Monday, December 31, 2012

வருக, புத்தாண்டே!


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!




புத்தாண்டை வரவேற்போம்!
புதுவாழ்க்கை அமைத்திடுவோம்!
புத்துணர்வு பெற்றிடுவோம்!
புதுமைபல செய்திடுவோம்!

கவலைகளைக் கழற்றி வைப்போம்!
தன்னம்பிக்கை தக்க வைப்போம்!
முயற்சிகளை முடுக்கிடுவோம்!
அயர்ச்சிகளைத் தள்ளி வைப்போம்!

அன்பாலே கோவில் செய்வோம்!
அறிவொளியால் விளக்கிடுவோம்!
அவனியெல்லாம் ஒளியேற்றி
ஆனந்தமய மாக்கிடுவோம்!

இயற்கையைப் பேணிடுவோம்!
இச்சகத்தைப் போற்றிடுவோம்!
இறையவனின் தாள்பணிந்து
இன்பமுடன் வாழ்ந்திடுவோம்!


--கவிநயா

நன்றி: வல்லமை

Thursday, December 27, 2012

தத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்!

ஆருத்ரா தரிசன சிறப்புப் பதிவு.

திரு.சுப்பிரமணியம் ரவி அவர்கள் மிக அழகான நடராஜர் ஓவியங்கள் அனுப்பி இருந்தார். (படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்) அவற்றை இங்கே பிரசுரிப்பதில் மிக்க பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். அனுமதி தந்தமைக்கு, அவருக்கு நன்றிகள் பல.


அப்பனும், அம்மையும்                                                           ஊர்த்துவ தாண்டவம்



சுப்பு தாத்தா மோஹனத்தில் பாடிக் கலக்கியிருக்கிறார்! நீங்களும் கூடவே பாடிப் பாருங்களேன்! மிக்க நன்றி தாத்தா!


அண்டம் பிண்டம் அனைத்தும் அதிர்ந்திட!
கண்டம் நின்ற நீலம் மிளிர்ந்திட!
சடைவார் குழலெண் திசையில் பறந்திட!
விடைவா கனனோ விரைந்தே சுழன்றிட!

கங்கை பயந்து முடியினில் ஒடுங்கிட!
மங்கை பாகனின் மேனி ஒளிர்ந்திட!
உடுக்கை ஒலியோ உலகினை ஆக்கிட!
இடக்கை வளரும் தீ அதை அழித்திட!

வலது பாதத்தில் முயலகன் நசுங்கிட!
உலகின் தீமைகள் அவனுடன் பொசுங்கிட!
இடது பாதத்தில் அபயம் காட்டிட!
இதுவே உனது அடைக்கலம் என்றிட!

தத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்!
தித்தோம் திகதோம் திரிகிட தித்தோம்!
நித்தம் சிவன்தாள் பணிவோம் தத்தோம்!
சித்தம் சிவன்தாள் தனிலே தித்தோம்!

மான் மழுவுமாட அர வணியுமாட காற் சதங்கை யாட தத்தோம்!
வான் மதியுமாட வளர் கொன்றையாட அரைத் தோலுமாட தித்தோம்!
வான் மழையுமாட கான் மயிலுமாட பூங் கழல்களாட தத்தோம்!
தேன் மலர்களாட நகை இதழ்களாட அருள் விழிகளாட தித்தோம்!

ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய தத்தோம்!
சிவாயநமஓம் சிவாயநமஓம் சிவாயநமஓம் தித்தோம்!

தத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்!
தித்தோம் திகதோம் திரிகிட தித்தோம்!
நித்தம் சிவன்தாள் பணிவோம் தத்தோம்!
சித்தம் சிவன்தாள் தனிலே தித்தோம்!

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://natarajar.blogspot.com/2007/12/8.html

Monday, December 24, 2012

தேவ மைந்தன் பிறந்த நாள்!




பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான்.  அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் என்றால் எக்கச்சக்க கொண்டாட்டம். நவம்பர் இறுதியில் Thanksgiving (நன்றி நவிலல்) தினம் கொண்டாடி முடித்த கையோடு, கிறிஸ்துமஸுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கி விடுவார்கள். கிறிஸ்துமஸ் மரம் வைப்பதில் தொடங்கி, வீடு முழுக்க, வீட்டின் முன்புறம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்து, ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்துப் பரிசுப் பொருள் வாங்கி, விதவிதமான உணவுப் பண்டங்கள் செய்து, இப்படியாக கிறிஸ்துமஸ் நவம்பரிலேயே களை கட்டத் தொடங்கி விடும்.

அலுவலகத்தில் வேலை செய்வோருக்கு டிசம்பர் என்றால் ஜாலிதான். நாள் தவறாமல் ஏதாவது தின்பண்டங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்! கேக் என்றும், சாக்லேட் என்றும், குக்கீ (கும்கி இல்லீங்கோ!) என்றும்…  (டிசம்பரில் சாப்பிட்டதை எல்லாம் ஜனவரி முதல் கரைக்க வேண்டும் என்பது வேறு விஷயம் :) டிசம்பர் இறுதியில் அலுவலகங்கள் எல்லாம் கிட்டத்தட்ட காலியாக இருக்கும்! என்னைப் போல சில பேர்தான் இருப்போம்!

