நாம நினைக்கிறதையும் உணர்றதையும் சொல்றதுக்கு பேச்சு எவ்வளவு உதவியா இருக்கு! பேசறது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம், எப்ப பேசணும், எப்படி பேசணும், எந்த அளவு பேசணும், அப்படிங்கிறதும். மௌனத்தில் கூட எத்தனையோ விஷயங்களை தெரியப்படுத்தலாம். 'சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை'. இல்லையா? :)
அது சரி..., நாமே எப்பவும் பேசிக்கிட்டே இருந்தா, மற்றவங்க பேசறதை எப்பதான் கேட்கிறது? ஒரு புத்தகத்தில் படிச்சேன், ‘மற்றவங்க பேசறதை கவனிக்கிறவங்களை விட, அவர் எப்ப முடிப்பார், நாம எப்ப பேசலாம், அப்படின்னு காத்துக்கிட்டிருக்கவங்கதான் அதிகம்’, அப்படின்னு! ரொம்ப உண்மைன்னு தோணுச்சு. நீங்களும் அடுத்த முறை ‘கவனிச்சுப்’ பாருங்க :)
நாம பேசறது மற்றவங்க மனம் புண்படாதவாறு இருக்கணும். சில பேர் சாதாரணமா இருக்கும்போது பார்த்து, இனிமையாதான் பேசுவாங்க, ஆனா கோபம்னு வந்துட்டா கண்ணு மண்ணு தெரியாம வார்த்தைகளை அள்ளி வீசிடுவாங்க. கேட்கிறவங்க என்னை மாதிரி ஆள்னா பரவாயில்லை,
மறந்துடுவாங்க :) அப்படி இல்லைன்னா கஷ்டம்தான். அவங்களைப் பார்க்கிற போதெல்லாம் அந்த உறுத்தல் ரெண்டு பேருக்குமே இருக்கும்.
தீயினால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே நாவினால் சுட்ட வடு
அப்படின்னு வள்ளுவர் சொன்னதை நாம எல்லோருமே அனுபவத்தில் உணர்ந்திருப்போம்.
சில பேருக்கு அறிவுரைகளை அள்ளி விடறதுன்னா ரொம்பப் பிடிக்கும். உண்மையாகவே நல்லது நினைச்சு சொல்றது ஒரு ரகம்; எனக்கு எவ்வளவு தெரியுது பாரு, அப்படின்னு காட்டிக்கிறதுக்காக சொல்றது இன்னொரு ரகம். எப்படின்னாலும்,
அறிவுரை மட்டும் கேட்கப்பட்டால் மட்டுமே சொல்லணுமாம். நான் சொல்லலை, ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் சொல்றார்.
ஒரு பிரச்சனையைச் சொல்லி, ‘இதுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை’ அப்படின்னு நம்மகிட்ட ஒருத்தர் வந்து சொன்னா, நமக்குத் தெரிஞ்சதை அவரிடம் பகிர்ந்துக்கலாம், தப்பில்லை. அப்படி இல்லாம, அவர் அந்த பிரச்சனையில் இருக்கார் என்பது தெரியும் என்பதற்காக, நாமளா அதில் மூக்கை நுழைச்சு, ‘இப்படிச் செய், அப்படிச் செய்’னு சொல்றது, அறிவுரையா இருக்காது; அதிகப்பிரசங்கித்தனமா ஆயிடும். அதனால, நாம நம்மளோட எல்லை தெரிஞ்சு, அதுக்குத் தகுந்தாப்போல நடந்துக்கணும்.
பொதுவாகவே அநாவசியமான பேச்சுக்களை தவிர்க்கறது நல்லது. கவனிச்சுப் பார்த்தா தெரியும், மக்கள் சந்தோஷமா இருக்கும் போது அதிகம் பேசுவாங்க (எப்பவும் பேசறதை விட!). அப்படிப் பேசும் போது அந்த உற்சாகத்தில் வார்த்தைகளும் அதிகமாவே வந்து விழும், சில சமயம் அத்து மீறலோட, மற்றவங்க மனம் புண்படற அளவு கூட போயிடும். அதுக்கப்புறம் அதுக்காக வருத்தப்படணும். அதனால,
எப்பவுமே நாம எங்கே இருக்கோம், என்ன செய்யறோம், என்ன பேசறோம், அப்படிங்கிறதுல விழிப்புணர்வோட இருப்பது நல்லது. அப்படி இருந்தா நம்மை நாமே, குறிப்பா நம்ம நாக்கை, கட்டுப்பாட்டில் வைப்பது சுலபம்.
