Tuesday, September 22, 2009

பூமகளே பசும்பொன்னழகே !

நவராத்திரி சிறப்பு பதிவு.




திருமாலவனின் திருமார்பினிலே
சுடராய் ஒளியாய் இருப்பவளே!
திரைமாக் கடலை ததியாய் கடைய
மலராய் மகிழ்வாய் முகிழ்த்தவளே!

பகலினில் எத்தனை சூரியரோ என
பகலவன் மயங்கிடும் பேரெழிலே!
இரவினில் மலர்ந்திட்ட தாமரையோ என
சந்திரன் மயங்கிடும் சுந்தரியே!

வண்டுகள் போலிரு கருவிழிகள் எழில்
மாதவன் மலர்முகம் சுற்றிடுமே!
செண்டுகள் போலிரு தளிர்க்கரங்கள் அந்த
மாயவன் திருவடி பற்றிடுமே!

பூமகளே பசும்பொன் னழகே இந்த
நானிலம் காத்திடும் நாயகியே!
வான்மகளே எங்கள் தேவதையே இந்த
மாநிலம் வணங்கிடும் வசுந்தரியே!

தாமரை மலரெழில் விஞ்சுகின்ற செந்
தாமரைப் பதங்கள் சரணம் அம்மா!
தாமோ தரன்அவன் கொஞ்சுகின்ற பூந்
தாமரை வடிவே வரணும் அம்மா!!

--கவிநயா

ஷைலஜா அக்கா குரலில் - நன்றி அக்கா!

SriLakshmi_song_su...

24 comments:

  1. பாடப் பாட இனிக்கும் வரிகள், அருமை!

    //பகலினில் எத்தனை சூரியரோ என
    பகலவன் மயங்கிடும் பேரெழிலே!
    இரவினில் மலர்ந்திட்ட தாமரையோ என
    சந்திரன் மயங்கிடும் சுந்தரியே!//

    அழகு அழகு!

    ReplyDelete
  2. //பகலினில் எத்தனை சூரியரோ என
    பகலவன் மயங்கிடும் பேரெழிலே!
    இரவினில் மலர்ந்திட்ட தாமரையோ என
    சந்திரன் மயங்கிடும் சுந்தரியே//

    சூப்பரோ சூப்பர்-க்கா!

    இரவினில் மலர்ந்த தாமரையோ - எனச்
    சந்திரன் மயங்கிடு சுந்தரியே!
    உறவினில் உயர்ந்த தாமரையே! - எங்கள்
    மாலவன் உள்ளத்து மாதவியே!

    பகலினில் மலர்ந்த வெண் குமுதம் -என
    பகலவன் மயங்கிடு பங்கயமே!
    அகலினும் அணுகிடும் அலைமகளே!
    அடியேன் உன்தன் தலைமகனே!

    ReplyDelete
  3. //மாதவன் மதிமுகம் சுற்றிடுமே!
    மாயவன் திருவடி பற்றிடுமே!//

    அடி முடி சேவை காட்டிட்டீங்க-க்கா!

    //வான்மகளே எங்கள் தேவதையே இந்த
    மாநிலம் வணங்கிடும் வசுந்தரியே!//

    வசுந்தரா என்ற அழகான பெயரை - மண் மகளை அழகாப் பாட்டில் கொண்டாந்து இருக்கீக!

    ReplyDelete
  4. திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகம் மிக மிக நன்றாக உள்ளது கவி...

    அதோடு அதற்கு அழகு சேர்த்தது உங்களின் கவி...

    மனம் கனிந்த, இனிய‌ நவராத்திரி வாழ்த்துக்கள்...

    நல்ல பதிவு கவி....வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. கவிதையும் அருமை...அதை விட படம் இன்னும் சூப்பரு ;)

    எங்க இருந்து எல்லாம் இப்படி எடுக்ககிறங்க!?

    ReplyDelete
  6. பொன்னழகே,பூரணமே....நானும் உன்னை வணங்குகிறேனம்மா.

    ReplyDelete
  7. ஆகா, நிகரிலா இனிமை, எளிமை, அருமை!

    ReplyDelete
  8. //தாமரை மலரெழில் விஞ்சுகின்ற செந்
    தாமரைப் பதங்கள் சரணம் அம்மா!
    வாமன நாரணன் கொஞ்சுகின்ற வெண்
    தாமரை வடிவே வரணும் அம்மா!!//

    தாமரை என்கிற ஒரே சொல்லை
    வெவ்வேறு பொருள்களில் மடக்கிப் போட்ட பான்மை பிரமாதம்!

    ReplyDelete
  9. மிக அழகான திருமகள் மேலான பாடலினை பாடுவதற்குவாய்ப்பு தந்தமைக்கு நன்றி கவிநயா

    ReplyDelete
  10. //அழகு அழகு!//

    ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  11. வருக கண்ணா.

