Wednesday, April 30, 2008

காற்றுக்குமிழி

உயர உயரப் பறந்து கொண்டிருக்கிறது
அந்தக் காற்றுக் குமிழி…

உலகத்து ஒளியை யெல்லாம்
உள்வாங்கிக் கொண்டு

வானவில்லின் வர்ணம் வாங்கி
வாசம் பார்த்துக் கொண்டு

தேன் குடித்த வண்டுகளின்
தேகம் தொட்டுக் கொண்டு

ஊர்க் குருவிக் கூடுகளை
உரசிப் பார்த்துக் கொண்டு

மூங்கில் காற்றின் முதுகில் ஏறி
மேகம் முட்டிக் கொண்டு

ஓங்கி நிற்கும் மரங்க ளிடை
ஓய் வெடுத்துக் கொண்டு

சந்தோஷமாய்
உயர உயரப் பறந்து கொண்டிருக்கிறது…

குத்தி விடக் காத்திருக்கின்ற
கூர் முனைகளைப் பற்றிக் கவலைப்படாமல்…


--கவிநயா

Saturday, April 26, 2008

இடுக்கண் வருங்கால்...

அம்மா அப்பாவின் அன்னியோன்யத்தைப் பார்க்கப் பார்க்க வித்யாவுக்குக் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. கொஞ்சம் என்ன, நிறையவே! அவ்வப்போது விவேக்கின் பக்கம் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டாள். அவனோ இவள் இருப்பதையே மறந்தவன் போல், வரிசைப் பற்கள் மின்னச் சந்தோஷமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். வித்யாவுக்கு ஒரே ஆத்திர ஆத்திரமாக வந்தது. ஒன்றுமே நடவாதது போல் எப்படி இருக்கிறான்?!

அம்மா அப்பாவின் 25-வது திருமண நாளுக்காகக் கூடி இருந்தவர்கள் எல்லாம் வரிசையாக வந்து வாழ்த்துச் சொல்லிய வண்ணம் இருந்தார்கள்.

"ஏம்மா, வித்யா, நீயும் உம் புருஷனோட இதே மாதிரி 25-வது கல்யாண நாள் கொண்டாடணும், அதுக்கு நான் வந்து வாழ்த்துச் சொல்லணும்", பக்கத்து வீட்டு மாமி அன்போடு அவள் கன்னத்தை வழித்துத் திருஷ்டி கழித்தாள். வித்யாவுக்கோ அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை. புது மணக் கணவனோடு வாழ ஆரம்பித்து இன்னும் ஒரு வருடம் கூட முழுசாய் முடியவில்லை; அவ்வளவு பெரிய பிணக்கு அதற்குள்! இருவரும் பேசிக் கொண்டு பத்து நாளாகிறது. இந்த இலட்சணத்தில் 25 வருஷமா? சரிதான் போ; கற்பனை கூடப் பண்ண முடியவில்லை. எண்ணமிட்ட வண்ணம், "தாங்க்ஸ், மாமி", தனக்கே கேட்காமல் முணுமுணுத்தாள். அதற்குள் "அதுக்கென்ன மாமி, உங்களுக்கு அனுப்பாமயா?" என்று, திடீரென்று எங்கிருந்தோ வந்து அவள் பக்கத்தில் முளைத்த விவேக், அவள் தோளில் கை போட்டான். அவன் கையை மெதுவாக விலக்கி விட்டு, அவனைப் பார்க்காமல் தவிர்த்தபடி அங்கிருந்து நழுவினாள், வித்யா.

சாப்பாடு அமர்க்களமாக இருந்தது. அம்மாவை அப்பாவிற்கு ஊட்ட வைத்து, அப்பாவை அம்மாவிற்கு ஊட்ட வைத்து, கூடியிருந்தவர்கள் எல்லாம் ஒரேடியாகக் கலாட்டா பண்ணி விட்டார்கள்.

"ஆண்ட்டி, உங்கள் வெற்றிகரமான மணவாழ்க்கையின் இரகசியம் என்னவோ?" நிருபராக ஆசை கொண்ட ஒரு இளம் பெண், ஒரு கரண்டியை மைக் போல அம்மாவின் முன் பிடித்துக் கொண்டு கேட்க, ஒரே சிரிப்புதான். அம்மா அந்த வயதிலும் அழகாய் வெட்கப்பட்டாள்.

