
சந்தோஷம் என்பது பூமணம் போல. உங்ககிட்ட ஒரு கை மல்லிகைப்பூ இருக்குன்னு வைங்க, அதை நீங்க இன்னும் ரெண்டு பேருக்கு கொடுக்கறீங்க. அவங்க அதை வைக்கிற இடம் கமகமக்கும். பிறகு அதை அவங்க இன்னும் ரெண்டு பேருக்கு கொடுக்கறாங்க, இப்ப இன்னும் கொஞ்ச பேரோட இடம் மணமணக்கும்! இப்படியே உங்க பூவோட மணம் எவ்வளவு தூரத்துக்கு பரவுது பாருங்க.
சந்தோஷமும் அப்படித்தான். நீங்க கொஞ்சம் அடுத்தவங்களுக்கு குடுத்தா, அந்த சந்தோஷத்தில் அவங்க இன்னொருத்தவங்களுக்கு குடுப்பாங்க, அவங்க இன்னொருத்தங்களுக்கு, இப்படியே பரவும். மல்லிகைப் பூவாச்சும் ஒரு கட்டத்தில் தீர்ந்து போயிடும். ஆனா நாம பரப்பற சந்தோஷம் இருக்கே, அது இரட்டிப்பாகுமே தவிர, குறையாது.
அது சரி, ஒருத்தரை சந்தோஷப்படுத்த சுலபமான வழி எதுன்னு நினைக்கிறீங்க?
அவங்களைப் பாராட்டறதுதான்!
அன்னை தெரசா என்ன சொல்றாங்க பாருங்க –
“There is more hunger for love and appreciation in this world than for bread.”~ Mother Teresa
உங்களைப் பாராட்டினா உங்களுக்கு சந்தோஷமா இருக்காதா? நிச்சயமா இருக்கும். ஆனா, பாராட்டுவது சுலபமில்லைங்க, அதுவும் ஒரு கலைதான். ஒருத்தரைப் பாராட்டும் போது மனதார, உணர்ந்து, உண்மையா பாராட்டணும். அப்பதான் அது பாராட்டறவங்க, பாராட்டப்படறவங்க, இரண்டு பேருக்குமே உண்மையான சந்தோஷத்தைத் தரும்.
ஆனா பல சமயங்களில் நடப்பது என்ன? ஒருத்தர்கிட்ட காரியம் ஆகணும்கிறதுக்காக வலியப் போய் பொய்யான பாராட்டுக்களை அள்ளி விடறவங்கதான் அதிகமா இருக்காங்க.
அதோட மட்டுமில்லாம, பொதுவாகவே மற்றவங்களோட குறைகள்தான் நம் கண்ணில் அதிகம் படும்; நிறைகள் கண்ணில் படுவது அபூர்வம். அதனாலதான் நாம் மனதார பாராட்டுவதும் அபூர்வமா இருக்கு போல.
இப்படி செய்து பார்க்கலாம்… ஒரு நாளைக்கு குறைஞ்சது ஒருத்தரையாவது உண்மையா பாராட்டணும் அப்படின்னு வச்சுக்குவோம். அந்த ஒருத்தர், நம்ம குடும்பத்தில் ஒருத்தரா இருக்கலாம், அலுவலகத்தில் வேலை செய்கிறவரா இருக்கலாம், ஏன், காய்கறிக் கடைக்காரராகக் கூட இருக்கலாம். அன்றைக்கு முழுக்க நாம சந்திக்கக் கூடிய நபர்களில் யாராக வேணும்னாலும் இருக்கலாம்.
ஒவ்வொருத்தரையும் ‘இவங்களை எப்படி பாராட்டலாம்?’ என்கிற எண்ணத்தோட பார்க்கும் போது என்ன ஆகும்? நாம இது நாள் வரை அவங்ககிட்ட பார்த்திருக்காத பல நல்ல விஷயங்கள் நம் கண்ணில் பட ஆரம்பிக்கும். அப்படி ஆகும்போது, அவங்களோட குறைகள் நம் பார்வையிலிருந்து மறைய ஆரம்பிச்சிடும்.
எவ்வளவு நல்ல விஷயம் பாருங்க அது! எங்கேயும் எப்பவும் நல்லதை மட்டுமே பார்க்கப் பழகுவது சாதாரணமான விஷயம் இல்லை. அப்படி ஒரு நல்ல விஷயத்தை எடுத்து, நீங்க ஒருத்தரை மனதார பாராட்டினீங்கன்னு வைங்க! அந்த சந்தோஷத்தில் அவர் இன்னொருவரிடம் அன்பாக நடந்து கொள்வார்; வேறொருவரை பாராட்டுவார், பிறகு அவங்க தங்களுடைய மகிழ்ச்சியை இன்னும் சிலரிடம் கொடுப்பாங்க… நீங்க ஆரம்பிச்ச சந்தோஷம் இப்படியே பரவிக்கிட்டேதானே போகும்!
அட, பாராட்ட எதுவும் கிடைக்கலையா, அன்பா ஒரு சில வார்த்தைகள். அதுவும் முடியலையா, கனிவா ஒரு புன்னகை, இப்படி ஏதாவது…
ஆக மொத்தம், ஜலதோஷம் போல சந்தோஷமும் ஒரு தொற்று வியாதிதான்!
(அப்பாடி, தலைப்பு வந்திருச்சா?)
பரப்புவோமா? :)
இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி: முகஸ்துதி பண்றது, காக்கா பிடிக்கிறது அப்படிங்கிற பிரயோகங்கள் எப்படி வந்தது?
அன்புடன்
கவிநயா
பி.கு.: படத்துக்கு நன்றி: தினமலர்