Tuesday, March 25, 2008

என்று வருவான்?

கனவில், ஒரு நதியில், அந்த நதியின் ஒரு கரையில்
கண்ணன் அவன் வருவான் என காத்திருக்கும் பொழுதில்...

மனதில், ஒரு நினைவில், அந்த நினைவின் ஒரு விளிம்பில்
மன்னன் அவன் வருவான் என மயங்கி நிற்கும் பொழுதில்...

கீழ்வானம் ப்ரசவிக்க கதிரவன் வெளி வந்தான்
காத்திருக்கும் மலர்கள் கண்டு களிப்புடனே சிரித்தான்

ஆள வந்த அரசன் போல வானில் வலம் வந்தான்
பகலின் பெரிய தீபம் போல உலகிற் கொளி தந்தான் -

ஆனால் -
கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;
காத்திருக்கும் ராதைக் கவன் காட்சிதர வில்லை!

அவன் முகமலரின் அழகைமனம் கருவண்டாய்ச் சுற்ற - அந்த
நினைவுக் கள்ளின் போதையிலே தான்மயங்கிச் சொக்க

அவன் இதழ் கொஞ்சும் குழல் கண்டு *காய்மையிலே சிக்க
அவன் நிறம் கொண்ட மேகம் கண்டு பிணக்கில் மனம் சுளிக்க -

கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;
காத்திருக்கும் ராதைக் கவன் காட்சிதர வில்லை!

அந்தி நேரம் வந்த போதும் ஆதவன்பின் மறைந்த போதும்
வெள்ளை நிலா வான் வெளியில் வீதி உலா வந்த போதும்

விண்மீன்கள் மினுமினுத்து வானில்விளக் கெரித்த போதும்
காற்றுக்கூட ஓய்வெடுத்து மூச் சடக்கி நின்ற போதும் -

கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;
காத்திருக்கும் ராதைக் கவன் காட்சிதர வில்லை!

என்றேனும் வருவானோ? ஏக்கம்தீர்த் திடுவானோ?
வாடுகின்ற ராதையவள் வாட்டம்போக்க வருவானோ?


-- கவிநயா

*காய்மை == பொறாமை

10 comments:

  1. கவிநயா,

    //அவன் இதழ் கொஞ்சும் குழல் கண்டு *காய்மையிலே சிக்க
    அவன் நிறம் கொண்ட மேகம் கண்டு பிணக்கில் மனம் சுளிக்க ‍//

    இந்த வரிகள் ஒருகனம் திரும்பவும் படிக்க வைக்கும் அளவிற்கு அருமையாக இருக்கிறது. நல்ல கற்பனை.

    ReplyDelete
  2. கவிதை படிச்சதுக்கு நன்றி, சதங்கா!

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாயிருக்கு கவிநயா

    ReplyDelete
  4. படிச்சதுக்கும் ரசிச்சதுக்கும் மிக்க நன்றி, தங்கம்!

    ReplyDelete
  5. //கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;
    காத்திருக்கும் ராதைக் கவன் காட்சிதர வில்லை//

    சந்தம் நல்லா வந்திருக்கு அக்கா! வரிகளை அப்படியே லேசா ஹம் பண்ணிப் பாடினேன்! :-))

    ReplyDelete
  6. என்று வருவானோ என்றிருந்ததற்கு, இன்று வந்தாயோ கண்ணா? :)) வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. //விண்மீன்கள் மினுமினுத்து வானில்விளக் கெரித்த போதும்
    காற்றுக்கூட ஓய்வெடுத்து மூச் சடக்கி நின்ற போதும் -

    கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;//

    கண்ணன் வரவுக்கான இயற்கையே நிதானமிழந்ததோ?...சூப்பர்.

    ReplyDelete
  8. //அந்தி நேரம் வந்த போதும் ஆதவன்பின் மறைந்த போதும்
    வெள்ளை நிலா வான் வெளியில் வீதி உலா வந்த போதும்

    விண்மீன்கள் மினுமினுத்து வானில்விளக் கெரித்த போதும்
    காற்றுக்கூட ஓய்வெடுத்து மூச் சடக்கி நின்ற போதும் -

    கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;
    காத்திருக்கும் ராதைக் கவன் காட்சிதர வில்லை!//

    அருமையான கற்பனை வரிகள் கவிநயா. உண்மையில் நிறைய தடவைகள் வாசித்து ரசித்தேன்.

    ReplyDelete
  9. வாங்க மௌலி :) கண்ணன்னாலே எல்லாருக்கும் ஒரு மயக்கம்தான், இயற்கை உட்பட! உங்களுக்குப் பிடிச்சிருக்கது குறித்து மிக்க மகிழ்ச்சி! நன்றி மௌலி! :))

    ReplyDelete
  10. வாங்க நிர்ஷன்! சில சமயம் நம்ம எழுதறதுலயே சில நமக்கே ரொம்பப் பிடிக்குமே. அதே போல எனக்கே பிடிச்சது இந்தக் கவிதை :) உங்க வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)