இதற்குள் சாப்பிட்டு முடித்த கூட்டம் எல்லாம் ஆங்காங்கு உட்கார்ந்து அரட்டைகளைத் தொடர, அம்மா, அப்பாவைத் தொடர்ந்து வித்யாவின் குடும்பம் முழுதும் முன்னறைக்கு வந்து "அப்பாடா"வென்று உட்கார்ந்தது. "மாமா, நிஜமாத்தான் கேட்கிறேன், உங்க ரெண்டு பேருக்கும் சண்டையே வராதா?", விவேக் ரொம்ப சீரியஸாகக் கேட்க, அம்மாவும், அப்பாவும், தாத்தா, பாட்டிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள் - ஏதோ அவர்களுக்குள் உள்ள இரகசியம் போல! "ரொம்பத்தான் அலட்டல். ஒரு கேள்வி கேட்டா நேரடியா பதில் சொன்னா என்னவாம்?" மானசீகமாக முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டாள், வித்யா.

பெரிய பேச்சாளரைப் போல் தொண்டையைச் செருமிக் கொண்டார், அப்பா. "மாப்பிள்ளே, நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க. எங்க இரண்டு பேருக்கும் கல்யாணத்தன்னிக்கே சண்டைதான். முதல் பத்து நாளும் நாங்க பேசிக்கவே இல்ல", என்றதும் வித்யாவும், அவள் தம்பி அருணும், "இதென்ன புதுக் கதை?" என்பது போல பார்த்துக் கொண்டார்கள்.

"அப்பா, இதென்ன கதை? நீங்க எங்களுக்கே சொன்னதில்லயே?" சற்றே ஆச்சர்யத்துடன் கேட்டான், அருண்.

"உங்க ரெண்டு பேருக்கும் காதல் கல்யாணமா?" விவேக்கின் கேள்வியில் கதை கேட்கும் ஆர்வம்.

"இருங்க, இருங்க, சொல்லத்தானே போறேன்", எல்லோருடைய ஆர்வத்தையும் கையமர்த்திக் கட்டுப் படுத்தினார், அப்பா.

"உங்க எல்லாருக்கும் தெரியும். என் அப்பாவும், இவ அப்பாவும், பால்ய வயது நண்பர்கள். சுதந்திரப் போராட்டத்துலயும் ஒண்ணாவே கலந்துகிட்டாங்க. பிறகு குடும்பஸ்தர்களான பிறகும் அவங்க நட்பு தொடர்ந்தது. இரண்டு பேருக்கும் சொல்லி வச்சாப் போல ஒரு பொண்ணும், ஒரு புள்ளயுமா பொறந்ததும், ரெண்டு பேரும் சம்பந்தம் பண்ணிக்கத் தீர்மானிச்சாங்க. ஆனாலும் இவள நான் சின்ன வயசில பாத்துப் பேசினதோட சரி. அதுக்கப்புறம், படிக்கிறதுக்குன்னு ரெண்டு பேரும் வெவ்வேறு திசையில திரும்பிட்டோம். சில வருஷங்கள் கழிஞ்சப்புறம் கல்யாண நாளன்னிக்குத்தான் இவளப் பார்த்தேன்", அப்பா மூச்சு விடச் சற்றே நிறுத்தினார்.

"அப்புறம் எப்படி மாமா உடனே சண்டை வந்தது?" - விவேக்.

இந்த விவேக்குப் பொறுமையே இல்லை என்று மனசுக்குள் திட்டிக் கொண்டாள், வித்யா.

"அங்கதான் வர்றேன் மாப்பிள்ளே. முகூர்த்த நேரம் வந்தது. இவள ரொம்ப நாளக்கப்புறம் பார்க்கிறதால பழைய ஞாபகமெல்லாம் கூடவே வந்தது. பொம்மை மாதிரி பட்டுச் சேலையில அழகா இருந்தா. (அம்மா இந்த சமயத்தில் செல்லமாக உதட்டை வலித்தாள்). அதனால இவள வம்பிழுக்கணும்னு ஆசையா இருந்தது. தாலி கட்டி மணையில உட்கார்ந்திருந்த போது அவ பின்னலப் பிடிச்சு இழுத்து விட்டேன்... அது கையோட வந்திட்டது"

அப்பா 'எஃபெக்டுக்காக' ஒரு நொடி நிறுத்தினார். அவர் நினைத்தது போலவே கசமுசாவென்று பேச்சும் சிரிப்பும்!