கிறிஸ்துமஸ் சமயத்தில் எல்லோருமே ஒருவித மகிழ்ச்சியோடும், எதிர்பார்ப்போடும், இருப்பார்கள். பலருக்கும் பலவிதமான உதவிகள் செய்வது, முடிந்த வரை இன்முகமாக இருப்பது, அன்போடு அனைவரையும் நடத்துவது, இதெல்லாம் இயல்பாகவே நடக்கும். நற்குணங்கள் எல்லாம் இந்த சமயத்தில் உச்சத்தில் இருக்கும். இதுவே தினப்படி என்றால் எப்படி இருக்கும்!

நற்குணங்கள் அனைவரிடமும் நிறையட்டும். 
ஆனந்தம் எங்கும் நிலவட்டும். 
Christmas Spirit நிரந்தரமாகட்டும்!

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துகள்!

அன்புடன்
கவிநயா


படத்துக்கு நன்றி: http://zeospot.com/10-wonderful-christmas-outdoor-lights-decorations/nice-boston-home-outdoor-christmas-lights/

Monday, December 17, 2012

தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி!

எங்க பார்த்தாலும் ஐயப்பமார்களா இருக்கிற இந்த நேரத்தில், ஐயப்பனை நினைக்காம இருக்க முடியுமா? சின்னப் பிள்ளையில் 'சுவாமி ஐயப்பன்' படம் பார்த்த பிறகு ரொம்பப் பிடிச்சு, உடனடியா மனப்பாடம் பண்ணின பாடல்தான், "தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி"ங்கிற பாடல். கவியரசர் கண்ணதாசன்  அவர்கள் எழுதினதுன்னு ஞாபகம். படத்தில் ஒரு சிறுமிக்காக சுசீலாம்மா பாடி இருப்பாங்க. இரண்டாவது பத்தில தம்பிப்பாப்பா வேணும்னு கேட்பா, அந்தச் சிறுமி. அந்தப் பாடலை கொஞ்சம் மாற்றி, எல்லோரும் பாடக் கூடிய வகையில் பொதுவா அமைச்சிருக்கேன்.  (கண்ணதாசன் மன்னிப்பாராக!) நீங்களும்தான் பாடிப் பாருங்களேன்!



சுப்பு தாத்தா அன்புடன் பாடித் தந்ததை இங்கே கேளுங்கள்! மிக்க நன்றி தாத்தா!

தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி
வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி
வஞ்சமில்லா நல்லவர்க்கே அருள்புரியும் சுவாமி!

ஐயப்ப சுவாமி….. அருள் புரி சுவாமி

கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே – எங்கள்
காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே
அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே – எம்மேல்
அன்பு வைத்து எம்மனதில் குடி புகுந்தாயே!

ஐயப்ப சுவாமி இன்னும் அருள் புரி சுவாமி
(தேடுகின்ற)

ஹரிஹரனின் புத்திரனாய் அவதரித்தாயே – எமக்கு
அருள்செய்ய சபரிமலைக்கு இர/ற/ங்கி வந்தாயே
கருணையினால் பதினெட்டாம் படி அமர்ந்தாயே – எங்கள்
கண்கண்ட தெய்வமென ஆகி விட்டாயே!

ஐயப்ப சுவாமி இன்னும் அருள் புரி சுவாமி
(தேடுகின்ற)

--கண்ணதாசன்/கவிநயா

சுவாமியே..............சரணம் ஐயப்பா!

படத்துக்கு நன்றி: http://temple.dinamalar.com/en/historydivinity.php


Sunday, December 9, 2012

கல்லால் அடித்த போதினிலும்...



ஓங்கி உயர்ந்து வளர்ந்திடுமாம்!
ஒதுங்க நிழலைத் தந்திடுமாம்!
பாடித் திரியும் பறவைகட்கு
கூடி வசிக்க இடந்தருமாம்!

வானந் தொட்டு வளர்ந்தாலும்
வளைந்தே காற்றில் அசைந்திடுமாம்!
மேகந் தொட்டு மழை நீரால்
மண்ணின் தாகம் தீர்த்திடுமாம்!

வளர்ந்து அடர்ந்து காடாகி
விலங்கு களுக்கும் புகல்தருமாம்!
இயற்கைத் தாய்க்கு உறுதுணையாய்
இயல்பாய் உதவி செய்திடுமாம்!

கல்லால் அடித்த போதினிலும்
கனியே தந்திடும் மரத்தைப் போல்
இன்னா செய்யும் மனிதருக்கும்
இனிதாய் அன்பே செய்திடுவோம்!

--கவிநயா 

நன்றி: வல்லமை


Quotes on trees:
Someone's sitting in the shade today because someone planted a tree a long time ago
--- Warren Buffett 
Trees are the earth's endless effort to speak to the listening heaven.
-- Rabindranath Tagore