Wednesday, March 19, 2008

மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்

"அயிகிரி நந்தினி" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :)

நந்தியும் தேவரும் நயந்துன்னைப் போற்றிட மகிழ்ந்தின்பம் தருகின்ற மலைமகளே
விந்திய மலையின் உச்சியில் உறைந்து ஒளிர்பவளே ஜயம் தருபவளே
கறைக் கண்டன் அவனின் மனையவளே பலலீலைகள் புரிந்திடும் உமையவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (1)

இறை வருக்கும் இறை யானவளே அறியா தவர்க்கும் அருள் புரிபவளே
ஓம் எனும் ப்ரணவத்தை ஆள்பவளே மூவுலகையும் காத்திடும் மூத்தவளே
தனுதிதி வம்சத்தை ஒழித்தவளே வீண் ஆணவம் அழித்திடும் அலைமகளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (2)

புன்னகையால் மனம் கவர்பவளே எந்தன் அன்னையே கதம்பவனப்ரியையே
மலைகளுக் கெல்லாம் அரசனாம் அந்த இமயத்தின் சிகரத்தில் வசிப்பவளே
மதுகை டபர்களை வென்றவளே என்றும் ஆனந்த நடம் செய்யும் நாயகியே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (3)

அரக்கரைத் த்வம்சம் செய்பவளே போர்க் களிறுகளைக் கொன் றொழிப்பவளே
சிம்மத்தின் மீதேறி வருபவளே பெரும் கோபத்தில் ஜொலிக்கின்ற துர்க்கையம்மா
பகைவரின் தலைகளைக் கைகளின் பலத்தால் தூளாய்ச் சிதற வைப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (4)

வெற்றியின் மறுவடி வானவளே கடும் பகைவரையும் கொன்று வெல்பவளே
சிவகணங்களைப் படையாகக் கொண்டு போர் தொடுத்தவளே காளி பயங்கரியே
பாவத்தின் வடிவாய்ப் பாதகம் புரிந்திட்ட அசுரரின் தூதரை அழித்தவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (5)

உனைச் சரணடையும் பகைவரின் பெண்டிர்க்கும் அடைக்கலம் தந்து காப்பவளே
மூவுல கினையும் மூர்க்கமாய் அடக்கிடும் அரக்கரை வேலால் பிளப்பவளே
திக்குகள் அதிர்ந்திட முரசுகள் ஒலித்திட சூரியனாய்த் தக தகப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (6)

ஒருஹூங் காரத்தால் எதிர்வரும் பகைவரைப் புகையெனக் கலைந்தோடச் செய்பவளே
போர்க் களத்தினிலே வீழ்கின்ற குருதியால் தழைக்கின்ற கொடியினைப் போன்றவளே
சங்கரன் அருகிலும் அரக்கரின் நடுவிலும் பேத மின்றிக் களித் திருப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (7)

மென்னுடலைப் பல விதவிதமாய்ப் பல அணிகலனால் அணி செய்தவளே
மின்னும் வாளுடன் கூரம் புகளுடன் எதிரிகள் தலைகளை அறுப்பவளே
பெரும்படை களையும் பொம்மைகள் போல விளையாட்டாய் வெட்டிச் சாய்ப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (8)

அண்டங்கள் திரண்டு போற்றிடும் வணங்கிடும் எங்களின் வெற்றித் திருமகளே
சங்கரன் கவனத்தைக் கவர்ந்திட நடமிட கிண்கிணிச் சலங்கைகள் அணிந்தவளே
அர்த்த நாரியாய் அரனுடன் இணைந்து ஆடியும் பாடியும் களிப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (9)

பூ முகத்தினிலே ஒளிரும் சிரிப்பால் ஞானிய ரையும் கவர்ந் திழுப்பவளே
அல்லி மலர்களை மலர்ந்திடச் செய்கின்ற குமுத சகாயனைப் போன்றவளே
நிலைகொள்ளாமல் சுற்றும்கருவண்டுகளைத் தன்னிரு விழிகளாய்க் கொண்டவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (10)

கதிரவன் கதிர்களைத் தாங்கி எதிரொலிக்கும் வெள்ளி மரங்களிடை வசித்திருக்கும்
மல்லரையும்வே டுவர்களையும் வெல்லும்விளையாட்டில் இஷ்டம் உடையவளே
சிவந்த வேர்களுடன் வெள்ளை மலர்கள் தாங்கும் அழகிய கொடியினை ஒத்தவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (11)

வெறியுடன் தாக்கிடும் மதயா னைகளையும் எளிதாய் அடக்கிப் பணியச் செய்வாய்
மூவுல கினுக்கும் ரத்தினம் போன்ற நிலவின் அழ கொத்த இளவரசி
எழிற் புன்னகையால் மனங்களைக் கொள்ளை கொள்ளும் அன்புருவான அலைமகளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (12)

மகிழமலர்களில் அமர்ந்த தேனீக்கள் கமல மலர்களையும் மொய்த்திடவே
அந்தக்கமலம்போல் மனங்கவர் நிறங்கொண்ட மாசற்ற நெற்றியை உடையவளே
கலைகளின் இயல்பாம் நளினம் மிகுந்த அன்னங்கள் தொடர வருபவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (13)

