உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Sunday, June 28, 2009
காத்திருப்பேன்...
அன்றொரு நாள் அழுதிருந்தேன்
ஆதுரமாய் அன்பு செய்தாய்
உயிர் கொண்ட தேவதையாய்
உவந்தென்னை மகிழ வைத்தாய்
கைகால்கள் முளைத்தெழுந்த
கனவாக நீ வந்தாய்
கவிதைக்குள் கருவானாய்
நிஜத்தினிலே உருவானாய்
துயர்துடைத்து முடித்த பின்னே
தொலைவினிலே மறைந்து விட்டாய்
உன் கடமை முடிந்தது போல்
உதறி விட்டுச் சென்று விட்டாய்
வந்திடுவாய் நீ என்றே
வாசல் பார்த் திருக்கின்றேன்
உன்னோடு சேர்ந்திடவே
உயிர் சேர்த்து வைக்கின்றேன்...
--கவிநயா
('அன்புடன்' குழுமத்தில் நிறைய எழுதிக் கொண்டிருந்த போது படத்திற்கென எழுதிய கவிதை)
சுப்பு தாத்தாவின் குரலில், இசையமைப்பில்... (நன்றி தாத்தா!)
Wednesday, June 24, 2009
யாருக்குத் தெரியும்?
அம்மா மூன்று நாளாக வீட்டு வேலைக்கு போகவில்லை. காய்ச்சல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. மருந்து வாங்க காசில்லை. எப்போதடா பள்ளி நேரம் முடியும், யாரைக் கேட்கலாம் என்றே யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அதே யோசனையுடன் வீட்டுப் பாடத்தை கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்த கனகா டீச்சரைப் பார்த்தவனுக்கு, சட்டென்று பொறி தட்டினாற் போல் இருந்தது. அவரையே கேட்டால் என்ன? கனகா டீச்சர் அன்பானவர். நிச்சயம் உதவுவார் என்று தோன்றியது.
மணி அடித்து விட்டது. கண் மூடித் திறப்பதற்குள் மந்திரம் போட்டாற் போல் வகுப்பறை காலியாகி விட்டது. டீச்சர் போய் விடுவதற்குள் அவரிடம் கேட்க வேண்டுமே… வேகமாக அவனும் வகுப்பை விட்டு வெளியே வரும்போதுதான் அதைக் கவனித்தான்.
அது ஒரு நூறு ரூபாய் நோட்டு. மேசைக்கு பக்கத்தில் கீழே கிடந்தது. வீட்டுக்குப் போகும் அவசரத்தில் யாருமே கவனிக்கவில்லை போலும். யாருடையதாய் இருக்கும்? சரி, அதுதான் டீச்சரைப் பார்க்க போகிறோமே, அவங்ககிட்டயே குடுத்துடலாம், என்று எண்ணமிட்டபடி அதை எடுத்துக் கொண்டான்.
கனகா டீச்சர், ஆசிரியைகள் அறையில் வீட்டுக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்.
“உள்ளே வரலாமா டீச்சர்”, பணிவாகக் கேட்டபடி, அவர் தலையசைத்ததும் உள்ளே நுழைந்தான், ராமு.
“என்னப்பா ராமு? என்ன விஷயம்? ஏதாச்சும் சந்தேகமா?”
“இல்ல டீச்சர்… இந்த நூறு ரூபாய் நம்ம வகுப்பறையில் கிடந்தது. யாருதுன்னு தெரியல. இதை உங்ககிட்ட குடுத்துட்டு, அப்படியே இன்னொரு உதவியும் கேட்கலாம்னு வந்தேன்”.
“அப்படியா?” என்றபடி, தன்னுடைய பர்ஸை திறந்து பார்த்தவர், “அடடா, என்னுடையதுதாம்ப்பா. சரியா மூடாம வச்சிருந்ததால கீழ விழுந்திருச்சு போல. நேர்மையாக கொண்டு வந்து கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி உனக்கு”, என்றார்.
“அது சரி… ஏதோ உதவின்னியே, என்ன விஷயம்?”
“டீச்சர்… என் அம்மாவுக்கு மூணு நாளா உடம்பு சரியில்லை. மருந்து வாங்கணும். கொஞ்சம் பணம் வேணும் டீச்சர். கடனா குடுத்தா போதும்…”, கெஞ்சும் குரலில் தயங்கி தயங்கிக் கேட்டான்.
நூறு ரூபாயை கொண்டு வந்து கொடுத்து விட்டு பிறகு கடன் கேட்கும், தந்தை இல்லாத அந்த பத்து வயதுச் சிறுவனைப் பார்க்க டீச்சருக்கு கொஞ்சம் ஆச்சர்யமாகத் தான் இருந்தது.
