இன்றைக்கு இங்கே ஏதோ விசேஷம் போலும். இந்த இடமே எத்தனை குதூகலமாக இருக்கிறது! வாருங்கள், நாமும் கொஞ்சம் வேடிக்கை பார்ர்கலாம்!
நேற்று வரை பசேலென்று மட்டுமே இருந்த மரங்களெல்லாம் இன்று பூத்துக் குலுங்குகின்றன. புள்ளிமான் குட்டிகள் புதர்ச் செடிகளின் பின்னால் ஒளிந்து கொண்டு தம் தாய் மான்களுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றன!
கருங்குயில்கள் யாரையோ எதிர்பார்ப்பது போல் வரவேற்பு கீதம் பாடுகின்றன. மூங்கில்களின் துளைகளில் புகுந்து புறப்படும் காற்று அதற்கேற்ப கானம் இசைக்கிறது. எப்போதும் மென்மையாகத் தவழும் தென்றல் கூட இன்று சற்றே அதிகமான துள்ளலுடன் ஜதி போடுகின்றது.
மயில்கள் “என்னைப் பார் என்னழகைப் பார்” என்று தம் பெரிய தோகைகளை ஒய்யாரமாக அசைத்து நடனம் புரிகின்றன. சின்னஞ்சிறு அணிற் பிள்ளைகளும், வெள்ளை வெளேர் முயல் குட்டிகளும், தம் கருகரு கண்களை அகல விரித்து, அந்த நடனத்தைக் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றன!
அதோ, அந்தப் பொய்கையில் நேற்று வரை அமைதியாகத் தளும்பிக் கொண்டிருந்த தண்ணீர், இன்றைக்கு எதனாலோ பூரிப்பு தாங்காமல் சளசளத்துக் கொண்டிருக்கிறது!
அதோ… கங்காதேவி பாய்ந்து வருகிறாள். அவளுடைய நீண்ட கரங்களில் எதையோ தாங்கி வருகிறாள். ஆம், செஞ்சடையானின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த நெருப்புச் சுடர்களைத்தான் ஏந்தி வருகிறாள். அவளாலேயே அவற்றின் வெம்மையைத் தாங்க முடியவில்லை போலும். வந்த வேகத்தில் நெருப்புச் சுடர்களை அதற்காகவே காத்திருக்கும் நமது பொய்கையில் விடுகிறாள்.
அழகான ஆறு தாமரை மலர்கள் மலர்ந்து மகிழ்ந்து அவற்றைக் குழந்தைகளாய் வாங்கிக் கொள்கின்றன!
அந்தக் குழந்தைகள்தான் எவ்வளவு அழகு!
ஒரு குழந்தை தன் சின்ன முகத்தைச் சுளுக்கிக் கொண்டு அழுகிறது.
ஒன்று ஈறுகள் தெரிய கலகலவெனச் சிரிக்கிறது.
மற்றொரு குழந்தை கட்டை விரலை வாயில் வைத்து சுவாரஸ்யமாகச் சூப்புகின்றது.
இன்னொரு குழந்தை தான் படுத்திருக்கும் தாமரை மலரின் இதழை இழுத்து விளையாடுகிறது.
மற்றுமொரு குழந்தை தன்னுடைய கருகமணி விழிகளைச் சுழற்றி, மான் கூட்டங்களையும் மயில் ஆட்டங்களையும் வேடிக்கை பார்க்கிறது.
ஆறாவது குழந்தையோ தியானத்தில் ஆழ்ந்து விட்டது போல அமைதியாக இருக்கிறது.
கார்த்திகைப் பெண்கள் ஆசையுடன் வளர்க்கும் அந்த ஆறு குழந்தைகளையும் அன்னை பராசக்தி கண்டதும், அவற்றின் மீது அன்பு மீற, ஒன்றாகச் சேர்த்து அரவணைத்துக் கொள்கிறாள்.
அந்தக் குழந்தைக்கு உகந்த நாளான இன்று நாமும் அவனை மனமார வாழ்த்துவோம்!
முருகா போற்றி கந்தா போற்றி!
முத்தமிழ் தந்த குமரா போற்றி!
அழகா போற்றி அமுதா போற்றி!
பழகிய திருக்கை வேலா போற்றி!
முக்கண் முதல்வன் மைந்தா போற்றி!
நெற்றிக் கண்ணில் பிறந்தாய் போற்றி!
பித்தன் பெற்ற முத்தே போற்றி!
சித்தம் நிறைந்த செவ்வேள் போற்றி!
ஆனை முகனின் இளையோய் போற்றி!
ஆறு முகங்கள் கொண்டாய் போற்றி!
மாலவனின் எழில் மருகா போற்றி!
வேலெடுத்து வினை களைவாய் போற்றி!
சக்தியின் கரங்களில் தவழ்ந்தாய் போற்றி!
அத்தனுக் கரும்பொருள் சொன்னாய் போற்றி!
பக்தியிற் சிறந்தோற் கருள்வாய் போற்றி!
நித்தமும் உன்பதம் பணிந்தோம் போற்றி!!
--கவிநயா
பி.கு.: "நினைவின் விளிம்பில் உலவும் நேரம்" நாளை மறு நாள் தொடரும் :)
படத்துக்கு நன்றி: http://murugan.org/gallery/kanda_puranam/images/kp_02.jpg