Wednesday, June 30, 2010

ரசமோ ரசம்!

ஆறிலும் கத்துக்கலாம்..., அறுபதிலும் கத்துக்கலாம்...! - 3

முதல் பகுதி: இங்கே; இரண்டாம் பகுதி: இங்கே



ரசம்னு சொன்னவுடனே பருப்பு ரசம், மிளகு ரசம், தக்காளி ரசம், இந்த ரச வகைகள் பத்திப் பேசப் போறோம்னு நினைச்சு வந்திருந்தீங்கன்னா, மன்னிச்சுக்கோங்க :) இன்னிக்கு நாம பரதத்தில் உள்ள நவரசங்களைப் பத்திதான் பார்க்கப் போறோம்!

‘ரசம்’ என்பது என்ன? நடனம் ஆடுபவர் வெளிப்படுத்தும் பாவங்கள், பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்தும் உணர்வுகளே ரசம் அப்படின்னு நாட்டிய சாஸ்திரம் சொல்லுது. ரசனை, ரசிகர், இந்த சொற்களோடு தொடர்பு படுத்திப் பார்த்தா தெரியும்...

சினிமா பார்க்கும்போது எத்தனை பேர் கைக்குட்டையால கலங்கின கண்ணை துடைச்சிருக்கீங்க! வில்லனை பார்க்கும்போது நாமே திரைக்குள்ள போய் ரெண்டு போடு போடலாம்கிற மாதிரி கோவம் வந்திருக்கா? :) எல்லாம் சுபமா முடியும் போது ‘அப்பாடி’ன்னு மனசு நிறைவா, சந்தோஷமா உணர்ந்ததுண்டா?

அதே போலத்தான் இதுவும். நடனமாடுபவர் மிகவும் திறமையானவராய் இருக்கும் பட்சத்தில் அவர் வெளிப்படுத்தும் பாவங்கள் கண்டிப்பா பார்ப்பவர்கள் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவரச பாவங்கள் என்பது தென்னிந்திய நடனங்களுக்கே, குறிப்பா பரதத்துக்கே உரிய சிறப்பு. மற்ற நடனங்கள் பார்த்தீங்கன்னா, வெறும் உடலை, கைகால்களை மட்டுமே பயன்படுத்துவாங்க. ஆனா பரதத்திலும், பிற தென்னிந்திய பாரம்பரிய நடனங்களிலும்தான், கதை சொல்லும் உத்தியும், அதன் காரணமா பலவித உணர்வுகளை முகபாவத்தாலும், முத்திரைகளாலும் வெளிப்படுத்துவதும் இருக்கு.

அன்றாட வாழ்க்கையில் நாம அனுபவிக்கும் பலவிதமான மன நிலைகளைத்தான் விதவிதமான முகபாவங்களாக பரதத்தில் வெளிப்படுத்தறாங்க. நாட்டிய சாஸ்திரத்தில் இந்த மாதிரியான உணர்வுகளை ஒன்பது விதமா வகைப்படுத்தி இருக்காங்க.

சிருங்காரம் –

சிருங்காரம் என்றால் அழகு. மனிதனுக்கு அழகு எது? அன்பு. அன்பில் பலவகை இருக்கு. ஆண், பெண்ணுக்கிடையேயான காதல், தாய், பிள்ளைக்கிடையேயான அன்பு, குரு, சிஷ்யர்களுக்கிடையிலான அன்பு, முக்கியமாக, இறைவனிடம் பக்தன் காட்டும் அன்பு, இப்படி…

ஏனோ சிருங்காரம்னா காதல் மட்டுமேங்கிற மாதிரிதான் இப்போதைய புரிதல் இருக்கு. இது தவறு. நாட்டியமே ஆன்மீகத்துக்கு மிக நெருக்கமானது, அதுவும் இறைவனை அடைய உதவுகிற ஒரு யோகம் தான்! அதனால இறைவனிடம் காட்டும் அன்புதான் இங்கே தலையாயது. அஷ்டபதியில் கோபியர்கள் கண்ணனிடம் காட்டும் அன்பு வெறும் காதல் மட்டும் இல்லை. அது மிகவும் மேலான ஒரு நிலைப்பட்ட பக்தி. சிருங்காரம் பற்றி இப்படி சொல்வது நான் இல்லை, திருமதி. பாலசரஸ்வதி, திரு. தனஞ்சயன், இந்த மாதிரியான நாட்டிய ஜாம்பவான்கள்தான் இப்படி சொல்லி இருக்காங்க.

