Monday, August 29, 2016

“பொருள்” உதவி!

வணக்கம்! நலந்தானே? உங்களை ஒரு உதவி கேட்கலாமென்று வந்தேன்.

பரத நாட்டியத்தில் நாங்கள் ஆடுகின்ற பாடல்களில் ஒன்றான முருகன் கவுத்துவத்தில், இந்த வரி வருகிறது:

“கடல் கிழிய, மலை முறிய, வரும் முருகன்...”

அடியவர்களுக்கு அருள் புரிய அவ்வளவு வேகமாக வருகிறானா? அல்லது இதன் பின்னே கதை ஏதும் இருக்கிறதா என்ற சந்தேகம் வந்தது. ஏனென்றால்,

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா!”

என்று தொடங்கும் பாரதியின் பாடல் ஒன்றில்

“வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை
உடல் வெம்பி மறுகிக் கருகி புகைய வெருட்டினாய்”

என்று வருகிறது.

“மலை முறிய” என்றால் தாரகாசுரன் கிரௌஞ்ச மலையாக மாறிய போது அந்த மலையைப் பிளந்த கதை என்று வைத்துக் கொள்ளலாம்… ஆனால் கடலைக் கிழித்தது?

தெரிந்தால் சொல்லுங்களேன்!

அன்புடன்
கவிநயா

Tuesday, August 23, 2016

அழகுக் குழந்தை!

அனைவருக்கும் குட்டிக் கிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்துகள்! 


கண்ணன் பிறந்தான், சின்னக் கண்ணன் பிறந்தான்

நானிலம் மகிழ, நான்மறை புகழக் கண்ணன் பிறந்தான்


எங்கள் மன்னன் பிறந்தான்

பூவைப் பூ வண்ணம் அவன் பூந்தளிர் மேனி, அவன்

பூஞ்சிரிப்பில் கிறங்கி விடும் மனமென்னும் தேனீ



வெள்ளித் தண்டை கொஞ்சக் கொஞ்ச

சேவடிகள் கெஞ்சக் கெஞ்ச

மூவடியால் உலகை அளந்த மாயன் வருகிறான், அவன்

ஏதும் அறியாத குழந்தை போலத் தவழ்கிறான்



வா யிதழில் தே னொழுக

வண்டு விழி தான் சுழல

அண்டமெல்லாம் தன்னுள் கொண்ட மாயன் வருகிறான், அவன்

ஏதும் அறியாத குழந்தை போலத் தவழ்கிறான்



அன்னை இல்லை என்பதனால்

அன்னை அன்பிற் கேங்கினனோ?

அன்னை யசோ தாவைத் தேடி மாயன் வருகிறான், அவன்

அழகுக் குழந்தையாகி அவள் மடியில் தவழ்கிறான்


---கவிநயா