"அம்மா எப்படி உங்கள உதைக்காம விட்டாங்க?" வந்ததிலிருந்து 'உம்'மென்று இருந்த வித்யாவின் முகத்தில் இப்போதுதான் முதன் முறையாகச் சிரிப்பு வந்திருந்தது.

"உதை வாங்காத குறையேதான் இல்லாம செய்திட்டாளே? கண்ணும் மூக்கும் சிவக்க அவ முகத்தை அந்த மாதிரி கோபத்தோட நீங்கள்ளாம் பார்த்திருக்கவே மாட்டீங்க. அதுக்கப்புறம் முழுசா பத்து நாளக்கு அவ என்கிட்டப் பேசவே இல்ல. தினமும் அவகிட்ட தவமா தவமிருந்து மன்னிப்புக் கேட்டப்புறம்தான் மனசு இரங்கி வந்தா"

"என்னம்மா, நீங்க ஒண்ணுமே சொல்லல?", மௌனமாகப் புன்னகைத்துக் கொண்டிருந்த அம்மாவைக் கொஞ்சம் சீண்டிப் பார்த்தான், அருண்.

"நான் என்ன சொல்றது, அருண்? சண்டைங்கிறது எல்லாத் தம்பதிகளுக்கும் வர்றதுதான். அப்ப எனக்கும் சின்ன வயசு, முதிர்ச்சி பத்தாது. உடனே ரோஷம் பொத்துகிட்டு வந்திடுச்சு. ஆனா இத்தன வருஷம் கழிச்சும் சொல்லிச் சிரிக்கிறாப்ல அனுபவம் கிடைச்சிருக்கே?" சிரித்தாள், அம்மா.

"நீ சொல்றதுலயும் அர்த்தம் இருக்கும்மா. பல சமயங்கள்ல, சில துன்பங்கள் அனுபவிக்கும்போது கஷ்டமாத்தான் இருக்கும்; ஆனா அதைக் கடந்தப்புறம் சில காலம் கழிச்சு அதே சூழ்நிலைய நினச்சுப் பார்க்கும்போது, சிரிக்கத்தான் தோணும்", தாத்தா சொல்வது ஏதோ கொஞ்சம் புரிந்தது போல இருந்தது, வித்யாவுக்கு.

"தாத்தாக்கள் ரெண்டு பேரும் சுதந்திரப் போராட்டத்தப் பத்திப் பேசுறத நம்ம எல்லாரும் நிறைய தரம் கேட்டிருக்கோம். அவங்க பேசும் போது அவங்க குரல்ல இருக்க பெருமையையும் கேட்டிருக்கோம். குண்டாந்தடியால அடி வாங்கினத, குண்டு மல்லிகை மாலை கிடைச்சா மாதிரிதான் பேசுவாங்க. அதனால குண்டாந்தடி அடி சுகமா இருந்ததுன்னு அர்த்தம் இல்ல. அந்த மாதிரி துன்பங்களை நாட்டுக்காக அனுபவிச்சுட்டு, இப்ப அத எல்லாம் தாண்டி வாழ்க்கையில இவ்வளவு தூரம் வந்ததுனால உண்டான பெருமைதான் அது..." அப்பா தொடர்ந்தார்.

"அதனாலதான், துன்பம் வந்தா துவண்டு போகக் கூடாது. அதையே நாம ஒரு நாள் நினைச்சு சிரிக்கிற நாளும் வரும்கிற நம்பிக்கையோட வாழணும்", சிரிப்புடன் ஆரம்பித்த கதையை ரொம்ப சீரியஸாக முடித்தார், அப்பா.

விவேக்கின் கை வித்யாவின் தோளில் ஊர்ந்து அவளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்ட போது, இம்முறை அவள் அவன் கையை விலக்கவில்லை.


--கவிநயா

Wednesday, April 23, 2008

அவளைப் போல்...

