Sunday, June 21, 2009

உயிர்த்தோழிக்கு...சொந்தமில்லை என்பதனால் சோதரியாய் ஆனாயோ
பந்தமில்லை என்பதனால் பாசமழை பொழிந்தாயோ
ஆரிரரோ பாடாமல் அன்னையென ஆனாயோ
காரிருளில் கைவிளக்காய் காரிகையே வந்தாயோ

ஆதாயம் தேடாத அன்புண்டோ என்றிருக்க
ஆகாயம் போல்விரிந்த அன்பையே நீதந்தாய்
சேதாரம் இல்லாத உறவுண்டோ என்றிருக்க
ஆதாரம் நீயாகி அச்சாணியாய் அமைந்தாய்

குற்றமெதும் காணாத சுற்றமென வந்தவளே
உற்றவளாய் உரியவளாய் உடனென்றும் இருப்பவளே
விட்டகுறை தொட்டகுறை தீர்க்கவென வந்தாயோ
சுட்டசங்கைப் போலவெள்ளை நட்பதனைத் தந்தாயோ

அன்புக்கும் நட்புக்கும் அடைக்குந்தாழ் ஏதுமுண்டோ
காற்றுக்கும் கடலுக்கும் வேலிகட்டி மாள்வதுண்டோ
அள்ளிஅள்ளி அனைத்தும்நீ அளக்காமல் தந்துவிட்டாய்
கிள்ளித் தரக்கூட ஏதுமில்லை என்னிடத்தில் -

உள்ளத்தின் உள்ளிருந்து
துள்ளித் தெறித்து வந்த
இந்த கவிதைத் துளியைத் தவிர...--கவிநயா

உலகத்தில் உள்ள அனைத்து உய(யி)ர் நட்பிற்கும், நண்பர்களுக்கும் இந்தக் கவிதை சமர்ப்பணம்.

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/30006798@N05/3642105216/sizes/l/in/pool-33853651896@N01/

16 comments:

 1. என்ன சொல்லவென்று தெரியவில்லை.

  அப்படியே எல்லோரையும் இதைத் திருப்பிப் பாட வைக்கும்.

  ஒவ்வொரு வரியிலும் நட்பு உயிர் வாழ்கிறது.

  இந்த அற்புதமான கவிதைக்கு நன்றி கவிநயா!

  ReplyDelete
 2. // ஆதாயம் தேடாத அன்புண்டோ என்றிருக்க
  ஆகாயம் போல்விரிந்த அன்பையே நீதந்தாய் //

  மனித வாழ்க்கையின் யதார்தத்தை, உண்மை நிலையினை நன்கே பிரதிபலித்து
  காட்டியிருக்கிறீர்கள். அதே சமயம் மனித நேயத்தின் எல்லை ஆகாயம்போல்
  பரவியிருக்கும் தன்மையையும் புலப்படுத்தி உள்ளீர்கள்.
  மிகவும் சிறப்பான கவிதை. நவ ரசங்களில் கருணை ரசம் மனதை உருக்கிவிடும்.
  அச்சுவையில் பாடியது மனதை விட்டு அகலாது நிற்கும்.

  கருணா ஜலதே தாசரதே என்ற தியாகராஜாவின் பாட்டைக் கேட்டிருப்பீர்களென‌
  நினைக்கிறேன். கருணை ரசத்தில் சொட்டச் சொட்ட நனைந்த அக்கீர்த்தனை
  நாத நாம கிரியா என்னும் ராகத்தில் பாடப்பெறுகிறது.

  அதே ராகத்தில் என்னால் இயன்ற வரை பாட முயற்சித்திருக்கிறேன்.

  வருக். களிக்க.
  http://menakasury.blogspot.com
  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 3. /ஆதாயம் தேடாத அன்புண்டோ என்றிருக்க
  ஆகாயம் போல்விரிந்த அன்பையே நீதந்தாய்
  சேதாரம் இல்லாத உறவுண்டோ என்றிருக்க
  ஆதாரம் நீயாகி அச்சாணியாய் அமைந்தாய்/

  வார்த்தையில்
  வண்ணக்கோலமிட்டுள்ளீர்கள்
  வாழ்த்துகள்

  /உள்ளத்தின் உள்ளிருந்து
  துள்ளித் தெறித்து வந்த
  இந்த கவிதைத் துளியைத் தவிர... /

  உண்மை தான்

  அன்புடன்
  திகழ்

  ReplyDelete
 4. ஆகா...!!

  அருமையாக இருக்கு...நானும் சேர்த்து அனைத்து நட்புகளுக்கும் வாழ்த்து சொல்லிக்கிறேன் ;)

  ReplyDelete
 5. நன்றி சகோதரி !
  (இந்த அன்புக்கு நன்றி மட்டும் சொல்லித் தப்பித்துக் கொள்தல் தகுமா என உள்ளம் கேட்கிறது :( )

  ReplyDelete
 6. //சோதரியாய்// அப்படீன்னா என்னங்க?

  ReplyDelete
 7. வாங்க ராமலக்ஷ்மி. எனக்கே பிடித்த கவிதை. உங்களுக்கும் அவ்வளவு பிடிச்சிருக்குன்னு தெரியுது. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)

  ReplyDelete
 8. வாங்க சுப்பு தாத்தா. நீங்க தேர்ந்தெடுத்த ராகம் மிகப் பொருத்தம்; மிக இனிமை. அனுபவித்து பாடியிருக்கிறீர்கள். அருமையாக இருந்தது தாத்தா. மிக்க நன்றி.

  ReplyDelete
 9. வாங்க திகழ்மிளிர். வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 10. வாங்க கோபி.

  //அருமையாக இருக்கு...நானும் சேர்த்து அனைத்து நட்புகளுக்கும் வாழ்த்து சொல்லிக்கிறேன் ;)//

  மிக்க நன்றி கோபி :)

  ReplyDelete
 11. வருக ரிஷு.

  வருகைக்கும் நன்றிக்கும் நன்றி :)

  ReplyDelete
 12. நல்வரவு 'குறை ஒன்றும் இல்லை'.

  ////சோதரியாய்// அப்படீன்னா என்னங்க?//

  அப்படின்னா சகோதரி என்று பொருள்.

  முதல் வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 13. கவிநயா ....வாழ்க உங்கள் கவிநயம் !

  ReplyDelete
 14. நல்வரவு மயாதி.

  //கவிநயா ....வாழ்க உங்கள் கவிநயம் !//

  ஆகா, மிக்க நன்றி! :)

  ReplyDelete
 15. சோதரி என்று ஒரு தமிழ் சொல்லா? மிக்க நன்றி சோதரி உங்கள் தகவலுக்கு..

  ReplyDelete
 16. //குறை ஒன்றும் இல்லை !!! said...

  சோதரி என்று ஒரு தமிழ் சொல்லா? மிக்க நன்றி சோதரி உங்கள் தகவலுக்கு..//

  மீள் வருகைக்கு உங்களுக்கும் நன்றி :)

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)