Sunday, August 25, 2013

நடப்பதெல்லாம் நன்மைக்கே!


Expatguru அவர்கள் போன பதிவிற்கு எழுதிய பின்னூட்டம் இது. அவருக்கு எழுதத் தொடங்கிய பதில் ரொம்ப நீண்டு விட்டதால், இங்கே பதிவாகவே இடுகிறேன்…

//அருமையான கட்டுரை. நம் முன் வினை தீய செயல்களால் தான் இப்போது துக்கத்தை அனுபவிக்கிறோம் என்றே வைத்துக்கொள்வோம். எல்லாமே இறைவன் செயல் என்றும் கூறுகிறோம். அப்போது முதலில் அந்த தீய செயல்களை இறைவன் ஏன் செய்ய வைத்தான்? அது செய்ததனால் தானே இப்போது இப்படி அனுபவிக்கிறோம்.//

உங்கள் கேள்வி சிந்தனையைக் கிளறி விட்டு விட்டது. இதே கேள்வி எனக்குள்ளும் எழுந்ததுண்டு. “நான் எப்போதோ செய்திருக்ககூடிய தீவினைகளுக்கு அது என்னவென்றே கூடத் தெரியாத நிலையில், இப்போது தண்டனை அனுபவிப்பது என்ன நியாயம்?” என்று தோன்றியிருக்கிறது. பதில் தெரியாவிட்டாலும், உங்கள் கேள்வியால் ஏற்பட்ட எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்…

//எல்லாமே இறைவன் செயல் என்றும் கூறுகிறோம். அப்போது முதலில் அந்த தீய செயல்களை இறைவன் ஏன் செய்ய வைத்தான்?//

ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமும் சிலர் இதே கேள்வியைக் கேட்டார்கள். “அப்படியானால் நான் தீமை செய்தாலும் அதற்கு இறைவன் தானே பொறுப்பு?”, என்று. அதற்கு அவருடைய பதில்:  “உண்மையாகவே உன்னுள் இறைவன் இருக்கும் பட்சத்தில் நீ தீயவற்றை நினைக்கக்கூடக் கூசுவாய்”.

கள்ளங்கபடமற்ற தூய்மையான உள்ளத்தில்தான் இறைவன் குடியிருப்பான் என்பது அவர் அடிக்கடி சொல்வது. அப்பேற்பட்ட இதயத்தில் மாசுகளுக்கு இடமேது? தீய சிந்தனைகளுக்கு இடமேது? நம் உள்ளம் அப்படியில்லாத பட்சத்தில் நம் செயல்கள் அனைத்திற்கும் இறைவன் மேல் பழி போடுவது நியாயமில்லாத செயல்.

மற்றவர்களுக்கு நேரடியாகத் துன்பம் விளைவிப்பது மட்டுமே தீமை அல்ல. நம் மனதில் எழும் பொறாமை, வருத்தம், கோபம், இவை எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் வேறு ஒருவருக்கோ, அல்லது நமக்கேயோ கூட எதிர்மறையாக அமைகின்றன. ஒவ்வொரு எண்ணமும் நீரில் எறியப்பட்ட கல் போல பிரபஞ்ச வெளியில் எறியப்படுகிறது என்பார் சுவாமி சிவானந்தர். அதற்கென்று கண்டிப்பாக ஒரு விளைவு உண்டு. அதன் வீரியத்தைப் பொறுத்து விளைவுகளும் இருக்கும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.

என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு. மனத்தூய்மையுடன் இருப்பதன் பெயரே அறம், மற்றதெல்லாம் வெறும் ஆரவாரம், என்கிறார் அவர்.

அதனால், ‘எல்லாமே இறைவன் செயல்’ என்பது சரிதான் என்றாலும், அது பளிங்கு போன்ற தூய  உள்ளம் கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு வரியில் சொன்னால் அகங்காரம் இல்லாத மனமே மாசில்லாத மனம் என்று சொல்லலாம். குழந்தைகளின் மனம் அப்படிப்பட்டது.