பவித்ராவுக்கு அன்றுதான் அரை ஆண்டுத் தேர்வு மதிப்பெண்கள் வந்தன. கணக்கில் 94, ஃபிசிக்ஸில் 90, என்ற ரேஞ்சில் மார்க்குகள் இருந்தன. பக்கத்து ஸீட் ஷாலினி வழக்கம் போல் கணக்கில் 100, மற்ற சப்ஜெக்டுகளில் எல்லாம் முதல் மார்க். மிஞ்சி மிஞ்சிப் போனால் 6 அல்லது 7-வது ராங்க்தான் வருவாள், பவித்ரா. அன்று வீட்டுக்குப் போவதை நினைக்கவே பயமாக இருந்தது அவளுக்கு. +2-வில் அவள் படிக்கும் *இலட்சண*த்தைப் பற்றி இன்று சரியான மண்டகப்படியும், பெரீய்ய பிரசங்கமும் கேட்க வேண்டியிருக்கும்.

பவித்ராவின் பெற்றோர் இருவரும் டாக்டர்கள். போதாக் குறைக்கு, அவள் அண்ணன் குமாரும் மெடிக்கல் மூன்றாவது வருடம் படிக்கிறான். இவளும் டாக்டராக வேண்டுமென்பது அவளது குடும்பத்தின் கனவு - ஆனால் அவள் கனவு அல்ல. +2-வில் நல்ல மார்க் வேண்டுமே என்பது அவர்கள் கவலை. காசு கொடுத்து ஸீட் வாங்குவதில்லை என்பது அவர்கள் கொள்கை. இதெல்லாம் மட்டுமென்றால் பரவாயில்லை. மூச்சுக்கு முன்னூறு முறை ஷாலினியுடன் அவளை ஒப்பிடுவதுதான் அவளால் சகிக்க முடியாத விஷயம். ஷாலினியின் அம்மாவும் டாக்டர்தான். இரு அம்மாக்களும் ஒரே ஹாஸ்பிடலில் வேறு வேலை பார்க்கிறார்கள். சிறு வயதில் பவித்ராவும் ஷாலினியும் நல்ல தோழிகளாகத்தான் இருந்தார்கள். இந்த ஒப்பிடுதல் காரணமாக பவித்ரா கொஞ்சம் கொஞ்சமாக அவளிடமிருந்து விலகி விட்டாள்.

அன்று மாலை ஒரு ஸ்பெஷல் க்ளாஸ் இருந்தபடியால், வீட்டுக்குப் போக வழக்கத்தை விட கொஞ்சம் நேரமாகி விட்டது. நுழையும் போதே அம்மாவும், அப்பாவும் ஏதோ முக்கியமான விவாதத்தில் ஈடுபட்டிருப்பது புரிந்தது. அம்மா எதனாலோ அப்ஸெட்டாக இருந்தாள். அப்பா அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்று கொண்டிருந்தார். ஆவல் அதிகரிக்க, ஒரு காதை இங்கே விட்டு விட்டு, உடை மாற்ற அறைக்குள் சென்றாள், பவித்ரா.

"உன் கையில இல்லாத விஷயத்துக்கு இப்ப வருத்தப் பட்டு என்ன பண்றது, சாரு? நீதான் பேஷண்ட்ஸ் மத்தில பிரபலமா இருக்க. உன்கிட்ட வர்றதுக்குத்தான் எல்லாம் விரும்பறாங்க. அப்படி இருக்கப்போ, நீலாவ மெட்டர்னிட்டி டிவிஷனுக்கு தலைமையாப் போட்டிருக்காங்கன்னா, எனக்கும் எதனாலன்னு புரியல. ஆனா நாம என்ன பண்ண முடியும்?"

அப்பாவின் கேள்விக்கு அம்மாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நீலா, ஷாலினியின் அம்மா.

மெளனமாக அடுக்களைக்குள் சென்று தானே கொஞ்சம் காஃபி போட்டுக் குடித்து விட்டு ஹோம் வொர்க் செய்யக் கிளம்பியவளை அப்பாவின் குரல் நிறுத்தியது:

"பவி, உனக்கு இன்னிக்கு ரிப்போர்ட் கார்ட் வந்திருக்குமே?"

ஒரு கணம் இன்னும் வரவில்லை என்று சொல்லி விடலாம் என்று தோன்றியது. எப்போதிருந்தாலும் தெரியத்தானே போகிறது என்று எண்ணியவள், "இதோ கொண்டு வர்றேம்ப்பா", என்று எடுத்து வரும் போதே தன்னை விளைவுகளுக்குத் தயார்ப் படுத்திக் கொண்டாள்.