“அதனால என்னப்பா. இதோ இதை வச்சுக்கோ…” என்று அவன் கையில் கொஞ்சம் பணத்தை வைத்தார்.
“வேற ஏதாச்சும் வேணும்னாலும் தயங்காம கேளு”
“ரொம்ப நன்றி டீச்சர். கட்டாயம் திருப்பி தந்திடுவேன். போயிட்டு வரேன் டீச்சர்”, என்று முகம் மலர கிளம்பிய ராமுவைத் தடுத்தது டீச்சரின் குரல்.
“ஒரு நிமிஷம் ராமு…”
நின்று திரும்பினான். “டீச்சர்?”
“உனக்கு இவ்வளவு அவசரமா பணம் தேவையாய் இருந்திருக்கு. அப்படின்னா நீயே அந்த நூறு ரூபாயை எடுத்துக்கிட்டு போயிருக்கலாமே? ஏன் என்கிட்ட கொண்டு வந்து குடுத்தே? நீதான் எடுத்தேன்னு யாருக்கு தெரிய போகுது?”
சற்றும் தயங்காமல் பதில் வந்தது, “எனக்கு தெரியுமே, டீச்சர்!”
--கவிநயா
Sunday, June 21, 2009
உயிர்த்தோழிக்கு...
சொந்தமில்லை என்பதனால் சோதரியாய் ஆனாயோ
பந்தமில்லை என்பதனால் பாசமழை பொழிந்தாயோ
ஆரிரரோ பாடாமல் அன்னையென ஆனாயோ
காரிருளில் கைவிளக்காய் காரிகையே வந்தாயோ
ஆதாயம் தேடாத அன்புண்டோ என்றிருக்க
ஆகாயம் போல்விரிந்த அன்பையே நீதந்தாய்
சேதாரம் இல்லாத உறவுண்டோ என்றிருக்க
ஆதாரம் நீயாகி அச்சாணியாய் அமைந்தாய்
குற்றமெதும் காணாத சுற்றமென வந்தவளே
உற்றவளாய் உரியவளாய் உடனென்றும் இருப்பவளே
விட்டகுறை தொட்டகுறை தீர்க்கவென வந்தாயோ
சுட்டசங்கைப் போலவெள்ளை நட்பதனைத் தந்தாயோ
அன்புக்கும் நட்புக்கும் அடைக்குந்தாழ் ஏதுமுண்டோ
காற்றுக்கும் கடலுக்கும் வேலிகட்டி மாள்வதுண்டோ
அள்ளிஅள்ளி அனைத்தும்நீ அளக்காமல் தந்துவிட்டாய்
கிள்ளித் தரக்கூட ஏதுமில்லை என்னிடத்தில் -
உள்ளத்தின் உள்ளிருந்து
துள்ளித் தெறித்து வந்த
இந்த கவிதைத் துளியைத் தவிர...
--கவிநயா
உலகத்தில் உள்ள அனைத்து உய(யி)ர் நட்பிற்கும், நண்பர்களுக்கும் இந்தக் கவிதை சமர்ப்பணம்.
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/30006798@N05/3642105216/sizes/l/in/pool-33853651896@N01/
Thursday, June 18, 2009
கேள்விக்கென்ன பதில்?
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
தானா வரலைங்க. நானே வச்சுக்கிட்டேன்! ரொம்பவே பிடிக்கும் :) சில வருஷங்களுக்கு முன்னால், தொடர்ந்து எழுதலாம்கிற எண்ணம் ஏற்பட்ட போது புனை பெயர் வேணும்னு தோணிச்சு. அதற்காக எனக்கு பிடித்த கவிதையையும், அபிநயத்தையும் சேர்த்து நானே (முதன்முதலா) உருவாக்கினது. (காப்பிரைட் வாங்கியிருக்கணுமோ? :)
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
ஏற்கனவே உடல் நலம் குன்றிய அம்மாவுக்கு மேலும் சில பிரச்சனைகள் இருக்குன்னு கண்டுபிடிச்சிருப்பதை அறிந்த போது.
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
இன்னும் கொஞ்சம் அழகா இருக்கலாம் என்கிற எண்ணம் ஏற்படுவதுண்டு. ஆனா எல்லாருக்கும் புரியறாப்லதான் இருக்கும்.
4. பிடித்த மதிய உணவு என்ன?
