Sunday, May 27, 2012

அருவி




உலகத்து மாந்தர்களின்
உள்ளத்து அன்பெல்லாம்
ஒன்றாகத் திரண்டு வந்து
அருவியெனப் பொழிந்ததுவோ!

அன்புக்கு அளவில்லை;
அருவிக்கோ அணையில்லை!

கட்டுப்பாடின்றித் துள்ளும்
காட்டாற்று வெள்ளம்போல்
அட்டகாசமாய்ச் சிரித்து
ஆர்ப்பாட்டமாய் விழுந்து
ஆசையுடன் புவி தழுவும்
அற்புதமும் இதுதானோ!

வைரக் கற்கள் தம்மை
வஞ்சனை யின்றிவாரி
வழியெங்கும் இறைத்ததுபோல்
துளித்துளியாய் துள்ளுகின்ற
நீர்த்துளியின் உயிரினுள்ளே
காதலுடன் கதிர்நிறைத்து
கண்மலரக் கதிரவன்தன்
ஒளிசிதறச் செய்தானோ!

பரவசமாய்ச் சரசமிடும்
பாதங்கள் பண்ணிசைக்க
நவரசங்கள் காட்டுகின்ற
நர்த்தனப் பெண்களைப் போல்
பல வண்ண ஆடைகட்டி
மனங் கவர ஒளிவீசி
ஆலோலப் பாட்டிசைத்து
ஆனந்த நடனமிட்டு
கற்பனைக்கும் எட்டாமல்
கருத்தினைக் கவர்ந்து கொள்ளும்
இயற்கைத் தேவதையின்
இன்னெழிலும் இதுதானோ!

--கவிநயா

பி.கு. : 2007-ல் 'அன்புடன்' குழுமத்தில் இருந்த போது படக் கவிதைப் போட்டிக்காக எழுதி, வாசித்து, பரிசும் பெற்ற கவிதை. மணி சார் என்பவர் என்னுடைய ஆடியோவை நயாகரா அருவி வீடியோவில் சேர்த்து உதவினார். என்ன பரிசுன்னு நினைவில்லை; ஆனா முதல் பரிசு இல்லை! படத்தில் இருப்பது நானும் இல்லை! :)

8 comments:

  1. குரலே சொல்லிடுச்சு நீங்க இல்லைனு! :P உங்களைச் சொல்லச் சொல்லி இருந்தால் தவிச்சுப்போயிருப்பாங்க நிகழ்ச்சி அமைப்பாளர்கள். :)))))

    ReplyDelete
  2. வாங்க கீதாம்மா! குரல் என்னுடையதுதான். மறுபடி படிச்சுப் பாருங்க! வீடியோவில் இருப்பதுதான் நான் இல்லைன்னு சொன்னேன். இன்னும் உங்களுக்கு என் குரல் தெரியலை என்பது கொஞ்சம் வருத்தம் :(

    ReplyDelete
  3. குரலே சொல்லிடுச்சு நீங்க இல்லைனு! :P //

    இந்த ஐகானைப் பார்க்கலையா? தடங்கலில்லாமல் யோசிக்காமல் பேசி இருக்கிறதால் வேணும்னு தான் சொன்னேன். மற்றபடி நீங்க தொலைபேசும்போது சப்தமே இல்லாமல் இருக்கிறதை வைச்சே நீங்கதான்னு கண்டு பிடிக்கிறேனே! :)))))))))))

    ReplyDelete
  4. ஓ. அப்படிச் சொன்னீங்களா? ஆனா நானு இவ்ளோ பேசும்போதே இப்படி ஓட்டறீங்க! பரவாயில்லை; அதிகம் பேசாம இருக்கிறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு :) இப்படியே இருந்திட்டுப் போறேன்...

    வீடியோ பார்த்து / கேட்டதுக்கு நன்றி அம்மா :)

    ReplyDelete
  5. உங்கள் வரிகளை உங்கள் குரலிலே கேட்கும் இனிய அனுபவத்தைத் தந்திருப்பதற்கு நன்றி கவிநயா.

    தொடருங்கள்!

    அதீதத்தின் வாழ்த்துகளுடன், 1 ஜூன் 2012 வலையோசை: http://www.atheetham.com/?p=860

    ReplyDelete
  6. அதீதத்தின் வலையோசையில் 'நினைவின் விளிம்பில்' இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  7. உங்கள் கவிதை அருமை.
    அதீதம் வலையோசையில் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. முதல் வருகைக்கும், கவிதையை ரசித்தமைக்கும், மிக்க நன்றி, சே.குமார்! உங்களை இங்கே அழைத்து வந்த அதீதத்திற்கும் மிகவும் நன்றி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)