Monday, May 12, 2008

இன்னா செய்தாரை...

இரண்டு நாளாக வீட்டில் அடைந்து கிடக்கும் கணவனைப் பார்த்தால் கவலையாக இருந்தது, கவிதாவுக்கு. சுந்தர் இப்படித் துவண்டு போய்ப் பார்த்ததே இல்லை, அவள். எந்த ப்ரச்சினையானாலும் இலகுவாக எடுத்துக் கொள்வான். எப்போதும் புன்னகை மலர்ந்த முகம். அன்பு நிறைந்த மனம். யாராயிருந்தாலும் ஓடி உதவும் குணம். இறை நம்பிக்கை நிறையவே உண்டு. அவளுக்கே அடிக்கடி தோன்றும், “இப்படி அநியாயத்துக்கு நல்லவனாக இருக்கிறானே”, என்று.

“சுந்தர், நடந்தது நடந்துடுச்சு. நீங்களே இப்படி மனசு உடைஞ்சிட்டா எப்படி? நாளைக்காச்சும் ஆஃபீஸ் போக வேணாமா?”, கனிவுடன் கேட்டபடி, அவன் நெற்றி முடியை ஒதுக்கி விட்டாள்.

குழந்தையைப் போல் அவள் மடியில் தலை வைத்து, அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டான். “ஆஃபீஸ் போறதை நினைச்சாலே பயமா இருக்கு, கவி. அவன் முகத்துல விழிக்கணுமே. கோவத்துல ஏதாச்சும் கன்னா பின்னான்னு பேசிட்டேன்னா?”

“நீங்க அப்படியெல்லாம் நிதானிக்காம பேசிட மாட்டீங்க சுந்தர். எனக்குத் தெரியும் உங்களைப் பத்தி. சரி... எழுந்து வாங்க. ஒரு மாறுதலுக்கு கொஞ்சம் வெளில போய், நடந்துட்டு வரலாம் வாங்க. மத்ததெல்லாம் பிறகு பேசிக்கலாம்”, அவனை வலுக்கட்டாயமாய் எழுப்பி, குளியலறைக்குள் தள்ளினாள்.

“கிளம்புங்க. நான் போய் காஃபி போடறேன்”

அன்பு மனைவியுடன் கைகோர்த்தபடி வெளியில் நடக்கையில் மனசு கொஞ்சம் சமனப் பட்டது போல் தோன்றியது. இரண்டு நாளாக வீட்டில் அடைந்து கிடந்ததால், வெயில் எப்போதையும் விட அதிகமாய் முகத்தில் அடிப்பது போல் இருந்தது. சாயந்திரம் ஐந்து மணிக்கு இப்படி ஒரு வெயில்!

வெயிலுடன் போட்டி போட்டுக் கொண்டு மனதை அறையும் நினைவுகள். நடந்ததை நினைக்கவே பிடிக்கவில்லை; ஆனால் நினைவுகள் நம்மைக் கேட்டா வருகின்றன? இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? நம்ப முடியாத ஆச்சர்யம். அடக்க இயலாத ஆத்திரம்.

வேறொன்றுமில்லை; ஒற்றை வரியில் சொல்வதானால், அவன் அலுவலகத்தில், அவன் உற்ற நண்பன் ரகு, நல்லவன் என்று கருதியிருந்தவன், கூட இருந்தே குழி பறித்து விட்டான். இவன் மாதக் கணக்கில் மாடாக உழைத்த உழைப்பின் பெருமையெல்லாம் ஒரே நொடியில் ரகுவுக்கு கிடைத்து விட்டிருந்தது. நாணயம், நேர்மை தவிர வேறு மாதிரி நினைத்துப் பார்க்கவே தெரியாத சுந்தருக்கு இது எதிர்பாராத பேரிடியாக விழுந்ததில் ஆச்சர்யமில்லை. சரி, அது மட்டுமென்றாலும் விட்டு விடலாம், ஆனால் இவனுடைய மேலாளர், அவனோடு ஒப்பிட்டு பலர் முன்னிலையில் இவனை இழிவாகவும் வேறு பேசி விட்டார். அப்போதே ராஜினாமாக் கடிதம் ஒன்று எழுதி ஒப்படைத்து விடலாம் போல ரத்தம் கொதித்தது. ஆனால் அவ்வளவு கோபத்தில் எது செய்தாலும் தவறாகப் போய்விடுமென்றுதான் மிகவும் சிரமப்பட்டு பொறுமை காத்தான். அந்தத் தாக்கத்தில்தான் இரண்டு நாளாக விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் அடைந்து கிடக்கிறான். நல்லவனாக இருக்கும் முயற்சியில், ஏமாளியாகி விட்டேனோ என்று நினைப்பு ஓடியது.

