அகிலத்தின் நன்மைக்காக, கொடிய
விஷத்தின் வீரியத்தைத் தன் கண்டத்தில் தாங்கிக் கொண்டான் சிவபெருமான். அவனுடைய அந்தக்
கருணையை எண்ணி எண்ணி உருகி, அவனைத் “திருநீலகண்டம்”, “திருநீலகண்டம்”, என்று வாய்க்கு வாய் போற்றிப் புகழ்ந்து
கொண்டேயிருப்பார் அந்த நாயனார். அதனாலேயே அவர் பெயரும் திருநீலகண்டர் என்றே வழங்காலாயிற்று.
திருநீலகண்டர் குயவர் குலத்தைச்
சேர்ந்தவர். தில்லைத் தலமே அவரது ஊர். திருவோடுகள் செய்வதே அவர் தொழிலாக இருந்தது.
ஒவ்வொரு நாளும் ஒரு சிவனடியாருக்கேனும் இலவசமாகத் திருவோடு செய்து தருவார்.
மிகுந்த பக்தியுடையவராய் இருந்தாலும்,
அவருக்கும் மனைவியையன்றிப் பிற பெண்களை நாடுகிற விருப்பம் இருந்தது. இதனால் கற்புக்கரசியான
அவர் மனைவி வேதனை கொண்டார். மனைவிக்கான எல்லாக் கடமைகளையும் செய்தவர், கணவர் தம்மை
நெருங்க மட்டும் அனுமதிக்கவில்லை. அவர் ஊடல் கொண்டே அப்படிச் செய்கிறார் என்று எண்ணிய
திருநீலகண்டர் அவர் கரங்களைப் பற்றி சமாதானம் செய்ய முயன்ற போது, பொறுமையை இழந்த மனைவியார்,
“இனி எம்மைத் தீண்டினால் திருநீலகண்டம்”,
என்று இறைவன் மீது ஆணையிட்டுக் கூறி விட்டார்.
அவருடைய அழுத்தமான ஆணையைக் கேட்ட
திருநீலகண்டர், இது விளையாட்டுப் பேச்சல்ல என்று உணர்ந்தார். ஒவ்வொரு நிமிடமும் நாவில்
நின்றொலிக்கும் தன் நாயகனின் பெயரால் தன் மனைவி இட்ட ஆணையைச் சிரமேற்கொண்டார். இனி
அவரை என்றும் தீண்டுவதில்லை என்று தெளிந்தார். அது மட்டுமின்றி, அவர் “எம்மை” என்றதால்,
இனி எந்தப் பெண்ணையுமே தீண்டுவதில்லை என்றும் உறுதி கொண்டார். அன்று முதல் அவர்கள்
இருவரும் ஒரே குடிலுக்குள் வாழ்ந்த போதிலும், துறவியரைப் போல் தவ வாழ்வே மேற்கொண்டிருந்தனர்.
இப்படியாகக் காலம் கழிந்து, தம்பதியர் முதுமை அடைந்தனர்.
இந்த அதிசயத் தம்பதியரின் பக்தியின்
பெருமையை, உலகுக்குப் பறைசாற்ற எண்ணினான், பரமன். சிவனடியார் போல வேடம் கொண்டு, ஒரு
நாள் கையில் ஒரு திருவோட்டுடன் திருநீலகண்டரின் இல்லம் வந்தான். சிவனடியார்கள் என்றாலே
பக்தியில் குழைந்து விடும் திருநீலகண்டர், இந்தச் சிவனடியாரையும் வரவேற்று அன்புடன்
உபசரித்தார். அவர் வேண்டி வந்தது என்ன என்று விசாரித்தார்.
போலிச் சிவனடியாரும், கையிலிருந்த
திருவோட்டைக் காட்டி, “இதைப் போலச் சிறப்புகள் கொண்ட திருவோடு, இந்த உலகிலேயே இல்லை.
எத்தனை பொன்னும் மணியும் தந்தாலும் இதன் மதிப்பிற்கு ஈடாகாது. இது கற்பகத் தரு போன்றது.
நான் பக்தித் தலங்களுக்கு யாத்திரை செல்ல இருக்கிறேன். விலை மதிப்பில்லாத இத்தகைய திருவோட்டை
என்னுடன் எடுத்துச் செல்ல இயலாது. உன் நாணயத்தைப் பற்றியும், பக்தியைப் பற்றியும் கேள்வியுற்று,
உன்னிடம் சிறிது காலத்திற்கு இந்தத் திருவோட்டைப் பாதுகாப்பாய் விட்டு வைக்கலாம் என்று
எண்ணி வந்திருக்கிறேன்”, என்றார்.
திருநீலகண்டரும், “அதற்கென்ன
ஐயா. உங்கள் திருவோட்டைப் பத்திரமாக வைத்திருந்து, நீங்கள் திரும்பி வந்து கேட்கும்
போது தருகிறேன்”, என்றார். அதன்படியே அவரும் அவர் மனைவியும், திருவோட்டை உள்ளே எடுத்துச்
சென்று பத்திரமாக வைத்தார்கள்.
சிறிது காலம் கழிந்த பின் அந்தச்
சிவனடியார் மீண்டும் வந்தார். “திருநீலகண்டரே, இத்தனை காலம் என் திருவோட்டைப் பாதுகாப்பாய்
வைத்திருந்தமைக்கு மிகவும் நன்றி. இப்போது அதனை நான் திரும்பப் பெற்றுக் கொள்ளச் சித்தமாக
இருக்கிறேன்”, என்றார்.