இன்னொரு முக்கியமான, நம்ம நாக்குக்கு பிடிச்ச சுவையான விஷயம் ஒண்ணு இருக்கு! ஆனா அது சாப்பாடு இல்லை! :)
என்னன்னு இந்நேரம் ஊகிச்சிருப்பீங்க – அதுதான் வம்பு பேசறது, அல்லது பொறணி பேசறது :)
அதென்னமோ தெரியலை, மற்றவங்களைப் பற்றி பேசறதில், குறிப்பா குறை சொல்றதில், நமக்கு அப்படி ஒரு ஆர்வம்! பல சமயத்தில் இதைப் பற்றி யோசிப்பேன், ஏன் அப்படி செய்யறோம்னு. ஒரு வேளை நாம ரொம்ப ஒழுங்கு, மற்றவங்க அப்படி இல்லைன்னு நமக்கு நாமே நிரூபிக்க நினைக்கிறோமோ? அல்லது நம்ம குறைகள் தெரிஞ்சு, அவையே நிறைகளா இருக்கறவங்களைப் பார்த்து பொறாமையில் பேசறோமோ? அல்லது வாழ்க்கையில் நம்மை விட அவங்க நல்லா இருக்காங்களேன்னு வயிற்றெரிச்சலில் பேசறோமோ? அல்லது நெஜமாவே பொழுது போகாம, வேற விஷயம் கிடைக்காம, மற்றவங்களைப் பற்றி பேசறோமோ?
எதுவா இருந்தாலும் சரி, அது நம்மை எதிர்மறையான (negative) உணர்வுகளுக்கு இழுத்துக்கிட்டு போறதால, அது நல்லது இல்லைன்னு எல்லா பெரியவங்களும் ஆணித்தரமா சொல்றாங்க.
நாம ஒருத்தரால துன்பப்படும்போது அதைப் பற்றி யாரிடமாவது பகிர்ந்துகிட்டுதான் ஆகணும். அதுக்கு பேரு வம்பு இல்லை. அதையும் இதையும் போட்டுக் குழப்பிக்க வேணாம். ஆனா, நமக்கு சம்பந்தமில்லாதவங்களைப் பத்தி, அவங்களால நமக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத போது, அவங்க செயல்களை விமர்சனம் பண்றதுதான் தப்பு; அதுதான் வம்பு. அதனால முடிஞ்ச வரைக்கும் பிறரைப் பற்றி பேசாமல் இருப்போம், அல்லது பேசினாலும் குறை சொல்லாமலாவது இருப்போம். கஷ்டம்தான்னாலும், முயற்சியாவது செய்யலாமே.
சுவாமி சிவானந்தர் சொல்லுவார், எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சமா பேசறமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது, அப்படின்னு. கொஞ்சமா பேசு, அதையும் இனிமையா பேசுன்னுவார்.
[Speak truth at all cost. Speak a little. Speak sweetly. Always utter encouraging words. Never condemn, criticize or discourage. Do not raise your voice and shout at little children or subordinates. - Swami Sivananda]
வள்ளுவப் பெருந்தகை சொன்னதை மறுபடியும் இங்கே ஒரு முறை நினைவு படுத்திக்கலாம் –
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
சுருக்கமா சொன்னா,
நல்லதே நினைக்கணும், நல்லதே பேசணும், நல்லதே செய்யணும்.
எல்லோரும் நல்லா இருக்கணும்!
அன்புடன்
கவிநயா
பி.கு. : நானு உங்களுக்கு அறிவுரை சொல்றேன்னு நினைச்சீங்களா? ஹி...ஹி... இல்லைங்க, எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்… :)
இதையும் படிங்க:
மூன்று வாசல்கள்