Monday, June 8, 2015

அன்புப் பயிற்சி

  1. ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் 5 நிமிடங்கள் செலவிடுங்கள். நாம் அனைவரும்வேண்டுவது ஒன்றையே என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதாவது, அனைத்து மனிதர்களும் வேண்டுவது சந்தோஷமும், அன்புமே. நாம் அனைவரும் ஒருவரோடுவர் பிணைக்கப்பட்டவர்கள்.
     
  2. 5 நிமிடங்கள் ஆழ்ந்து சுவாசியுங்கள். மூச்சை உள்ளிழுக்கும்போது, உங்களைப் பற்றியும், வெளி விடும்போது பிறரைப் பற்றியும் அன்புடன் சிந்தியுங்கள். சில  பேரிடம் அன்பு செலுத்துவது சிரமமாக இருக்கும். இருந்தாலும் முயற்சித்து அவர்களுக்கும் உங்கள் எண்ணத்தின் மூலம் அன்பை அளியுங்கள்.
     
  3. நாள் முழுவதும் சந்திக்கும் அனைவரிடமும் அத்தகைய அன்பையே வெளிப்படுத்துங்கள். அன்றாட வேலைகளில் சாதரணமாக நாம் அதிகம் கவனிக்காதவர்களிடமும், (கடைக்காரர், ஆட்டோ ஓட்டுநர், இப்படி) அன்பை விரிவுபடுத்துங்கள்.
     
  4. என்ன ஆனாலும் இந்த பயிற்சியைக் கை விடாதீர்கள். தொடர்ந்து கடைப்பிடியுங்கள்.

அன்பு சார்ந்த இத்தகைய எண்ணங்கள் மிக எளிமையாகத் தோன்றினாலும், மிகவும் வலிமையானவை. ஆன்மாவின் இயல்பான அன்பை ஆழமாக உணரச் செய்யும் அருமையான பயிற்சியைத் தருபவை.


--தலாய் லாமா

ஆங்கிலத்தில் படித்ததை தமிழில் எழுதி இருக்கிறேன்

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா

படத்திற்கு நன்றி: http://revelationsofprofoundlove.com/somehow-i-am-always-held/

Monday, June 1, 2015

கண்ணாடி வேண்டாமே!


எல்லாமே நாம பார்க்கிற விதத்தில் இருக்கு…

மனசுதான் எத்தனை விசித்திரமானது! காரணமில்லாமயே சில சமயம் துள்ளிக் குதிக்கும்; காரணமில்லாமயே சில சமயம் கவலையில் தவிக்கும். அப்படிச் சொல்றது கூட தப்புதான். காரணம் தெரியாமலே அப்படின்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.

எங்கே பார்த்தாலும் வித விதமா, நிற நிறமா, அழகழகா, மலர்களும், பச்சைப் பசேல்னு செடிகளும், கொடிகளும், மரங்களும், படுத்துப் புரளலாம் போல புல் வெளிகளும் (அடடா, சென்னையில இருக்கீங்களா, நீங்க? அப்படின்னா ரொம்ப ஸாரி. இதையெல்லாம் கற்பனையில் பார்த்துக்கோங்க), ஜோடி போட்டுக்கிட்டு சுத்தித் திரியற பறவைகளும், இப்படி இதெல்லாம் நிறைஞ்சிருக்கிற வசந்த காலத்தைப் பிடிக்காதவங்க இருக்க முடியுமா?

ஆனா வசந்த காலத்தைப் பார்த்தா பிடிக்காத நாட்களும் இருக்கும். மனசுக்குள்ள சோக மூட்டமா இருக்கும் போது, வெளியில வெயிலடிச்சா என்ன, மழை பெஞ்சா என்ன, பூ பூத்தா என்ன, புயலடிச்சா என்ன, அப்படின்னு வெறுப்பா இருக்கும். ஆனா மனசு சந்தோஷமா இருக்கும் போது, நசநசன்னு மழை பெஞ்சுகிட்டே இருந்தாக் கூட அதைப் பூத்தூவலா ஏத்துக்கிட்டு நனைஞ்சுக்கிட்டே இருக்கத் தோணும்.

