Sunday, October 9, 2011

நீங்க பணக்காரரா, பிச்சைக்காரரா?


ஹ்ம்… என்ன கேள்வி இதுன்னு யோசிக்கிறீங்களா? பணக்காரர்னு சொன்னா ஏதாச்சும் கடன் கிடன் கேட்டு வந்துரப் போறாளோன்னு பயந்துராதீங்க :) இந்தக் கேள்வி பணம் சம்பந்தப்பட்டதில்லை, மனம் சம்பந்தப்பட்டது!

ஒரு நாள் தொலைக்காட்சியில் திரு.சுகிசிவம் அவர்களுடைய பேச்சைக் கேட்க நேர்ந்தது. அப்ப அவர் சொன்ன விஷயம் கொஞ்சம் சிந்திக்க வச்சது… அவர் சொன்னார், நாம எல்லாருமே அன்பை பிறரிடம் எதிர்பார்க்கிற பிச்சைக்காரர்களா இருக்கோம், அப்படின்னு!

உண்மைதான்னு தோணுதில்ல? உணவை விட அன்புக்கும், அங்கீகாரத்துக்கும் தான் மனுஷன் அதிகமா ஏங்கறான், அப்படின்னு அன்னை தெரஸாவும் சொல்லி இருக்காங்க. [“There is more hunger for love and appreciation in this world than for bread.” – Mother Teresa]. கொஞ்சம் யோசிச்சு பார்த்தா தெரியும், அது ரொம்பவே உண்மை அப்படின்னு. மனித இயல்பே அதுதான். அந்த ஏக்கம்தான். அதைத்தான் சுகிசிவம் அவர்கள் கொஞ்சம் உறைக்கிறாப்ல சொல்லியிருக்காரு, அவ்வளவுதான். நாம அன்பு செலுத்தறதைக் காட்டிலும், மற்றவங்க நம்ம மேல அன்பு செலுத்தணும்னுதான் மனசு அதிகமா எதிர்பார்க்குது. அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும்போது, எல்லாமே மாறிப் போயிடுது.

நம் மீது ஒருத்தர் அதிகம் அன்பு செலுத்தணும்னு நினைக்கிற போதே தன்னலம், பொறாமை, கோபம், வருத்தம், எல்லாம் கூடவே வந்துடுது. அவங்க நம்மைக் காட்டிலும் இன்னொருத்தர் கிட்ட அன்பா இருந்தாலோ, அதிகமா பேசினாலோ, நம்மால் தாங்க முடியறதில்லை. நாம அவங்ககிட்ட அந்த அளவு அன்பா இருக்கோமோ இல்லையோ, ஆனா நம்ம மேல மட்டும் அவங்க அளவில்லாத அன்பு செலுத்தணும்னு நினைக்கிறோம். அந்த நினைப்பே நம் துயரத்துக்கெல்லாம் காரணமாயிடுது.

ஒரே வீட்டில் பிறந்தவங்களா இருந்தா, அம்மாவுக்கு என்னை விட அவன்தான் செல்லம்னும், தோழிகளா இருந்தா, அவ அன்பு பூரா எனக்கே சொந்தமாகணும்னும், காதலர்களா இருந்தா, அவன் வேற பொண்ணுங்ககிட்ட சிரிச்சு பேசவே கூடாதுன்னும், தோணறதுக்கெல்லாம் இந்த எதிர்பார்ப்புதான் காரணம்.

யாரையாவது பற்றி எனக்கு இப்படி தோணும்போதெல்லாம், “பிச்சைக்காரியா இருப்பதல்ல என் விருப்பம், பணக்காரியா இருப்பதே”, அப்படின்னு எனக்கு நானே நினைவுபடுத்திக்கிறேன். பணக்காரியாக் கூட இல்லை; வள்ளலா இருக்கணும். அன்பை அள்ளி அள்ளித் தரும் வள்ளலாக. யாரும் கேட்காமலேயே. யாரும் எதிர்பார்க்காத போதே.

போக வேண்டிய தூரம் அதிகம் இருந்தாலும், முதல் அடி வைப்பதுதானே முக்கியம்!