அது மட்டுமல்ல, இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இறைவன், தானே எல்லாமே செய்வதில்லை, அவன் மனிதர்களுக்கு ‘free will’ என்று ஒன்றையும் கொடுத்திருக்கிறான் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதன்படி, தான் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதைத் தானே தீர்மானிக்கும் உரிமை மனிதனுக்கு இருக்கிறது. அதனால் நாம் செய்யும் செயல்களுக்கு நாமேதான் பொறுப்பு, நம்மைத் தீவினைகளைச் செய்ய வைத்தவன் இறைவன் இல்லை என்றாகிறது.

இந்த உலகம் இயங்குவதே law of karma வின் அடிப்படையில்தான். அறிவியலின் படியும், ஒரு வினைக்கு நிச்சயம் எதிர் வினை என்றும் உண்டு என்பது உண்மைதானே?

‘நான்’ என்பது இருக்கும் வரை, நம் செயல்களுக்கு நாமேதான் பொறுப்பு. அகங்காரத்தை அழிக்கும் வழியாகத்தான், கீதையில் கண்ணன், சரணாகதி பற்றியும், செயல்களின் பலன்களைத் தனக்கே அர்ப்பணித்து விடும்படியும் சொல்கிறான்.

இவற்றை வைத்துப் பார்த்தால் ஓரளவு புரிகிறாற்போல் இருக்கிறது. மறுபிறப்பில் நம்பிக்கை இல்லாவிட்டால் கூட, ஒரு பிறப்பிற்கே இந்த விதி பொருந்தித்தான் வருகிறது.

ஆக, நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி என்ன?

துன்பங்களும், அனுபவங்களும் நம்மை மேலும் மேலும் பண்படுத்தவே வருகின்றன. நம் இதயத்தைச் சுத்திகரித்து, மனிதப் பிறவியின் பயனைப் பெற்றுத் தருவதே அவற்றின் நோக்கம். அதுவே இறைவனின் நோக்கம்.

நடப்பதெல்லாம் நமக்கு எதிராக நடப்பது போலத் தோன்றும் சமயங்களிலும் அது நம்மை இந்தப் பயணத்திற்கு தயார்ப்படுத்தவே என்பது பின்னால் புரியும். (“வரமா, சாபமா?” என்ற இந்தப் பதிவையும் நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்). அதனால்தான் ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று சொல்லி வைத்தார்கள். யார் நன்மைக்கு? நம் நன்மைக்குத்தான்! எந்த ஒரு அனுபவத்தை எடுத்துக் கொண்டாலும், அது நம்மை இறைவனை நோக்கி ஒரு சிறு அடியாவது நகர்த்துவதற்கே என்பதே உண்மை.

(நல்லாக் குழப்பிட்டேனா? மன்னிச்சுக்கோங்க!)

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

Sunday, August 18, 2013

உனக்காகத்தான் காத்திருந்தேன்!

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்?

இந்தக் கேள்வி எழாத மனிதர்கள் அபூர்வமாகத்தான் இருப்பார்கள். இன்பமோ, துன்பமோ, அவரவர் பாடு அவரவருக்கு. ‘தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்’, என்று ஒரு பழமொழி கூட இருக்கிறது. தானே அனுபவித்தாலொழிய, தாளாத துன்பத்தின் நடுவில் இருக்கும் போது அதனுடைய வலி பிறருக்குப் புரிவதோ, புரிய வைப்பதோ கிட்டத்தட்ட அசாத்தியமானது. அது போல, அதை விட்டுத் தப்பி ஓடுவதும் முடியாத காரியம். அனுபவித்தாலொழிய, தீராது. ‘எனக்கு மட்டும் ஏன் அடுத்தடுத்து இத்தனை துன்பம் வருகிறது?’ என்று புலம்ப மட்டுமே முடியும்.