இதன் காரணமாத்தான் சிருங்காரத்தை ரசங்களில் முதன்மையானதாக சொல்றாங்க. (‘king of rasas’)

ரௌத்ரம் –

கோபத்தை பல விதமா வெளிப்படுத்துவதுதான் ரௌத்ரம். கோபம் வராதவங்கன்னு யாராவது உண்டா? விசுவாமித்திரர், துர்வாசர், இவங்களைப் போன்ற முனிவர்களுக்கே மூக்குக்கு மேல கோவம் வருமாம்! அப்படி இருக்கும் போது நாமெல்லாம் எந்த மூலைக்கு?

அதனால மிக சுலபமா யாருமே வெளிப்படுத்த முடியற உணர்வு இதுதான் :) உங்களையும் சேர்த்துத்தான்!

ராட்சதர்களைக் காட்டும் போதோ, அல்லது தெய்வம் அரக்கர்களை அழிக்கையில் ஏற்படும் ஆங்காரத்தைக் காட்டும் போதோ, அல்லது இயற்கையின் சீற்றத்தைக் காட்டும் போதோ, இந்த மாதிரி சமயங்களில் இந்த ரசம் பயன்படுகிறது. நடராஜர் ஆடும் பலவிதமான தாண்டவங்களில், அவர் அழிக்கும் கடவுளாக ஆடும் தாண்டவத்தை, ‘ருத்ர தாண்டவம்’ அப்படின்னுதானே சொல்றாங்க…

வீரம் –

தன்னம்பிக்கை, தைரியம், ஆண்மை, உறுதி, இந்த மாதிரியான மனநிலைகளை வெளிப்படுத்தறதுதான் வீரம் என்பது. வீரம் என்பதை உடலுடைய தோரணையிலேயே காட்டலாம். அதை சரியா செய்யலைன்னா அதுவே ‘ஹாஸ்ய’ ரசமாயிடும் அப்படிங்கிறார், திரு. தனஞ்செயன் :)

வீரம்னு சொன்ன உடனே வில்லேந்திய ஸ்ரீ ராமன் தான் என் நினைவுக்கு வருவான்….

பீபஸ்தம் –

பீபஸ்தம்னா அருவருப்பு. எதையாவது பார்க்கும் போது “ஐயய்ய…ச்சீ..ச்சீ” அப்படின்னு முகம் சுளிக்க வைக்கிற உணர்வு. அதை நினைச்சாலே உமட்டுதுன்னு சொல்றோம்ல, அந்த உணர்வை வெளிப்படுத்தற பாவம்தான் இது.

ஹாஸ்யம் –

சந்தோஷம், சிரிப்பு. நகைச்சுவை. இப்படி இதையெல்லாம் வெளிப்படுத்தறதுதான் ஹாஸ்யம். தோழியுடன் கிண்டல் பண்ணி விளையாடறபோதோ, அல்லது குட்டிக் கிருஷ்ணனோட குறும்புகளைப் பற்றிச் சொல்லும் போதோ, இந்த ரசம் பயன்படும்.

கருணா –

கருணை. இரக்கத்தால் ஏற்படுகிற அன்பு. ஒருவருடைய துன்பத்தைப் பார்த்து நமக்கு ஏற்படும் இரக்க உணர்வு. மனிதர்கள் படும் துன்பத்தைக் கண்டு புத்தருக்கு ஏற்பட்டது கருணை. அதனால தான் அந்த துன்பத்துக்கு காரணம் என்ன என்று கண்டு பிடித்துச் சொன்னார். தேவர்கள் மகிஷனால் பட்ட துன்பத்தைக் கண்டு கருணை கொண்டு இரங்கி, அவர்களைக் காக்க வந்தாள், தேவி.

அத்புதம் –

அற்புதம். அதிசயம். ஆச்சர்யம். எதிர்பாராத ஒன்றை பார்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சி, அல்லது அதிர்ச்சி, இரண்டையுமே இதனால் வெளிப்படுத்தலாம்.