ரசஞ்சோறு, உருளைக்கிழங்கு கறி :) அம்மா வைக்கும் அவல் பாயசம் ரொம்பப் பிடிக்கும்.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
புன்னகையும் அன்பும் எப்பவும் எல்லோருக்கும் உண்டு. ஆழ்ந்த நட்பிற்கு நாளாகும்.
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் குளிச்சிருக்கேன். அருவில குளிச்சதே இல்ல :( அட, நெசமாதாங்க! பம்பு செட்டு குளியல் ரொம்ப பிடிக்கும். அதான் இதுவரை எனக்கு கிடைச்ச அருவி!
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகமும் கண்ணும்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது - பெரிசா எந்தவிதமான ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இருக்கறது.
பிடிக்காதது - சின்ன விஷயத்துக்கும் துவண்டு போயிடறது.
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
சாய்ஸ்ல விட்டாச்!
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் பெற்றோர் பக்கத்தில்.
11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
பழுப்பு வண்ண சூரிதார்.
12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கடிகாரச் சத்தம் கேட்டுக்கிட்டு பதி(ல்)வு எழுதிக்கிட்டிருக்கேன்.
13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம்.
14. பிடித்த மணம்?
காட்டுமல்லி வாசம்.
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
சுப்பு தாத்தா - இவருக்கு தெரியாத விஷயமே இல்லை. ஆனால் என்னை மாதிரி ஒண்ணும் தெரியாதவங்ககிட்டயும் அன்பா இருப்பார். நான் எழுதற எல்லா கவிதைகளுக்கும் தவறாமல் இசை அமைச்சிடுவார்!
சதங்கா - யூத் விகடனை சிறுகதை எழுத குத்தகைக்கு எடுத்திருக்கார். கவிதை எழுதுவார், படம் வரைவார், சமையல் பண்ணுவார்... வேறென்னங்க பண்ணுவீங்க? எங்க ஊர்ல இருந்துகிட்டே முகம் காட்டாம பேர் சொல்லாம ரொம்ப நாள் ஏச்சுக்கிட்டிருந்தார். யூத் விகடன் வந்ததும் இவர் முகமுடி கிழிஞ்சதில் (என் யூகம் சரியானதில்) எனக்கு ரொம்ப குஷி! :)
திகழ்மிளிர் - இவரோட அழகான பெயரும் தமிழில் இவருக்குள்ள ஆர்வமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதோடு தவறாமல் இங்கே பின்னூட்டறதையும் சேர்த்துக்கலாம் :)
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
கபீரன்பன் அவர்கள் - இவருடைய கபீரின் கனிமொழிகள் வலைப்பூ மிகவும் பிடித்தது. இவருடைய பிற வலைப்பூக்களுக்கும் அவ்வப்போது போவேன். அருமையாக படங்களும் வரைவார் என்பது தெரியும்.
குமரன் - வலை உலகிற்கு வந்த போது இவர் பதிவுகளைத்தான் முதன் முதலில் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். இவருடைய அபிராமி அந்தாதி வலைப்பூவும், கோதைத் தமிழும், மிக மிக பிடித்தது.
17. பிடித்த விளையாட்டு?
கேரம், ஷட்டில், விளையாட. பார்க்க கூடைப்பந்து, டென்னிஸ்.
18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம். கணினிக்கும், படிக்கவும்.
19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் மாதிரியான சில அந்தக் கால படங்கள் பிடிக்கும். இப்பல்லாம் திரைப்படம் பார்க்க அவ்ளோ பிடிக்கிறதில்லை.
20. கடைசியாகப் பார்த்த படம்?
தசாவதாரம்னு நினைக்கிறேன்.
21. பிடித்த பருவ காலம் எது?
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொண்ணு பிடிக்கும். பனிக்காலத்திலும் பனிப்பூ பிடிக்கும்; குளிர் மட்டும் பிடிக்கவே பிடிக்காது.
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஸ்ரீ சாரதாதேவி பற்றின "அம்மா" என்ற புத்தகம். திரு.ரா.கணபதி எழுதியது.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மாத்தறதில்லை.
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது - குழந்தையின் கலகல சிரிப்பு சத்தம், கொலுசு சத்தம், பறவைகள் சத்தம்.
பிடிக்காதது - மும்முரமா எழுதும் போதோ வேலை செய்யும் போதோ தொந்தரவு செய்யற எந்த சத்தமும்.
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இப்போ இருக்கிறதுதான்.
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தெரியல. என்னை தெரிஞ்சவங்கதான் சொல்லணும்.