திரு. சுகிசிவம் அவர்கள் இதைப் பற்றிப் பேசும்போது ஒன்று சொன்னார், “என்னென்ன அனுபவிக்கிறாயோ, அனைத்துக்கும் காரணம் நீயேதான். உன்னுடன் ஒருவர் கோபம் கொண்டால், அந்தத் தொடர் சங்கிலியை நீயேதான் எப்போதோ தொடங்கி  வைத்தாய் என்று பொருள். அதை உணர்ந்து, பழியை இறைவன் மீதோ அல்லது பிறர் மீதோ போடாமல், நீயேதான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்; கீழே உள்ள  கதையையும் சொன்னார்:

ஒரு முறை புத்தரை ஒருவன் கன்னா பின்னாவென்று திட்டினானாம். புத்தரும் பதில் பேசாமல் அமைதியாக அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்தாராம். திட்டி முடித்த பின், “இவ்வளவு திட்டினேனே, ஏதாவது பதிலுக்குச் சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவே இல்லையா?” என்று கேட்டானாம்.

அதற்குப் பதிலாக புத்தர், “உனக்காகத் தானப்பா இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன்”, என்றாராம்!

அந்த மனிதன் ஆச்சரியமாக, “என்ன சொல்லுகிறீர்கள்?” என்றதற்கு, “எப்போதோ ஒரு முறை உனக்கு என்னவோ செய்திருக்கிறேன். அந்தக் கோபம் உன் மனதில் இருந்திருக்கிறது. நீ அதை என் மேல் காண்பித்துச் சரி செய்யவில்லையென்றால், நான் அதற்காக இன்னும் எத்தனை காலம்   காத்திருக்க வேண்டியிருக்குமோ? இப்போது அந்தக் கணக்கு தீர்ந்து விட்டதே!” என்றாராம்.

எத்தனை அருமையான attitude பாருங்கள். பிறரின் கோபத்தையும் வருத்தத்தையும் சகித்துக் கொள்ள, அதே சமயம் நம் மன அமைதியையும் பாதுகாத்துக் கொள்ள, ஒரு அழகான வழி இது.

ஆன்மீகத்தில், இறைவனிடத்தில், பூரண நம்பிக்கை வைத்திருப்பவர்களின் நம்பிக்கை, நமது இன்ப துன்பம் அனைத்திற்கும் காரணம் நமது வினைப்பயனே, என்பது. அதே கருத்தைத்தான் சுகிசிவம் அவர்கள் கொஞ்சம் வேறு மாதிரி, சற்றுக் கடுமையாகச் சொல்கிறார்.

துன்பம் வருகையில், அமைதியையும் ஆறுதலையும் எப்படியெப்படியோ எங்கெங்கோ தேடி அலைகிறது, மனசு. “கழிய வேண்டிய எத்தனையோ கடன்களில் இன்னும் ஒன்று கழிந்து விட்டது”, என்று நினைத்துப் பாருங்கள்;  தானாக ஆறுதல் கிடைக்கும்.

கண்ணீரில் கரைந்திடுமோ கர்ம வினை?”  ஆம், கரைந்து விடும் என்று நம்புவதே நமக்கு நல்லது.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

Thursday, August 15, 2013

தாமரை மலர் மேலே...

அனைவருக்கும் வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்!


சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் பாடிப் பரவசமடைந்திருப்பதை நீங்களும் கேட்டு ஆனந்தியுங்கள்!


தாமரை மலர்மேலே தானொரு மலர்போலே
திகழ்ந்திடும் திருத்தேவியே!
மாதவன் மணி மார்பில் மங்கையுன் திருக்கோலம்
கொண்டதோர் எழிற்காட்சியே!

செல்வத்துக் கதிபதி நீயென்பார், எனக்கு
செல்வத்தைத் தாராயோ?
பக்தி செல்வத்தைத் தாராயோ?
அழகின் திருவுருவம் நீயென்பார், எனக்கு
அழகினைத் தாராயோ?
அழகு மனதினைத் தாராயோ?

வரலக்ஷ்மி தேவியே வரமருள் ராணியே
வந்தருள் திருத்தேவியே!
சிரமுன்றன் பதம்வைத்தேன் சிந்தையுள் உனைவைத்தேன்
திசையெங்கும் எழிற்காட்சியே!

தாமரைக் கரங்களில் தாமரைகள் தவழ…
பூவெழில் வதனத்தில் புன்னகையோ மலர…
கார்முகில் கருவிழிகள் கருணைமழை பொழிய…
கடைவிழிப் பார்வையிலே கர்மவினை கழிய!


