Wednesday, January 27, 2010

குமரன் என்பதவன் பேரு!

இந்த பாட்டு எழுதி ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும். 'முருகனருள்' பதிவில், பலரும் பாடி இடணும்கிற எண்ணத்தோட எழுதியது. என்ன காரணத்தாலோ அது நடக்கவே இல்லை. சொந்த வீட்டிலேயே இடணும்கிறது இறை விருப்பம் போல. இந்த தைப்பூசத்துக்கு இங்கேயே இட முடிந்ததில் மகிழ்ச்சியே.

குட்டி (முருகக்) குழந்தையின் பட்டுப் பாதங்கள் சரணம் சரணம்.

வெற்றி வேல் முருகனுக்கு... அரோகரா!



தோழி மீனாவின் குரலில்... கேட்டுக்கிட்டே படிங்க... நன்றி மீனா!

Murugan kavadi son...


குமரன் என்ப தவன் பேரு - குன்று
தோறும் அவனது ஊரு - தன்னை
மன்றாடிடும் அடியார்களைக் கண்போலவே காத்திடும் அவன்
இறைவன் எங்கள் தலைவன்

சூரனை வே லால் பிளந்தான் - கொண்டைச்
சேவற் கொடியோனாய்த் திகழ்ந்தான் - சக்தி
வேலன் சிவ பாலன் அவன் தேவர் துயர் தூசாக்கிட
உதித்தான் அவ தரித்தான்

மயில் மீதில் ஏறியே வருவான் - அவன்
துயர் களைக் களைந் தெறிந் தருள்வான் - ஆறு
முகங் கொண்ட முருகன் அவன் அழகன் என் மனங் குழைந்திட
வருவான் இன்பம் தருவான்

காவடி தூக்கியே ஆடு - அவன்
காலடி பணிந்து பாடு - நம்
பாவங் களைக் பொடியாக் கிடும் தூயன் அவன் திருவடி களை
நாடு தினம் நாடு

ஆறு படை வீடு பாரு - அது
ஆறு தலைத் தரும் கேளு - கந்தன்
சரவணபவ எனும் மந்திரம் வினைகள் களை திரு மந்திரம்
கூறு நாளும் கூறு

செந்தமிழ்க் காவலன் அவனே - நாமும்
சிந்தையில் கொள்ளுவோம் அவனை - சின்ன
முருகன் அவன் அழகன் அவன் குமரன் அவன் கந்தன் பதம்
பணிவோம் பணிந்து மகிழ்வோம்

--கவிநயா

படத்துக்கு நன்றி: கௌமாரம்.காம்

Wednesday, January 13, 2010

நன்றி... நன்றி...!


ஆடிதேடி வெதவெதச்சு
அருகிருந்து பாத்துக்கிட்டு
சோர்வில்லாம களையெடுத்து
சொந்தப்புள்ள போல்வளத்து
ஊருக்கெல்லாம் சோறுபோடும்
உழவருக்கு…

நாளொண்ணுந் தவறாம
ஓய்வொண்ணும் எடுக்காம
காலங்காலமா உதிச்சு
கெழக்குப்பக்கம் தெனம்முளைச்சு
ஒலகமெல்லாம் வாழவைக்கும்
கதிரவனுக்கு…

அம்மான்னு சொல்லும்ஆனா
அம்மாவா இருக்கும்பசு
ஏருபூட்டி உழணுமுன்னா
எருதுஉறு துணையாயிருக்கும்
பிரதிபலன் பாக்காம
பலவிதமா உதவிசெய்யும்
மாடுகளுக்கும்…

இன்னும் இயற்கை அனைத்துக்கும், அன்பே உருவான இறைவனுக்கும்,

மனமார நன்றி சொல்லி,

பொங்கல் திருநாளில் அனைவர் இல்லங்களிலும் இன்பமே தங்கவும் இதயங்கனிந்த வாழ்த்துகளையும் தெரிவிச்சுக்கறேன்!

