Expatguru அவர்கள் போன பதிவிற்கு எழுதிய பின்னூட்டம் இது. அவருக்கு எழுதத் தொடங்கிய
பதில் ரொம்ப நீண்டு விட்டதால், இங்கே பதிவாகவே இடுகிறேன்…
//அருமையான கட்டுரை. நம் முன்
வினை தீய செயல்களால் தான் இப்போது துக்கத்தை அனுபவிக்கிறோம் என்றே வைத்துக்கொள்வோம்.
எல்லாமே இறைவன் செயல் என்றும் கூறுகிறோம். அப்போது முதலில் அந்த தீய செயல்களை இறைவன்
ஏன் செய்ய வைத்தான்? அது செய்ததனால் தானே இப்போது இப்படி அனுபவிக்கிறோம்.//
உங்கள் கேள்வி சிந்தனையைக் கிளறி
விட்டு விட்டது. இதே கேள்வி எனக்குள்ளும் எழுந்ததுண்டு. “நான் எப்போதோ செய்திருக்ககூடிய
தீவினைகளுக்கு அது என்னவென்றே கூடத் தெரியாத நிலையில், இப்போது தண்டனை அனுபவிப்பது
என்ன நியாயம்?” என்று தோன்றியிருக்கிறது. பதில் தெரியாவிட்டாலும், உங்கள் கேள்வியால்
ஏற்பட்ட எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்…
//எல்லாமே இறைவன் செயல் என்றும்
கூறுகிறோம். அப்போது முதலில் அந்த தீய செயல்களை இறைவன் ஏன் செய்ய வைத்தான்?//
ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமும் சிலர்
இதே கேள்வியைக் கேட்டார்கள். “அப்படியானால் நான் தீமை செய்தாலும் அதற்கு இறைவன் தானே
பொறுப்பு?”, என்று. அதற்கு அவருடைய பதில்:
“உண்மையாகவே உன்னுள் இறைவன் இருக்கும் பட்சத்தில் நீ தீயவற்றை நினைக்கக்கூடக்
கூசுவாய்”.
கள்ளங்கபடமற்ற தூய்மையான உள்ளத்தில்தான்
இறைவன் குடியிருப்பான் என்பது அவர் அடிக்கடி சொல்வது. அப்பேற்பட்ட இதயத்தில் மாசுகளுக்கு
இடமேது? தீய சிந்தனைகளுக்கு இடமேது? நம் உள்ளம் அப்படியில்லாத பட்சத்தில் நம் செயல்கள்
அனைத்திற்கும் இறைவன் மேல் பழி போடுவது நியாயமில்லாத செயல்.
மற்றவர்களுக்கு நேரடியாகத் துன்பம்
விளைவிப்பது மட்டுமே தீமை அல்ல. நம் மனதில் எழும் பொறாமை, வருத்தம், கோபம், இவை எல்லாமே
ஏதோ ஒரு விதத்தில் வேறு ஒருவருக்கோ, அல்லது நமக்கேயோ கூட எதிர்மறையாக அமைகின்றன. ஒவ்வொரு
எண்ணமும் நீரில் எறியப்பட்ட கல் போல பிரபஞ்ச வெளியில் எறியப்படுகிறது என்பார் சுவாமி சிவானந்தர். அதற்கென்று கண்டிப்பாக ஒரு விளைவு உண்டு. அதன் வீரியத்தைப் பொறுத்து
விளைவுகளும் இருக்கும்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து
அறன்
ஆகுல நீர பிற.
ஆகுல நீர பிற.
என்பது வள்ளுவப் பெருந்தகையின்
வாக்கு. மனத்தூய்மையுடன் இருப்பதன் பெயரே அறம், மற்றதெல்லாம் வெறும் ஆரவாரம், என்கிறார்
அவர்.
அதனால், ‘எல்லாமே இறைவன் செயல்’
என்பது சரிதான் என்றாலும், அது பளிங்கு போன்ற தூய உள்ளம் கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு
வரியில் சொன்னால் அகங்காரம் இல்லாத மனமே மாசில்லாத மனம் என்று சொல்லலாம். குழந்தைகளின் மனம் அப்படிப்பட்டது.
அது மட்டுமல்ல, இன்னொரு முக்கியமான
விஷயம் இருக்கிறது. இறைவன், தானே எல்லாமே செய்வதில்லை, அவன் மனிதர்களுக்கு ‘free
will’ என்று ஒன்றையும் கொடுத்திருக்கிறான் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அதன்படி, தான் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதைத் தானே தீர்மானிக்கும் உரிமை மனிதனுக்கு
இருக்கிறது. அதனால் நாம் செய்யும் செயல்களுக்கு நாமேதான் பொறுப்பு, நம்மைத் தீவினைகளைச்
செய்ய வைத்தவன் இறைவன் இல்லை என்றாகிறது.
இந்த உலகம் இயங்குவதே law of
karma வின் அடிப்படையில்தான். அறிவியலின் படியும், ஒரு வினைக்கு நிச்சயம் எதிர் வினை
என்றும் உண்டு என்பது உண்மைதானே?
‘நான்’ என்பது இருக்கும் வரை,
நம் செயல்களுக்கு நாமேதான் பொறுப்பு. அகங்காரத்தை அழிக்கும் வழியாகத்தான், கீதையில் கண்ணன், சரணாகதி பற்றியும்,
செயல்களின் பலன்களைத் தனக்கே அர்ப்பணித்து விடும்படியும் சொல்கிறான்.
இவற்றை வைத்துப் பார்த்தால் ஓரளவு
புரிகிறாற்போல் இருக்கிறது. மறுபிறப்பில் நம்பிக்கை இல்லாவிட்டால் கூட, ஒரு பிறப்பிற்கே
இந்த விதி பொருந்தித்தான் வருகிறது.
ஆக, நாம் புரிந்து கொள்ள வேண்டிய
முக்கியமான செய்தி என்ன?
துன்பங்களும், அனுபவங்களும் நம்மை
மேலும் மேலும் பண்படுத்தவே வருகின்றன. நம் இதயத்தைச் சுத்திகரித்து, மனிதப் பிறவியின்
பயனைப் பெற்றுத் தருவதே அவற்றின் நோக்கம். அதுவே இறைவனின் நோக்கம்.
நடப்பதெல்லாம் நமக்கு எதிராக
நடப்பது போலத் தோன்றும் சமயங்களிலும் அது நம்மை இந்தப் பயணத்திற்கு தயார்ப்படுத்தவே
என்பது பின்னால் புரியும். (“வரமா, சாபமா?”
என்ற இந்தப் பதிவையும் நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்). அதனால்தான் ‘நடப்பதெல்லாம்
நன்மைக்கே’ என்று சொல்லி வைத்தார்கள். யார் நன்மைக்கு? நம் நன்மைக்குத்தான்! எந்த ஒரு
அனுபவத்தை எடுத்துக் கொண்டாலும், அது நம்மை இறைவனை நோக்கி ஒரு சிறு அடியாவது நகர்த்துவதற்கே
என்பதே உண்மை.
(நல்லாக் குழப்பிட்டேனா? மன்னிச்சுக்கோங்க!)
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!
அன்புடன்
கவிநயா