"என்னம்மா இது, எப்போதும் போலத்தான் வாங்கியிருக்க. கணக்குல 100 வாங்குறது அவ்வளவு கஷ்டமா இருக்கா? அதுக்குத்தான் அடிக்கடி போட்டு ப்ராக்டிஸ் பண்ணனும். இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்துப் படின்னா கேட்கவே மாட்டேங்கிறியே", என்றார் அப்பா, மிகுந்த அதிருப்தியுடன்.

"ஷாலினியப் பாரு, எவ்வளவு நல்லாப் படிக்கிறா? அது மட்டும் இல்லாம பாடறது, டான்ஸ் ஆடறது, மத்தவங்களோடப் பழகறது, நீட்டா டிரஸ் பண்ணி க்கிறதுன்னு, அவள்ட்ட நீ கத்துக்கக் கூடியது எவ்வளவோ இருக்கு. இன்னும் ஆறு மாசம்தான் இருக்கு பப்ளிக் எக்ஸாமுக்கு. நீ இப்படிப் படிச்சா எப்படி காலேஜுல எடம் கிடைக்கும்?" என்று அம்மாவும் சேர்ந்து கொண்டாள்.

அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை, பவித்ராவுக்கு. "அப்பா, போன முறைய விட இப்ப எல்லா சப்ஜெக்டுலயும் கூட மார்க் வாங்கி இருக்கேன். அத ஏன் பார்க்க மாட்டேங்கிறீங்க? அம்மா, ஷாலினிய மாதிரி நான் இருக்கணும், அவ்வளவுதானே? அவளும் நானும் எக்ஸ்னோராவொட "ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் த பீச்" ப்ரோக்ராம்ல சேர்ந்திருக்கோம்ல? ஆனா உண்மையா பீச்ச சுத்தம் பண்றது நான் மட்டும் தான். அங்க போறதாச் சொல்லிட்டு அவ பாய் ஃப்ரெண்டோட ஊர் சுத்தப் போயிடுவா. நானும் அவள
மாதிரியே செய்யவா?"

அம்மா சுதாரித்துக் கொண்டு பதில் சொல்லும் முன், "நீங்க மட்டும் என்ன அவளோட ஒப்பிட்டே எப்போதும் பேசறீங்களே? நானும் அப்படிச் செய்ய ஆரம்பிச்சா என்ன ஆகும்? நீலா ஆண்ட்டி மட்டும் டிபார்ட்மெண்ட் ஹெட்டா ஆயிட்டாங்க, உங்களால ஏன் ஆக முடியல?”

“ஷாலினியோட அப்பா பிரபலமான ஹார்ட் சர்ஜனாகி சொந்தமா ஹாஸ்பிடல் வச்சு நடத்தராறே, ஏன் அப்பாவால அப்படிச் செய்ய முடியல? வேற யாரொடயோ ஹாஸ்பிடல்ல தான நீங்க வேல பார்க்கிறீங்க?"

"நான் நானாத்தான் இருக்க முடியும், ஷாலினியா மாற முடியாது. என்னால முடியற அளவு நான் உண்மையா முயற்சி செய்யறேன். அது புரிஞ்சுதுன்னா, இந்த ரிப்போர்ட் கார்ட்ல கையெழுத்துப் போட்டு வைங்க"

அம்மாவும் அப்பாவும் வாயடைத்து நிற்பதைப் பார்க்க பாவமாய்த்தான் இருந்தது அவளுக்கு. ஆனால் இனிமேல் ஒப்பிடும் படலம் இருக்காது என்ற நிம்மதியுடன் ரிப்போர்ட் கார்டை மேஜை மேல் வைத்து விட்டு அறைக்குத் திரும்பினாள், பவித்ரா.


--கவிநயா

Thursday, April 17, 2008

வசந்தம்

காட்டு மல்லி பூத்திருக்க
பார்க்குங் கண்கள் வியந்திருக்க
மீட்டுதடி மனசைத் தன்னாலே – வாசம்
இழுக்குதடி மூக்கை முன்னாலே!