பயம் –

இதைப் பற்றி சொல்லாமலேயே தெரியுமே… கருங்கும்னு இருக்கிற இருட்டில் தனியாப் போகும்போதோ, சிங்கம், புலிகிட்ட மாட்டிக்கும் போதோ, தீயவற்றைக் கண்டு ஓடி ஒளியும்போதோ, இப்படி பல இடங்களில் ‘பயம்’ ‘காட்டலாம்’ :)

சாந்தம் –

சாந்தம் என்பது அமைதி. இன்பமோ துன்பமோ எதுவுமற்ற அமைதியான மனநிலை. போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்ற போது இந்த நிலையைத்தான் அடைந்தார். பரதமும் ஆன்மீகமுக் கைகோர்த்துச் செல்வதால், வெவ்வேறு ரசங்களையும் அனுபவித்தப் பின், அலை ஓய்ந்தாற்போல அனைத்தும் ஓய்ந்து, இறைவனை அடைகையில் ஏற்படும் மிகவும் உயர்வான மனநிலை இது.

எந்த விதமான உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருப்பதால் இதை நவரசங்களில் ஒன்றாக சொல்லக் கூடாது என்ற சர்ச்சை இருக்கிறது. இருந்தாலும் நாட்டிய சாஸ்திரத்தின் படி, முதல் 8 ரசங்களையும் தந்தவர் பிரம்மா என்றும், சாந்தம் என்கிற ஒன்பதாவது ரசத்தை நாட்டிய சாஸ்திரத்தை எழுதிய பரத முனிவரே சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலே படத்தில் இருப்பது இதுதான்...

***

அது சரி... நீங்க இன்னிக்கு என்னென்ன ரசம் செய்தீங்க? சொல்லுங்க பார்க்கலாம்... :)



அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி:http://www.carolinejariwala.com/paintings_03-05/images/navarasa_hasya.jpg

Sunday, June 6, 2010

நம்பிக்கை



இருளடைந்த கானகத்தே
இலக்கின்றி அலைந்திடினும்

திசைதெரியாப் பாதையிலே
வழிமறந்து தொலைந்திடினும்

துயர்சூழ்ந்த வாழ்க்கையினால்
மனம்துவளும் வேளையிலும்

சிற்றெறும்புப் புற்றினுள்ளும்
சூரியஒளி புகுவதுபோல்

சின்னஞ்சிறு நீர்த்துளிகள்
பெரியவெள்ளம் ஆவதுபோல்

மூங்கில்வழி நுழைந்துகாற்று
இனியகீதம் இசைப்பதுபோல்

சிறியஎழில் அகல்விளக்கு
கரும்இருளை விரட்டுதல்போல்

நம்பிக்கைசிறி திருந்துவிட்டால்
நானிலமும் வென்றிடலாம்!

--கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/notreallyunique/2634711906/sizes/m/

Tuesday, June 1, 2010

சாப்பிடத் தெரியுமா, உங்களுக்கு?

சின்னப் பிள்ளையில் யாரையாச்சும் கிண்டல் பண்றதுன்னா, “உனக்கு என்னதான் தெரியும், நல்லா சாப்பிட மட்டும் தான் தெரியும்”, அப்படின்னு சொல்றது உண்டு. ஆனா உண்மையில், நல்லா, ஒழுங்கா, சாப்பிட தெரிஞ்சவங்க ரொம்ப குறைவுன்னே தோணுது. அதை சரியா செய்தாலே நம்மை எந்த நோயும் அண்டாது!

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ அப்படின்னு சொல்வாங்க… ஏதாவது ஒரு வியாதி வந்து துன்பப் படும்போதுதான் அதனுடைய உண்மையான பொருள் புரியுது இல்லையா, ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பதைப் போல.

நாம ஆரோக்கியமா இல்லைன்னா, நாம மட்டும் கஷ்டப்படறதில்லை. நம்மை சேர்ந்தவங்களும் நமக்காக, நம்மோட சேர்ந்து பலவிதங்களில் சிரமப்படறாங்க. பல முதியோர்கள் பலவிதமா கஷ்டப்படறதையும், உறவினர்களால கூட பார்த்துக்க முடியாத அளவு துன்பப்படறதையும் பல இடங்களில் பார்க்கிறோம். வாழவும் முடியாம, சாகவும் முடியாம… எப்படிப்பட்ட வேதனை!