இருவரும் நடந்து கொண்டே குழந்தைகள் பூங்காவின் அருகில் வந்து விட்டார்கள். சின்னஞ்சிறு சிட்டுகள் போல் கவலையின்றித் திரியும் இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டே இருந்து விடலாம் என்று தோன்றியது.

“ஏய், அதைக் குடு. அது என்னோடது”
“மாட்டேன், அது என்னோடது. என் அப்பா எனக்கு வாங்கிட்டு வந்தார்”

இரண்டு பிள்ளைகள் ஒரே பந்துக்கு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

“போ. என்னோடது” என்று பெரியவனாக இருந்த பிள்ளை, சின்னவனைத் தள்ளி விட்டான். சின்னவன் ஊஞ்சலில் போய் இடித்துக் கொண்டு விட்டான்! நல்ல வேளை வேகமாக இடிக்கவில்லை என்ற நினைப்புடன், சுந்தர் பதற்றத்துடன் பக்கத்தில் போகும் முன், பெரியவன் ஓடிச் சென்று சின்னவனைக் கை கொடுத்துத் தூக்கினான்.

“அச்சச்சோ. அடி பட்டுடுச்சா? ஸாரிடா”
“பரவாயில்லை. அடி படல. இந்தா நீயே வச்சுக்கோ.” சின்னவன் பெரியவன் கையில் கொடுத்தான். காயப் படுத்தியவனுக்கே கரிசனத்தோடு பந்தைத் தரும் குழந்தை மனம்!

“வேண்டாம். நீ போடு; நான் பிடிக்கிறேன்”, பந்தை மறுபடியும் சின்னவன் கையில் கொடுத்து விட்டு சிறிது தூரம் தள்ளிப் போய் நின்று கொண்டான்.

கொஞ்ச நேரம் கவிதாவும் அவனும் அங்கேயே ஒரு பெஞ்சில் அமர்ந்து பிள்ளைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, இருட்டும் நேரத்தில் கிளம்பினார்கள்.

வீட்டுக்குள் நுழைந்து கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு பூஜை அறைக்குச் சென்று கண்களை மூடி ஒரு நிமிடம் நின்றான். “எனக்கு என்ன குறை?” என்று தோன்றியது. “அன்பான குடும்பத்தினர், வரமாய் வந்த மனைவி, அருமையான நண்பர்கள் (ரகுவைத் தவிர என்ற நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை), இப்படிப் பல விதத்திலும் நிறைவாகத்தான் இருக்கிறது, வாழ்க்கை. அப்படி இருக்கும் போது பூங்காவில் பார்த்த குழந்தையின் பெருந்தன்மையை, வெள்ளை மனதை, நானும் பழகிக் கொண்டால்தான் என்ன?” என்று தோன்றியது.

ரகுவின் அம்மா குடல் புற்று நோயால் அவதிப்பட்டு வருவது இவனுக்குத் தெரியும். அந்த நினைப்பு வந்தவுடன், “இந்த ரகு ஏன் இப்படிச் செய்தான்?” என்று மறுபடியும் தோன்றியது. ஆனால் இம்முறை ரகுவின் மேல் கோபத்தை விடவும் வருத்தம்தான் அதிகம் இருந்தது. “ரகுவும் அவன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்”, என்று மனதார வேண்டிக் கொண்டான்.

மனம் இலேசாக இருந்தது.


--கவிநயா

4 comments:

 1. இதோடு நிறுத்திக் கொள்ளாமல் இரகுவிடமும் முன்பு போல் சுந்தர் பழகியிருப்பான் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 2. ஆமாம், குமரா. அப்படித்தான் கேள்விப்பட்டேன் :)

  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 3. parentsclubil திருக்குறள் கதை தொகுப்பில் உங்கள் இரண்டு கதைகளையும் சேர்த்துள்ளோம்.

  www.parentsclub08.blogspot.com

  ReplyDelete
 4. மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)