம் சொல்லுவார்
– அளவுக்கதிகமான கோபம் வந்தா, உடனே நம் position-ஐ மாத்திக்கணுமாம். அதாவது, நின்னுக்கிட்டிருக்கும்
போது கோவம் வந்தா, உட்கார்ந்துடணுமாம். உட்கார்ந்திருக்கும் போது வந்தா, படுத்துடணுமாம். ஏன்? நம் உடலோட நிலைக்குத் தகுந்த மாதிரி நம் சுவாசத்தின்
தன்மை மாறும். சுவாசம் நிதானப் பட்டுச்சுன்னா, நம்ம உணர்ச்சியும் மாறும்; நிதானப்படும்.
அதனாலதான், கோவம் வந்தா மூச்சை இழுத்து விடுங்க, மெதுவா 1,2,3 எண்ணுங்க, இப்படில்லாம்
சொல்றாங்க. ஆனா அதெல்லாம் விட, திரு. சுகிசிவம் அவர்கள் சொன்னது எனக்குப் பிடிச்சிருந்தது.
(அதுக்குன்னு அலுவலகத்தில் மீட்டிங்கில் இருக்கும்போது
கோவம் வந்தா உடனே படுத்துக்காதீங்க! அப்புறம் வேலையை விட்டு தூக்கிட்டாங்கன்னா, நான்
பொறுப்பில்லை! ஹி…ஹி… :))
பொதுவாகவே எல்லோரும், குறிப்பா
பெண்களும், அதிலும் குறிப்பா பருவ வயது பெண்களும் மின்னஞ்சல் விஷயத்தில் கவனமா இருக்கணும்.
நாம தனியான ஒரு நபருக்குதானே எழுதறோம்னு நினைச்சிருப்போம், ஆனா ஒரு முறை அது போயிடுச்சுன்னா,
அப்புறம் அது நம்ம கட்டுப்பாட்டில் இல்லை; அதை ரிசீவ் பண்ணறவங்க, அதை என்ன வேணும்னாலும்
செய்யலாம். யாருக்கு வேணும்னாலும் அனுப்பலாம்னு புரிஞ்சுக்கணும். முன்னயாவது
forward பண்ணி வர்ற மின்னஞ்சலில் உள்ள செய்தியை மாற்ற முடியாம இருந்தது. ஆனா இப்பல்லாம்
அப்படி வர்ற மின்னஞ்சலில் செய்தியை மட்டும் இல்லாம, எதை வேணுமானாலும் மாற்றலாம்!
நாம பலரிடமும் வெள்ளந்தியா பேசறோம்,
எழுதறோம். ஒரே ஒருத்தரிடம் மட்டும்தான் நாம கொஞ்சமே கொஞ்சம் நம்ம சொந்த விஷயத்தை பகிர்ந்துக்கறோம்னு
நினைப்போம், ஆனா அது பிறகு யாரால எப்படியெப்படி பயன்படுத்தப் படும்னு நமக்கு தெரியாது.
சினிமாலேல்லாம் நிறைய பாத்திருக்கோமே, பழைய
காதலன் காதல் கடிதங்களை வச்சு ப்ளாக் மெயில் பண்றதை!
ஒரு நாள், நான் ஒரு தோழிக்கு
அனுப்ப நினைச்சு டைப் பண்ணின text message -ஐ இன்னொருத்தருக்கு அனுப்பிட்டேன்! கண்ணாடி போடாம, அவசரமா அனுப்பினதால, அதே மாதிரி
இருந்த இன்னொருத்தர் பெயருக்கு அனுப்பிட்டேன். நல்ல காலமா அது எதுவும் சொந்த விஷயமா
இருக்கலை, பொதுவான ஒரு விஷயமா போச்சு.
கடிதம்னாலும், மின்னஞ்சல்னாலும்,
நாம எழுதற விஷயத்தை கவனமா எழுதணும். சில சமயம் நாம நல்ல நோக்கத்தோடயே எழுதினாலும்,
அவசரத்தில் எழுதிட்டோம்னு வைங்க, படிக்கிறவங்களுக்கு ரொம்ப rude-ஆ எழுதின மாதிரி இருக்கும்.