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அப்படி எதுவும் சட்டுன்னு தோணலை. (எனக்கு சகிப்புத் தன்மை கொஞ்சம் அதிகம் :)
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
தாழ்வு மனப்பான்மை. அதனால பல சமயங்களில் நினைச்சதை பளிச்சுன்னு சொல்ல ஏற்படும் தயக்கம்.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கடலும் அருவியும் ஆறும் ஏரியும் இருக்கிற இடங்கள்.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
குழந்தை மனசுடன், பகைவனுக்கும் அருளும் அன்புடன்.
31. கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
பதிவுகள் எழுதுவதும் படிப்பதும். (நன்றி: குமரன் :)
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ். வாழ விடு.
Sunday, June 14, 2009
மனசும் மாங்கல்யமும்
அவன் தந்தை மாணிக்கம் சமீபத்தில் வேலையில் இருக்கும் போதே இறந்ததால், அவருடைய பாங்கிலேயே அவனுக்கும் ஏதாவது வேலை போட்டுத் தருவதாகத் தான் சொல்லி இருக்கிறார்கள்; ஆனால் இஞ்சினியரிங் படித்தவனுக்கு பாங்கில் என்ன வேலை இருக்கும் ? காய்கறிகள் ஒன்றும் திருப்தியாக இல்லை. இன்றைக்கு முள்ளங்கி சாம்பாரும், உருளைக் கிழங்கு கறியும்தான். அரிவாள் மணையையும், காய்களையும் எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள். இந்த கீரைக்காரி பொன்னம்மாவை இப்போதெல்லாம் காணவே இல்லையே ?
காலையில் சூரியன் உதிக்கிறானோ இல்லையோ, பொன்னம்மா வந்து விடுவாள். அத்தனை அதிகாலையிலேயே, பைசா அகலக் குங்குமமும், துவைத்துக் கட்டிய கைத்தறிச் சேலையுமாகப் 'பளிச் 'சென்று இருப்பாள். எண்ணெய் தடவி சீவி முடித்த கூந்தலில், துணுக்குப் பூவாவது செருகி இருப்பாள்.
'காலங் காத்தால வீடுங்களுக்குப் போறேன்; தூங்கி எந்திரிச்ச மொகத்தோட அழுது வடிஞ்சுகிட்டுப் போனா யாரும்மா எங்கிட்ட கீரை வாங்குவாக ? ' என்பாள்.
அவளுக்கு வாய்த்த புருஷனுக்குக் குடிப் பழக்கம் இருப்பது அரசல் புரசலாக சிவகாமிக்குத் தெரியும். ஆனால் அவனைப் பற்றி ஒரு வார்த்தையும் தவறாகச் சொன்னதில்லை, பொன்னம்மா. எப்போதாவது ஒரு முறை, 'என்னமோ அது ஒண்ணு உசிரோட இருக்கதுனாலதான என்னால இந்த அளவுக்கானும் பூவோடயும், பொட்டோடயும், கவுரதையாப் பொழக்க முடியுது ', என்று முணுமுணுத்துக் கொள்வாள். அப்போதெல்லாம் அவள் தனக்குத்தானே எதற்கோ சமாதானம் சொல்லிக் கொள்வது போல் தோன்றும், சிவகாமிக்கு.
ஒரு முறை காலையில் கீரை விற்கப் போகையில், அவள் கழுத்தில் கிடந்த தாலியை எவனோ அறுத்துக் கொண்டு ஓடி விட்டான். தங்கம் போனதை விட, வெள்ளிக் கிழமையும் அதுவுமாக தாலி போய்விட்டதே என்பதுதான் பெருங் கவலையாயிருந்தது, பொன்னம்மாவிற்கு. கைக்கு மீறி செலவு செய்து ஏதேதோ பரிகாரங்கள் எல்லாம் செய்தாள்.
'அம்மா, உங் கையால போணி பண்ணுனா கீரையெல்லாம் மளமளன்னு வித்துப் போவுது. ஒரு கட்டானும் வாங்கிக்கம்மா ', என்று வற்புறுத்தி தினமும் கையில் திணித்து விட்டுப் போவாள். மாணிக்கத்துக்கும் கீரை என்றால் மிகவும் பிரியம். அதனால் தினமும் பொன்னம்மா உபயத்தில் ஏதாவது ஒரு கீரை, ஏதாவது ஒரு ரூபத்தில் மெனுவில் இருக்கும். இப்போது அவர் இறந்த பின் இரண்டு மாதங்களாகப் பொன்னம்மாவும் வருவதில்லை. கணவர் இறந்தவுடன் கை ராசியும் அவருடனேயே போய் விட்டது போலும்.
நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது. மாரடைப்பு. ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஆபீஸிலேயே அவசரமாக உயிர் பிரிந்து விட்டது. இப்போதெல்லாம் சில இறப்புகள்தான் எவ்வளவு சுலபமாக முடிந்து விடுகின்றன! ஆனால் இழப்புகள் என்னவோ அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை. சொல்லாமல் விருந்து வந்தாலே நம்மால் சமாளிக்க முடிவதில்லை; சொல்லாமல் சாவு வந்தால் ? 'குபுக் 'கென்று கண்ணீர் புதிதாகப் பிரவாகமெடுத்தது, சிவகாமிக்கு. கண்ணன் கடைசி செமஸ்டரும், அபி முதல் செமஸ்டரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டதால் ஓரளவு சமாளிக்க முடிகிறது. கண்ணீர் அது பாட்டிற்கு வழிய, கை இயந்திரமாக சமையலைக் கவனித்தது.
வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. பிள்ளைகள் வந்து விட்டார்கள். மாணிக்கத்தின் ஸ்கூட்டரை இப்போதெல்லாம் கண்ணன்தான் உபயோகப் படுத்துகிறான். காம்பஸ் இண்டர்வ்யூவில் செலக்ட் ஆகி விட்டானாம்; கண்ணனின் முகம் முழுக்கப் பூவாக மலர்ந்து கிடந்தது. இனி அபியின் படிப்பைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அன்று இரவு படுக்கச் செல்கையில் சற்றே அமைதியாய் இருந்தது, மனசு.
மறு நாள் காலை. வாசலில் கோலமிடுகையில், 'அம்மா, அம்மா ', என்று குரல் கேட்டது. 'பொன்னம்மா குரல் மாதிரி இருக்கிறதே ', என்று திரும்பினாள்.
'ஏம்மா, எப்பிடி இருக்கிற ? ' வாஞ்சையுடன் விசாரித்தபடி பொன்னம்மா கூடையை இறக்கி வைத்தாள்.
'வா, பொன்னம்மா. என்ன இத்தன நாளா ஆளக் காணும் ? நேத்துக் கூட ஒன்னப் பத்தி நெனப்பு வந்துச்சு, இப்பல்லாம் போணி பண்ண வரக் காணுமேன்னு. ஒரு வேள அய்யா போய்ட்டதுனால... ' என்று அவள் முடிக்கும் முன்,
'அய்யய்ய, என்னம்மா நீ ? என்னென்னமோ பேசிக்கினு போறே ? இத்தனி நாளும் உங்க வீட்டுக்கு ஆளும் பேரும் வரப் போவ இருந்தாங்க; நீயும் இப்பேர்ப்பட்ட துக்கத்துல இருக்கப்ப உம் மூஞ்சியப் பாக்கவே எனக்கும் தாங்காது. அதான் இத்தினி நா கழிச்சு வாரேன். ஒண்ணு தெரிஞ்சுக்கம்மா. நான் உங்கிட்ட போணி பண்றது உன் நல்ல மனசுக்காகத்தானே தவிர வேற எதுக்கும் இல்லம்மா. அதே மனசுதான ஒங்கிட்ட இப்பவும் இருக்கு ? அய்யாவோட அதும் போயிடுச்சா என்ன ? ' படபடவென்று பொரிந்து கொட்டினாள், பொன்னம்மா.
சிவகாமிக்கு ஒரு நிமிடம் பேச்சின்றி வாய் அடைத்துப் போனாலும், புன்னகை வந்து அதன் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.
--கவிநயா
(2004-ல் திண்ணையில் எழுதியது)
Sunday, June 7, 2009
பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது!
பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது
பாப்பா நெஞ்சை மயக்குது மயக்குது
வண்ணம் காட்டிச் சிரிக்குது சிரிக்குது
வாவா என்றே அழைக்குது அழைக்குது!
ஊரைச் சுற்றித் திரியுது திரியுது
உணவைத் தேடி அலையுது அலையுது
மலரைக் கண்டால் மயங்குது மயங்குது
மதுவைக் குடித்து கிறங்குது கிறங்குது!
இறக்கை யெல்லாம் ஜொலிக்குது ஜொலிக்குது
இயற்கை அன்னையின் கைவண்ணம் கலக்குது
தொட்டுப் பார்க்க ஆசை பிறக்குது
கிட்டப் போனால் 'சட்'டுன்னு பறக்குது!
கூட்டுப் புழுவாய் பலநாள் இருந்தது
சிறகை விரித்து ஒருநாள் பறந்தது
நாமும் நினைத்தால் சிகரம் தொடலாம்
நாளை உலகை இன்றே தரலாம்!!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/bestrated1/52666376/sizes/m/