அன்புடன்
கவிநயா

பி.கு.: சில நாட்களாகவே பதிவுலகில் உலவ சரியா நேரம் கிடைக்கிறதில்ல. படிக்க வேண்டிய பதிவுகள் நெறய்ய்ய்ய சேர்ந்து போச்சு. சீக்கிரம் இந்த நிலை மாறும்னு நம்பறேன். நான் வரல்லைன்ன்னாலும், அதுக்காக கோவிச்சுக்காம, இங்கே தொடர்ந்து வருகை தரும் அன்புள்ளங்களுக்கு மிகவும் நன்றி! நீங்கள்ளாம் பொங்கலைப் போலவே... ச்சோ ச்வீட்! :)

படத்துக்கு நன்றி: தினமலர்

Sunday, January 10, 2010

சொல்



வட்ட வட்டக் கண்ணுக்குள்ளே
வெள்ளம் போலத் தேங்கி நின்ன
உப்புக் கரிச்ச நீரு
ஒலகம் பூரா நனச்சிருக்க—

பொந்துக்குள்ள பொத்தி வச்ச
அக்கினிக் குஞ்சப் போல
வயித்துக்குள்ள ஒரு நெருப்பு
வளர்ந்து என்ன எரிச்சிருக்க—

முறுக்கிப் புழிஞ்சு வச்ச
துணியப் போல எம்மனசு
தாளாத தொயரத்துல
தொவண்டு சலிச்சிருக்க—

வாளெடுத்து வீசுனாலும்
வாளா இருந்திருக்கும்
சொல்லெடுத்து வீசுறத
தாங்கலயே பூ மனசு.


-- கவிநயா

படத்துக்கு நன்றி: http://flickr.com/photos/my-cutout/475945861/sizes/m/

Sunday, January 3, 2010

புன்னகையின் பொருள்



நீங்க கடவுளை திட்டறதுண்டா?

நான் நிறையவே திட்டுவேன். “இத்தனை துயரத்தையும் வேதனைகளையும் குடுத்திட்டு, நீ மட்டும் ஒண்ணும் தெரியாத மாதிரி எல்லாத்தையும் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு, எப்பப் பாத்தாலும் சிரிச்சிக்கிட்டே வேற இருக்கியே. உனக்கே நியாயமா இருக்கா?” அப்படின்னு. எதிர்பாரா விதமா இந்தக் கேள்விக்கு விடை மாதிரி சமீபத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது.

குழந்தை முதல் முதலா நடக்க முயற்சி செய்யும் போது, நாம அதோட ரெண்டு கையையும் பிடிச்சுக்கிட்டு மெதுவா நடத்தி கூட்டிட்டுப் போவோம். திடீர்னு ஒரு நொடி கையை விட்டுருவோம். குழந்தை பயந்துக்கும். நாம அதைப் பார்த்து சிரிப்போம். அதுக்காக, நாம குழந்தை பயப்படறதைப் பார்த்து சிரிச்சு ஆனந்தப் படறோம்னு பொருள் இல்லை. அந்த நொடி நேரம் பிடியை விட்டாலும், குழந்தை விழற மாதிரி இருந்தா நாம உடனே பிடிச்சுக்குவோம்னு நமக்கே தெரியும். குழந்தை தானா எவ்வளவு தூரம் சமாளிக்குதுன்னு தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் வேடிக்கையா அப்படி செய்து பார்க்கிறோம்.

அதே போலத்தான் அன்னை பராசக்தியும். நம்மோடு எப்பவும் விளையாடிக்கிட்டே இருக்கா. நம்மை எத்தனையோ துன்பத்திலும் இன்பத்திலும் உழல விட்டாலும், நம்மை இறுதியில் தாங்கிக் கொள்ளப் போகிறவள் அவள்தான்னு அவளுக்கே தெரியும். அதனாலதான் சிரிச்சிக்கிட்டே தன் குழந்தைகளை, நம்மை, அவ பார்த்துக்கிட்டிருக்கா. நாமதான் அவ தாங்கிப்பான்னு தெரியாமலோ, அல்லது நம்பாமலோ, பல சமயங்களில் தடுமார்றோம்.

திரு. ரா. கணபதி அவர்களின் ‘நவராத்திரி நாயகி’ என்ற புத்தகத்தின் முகவுரையில் அவர் சொல்லுகின்ற உவமைதான் இது. நல்லாருக்குல்ல?

என் புரிதலில், சொந்த வார்த்தைகளில் தந்திருப்பதால், செய்தியில் ஏதேனும் குற்றமிருந்தால் அது என்னுடையதே.


அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://babyanimalz.com/community/sites/default/files/images/PolarBears_02a-Mom_N_Baby-S.jpg