அப்புறம் அவங்க கோவப்பட, நாம சமாதானம் செய்ய, மறுபடி அதே வட்டம். பேசும்போதுன்னா, குரலை
வச்சு, நேரிலன்னா, முகபாவத்தை வச்சு, நாம நல்லா சொல்றமா இல்லையான்னு தெரியும். ஆனா
எழுத்தில் என்ன நம்ம முகமா தெரியுது? அதனால கொஞ்சம் நேரம் அதிகமானாலும் கூடுமானவரை
சாதாரணத்தை விட கொஞ்சூண்டு அதிக மரியாதையோடயும், அதிக அன்போடயும் எழுதறது நல்லது.
குழும மடல்கள் வரும்போது, தனிப்பட்ட
நபருக்கு மட்டும் பதில் எழுத நினைச்சு reply தட்டினா, குழும முகவரிதான் அதில் வந்து
உட்கார்ந்திருக்கும். அதையும் கவனமா பார்த்துக்கணும். அந்த சமயத்தில் reply தட்டாம
forward தட்டி, முகவரியை நாமே தட்டச்சி, பதில் எழுதினா இன்னும் கொஞ்சம் பாதுகாப்பு.
இப்பல்லாம் மின்னஞ்சல்ல முகவரி
டைப் பண்ணும்போதே ‘auto suggestion’ என்கிற பெயரில் நாம் தொடர்பு வரிசையில் வச்சிருக்க
மின்னஞ்சல்களில் அதே மாதிரி ஆரம்பிக்கிற பெயர்களெல்லாம் வரிசையா வருது. அவசரப்பட்டு
“return” –ஐத் தட்டிட்டா போச்சு! நாம யாருக்கோ அனுப்ப வேண்டிய மெயில் வேற யாருக்கோ
போயிடும்! அது ரொம்ப sensitive ஆன சொந்த விஷயமா போயிடுச்சுன்னா என்ன பண்றது! தலை கீழா
நின்னாலும் திரும்ப வருமா?
அதனால, உணர்ச்சி வசப்பட்டாலும்
சரி, அல்லது ஒரு அந்தரங்கமான சொந்த விஷயத்தை யாரோடயாவது மின்னஞ்சல் மூலமா பகிர்ந்துக்க
நினைச்சாலும் சரி, அல்லது ஒருத்தரைப் பற்றி புகார் பண்ணி (!) இன்னொருத்தருக்கு எழுதறதா
இருந்தாலும் சரி, ஒரு முறைக்கு பல முறை யோசிச்சிட்டு செய்ங்க. முகவரியையும் ஒரு முறைக்கு
பல முறை சரி பாருங்க. சில விஷயங்களை மின்னஞ்சலில் எழுதறதை விட, தொலைபேசியிலேயோ, நேரிலேயோ
பேசிடறது நல்லது.
இந்த வம்பில் மாட்டிக்காம இருக்க
ஒரே சுலபமான வழி, நாம எழுதற மடல்களெல்லாம் யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காம இருக்கறதுதான்.
(நம்மளையும் தான்! :))
அப்பதான் அது தவறான ஆளுக்கே போயிட்டாலும்,
எந்த பிரச்சனையும் இருக்காது.
“Never decide anything without
stepping back, never speak a word without stepping back, never throw yourself
into action without stepping back.” அப்படின்னு அரவிந்த அன்னை
சொல்றதை மனசில் வச்சுக்கறது நல்லது.
இனிமேலாவது இந்த விஷயத்தில் எல்லோருமே
இன்னும் கொஞ்சம் கவனமா இருப்போம்! என்ன சொல்றீங்க!
எல்லோரும் நல்லாருக்கணும்!
அன்புடன்
கவிநயா.
நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://esellermedia.com/2012/07/03/6-tips-punchy-email-campaign/