சிவனடியாரை வணங்கி, “தங்கள் சித்தம்,
என் பாக்கியம்”, என்று உள்ளே சென்றார், திருநீலகண்டர். ஆனால், வைத்த இடத்தில் திருவோடு
இருந்தால்தானே! அதைத் தான் அந்த வேடதாரி மாயம் செய்து மறைத்து விட்டானே! கணவனும், மனைவியும்,
பலவாறாகத் தேடியும் திருவோடு கிடைக்கவில்லை.
செய்தி கேட்டு பெருத்த கோபம்
வந்து விட்டது சிவனடியாருக்கு. “என் திருவோட்டின் பெருமைகளை நான் சொல்லும் போது கேட்டுக்
கொண்டிருந்த நீ, அதன் மீது ஆசை கொண்டு மறைத்து வைத்து விட்டு, இப்போது இல்லை என்கிறாய்”,
என்று அபாண்டமாய் திருநீலகண்டர் மீது குற்றம் சாட்டினார், சிவனடியார்.
பதறிப் போன திருநீலகண்டர், பலவாறாக
மன்னிப்புக் கேட்டார்.
“திருவோடு எப்படி மாயமாய் மறைந்தது
என்று தெரியவில்லை. கோபம் வேண்டாம் ஐயா. உங்கள் திருவோட்டுக்குப் பதில் பொன்னாலேனும்
திருவோடு செய்து தந்து விடுகிறேன்”, என்றார் திருநீலகண்டர்.
“முன்பே சொன்னேனே, பொன் ஓடும்
என் ஓட்டுக்கு ஈடாகாது என்று. எனக்கு என் ஓடுதான் வேண்டும். ஒளித்து வைத்ததை மரியாதையாகக்
கொண்டு வந்து கொடுத்து விடு”, என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் சிவனடியார்.
“ஐயா, என்னை நம்புங்கள். உங்கள்
திருவோடு என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக அதைத் திருடும் எண்ணமே எனக்கு
இல்லை”, அழமாட்டாக் குறையாகக் கூறினார், திருநீலகண்டர்.
“நீ கூறுவது உண்மையாயிருக்கும்
பட்சத்தில், நீ உன் மகனின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி
சத்தியம் செய்; அப்போது உன்னை நம்புகிறேன்”, என்றார் சிவனடியார்.
“எனக்கு மகன் இல்லையே ஐயா”, என்றார்
திருநீலகண்டர்.
“அப்படியெனில் உன் மனைவியின்
கரத்தைப் பிடித்துச் சத்தியம் செய்”
அதற்குச் சாத்தியமே இல்லையென்று
மறுத்து விட்டார், திருநீலகண்டர்.
வழக்கு தில்லை வாழ் அந்தணர்களின்
திருச் சபைக்குச் சென்றது.
சிவனடியாரின் வழக்கைக் கேட்ட
திருச்சபை, திருநீலகண்டரின் வாதத்தையும் கேட்டது. அவரும் தான் திருடவில்லை எனவும்,
திருவோடு மாயமாய் மறைந்ததே உண்மை எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.
“அப்படியெனில் மனைவியின் கரம்
பற்றி சத்தியம் செய்வதில் என்ன தயக்கம்?” என்றார் சிவனடியார்.
திருச்சபையும் அவர் கூற்றை ஆமோதித்தது.
திருநீலகண்டரும், “நீங்கள் ஒப்புக் கொள்ளும்படி மனைவியுடன் நீரில் மூழ்குவேன்”, என்று
சொல்லி, மனைவியை அழைத்து வந்தார். அனைவரும் திருப்புலீச்சரத்திலுள்ள பொற்றாமரைக் குளத்தை
அடைந்தனர். திருநீலகண்டர் ஒரு மூங்கில் கழியை எடுத்து, ஒரு முனையைத் தான் பற்றிக் கொண்டு,
மறுமுனையை மனைவியைப் பற்றிக் கொள்ளச் செய்தார்.
அந்தப் பொல்லாத சிவனடியார் விட்டு
விடுவாரா? “இதை ஒப்புக் கொள்ளவே முடியாது. கரத்தைப் பற்றிக் கொண்டால்தான் ஒப்புக் கொள்ள
முடியும்” என்றார் விடமுண்ட கண்டரான அந்த விடாக்கண்டர்.
அதன் பிறகு வேறு வழியின்றி தானும்
தன் மனைவியும் இத்தனை வருடங்களாகக் கடைப்பிடித்து வரும் விரதத்தையும் அதன் காரணத்தையும்
அங்கு நின்றிருந்தோர் அனைவரும் அறிய எடுத்துரைத்தார், திருநீலகண்டர். பிறகு கழியைப்
பற்றியபடியே இருவரும் குளத்தில் மூழ்கினர்.
அவர்கள் இருவரும் நீரில் இருந்து
எழுந்து பார்க்கையில் திருவோட்டைப் போலவே சிவனடியாரும் மாயமாக மறைந்து விட்டிருந்தார்.
முதுமை எய்திய தம்பதியராய் மூழ்கிய இருவரும் திரும்பிய இளமையுடன், இளமையின் பிரகாசத்துடன்
எழுந்தனர். சிவபெருமான் பார்வதி தேவியுடன் இடப வாகனத்தில் அவர்களுக்கு தரிசனம் தந்தான்.
அவர்களின் பக்தியின் பெருமையையும், ஐம்புலன்களையும் வென்று அவர்கள் வாழ்ந்த தவவாழ்வின்
பெருமையையும் போற்றி, இளமையின் பொலிவோடு அவர்கள் என்றென்றும் தம்முடனே இருக்க அருள்
புரிந்தான்.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!
அன்புடன்
கவிநயா
படத்துக்கு நன்றி: கூகுளார்