--கவிநயா

Sunday, August 11, 2013

திருப்பாவை தந்த திருப்பாவை


கோபிகளுடன் கண்ணன் விளையாடிக் கொண்டிருக்கிறான். இந்தப் பக்கம் ஒருத்தியின் கண்களை ஒரு கையால் மூடிக் கொண்டே, அந்தப் பக்கம் இன்னொருத்தியின் பின்னலைப் பிடித்திழுக்கிறான். கூடவே ஒருத்தியின் காதுகளில் இரகசியம் வேறு பேசுகிறான்! பொல்லாத கண்ணன் என்பது சரியாகத்தான் இருக்கிறது!

இந்தக் கோபியர்களின் பாவனையில்தான் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை துள்ளல்! உலகமே இவர்கள் காலடியில் கிடப்பது போல் அப்படி ஒரு பெருமிதம், இவர்கள் முகத்தில்! பூமியில் கால் பாவாமல், எங்கோ ஆகாயத்தில், கவலைகளே அற்ற ஒரு உலகத்தில் இருப்பது போன்ற எண்ணம் போலும்! வீடு என்று ஒன்று இருப்பதும், அங்கு பெற்றோர் இவர்களுக்காகக் காத்திருப்பதும், இவர்கள் நினைவிலிருந்தே மறைந்து விட்டது! கண்ணன்… கண்ணன்… கண்ணன்…மட்டும்தான் அவர்களின் கண்களுக்குத் தெரிகிறான். எங்கெங்கும் அவனுடைய குறும்புப் பார்வையும் கனிந்த புன்னகையும் மட்டும்தான் தெரிகிறது. அப்படி இருக்க, அவர்களுக்கென்ன பகலும், இரவும், பசியும், தாகமுமா தெரியப் போகிறது!

அவன் மீது அவர்கள் கொண்டிருக்கும் பிரேமைக்கு அளவே இல்லை. கண்ணா, கண்ணா, என்று இவர்கள் அவனைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டாடிக் கூத்தாடுவதும், இவனும் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு அத்தனை பெண்களையும் சமாளிப்பதும்! எப்படித்தான் இவனால் முடிகிறதோ! ‘கண்ணன் எனக்கு மட்டுமே சொந்தம்; என்னிடம்தான் அவன் அதிகப் பிரியம் வைத்திருக்கிறான்’, என்று ஒவ்வொருத்தியும் எண்ணும்படியல்லவா நடந்து கொள்கிறான்!

“கண்ணா! என்னைப் பாரேன்… என்னைப் பாராமல் ஏன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறாய்?”, ஒருத்தி அவன் முகவாயைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்புகிறாள்.

“உன்னைப் பார்க்கப் பயந்துதான் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தேன்”, என்கிறான் அந்தக் கள்வன்.

“என்னைப் பார்க்க பயமா?” செல்லக் கோபத்துடன் சிணுங்குகிறாள், அவள். “நான் என்ன அவ்வளவு பயங்கரமாகவா இருக்கிறேன்?”

“அடடா. உன்னைப் பார்த்துக் குருடன் கூட அப்படிச் சொல்ல மாட்டானே. அப்படியிருக்க நான் சொல்வேனா என்ன? உன் கரிய பெரிய விழிகளைப் பார்த்தால், என் வசமிழந்து நான் அவற்றில் தொலைந்து விடுவேனோ என்று அஞ்சித்தான் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தேன்”, என்றானே பார்க்க வேண்டும்! அவள் முகத்தில் பெருமை பிடிபடவில்லை!

“அப்படியானால்… நீ என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது?” என்று இன்னொருத்தி சிணுங்குகிறாள், இப்போது!

“உன் மீது வைத்த கண்களை எடுக்க முடியாமல்தானே திணறிக் கொண்டிருந்தேன்…”, என்கிறான் அந்த திருடன்!