    //அகலினும் அணுகிடும் அலைமகளே!//

    இந்த வரி ரொம்ப பிடிச்சிருக்கு!

    //அடி முடி சேவை காட்டிட்டீங்க-க்கா!//

    யோசிக்காமலேயே அப்படி அமைஞ்சிடுச்சு :)

    //வசுந்தரா என்ற அழகான பெயரை - மண் மகளை அழகாப் பாட்டில் கொண்டாந்து இருக்கீக!//

    அந்த பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும் :)

    வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி கண்ணா.

    ReplyDelete
  12. //திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகம் மிக மிக நன்றாக உள்ளது கவி...

    அதோடு அதற்கு அழகு சேர்த்தது உங்களின் கவி...//

    அட, இது நல்லாருக்கே :)

    வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி கோபி! :)

    ReplyDelete
  13. //கவிதையும் அருமை...அதை விட படம் இன்னும் சூப்பரு ;)//

    நன்றி கோபி!

    //எங்க இருந்து எல்லாம் இப்படி எடுக்ககிறங்க!?//

    கூகுளாண்டவர்தான் குடுத்தார் :)

    ReplyDelete
  14. //பொன்னழகே,பூரணமே....நானும் உன்னை வணங்குகிறேனம்மா.//

    நல்லது மௌலி.

    வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  15. //ஆகா, நிகரிலா இனிமை, எளிமை, அருமை!//

    ரொம்ப நன்றி ஜீவா! :)

    ReplyDelete
  16. //தாமரை என்கிற ஒரே சொல்லை
    வெவ்வேறு பொருள்களில் மடக்கிப் போட்ட பான்மை பிரமாதம்!//

    வாங்க ஜீவி ஐயா. ரசித்தமைக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  17. //மிக அழகான திருமகள் மேலான பாடலினை பாடுவதற்குவாய்ப்பு தந்தமைக்கு நன்றி கவிநயா//

    பாடி தந்தமைக்கு உங்களுக்குதான் மிக்க நன்றி அக்கா :)

    ReplyDelete
  18. பாடலை 'நம்பிக்கை' குழுமத்தில் இட்டிருந்தேன். ஓரிரண்டு பொருட்பிழைகள் சுட்டிக் காட்டப்பட்டன. அதை சரி பண்ணி மறுபடி இட்டிருக்கேன். அங்கே பார்த்துதான் ஷைலஜா அக்காவும் பாடித் தந்தாங்க. வாசித்த அனைவருக்கும் அன்னையின் அருள் நிறையட்டும் :)

    ReplyDelete
  19. //அற்புதம்//

    நன்றி திகழ்!

    ReplyDelete
  20. ரொம்ப ரொம்ப அழகா பாட்டு எழுதிறீங்க அக்கா.

    ReplyDelete
  21. //ரொம்ப ரொம்ப அழகா பாட்டு எழுதிறீங்க அக்கா.//

    வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கினாப்ல இருக்கு! மிக்க நன்றி குமரா :) அவள் எழுத வைக்கிற வரை...

    ReplyDelete
  22. //
    வண்டுகள் போலிரு கருவிழிகள் எழில்
    மாதவன் மலர்முகம் சுற்றிடுமே!
    செண்டுகள் போலிரு தளிர்க்கரங்கள் அந்த
    மாயவன் திருவடி பற்றிடுமே!
    //
    இதை எல்லாம் யோசிச்சி எழுதறீங்களா...இல்ல அப்படியே தானா வருதா? எப்படி வைத்துக் கொண்டாலும் கவிதை அருமை. :)

    ReplyDelete
  23. //இதை எல்லாம் யோசிச்சி எழுதறீங்களா...இல்ல அப்படியே தானா வருதா?//

    நல்ல கேள்வி கேட்டீங்க :) பல வரிகள் தானாகத்தான் வரும். யோசிச்சு சேர்க்கிறதும் உண்டு. ஆனால் சிலவற்றை படிக்கையில் நாமதான் எழுதினோமா, இதே போல மறுபடி எழுத முடியுமான்னு தோணும். ஏதோ அவள் என் மூலம் சில கவிதைகளை தருகிறாள்; அதுதான் விஷயம். அவள் அருள் இருக்கும் வரை எழுதுவேன். அதனால் அடிக்கடி நான் நினைவுபடுத்திக் கொள்ளும் வாசகம் - "Thou workest thine own work; men only call it their own."

    //எப்படி வைத்துக் கொண்டாலும் கவிதை அருமை. :)//

    அருமைன்னு சொன்னதுக்கும் முதல் வருகைக்கும் நன்றி ராதா :)

    நீங்க இந்த பக்கமெல்லாம் வரதில்லைன்னுதான் இன்னிக்கு இதே பாடலை அம்மன் பாட்டில் இட்டேன். எப்படி உங்களுக்கு தெரிஞ்சது? :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)