Wednesday, April 30, 2008

காற்றுக்குமிழி

உயர உயரப் பறந்து கொண்டிருக்கிறது
அந்தக் காற்றுக் குமிழி…

உலகத்து ஒளியை யெல்லாம்
உள்வாங்கிக் கொண்டு

வானவில்லின் வர்ணம் வாங்கி
வாசம் பார்த்துக் கொண்டு

தேன் குடித்த வண்டுகளின்
தேகம் தொட்டுக் கொண்டு

ஊர்க் குருவிக் கூடுகளை
உரசிப் பார்த்துக் கொண்டு

மூங்கில் காற்றின் முதுகில் ஏறி
மேகம் முட்டிக் கொண்டு

ஓங்கி நிற்கும் மரங்க ளிடை
ஓய் வெடுத்துக் கொண்டு

சந்தோஷமாய்
உயர உயரப் பறந்து கொண்டிருக்கிறது…

குத்தி விடக் காத்திருக்கின்ற
கூர் முனைகளைப் பற்றிக் கவலைப்படாமல்…


--கவிநயா

14 comments:

  1. என் குழந்தைகளின் குதூகலம் எனக்கு இப்போது புரிகிறது. :-)

    ReplyDelete
  2. வாங்க குமரன். கவிதையும் படிக்க ஆரம்பிச்சாச்சா :)

    //என் குழந்தைகளின் குதூகலம் எனக்கு இப்போது புரிகிறது//

    சரியா சொன்னீங்க. நன்றி, குமரன்!

    ReplyDelete
  3. அடடா இந்த"கவி" "நய"மாக இருக்கிறது. ;-))

    கவிதை சொல்ல வந்த கருத்தும்.. கவி தொகுத்து போட்ட அழகும் அருமை.

    ReplyDelete
  4. கவிநயா,

    குமரன் சொன்னது போல் குழந்தைகளின் குதூகலத்தின் ரகசியம் புரிகிறது.


    //தேன் குடித்த வண்டுகளின்
    தேகம் தொட்டுக் கொண்டு

    ஊர்க் குருவிக் கூடுகளை
    உரசிப் பார்த்துக் கொண்டு

    மூங்கில் காற்றின் முதுகில் ஏறி
    மேகம் முட்டிக் கொண்டு

    ஓங்கி நிற்கும் மரங்க ளிடை
    ஓய் வெடுத்துக் கொண்டு //

    மேற் சொன்ன எது நடந்தாலும் அந்தக் காற்றுக் குமிழியின் காலம் முடிந்து விடுமே!

    //சந்தோஷமாய்
    உயர உயரப் பறந்து கொண்டிருக்கிறது…

    குத்தி விடக் காத்திருக்கின்ற
    கூர் முனைகளைப் பற்றிக் கவலைப்படாமல்…
    //

    என்ன ஒரு அருமையான முத்தாய்ப்பு!!!!!

    ஒரு சிறந்த திரைப்பத்தின் திரைக்கதையைய் போல ஒரு திருப்பத்தைக் கொடுத்து விட்டீர்கள் அந்த கடைசி இரண்டு வரிகளில்.

    காற்றுக் குமிழிகள் என்று உருவகப் படுத்தியது எதை, குழந்தைகளையா, எல்லா வெள்ளந்தி மனிதர்களையுமா? இவ்வாறு உருவகப் படுத்தி பார்க்கும் போது, மேலே நான் சொன்ன எதுவும் குமிழிகளை பாதிக்காது ஒரு சின்ன கீறல்களைத் தவிர.

    நிஜமாகவே சற்று பளீரென கன்னத்தில் அறைந்த வரிகள் அவைகள்.

    அருமை அருமை.

    பித்தன்.

    ReplyDelete
  5. //கவிதை சொல்ல வந்த கருத்தும்.. கவி தொகுத்து போட்ட அழகும் அருமை.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, u.p.tharsan! உங்க பெயரை எப்படி தமிழ்ல எழுதறதுன்னு தெரியல. அதான் ஆங்கிலம். மன்னிச்சுக்கோங்க.

    ReplyDelete
  6. //மேற் சொன்ன எது நடந்தாலும் அந்தக் காற்றுக் குமிழியின் காலம் முடிந்து விடுமே!//

    ஆமாம் பித்தரே. ஆனால் இது நேரடியாய்க் காற்றுக்குமிழியைப் பற்றியதில்லை என்பதைப் புரிந்து கொண்டீர்கள்தானே? அப்படித்தான் தோன்றுகிறது உங்கள் பின்னூட்டத்தின் பிற்பகுதியினின்றும். பாராட்டுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. கவிநயா,

    அருமையான கவிதை. கடைசி இரு வரிகள் சிந்திக்கத் தூண்டுபவை. வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  8. ஆஹா...
    அந்தக் காற்றுக் குமிழியாக நான் மாறிவிடக் கூடாதாவென எண்ணி வாசித்துக் கொண்டு வரும்வேளையில் கவிநயா, கடைசி வரியில் ஆயுதம் வைத்து,யதார்த்தம் சுட்டி,அச்சுறுத்தி விட்டீர்கள்.

    அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்..!
    தொடர்ந்து எழுதுங்கள் :)

    ReplyDelete
  9. //அருமையான கவிதை. கடைசி இரு வரிகள் சிந்திக்கத் தூண்டுபவை.//

    நன்றி சதங்கா!

    //கடைசி வரியில் ஆயுதம் வைத்து,யதார்த்தம் சுட்டி,அச்சுறுத்தி விட்டீர்கள்.//

    நன்றி ரிஷான்! யதார்த்தத்தை நினைவில் வைத்துக் கொண்டு, அதே சமயம் அதைத் தடையாகக் கொள்ளாமல், உயரப் பறப்போம்... :)

    ReplyDelete
  10. அற்புதம்! நிறைய எழுதுங்கள்

    ReplyDelete
  11. அற்புதம்! நிறைய எழுதுங்கள்!

    ReplyDelete
  12. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, யாழினி அத்தன்!

    ReplyDelete
  13. //குத்தி விடக் காத்திருக்கின்ற
    கூர் முனைகளைப் பற்றிக் கவலைப்படாமல்… //

    அந்த பயம் இல்லாததனால் தான் அது சுதந்திரமாக பரக்கிறது.. மகிழ்கிறது..

    ஆபத்துக்கள் எங்கும் உண்டு.. இருந்தும் மகிழ கற்றுக்கொண்டால் வாழ்க்கை ஆனந்தம்..

    அழகாக சொல்லியிருக்கிறீர்கள் கவிநயா..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  14. வாங்க கோகுலன்! உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி :) வாழ்த்துக்கு நன்றி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)