காடுகள் அடர்ந்த தருத் தரங்களிலே தெய்வீகப் பெண்டிர் சூழ்ந்திருக்க
அந்தவண்ண அழகு மலைப் பிரதேசத்தில் மகிழ்வுடன் வசிக்கும் மலைமகளே
கோகிலமும் மிக நாணும்படி தன் புல்லாங் குழலினை இசைப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (14)

இடையினில் ஒளிரும் மஞ்சள் பட்டாடையால் நிலவொளியையும் தோற்கடிப்பவளே
பதம் பணிவோரின் ஆபரணங்களால் நகங்களும் ஜொலிக்க திகழ்பவளே
தங்கமலை உச்சியில் விளங்கும்கலசம்போல் அழகிய தனங்களை உடையவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (15)

கதிரவனையும் விஞ்சும் வலிமை கொண்ட பலஆயிரம் கரங்களை உடையவளே
தாரகாசுரனை எளிதினில் வென்ற வேலவனின் அன்னை ஆனவளே
சுரதா சமாதி இருவருக்கும் மன அமைதியைத் தந்து காத்தவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (16)

உன் மலரடிகளைத் தினமும் போற்றி அன்புடன் துதித்து வணங்கையிலே
தாமரை மலரில் வாசம் செய்யும் உன் திருவருள் எனக்கின்றிப் போய்விடுமோ?
உன் திருவடிகளே சதமென இருக்கையில் செல்வங்கள்ஏதும் என்னை விலகிடுமோ?
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (17)

பொன்னென மின்னிடும் பெருங்கடல் நீரால் உனக் கபிஷேகம் செய்கையிலே
சசியை அடைந்திட்ட சுரபதிக் கிணையாய் சுவர்க்கத்தின் இன்பம் கிடைத்திடுமே
சிவனவன் வசிக்கின்ற உன்மலரடியையே எனக்கும்அடைக்கலமாய்க் கொண்டுவிட்டேன்
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (18)

ஒரு முகமாக ஒரு மனதாக உன்னெழில் வதனத்தைச் சிந்தை செய்தால்
இந்திர லோகத்து அரம்பையரும் உன்பக்தரை ஒதுக்கிடத் துணிவதில்லை
அன்பின் பெருக்கால் சுந்தரரைத் தன் பொக்கிஷமாக்கிக் கொண்டவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (19)

எளியோரையும் மிகக் கருணை கொண்டு காப்பவளே எமையும் காத்திடுவாய்
உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் அன்னையே உன்திரு வடிசரணம்
துயரங்கள் அனைத்தையும் களைந்திடுவாய் உன்விருப்பப்படி எமை அமைத்திடுவாய்
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (20)

7 comments:

 1. ஆற அமர படிச்சிட்டு சொல்றேன் :-)

  ReplyDelete
 2. Thanks for the blog. I never thought to look into the meaning of the slokham whenever I heard this. Today, I am really feel happy after noticing the meaning. Once again... thanks!

  The link for seeing this slokham in english with meaning:
  http://chennaionline.com/festivalsnreligion/slogams/2007/04slokam62.asp

  ReplyDelete
 3. நன்றி, பாரதிய நவீன இளவரசன்! எனக்குப் பிடிச்ச ஸ்லோகம் இது; அதனாலயே எனக்குப் பிடிச்ச தமிழ்ல எழுதணும்னு ஆசை. ஸ்லோகமும், பொருளும் எவ்வளவு அழகு! படிச்சு கருத்துச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி! சென்னை ஆன்லைன் இணைப்புக்கும்...

  ReplyDelete
 4. நன்றாக இருந்தது!

  ReplyDelete
 5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ஜீவா!

  ReplyDelete
 6. அருமை அருமை கவிநயா. ஒவ்வொரு சொல்லும் பொருளும் மிக அருமையாக அமைந்திருக்கின்றது. தனுதிதி வம்சத்தை என்றவுடன் ஒரு நிமிடம் தயங்கினேன். பின்னர் தனு வம்சம், திதி வம்சம் என்று புரிந்தது. மிக அருமை.

  இந்தப் பாடல்களைப் படிக்கும் போது கவியரசர் கண்ணதாசன் கனகதாரா ஸ்தோத்ரத்தை மொழிபெயர்த்து 'பொன்மழைப் பாடல்கள்' என்று ஒரு துதிநூலை இயற்றியிருந்தார்; அந்த நூலின் பாடல்கள் நினைவுக்கு வந்தன. பொன்மழைப்பாடல்களைப் போல் இந்தப் பாடல்களும் துதிநூலாகக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.

  ReplyDelete
 7. குமரன், உங்கள் மடல் பார்த்ததும் என் சந்தோஷத்தை அளவிட முடியாது! இதன் பொருள் கிட்டத்தட்டவாவது சரியாக வந்திருக்கிறதா உங்களைப் போல ஒருவரிடமிருந்து என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆவல். தவறு இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதும். அன்னைக்கு என் குரல் கேட்டுவிட்டது :) மிக மிக, மிக நன்றி!

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)