ஒரு விஷயம் நடக்கும் போது அதுக்கு நம்மோட reaction அல்லது எதிர் வினை, நம்மோட மனநிலையைப் பொறுத்துதான் இருக்கும். நாம சந்தோஷமான மனநிலையில் இருந்தா, மற்றவங்க செய்யற பெரிய தவறுகளைக் கூடப் பெரிசு படுத்தாம, பெருந்தன்மையா மன்னிச்சு, மறந்திடுவோம். ஆனா வருத்தத்தில் இருக்கும் போது, பிறர் செய்யற சிறிய தவறுகளும் பூதாகாரமா தெரியும். அவங்க தவறே செய்யாட்டி கூட, ஏதோ ஒண்ணை நாமளே கண்டு பிடிச்சு அதுக்காகக் கோவப்படுவோம், அல்லது வருத்தப்படுவோம்.

ஆக, சந்தோஷமும் வருத்தமும் நம்ம மன நிலையிலயும், மன நிலையின் காரணமா ஏற்படற கண்ணோட்டத்திலயும்தான் இருக்கு. சுருக்கமா சொன்னா, மஞ்சக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டு பார்த்தா எல்லாமே மஞ்சளாதான் தெரியும். பச்சைக் கண்ணாடி போட்டுக்கிட்டா பச்சையாதான் தெரியும்.

ஒருத்தர் நம்மை வருத்தப்படுத்திட்டாங்கன்னு நாம நினைச்சிட்டா, அதைக் கொண்டு போய் வேற ஒருத்தர்கிட்ட காண்பிப்போம், அவங்க போய் இன்னொருத்தர்கிட்ட காண்பிப்பாங்க, இப்படியே அது ஒரு தொத்து வியாதி மாதிரி தொடரும். “snowball effect” ன்னு சொல்வாங்களே, அந்த மாதிரி. அப்படி இல்லாம அது நம்மகிட்ட வரும்போதே அதைத் தடுத்துட்டா, எத்தனை பேருக்கு, எவ்வளவு நிம்மதியா இருக்கும்!

அதனால, இதைப் பற்றிய விழிப்புணர்வு மட்டும் நமக்கு வந்திடுச்சுன்னா, நாம அந்த மாதிரி நினைக்க ஆரம்பிக்கும் போதே, நம்ம மனசை நாமே கண்டிச்சு திசை திருப்ப முடியும். மற்றவங்க நாம எதிர்பாரா விதமா நடந்திகிட்டிருந்தா, அவங்க அப்படி நடந்துக்கிறதுக்கு வேற ஏதாவது காரணமோ, பின்னணியோ இருக்கலாம் அப்படின்னு நினைக்கப் பழகிக்கணும். ஆங்கிலத்தில் giving the benefit of the doubt அப்படின்னு சொல்வாங்க. ஏன் எல்லாமே என்னாலதான்னோ, அல்லது என்னைப்பற்றியேதான்னோ நினைக்கணும்? எல்லாமே தன்னை மையமா வெச்சுதான் நடக்குதுன்னு நினைக்கிறது ஒரு விதமான ego தான். பெரும்பாலும் நாம வருத்தப்படறது இதனாலதான். அதனால, ego-வைக் கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு, மற்றவங்க சூழ்நிலையோ, குணங்களோ, பழக்க வழக்கங்களோ, அவங்க கலாச்சாரமோ, இப்படி ஏதோ ஒண்ணு அவங்க நடத்தைக்குக் காரணமா இருக்கலாம், அப்படின்னு நினைக்கப் பழகிக்கிட்டா, நமக்கும் மன அமைதி கிடைக்கும்.

கொஞ்சம் நினைச்சுப் பாருங்க, யாராச்சும் வேணும்னே மற்றவங்க கோபப்படணும்னோ, அல்லது  வருத்தப்படணும்னோ ஏதாச்சும் செய்வாங்களா என்ன? எனக்கென்னமோ அப்படித் தோணல. சினிமாவிலயும், சீரியல்லயும் தான் அப்படில்லாம் யோசிக்கிறாங்க. அதெல்லாம் பார்த்தா மனுஷங்க இப்படியெல்லாம் இருப்பாங்களான்னு ஆச்சர்யமா இருக்கும்.

