அனைவருக்கும் அன்பான, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
என் கண்ணையே என்னால நம்ப முடியல! இவங்க கூட சேர மாட்டமான்னு எல்லாரும் ஏங்கற கூட்டத்தில இருந்து எனக்கு அழைப்பு! உடனே சரின்னு சொல்லி மெயில் அனுப்பத்தான் கை பரபரத்தது. இருந்தாலும் கொஞ்சம் நிதானிச்சேன். என்னதான் இவங்க பிரபலமா இருந்தாலும், இவங்களோடல்லாம் நம்மால ஒட்ட முடியுமா, ஒரு அஞ்சு நிமிஷம் சேர்ந்தாப்ல பேச முடியுமா, இப்படில்லாம் ஓடிச்சு நெனப்பு. ராத்திரி பூரா குழப்பிக்கிட்ட பிறகு, என் பெஸ்ட் ப்ரெண்டை கூப்பிட்டு பேசினேன்.
என்ன பார்ட்டி, என்ன ஏது, அப்படி, இப்படின்னு பாட்டி மாதிரி விசாரிச்சப்புறம், “போய்த்தான் பாரேன். உன்னை என்ன கடிச்சா தின்னப் போறாங்க? ஒத்து வந்தா நட்பை தொடர்ந்துக்கோ, இல்லைன்னா அடுத்த முறை கத்தரிச்சிடு. அவ்ளோதானே?”, அப்படின்னா. அவகிட்ட பேசினாலே எல்லா விஷயத்தையும் எப்படியோ சுலபமாக்கிடுவா! “நீ சைக்காலஜி படிச்சுட்டு கவுன்சிலரா போயேண்டி”, அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கேன், அவகிட்ட!
அன்னிக்கு ராத்திரியே அவங்க தந்த போன் நம்பர்ல கூப்பிட்டு பேசினேன். ஏதாச்சும் சமையல் செய்து கொண்டு வரவான்னு கேட்டேன். “அதெல்லாம் வேண்டாம்ப்பா. சும்மா ஜாலியா வா. தீபாவளி பார்ட்டி. வெளியதான் சாப்பிட போறோம்”, அப்படின்னாங்க.
ஹ்ம், இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. என்ன ட்ரஸ் போட்டுக்கலாம்? தீபாவளிங்கிறதால சேலை, சூரிதார், இப்படி போட்டுக்கிட்டு போனாதான் இலட்சணமா இருக்கும். எங்கிட்ட இருக்க துணிமணிங்களை கெளறி பார்த்துட்டு, கடைசியில கொஞ்சம் எளிமையா, அதே சமயம் கொஞ்சம் பளிச்சுன்னு இருக்கிற சூரிதாரை தேர்வு செஞ்சு வச்சேன்.
அந்த நாளும் வந்தது. தலை குளிச்சு அழகா சூரிதாரை போட்டுகிட்டு, அதுக்கேத்தாப் போல வளையல் போட்டு, பொட்டு வச்சிக்கிட்டேன். கண்ணாடி பார்த்தப்போ எனக்கே “பரவாயில்லையே”ன்னு தோணுச்சின்னா பாருங்க!
படபடக்கிற மனசோட பார்ட்டிக்கு போனேன். தீபாவளி பார்ட்டிங்கிறதால பட்டாசு மத்தாப்பெல்லாம் இருக்குமோ?
ஒரு ரெஸ்டாரண்ட்லதான் சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது. அமெரிக்காவில் அதுக்கா பஞ்சம்? உள்ளே போனதும் பார்த்தா, பத்து பேர்ல ஒருத்தி கூட சூரிதார்லயோ, சேலையிலையோ இல்லை! எல்லாரும் அழகிப் போட்டிக்கு வந்தாப்ல அமெரிக்க பாணியில் ட்ரஸ் பண்ணியிருந்தாங்க. நான் மட்டுந்தான் சூரிதார்! என்ன பண்றதுன்னே தெரியல. போச்சு, இன்னிக்கு நெகெட்டிவ் மார்க்தான்ன்னு நினைச்சுக்கிட்டே ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தேன்.
பக்கத்தில் இருந்த பொண்ணு சொன்னா, “சூரிதார்ல நீ ரொம்ப அழகா இருக்கே. எங்கே வாங்கினது? இந்தியா போயிருந்தியா?”
நான் பதில் சொல்றதுக்குள்ள சர்வர் வந்துட்டா. “குடிக்கிறதுக்கு என்ன வேணும்?”
ஒவ்வொருத்தரா சொல்ல ஆரம்பிச்சாங்க –
“பியர்”
“ரெட் வைன்”
“வைட் வைன்”
என் முறை வந்தது. “டயட் பெப்சி”.
எல்லாருடைய ஒரு மாதிரியான பார்வையையும் என் மேல உணர முடிஞ்சது.
சர்வர் அந்த பக்கம் போன பிறகு அறிமுகப் படலம் ஆரம்பிச்சது.
“உமா ஃப்ரம் இண்டியா. நான் மேல்படிப்புக்காக இங்கே வந்திருக்கேன்.”
“சரளா ஃப்ரம் இண்டியா. நான் ரிஸர்ச்சுக்காக.”
“கலா. என் கம்பெனி ப்ராஜக்டுக்காக இந்தியால இருந்து வந்திருக்கேன்”.
எல்லாரும் சொல்லி முடிச்சதும் என்னோட முறை.
“நான் ரேச்சல், ஃப்ரம் நியூயார்க். போஸ்ட் க்ராஜுவேட் பண்ண வந்திருக்கேன்”.
--கவிநயா
பி.கு.1. ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எழுதியது.
பி.கு.2. கதையில் கலந்திருக்கிற அளவுக்கதிகமான ஆங்கிலத்தை மன்னிக்கவும். கதையில் தன்மை காரணமா நல்ல தமிழில் எழுதினா சரியா இருக்காதுன்னு தோணுச்சு! :)
பி.கு.3. என்னோட கண்ணு கொஞ்ச நாளாவே 'நான் இருக்கேன், என்னைக் கவனி', அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கு. கணினி பயன்பாட்டைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதால்... 'நினைவின் விளிம்பில்...', ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடரும்...