இராமனும் கிருஷ்ணனும் ஒரே ஹரியின் அவதாரமாக
இருந்தாலும், இருவரிடத்திலும் நமக்குத் (எனக்கு?) தோன்றுவது வெவ்வேறு விதமான அன்பு.
இராமனிடத்தில் மரியாதை கலந்த வாஞ்சை மீறும் அன்பு. கிருஷ்ணனிடத்திலோ உரிமை மிகுந்த
காதல் ஊறும் அன்பு. ஏன் இப்படி என்று அடிக்கடி தோன்றும். சரி அதை விடுவோம்.
இராமாயணத்தில் அனுபவிக்க வேண்டிய காட்சிகள்
பலப்பல உண்டு. அதில் எனக்குப் பிடித்தவற்றில் ஒன்று, இராமன் சிவதனுசை அநாயாசமாக முறிக்கின்ற
காட்சி.
தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்
மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.
மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.
இராமன் தாடகையை வதைத்தான், மாரீசனை
விரட்டியடித்தான், விசுவாமித்திரரின் யாகத்தைக் காத்தான். எல்லாமே பெரிய்ய பெரிய்ய
சாதனைகள்தான் என்றாலும் சிவதனுசை அவன் கையாண்ட விதத்தில் ஏனோ ஒரு ஈர்ப்பு. இந்த விஷயத்தில்
காதல் கலந்திருப்பதாலோ? :)
பண்டிகை நாட்களிலோ அல்லது பார்ட்டி
நாட்களிலோ பெற்றோர்கள் இரவு நேரஞ்சென்று கண் விழித்துக் களித்திருப்பதைப் பார்த்தால்
குழந்தைகள் உறங்கச் செல்ல மாட்டார்கள். தூக்கம் கண்ணைச் சுற்றினாலும், சிவந்து விட்ட
கண்களைக் கஷ்டப்பட்டு விரித்து வைத்துக் கொண்டு, விழித்துக் கொண்டு இருப்பார்கள். தூங்கினால்
எதையோ இழந்து விடுவோமோ என்ற எண்ணம் தான் காரணம்.
அதைப் போலத்தான் கண்களை ஒரு நொடி இமைத்து
விட்டாலும் இராமன் என்ன செய்கிறான் என்பது தெரியாமல் போய்விடுமோ என்பதற்காக, விழிகளை
இமைக்காமல், வைத்த கண் வாங்காமல் இராமனையே பார்த்துக் கொண்டிருந்தார்களாம் சபையில்
இருந்தவர்கள். அப்படியும் அவன் சிவ தனுசை எடுத்ததையோ, திருவடியால் அந்த வில்லின் முனையை
மிதித்ததையோ, நாண் ஏற்றியதையோ, எதையுமே அவர்களால் பார்க்க முடியவில்லையாம். அந்த அளவு
வேகமாக, கண் இமைப்பதையும் தாண்டிய கடும் வேகத்தில் அவன் அத்தனையும் செய்து விட்டானாம்.
அதனால் வில்லை எடுத்ததைக் கண்டவர்கள், அதன் பிறகு நாண் ஏற்றப்பட்ட வில் முறிந்த சப்தத்தை
மட்டுமே கேட்டனர்!
அப்படியென்றால் வலிமை மிகுந்த அவன்
கரங்களுக்கும், திறன் மிகுந்த அவன் விரல்களுக்கும் இருந்த வேகம் எத்தகையதாக இருந்திருக்க
வேண்டும்! இந்தக் காலத்துத் திரைப்படங்களில் வேகமான செய்கைகளைக் காட்டுவதற்காக ஒன்றைக்
காட்டி, நடுவில் உள்ளதை வெட்டி, இறுதியை ஒட்டிக் காட்டுவார்களே… அப்படியென்றால் இராமனின்
உண்மை வேகமே எந்த அளவு இருந்திருக்க வேண்டும்! இராமனின் அழகின் சிறப்பைப் பற்றியும்,
குணங்களின் பெருமையைப் பற்றியும் கேட்கும் போது, அவன் மிக மிக மென்மையானவன் என்று தோன்றும்.
எனில், அவன் பலத்தையும், வலிமையையும், வேகத்தையும் பற்றிக் கேட்கும் போது அவன் எவ்வளவு
திண்மையானவன் என்றும் அறிய முடிகிறது. மென்மையும் திண்மையும் கலந்த அற்புதக் கலவைதான்
ஸ்ரீராமன்.
ஸ்ரீராம், ஜெய ராம், ஜெய ஜெய ராம்.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன்
கவிநயா
அன்புடன்
கவிநயா