நம்மோட எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒரு அடி தள்ளி நின்னே கவனிக்கணும், அப்படின்னு பாண்டிச்சேரி அன்னை சொல்றாங்க. எந்த ஒரு விஷயத்துக்கும் உடனடியா react பண்ணக் கூடாது. கொஞ்சம் நிதானிச்சு, கொஞ்சம் நேரம் ஆன பிறகு, நாம என்ன சொல்லப் போறோம், அல்லது செய்யப் போறோம்னு யோசிச்சுப் பார்த்து, அதுக்கப்புறமும் சரியா இருந்தாதான் அதைச் செய்யணும்.

கோபத்தையோ வேண்டாத எண்ணங்களையோ அடக்க என்ன வழி சொல்றாங்க அன்னை? அதைப் பற்றி இன்னொரு நாள் பார்க்கலாம்…

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Wednesday, May 27, 2015

பூப்பூவா...


வணக்கம். நலந்தானே? ரொம்ப நாளாச்சு பார்த்து.

பூ அழகா இருக்குல்ல? என் தோழி வீட்டில் பூ பூத்தா வலைப்பூவில் இடறேன்னு சொல்லியிருந்தேன். கொடுத்த வாக்கைக் காப்பத்தணுந்தானே?

இந்தப் பூவுக்கு அப்படி என்ன சிறப்புங்கிறீங்களா? அவங்களுக்கும் தாவரங்களுக்கும் ரொம்ப தூரம்… இப்பதான் பழக ஆரம்பிச்ச்சிருக்காங்க. அந்தப் பழக்கத்தை ஊக்குவிக்கறதுக்காகத்தான்… என்கிறது வெளிப்படையான காரணம் :) (அந்தச் சாக்கிலாவது நானும் ஒரு பதிவிட்டேன்னு பேர் பண்ணிக்கலாமே அப்படிங்கிறது  உள்ளுக்குள்ள இருக்க காரணம்!)

இந்தப் பூ மாதிரி நீங்களும் எப்பவும் அழகா சிரிச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு வாழ்த்தறேன்!


அன்புடன்
கவிநயா

Tuesday, April 14, 2015

புத்தாண்டு வாழ்த்துகள்!


இன்று தொடங்கும் மன்மத ஆண்டு, அனைவருக்கும் இனியதாக அமையட்டும்!


வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்! 

--கச்சியப்ப சிவாச்சாரியார்


அன்புடன்
கவிநயா


Monday, March 16, 2015

மென்மையும், திண்மையும்


இராமனும் கிருஷ்ணனும் ஒரே ஹரியின் அவதாரமாக இருந்தாலும், இருவரிடத்திலும் நமக்குத் (எனக்கு?) தோன்றுவது வெவ்வேறு விதமான அன்பு. இராமனிடத்தில் மரியாதை கலந்த வாஞ்சை மீறும் அன்பு. கிருஷ்ணனிடத்திலோ உரிமை மிகுந்த காதல் ஊறும் அன்பு. ஏன் இப்படி என்று அடிக்கடி தோன்றும். சரி அதை விடுவோம்.

இராமாயணத்தில் அனுபவிக்க வேண்டிய காட்சிகள் பலப்பல உண்டு. அதில் எனக்குப் பிடித்தவற்றில் ஒன்று, இராமன் சிவதனுசை அநாயாசமாக முறிக்கின்ற காட்சி.

தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்
மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.

இராமன் தாடகையை வதைத்தான், மாரீசனை விரட்டியடித்தான், விசுவாமித்திரரின் யாகத்தைக் காத்தான். எல்லாமே பெரிய்ய பெரிய்ய சாதனைகள்தான் என்றாலும் சிவதனுசை அவன் கையாண்ட விதத்தில் ஏனோ ஒரு ஈர்ப்பு. இந்த விஷயத்தில் காதல் கலந்திருப்பதாலோ? :)

பண்டிகை நாட்களிலோ அல்லது பார்ட்டி நாட்களிலோ பெற்றோர்கள் இரவு நேரஞ்சென்று கண் விழித்துக் களித்திருப்பதைப் பார்த்தால் குழந்தைகள் உறங்கச் செல்ல மாட்டார்கள். தூக்கம் கண்ணைச் சுற்றினாலும், சிவந்து விட்ட கண்களைக் கஷ்டப்பட்டு விரித்து வைத்துக் கொண்டு, விழித்துக் கொண்டு இருப்பார்கள். தூங்கினால் எதையோ இழந்து விடுவோமோ என்ற எண்ணம் தான் காரணம்.