இது மட்டுமா? கோபியர்கள் யமுனையில் நீராடப் போகையில் கண்ணனும் பின்னாலேயே போகிறான்… அவர்கள் ஆடைகளை மெதுவாக எடுத்து ஒளித்து வைத்து விடுகிறான்! அவனுடைய புல்லாங்குழல் இசையில் மயங்கி அனைவரும் இன்புற்று கிறங்கிக் கிடக்கும் போது, கோபிகளின் பின்னல்களை ஒன்றோடொன்றாக முடிந்து வைத்து விடுகிறான்! புத்தம் புது ஆடைகளை அவர்கள் உடுத்தி வந்தால், அவற்றில் மண்ணை வாரி இறைக்கிறான்!

வீடுகளில் சிரமப்பட்டு எடுத்து வைத்த வெண்ணை எல்லாவற்றையும், கூட்டாளிகளோடு களவாடித் தின்று விடுகிறான்! வெண்ணை, தயிர், மோர், என்று இதெல்லாம் உண்டது போறாதென்று, மண்ணை வேறு உண்டு வைக்கிறான்!

ஆனால், அவன் என்ன செய்தாலும், அவனை யாராலும் கோபித்துக் கொள்ளவே முடியவில்லை! மேலும் மேலும் அன்பைத்தான் பொழிகிறார்கள். மாயக் கண்ணன் என்பது சரியாகத்தானே இருக்கிறது!

ஆயர்பாடியினரின், கோபியரின், அன்பையும், பக்தியையும், பிரேமையையும், பார்த்துக் கொண்டே இருந்த பிராட்டிக்கு ஒரு ஆசை வந்து விட்டது! தானும் கண்ணன் மேல் உருகி உருகி பிரேமை கொள்ள வேண்டும், அன்பு செய்ய வேண்டும், பக்தி செய்ய வேண்டும், காதலிக்க வேண்டும், என்று!

அதோ… விஷ்ணுவை மட்டுமே தன் சித்தத்தில் நிறுத்திய விஷ்ணு சித்தர், தன் நந்தவனத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். களை எடுத்து, வாடிய இலைகளையும், உதிர்ந்து விட்ட பூக்களையும் அப்புறப்படுத்துகிறார். மலர்ச் செடிகளுக்கெல்லாம் நீர் பாய்ச்சுகிறார்…. துளசி, எம்பெருமானுக்கு மிகவும் உகப்பானது. அதைப் பார்க்கும் போதே அவருக்கு அவன் நினைவு வந்து விடும், உருகி விடுவார்…அந்தத் துளசிச் செடியின் அருகில்… அது என்ன?

வித விதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்தப் பூந்தோட்டத்தில், சற்றே பெரியதொரு தாமரை மலர் போல, தன்னுடைய சின்னக் கைகளையும், தண்டைக் கால்களையும், உதைத்துக் கொண்டு, பொக்கை வாயைத் திறந்து’களுக்’கென்று சிரிக்கிறது, பேரழகான ஒரு பெண் குழந்தை!

திருவாடிப் பூரத்து நாயகி, ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே, சரணம்!


எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்,
கவிநயா


திருவாடிப்பூரத்தன்று வல்லமையில் வெளியான சிறப்புப் பதிவு.

படத்திற்கு நன்றி: http://omsakthionline.com/?aanmigam=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8&publish=3079

Thursday, August 8, 2013

ஆடி வெள்ளிக் கிழமையிலே...ஆடி வெள்ளிக் கிழமையிலே பாடி வந்தோமே
அம்மா உன் பதமலரைத் தேடி வந்தோமே
உன்னை எண்ணி நாடி ஆடிப் பாடி வந்தோமே, எங்கள்
உள்ளமெல்லாம் உன்னையே கொண்டாடி வந்தோமே!

வேப்பிலையில் இருப்பவளே வேத நாயகி, எங்கள்
வேதனைகள் தீர்க்குமெழிற் கோதை நாயகி
மஞ்சளிலே இருப்பவளே மாய நாயகி, எங்கள்
மனதை விட்டு நீங்காத மங்கை நீயடி!

அகிலமெல்லாம் ஆளுகின்ற ஆதி நாயகி, எங்கள்
அகத்தினிலே ஒளிருகின்ற அழகு நாயகி
உலகையெல்லாம் ஆக்கிப் பின்னே காக்கும் நாயகி, எங்கள்
உள்ளம் விட்டு நீங்காத உறவு நீயடி!


-கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2781&Cat=3