வயசு ஆக ஆகத்தான் ஆரோக்கியத்தின் அருமை புரியும் போல இருக்கு. பல விஷயங்கள் நம்ம கையில் இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும் நம்மால முடிஞ்ச வரைக்கும் முடிஞ்ச விஷயங்களை பண்றதுதானே நமக்கு நல்லது?



பாதி வியாதி உணவினால்தான் வருது. உணவில் இருக்கும் கிருமிகளை பத்தி மட்டும் சொல்லலை; உணவின் அளவு, சாப்பிடற நேரம், சாப்பிடற விதம், இப்படி எத்தனையோ காரணங்கள். ஏதாவது ஒண்ணு பிடிச்சிருந்ததுன்னா, அதை அளவே இல்லாம சாப்பிடறோம். பசிக்குதோ பசிக்கலையோ, எல்லா வேளையும் மூச்சு முட்ட சாப்பிடறவங்களும் இருக்காங்க.

‘உணவே மருந்து’ அப்படிங்கிறார் ஒருத்தர். எப்படி?

• உணவு, நீர், உறக்கம், மூணும் அளவோட இருக்கணும்
• ஒரு முறை சாப்பிட்டது நல்லா ஜீரணமாகி, பசித்த பிறகுதான் அடுத்த முறை சாப்பிடணும்
• உடம்புக்கு ஒத்துக் கொள்ளாத உணவு வகைகளை ஒதுக்கிடணும்
• உடம்புக்கு ஒத்துக் கொள்கிறவற்றையும் அளவோடுதான் சாப்பிடணும்
• சுவையா இருக்கேன்னு மிதமிஞ்சி சாப்பிடவே கூடாது

இதெல்லாம் நான் சொல்லலைங்க! வாழ்க்கைக்குத் தேவையான எல்லாத்தையும் சொல்லி வச்சிருக்க வள்ளுவப் பெருந்தகைதான் இதையும் சொல்லி இருக்கார், ‘மருந்து’ என்கிற அதிகாரத்தில்.

விருந்துன்னா போதும், பலரும் எழுந்திருக்கவே முடியாத அளவு சாப்பிடுவோம்! யாராவது கை கொடுத்து தூக்கி விடணும்! அதனாலதான் இப்பல்லாம் தரையில் பந்தி வைக்காம, மேசை நாற்காலி போடறாங்களோ என்னவோ :)

ஆரொக்கியமா இருக்கணும்னா, அரை வயிறு நிரம்பற அளவுதான் சாப்பிடணும், கால் வயிறு தண்ணீர் குடிக்கணும், கால் வயிறு காலியாதான் இருக்கணும், அப்படின்னு எங்கேயோ படிச்சிருக்கேன்…

மண்ணோடு மண்ணாப் போகப் போகிற உடம்பைப் பற்றி எதுக்காக இவ்வளவு கவலைப் படணும், அப்படின்னு தோணுதில்ல? எனக்கும் அப்படித்தான் தோணும்.. முந்தில்லாம்.

உடல் நலத்தை யாரும் அலட்சியப் படுத்தக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் அவங்களுக்கு உரிய கடமைகளை நிறைவேற்றவாவது, உடல் நலத்தை கவனிச்சுக்கணும். ஆன்மீகத்தில் இருக்கிறவங்க கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. திருமூலர் சொல்லுவார்:

உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே!

இறைவன் உறையும் உடலை எப்படி அலட்சியப்படுத்த முடியும்? அரிதாகக் கிடைக்கிற மனிதப் பிறவியை தவற விட்டு விட்டால் அவனை அடைவது எப்படி?

இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கடமை இருக்கு. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? (பேப்பர் பேனா இருந்தா போதும்னு சொல்லாதீங்க :)

இனிமேல் சாப்பிடறதுக்கு முன்னாடி, இதையெல்லாம் நினைவில் வச்சுக்குவோம். சரிதானே?

அனைவரும் அளவோடு உண்டு ஆரோக்கியமாய் வாழ, மனமார்ந்த வாழ்த்துகள்!

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.thirumurugan.in/2007/06/delicious-pictures-of-indian-food.html