வான வில்லின் நிறங்களிலே
வண்ணப் பூக்கள் சிரித்திருக்க
வண்டெல்லாம் மயங்கித் தள்ளாட - வசந்தம்
வந்ததடி வாழ்த்தி பண்பாட!

பொக்கி ஷமாய் மகரந்தம்
பூக்க ளுள்ளே ஒளிந்திருக்க
தென்றல் அதை அம்பலமாக்க – எங்கும்மஞ்சள்
படர்ந்ததடி பொன் விரிப்பாக!

மகரந்தம் போலே அன்பு
மன செல்லாம் நிறைந்திருக்க
தென்றலாகி நாம் அதை வீச - தரணியிலே
வாழ்வெல்லாம் என்றும் வசந்தமே!


--கவிநயா

Friday, April 11, 2008

அருவி

சப்தமே இல்லாமல்
இரகசியமாய்ப் பின்னால் வந்து
திடீரென்று கத்துகிற சிறுபிள்ளை போல்
சந்தடியில்லாமல் குறுகிச் சென்று விட்டு
சட்டென்று பெரும் இரைச்சலுடன் இறங்கி
ஆர்ப்பாட்டமாய் விரிகிறது அருவி...

மதங்கொண்ட இளங் களிற்றின்
கம்பீரப் பிளிறலுடன்-
கட்டுக் கடங்காமல் திமிறும் கன்றுக்குட்டியின்
உற்சாகத் துள்ளலுடன்-
சிவபெருமானின் சிரசினின்றும் பாய்ந்த
கங்கா தேவியின் கருவத்துடன்-
உலகத்தை யெல்லாம் ஒரே வீச்சில்
திருத்த முனைகின்ற
இள ரத்தத்தின் வேகத்துடன்-
பல நாட்கள் பிரிந்திருந்த பிள்ளையை
வாரி அணைக்க ஓடிவரும்
அன்னையின் ஆவலுடன்-

தடதட வென்று வந்து
தலை குப்புற விழுந்தாலும்
இளைப்பாறத் தாமதிக்காமல்
வெண்பற்கள் எல்லாம் விலாவரியாய்த் தெரிய
அட்டகாசமாய்ச் சிரித்தபடி...


--கவிநயா

Saturday, April 5, 2008

பெண்

நீ ஒரு கூண்டுக்கிளி:


பெண் ஒரு தெய்வம்
அவள் கற்புக்கரசி
மென்மையில் மலர்
பொறுமையில் பூமிதேவி
இப்படி
போற்றிப் போற்றிப்
போதையேற்றி
வலி தெரியாமல்
சிறகுகள் கொய்து
தங்கக் கூண்டுக்குள்
பூட்டி வைத்தார்கள்
உன்னை


நீ ஒரு போராளி:


யாரும் காணாத பொழுதில்
சிறகுகள் வளர்த்தாய்
போதையை மறுத்தாய்
புத்தியில் தெளிந்தாய்
அறிவின் அலகால்
கூண்டினைத் திறந்தாய்
சிறகினை அடித்துப்
பறக்கவும் கற்றாய்


நீ ஒரு மாணவி:


அன்பாய் இரு
அடிமையாய் இராதே
பாசமாய் இரு
பைத்தியமாய் இராதே
பொறுமையாய் இரு
மந்தமாய் இராதே
இரக்கம் காட்டு
ஏமாந்து போகாதே
அன்னம் போல் இரு
நல்லோரைத் தெரிந்து கொள்
பண்போடு பழகு
பாதகரை அறிந்து கொள்
கண்ணீர் தவறில்லை
ஆனால் அதில் மூழ்கி விடாதே
வேகம் அவசியம்தான்
ஆனால் விவேகத்தை மறக்காதே
வானம் தொட முயற்சி செய்
விழுந்தாலும் எழுந்து நில்
வேலிகளைத் தகர்த்தெறி
யாரும் காயப்படாமல் பார்த்துக் கொள்


நீ ஒரு சுதந்திரப் பறவை:


புன்னகை அணிந்து கொள்
சந்தோஷம் பரப்பு
தன்னம்பிக்கை மனதில் கொள்
தளராமல் முன்னேறு
சிறகடித்துப் பறந்திடு
சிகரங்கள் தொட்டிடு!
விடாமல் முயன்றிடு
வெற்றிமாலை சூடிடு!


--கவிநயா