அன்புடன்
கவிநயா

14 comments:

 1. "அன்பை அள்ளி அள்ளித் தரும் வள்ளலாக " ஆகணும்நு நினைப்பது ரொம்ப நல்ல விஷயம்;எல்லோருமே இப்படி மாறிட்டா no problems [including terrorism]

  om shanthi!உலகமே இப்டி மாறாதான்னு நம் எல்லோருக்குள்ளும் ஒரு ஏக்கம் இருக்கத்தான் இருக்கு!  அந்தப்படத்தில் ஏன்டாலர்மூட்டையை ஏத்திருக்கே? bracket லே கடன்

  என்று போடலாமோ?(I.M.F)!

  ReplyDelete
 2. சூப்பரான மேட்டர்....சாதாரணமாச் சொல்லிடீங்க...சிந்திக்கும் திங்களுக்கு ஏற்றது :-)

  ReplyDelete
 3. முதலில் "பொன் மழை" க்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

  இந்த பதிவும் அற்புதம் ! என்னை அடிக்கடி கோபமூட்டும் விஷயம் இதுதான்.

  "ஏம்ப்பா! எல்லோரும் என்கிட்ட எதையாவது எதிர் பார்த்துகிட்டே இருக்காங்களே ! ஏன் எனக்கு என்ன வேணுமுன்னு கேட்க யாருக்குமே தோனமட்டேன்குது...?" என்று தலைவரிடம் புலம்புவேன். இனி அந்த புலம்பலை கேட்கும் தொல்லை தலைவருக்கு இருக்காதென்றே நம்புகிறேன்.

  ReplyDelete
 4. அருமையான பகிர்வு ;-)

  ReplyDelete
 5. //அன்பை அள்ளி அள்ளித் தரும் வள்ளலாக. யாரும் கேட்காமலேயே. யாரும் எதிர்பார்க்காத போதே. //

  ரொம்ப கஷ்ட்டமான விஷயம் தான் கடைபிடிப்பதற்கு.. ஆனாலும் நல்ல விஷயத்தை சொல்லியிருக்கீங்க..

  ReplyDelete
 6. வாங்க லலிதாம்மா.

  //அந்தப்படத்தில் ஏன்டாலர்மூட்டையை ஏத்திருக்கே? bracket லே கடன்

  என்று போடலாமோ?(I.M.F)!//

  உங்களுக்கு கொடுக்கத்தான்! :) பண மூட்டை==அன்பு மூட்டை, இங்கே.

  ReplyDelete
 7. //சூப்பரான மேட்டர்....சாதாரணமாச் சொல்லிடீங்க...சிந்திக்கும் திங்களுக்கு ஏற்றது :-)//

  நன்றி மௌலி :)

  ReplyDelete
 8. //முதலில் "பொன் மழை" க்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.//

  :) நன்றி தலைவி. ஆனா 'பொன் மழை' கவியரசரோடது. இது 'கனக தாரை' தான் :)

  //இந்த பதிவும் அற்புதம் !//

  நன்றிப்பா.

  //"ஏம்ப்பா! எல்லோரும் என்கிட்ட எதையாவது எதிர் பார்த்துகிட்டே இருக்காங்களே ! ஏன் எனக்கு என்ன வேணுமுன்னு கேட்க யாருக்குமே தோனமட்டேன்குது...?" என்று தலைவரிடம் புலம்புவேன். இனி அந்த புலம்பலை கேட்கும் தொல்லை தலைவருக்கு இருக்காதென்றே நம்புகிறேன்.//

  ஆஹா, ரொம்ப சந்தோஷம் :)

  ReplyDelete
 9. //அருமையான பகிர்வு ;-)//

  நன்றி கோபி. ரொம்ப நாளுக்கப்புறம் பார்த்ததில் சந்தோஷமும் :)

  ReplyDelete
 10. //ரொம்ப கஷ்ட்டமான விஷயம் தான் கடைபிடிப்பதற்கு.. ஆனாலும் நல்ல விஷயத்தை சொல்லியிருக்கீங்க..//

  உண்மைதான் ஸ்வர்ணரேக்கா. அதனாலதான் முதல் அடிதான் முக்கியம்னும் சொன்னேன் :) உங்களையும் ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறேன். வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி :)

  ReplyDelete
 11. வள்ளலாக வாழ வழிகாட்டும் மிக அருமையான பகிர்வு கவிநயா.

  ReplyDelete
 12. வாங்க ராமலக்ஷ்மி. மிக்க நன்றி :)

  ReplyDelete
 13. வாங்க வாங்க உங்களைதான் இந்த உலகம் எதிர்பாற்குது

  ReplyDelete
  Replies
  1. வாங்க சரளா. மிக்க நன்றி :)

   Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)