அதைப் போலத்தான் கண்களை ஒரு நொடி இமைத்து விட்டாலும் இராமன் என்ன செய்கிறான் என்பது தெரியாமல் போய்விடுமோ என்பதற்காக, விழிகளை இமைக்காமல், வைத்த கண் வாங்காமல் இராமனையே பார்த்துக் கொண்டிருந்தார்களாம் சபையில் இருந்தவர்கள். அப்படியும் அவன் சிவ தனுசை எடுத்ததையோ, திருவடியால் அந்த வில்லின் முனையை மிதித்ததையோ, நாண் ஏற்றியதையோ, எதையுமே அவர்களால் பார்க்க முடியவில்லையாம். அந்த அளவு வேகமாக, கண் இமைப்பதையும் தாண்டிய கடும் வேகத்தில் அவன் அத்தனையும் செய்து விட்டானாம். அதனால் வில்லை எடுத்ததைக் கண்டவர்கள், அதன் பிறகு நாண் ஏற்றப்பட்ட வில் முறிந்த சப்தத்தை மட்டுமே கேட்டனர்!

அப்படியென்றால் வலிமை மிகுந்த அவன் கரங்களுக்கும், திறன் மிகுந்த அவன் விரல்களுக்கும் இருந்த வேகம் எத்தகையதாக இருந்திருக்க வேண்டும்! இந்தக் காலத்துத் திரைப்படங்களில் வேகமான செய்கைகளைக் காட்டுவதற்காக ஒன்றைக் காட்டி, நடுவில் உள்ளதை வெட்டி, இறுதியை ஒட்டிக் காட்டுவார்களே… அப்படியென்றால் இராமனின் உண்மை வேகமே எந்த அளவு இருந்திருக்க வேண்டும்! இராமனின் அழகின் சிறப்பைப் பற்றியும், குணங்களின் பெருமையைப் பற்றியும் கேட்கும் போது, அவன் மிக மிக மென்மையானவன் என்று தோன்றும். எனில், அவன் பலத்தையும், வலிமையையும், வேகத்தையும் பற்றிக் கேட்கும் போது அவன் எவ்வளவு திண்மையானவன் என்றும் அறிய முடிகிறது. மென்மையும் திண்மையும் கலந்த அற்புதக் கலவைதான் ஸ்ரீராமன்.

ஸ்ரீராம், ஜெய ராம், ஜெய ஜெய ராம்.


எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா

Sunday, March 1, 2015

சொற்களும் நானும்


சொற்களை நான் நேசிக்கிறேன்!

சொற்கள் இனிமையானவை…

சில சொற்களின் இனிமை

அவற்றின் ஒலியிலேயே தெரியும்…

சில சொற்களின் இனிமை

எழுத்துகளின் கோர்வையில் தெரியும்…

இன்னும் சில சொற்களின் இனிமை

அவற்றின் பொருளில் புலப்படும்…

சில சொற்களுக்குத் தனி

அழகிருக்கும், கம்பீரமிருக்கும்…

சில சொற்களுக்கு

நிறம் இருக்கும், மணம் இருக்கும்…

இன்னும் சில சொற்களுக்கோ

சுவை கூட இருப்பதுண்டு…

ஆனால்,

இவை அனைத்தும் ஒருசேர இருக்கும்

ஒரே ஒரு சொல் எது தெரியுமா?

.

.

.

உன் பெயர்!


--கவிநயா

இந்த வாரம் அம்மன் பாட்டிலும் உன் பெயர்

படத்திற்கு நன்றி: http://www.fanpop.com/clubs/roses/images/13966980/title/rose-love-wallpaper

Monday, February 16, 2015

கொன்றை மலர் சூடும் கொற்றவன்

மஹா சிவராத்திரி சிறப்புப் பதிவு...


கொன்றை மலர் சூடும் கொற்றவனே - எந்தன்
அன்னை மனம் வென்ற உற்றவனே
(கொன்றை)

விந்தை நடம் புரியும் மன்னவனே – எந்தன்
சிந்தை யெல்லாம் நிறைந்த தென்னவனே
(கொன்றை)

இருவிழி இமையென உமையிருக்க, அந்த
விழிகளிலே அருள் பெருக்கெடுக்க
பிறைமதி முடியினில் துலங்கி நிற்க, ஒரு
குறையில்லை என்(று) அபயம் தந்திருக்க…
(கொன்றை)


--கவிநயா