விளையாடப் போன குழந்தையை எதிர்பார்த்துக்
காத்திருக்கிறார், தந்தை. “என்ன ஆயிற்று, இன்றைக்கு, இன்னும் காணோமே இந்தப் பெண்ணை”,
என்று எண்ணமிட்டபடி வாசலுக்கு வந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை எல்லாத் திசைகளிலும்
பார்க்கிறார்.
அதோ! என்ன இது, கண்ணைக் கசக்கிக்
கொண்டே வருகிறாற் போல் இருக்கிறது. அழுகிறாளா என்ன?
அவள் வாசலுக்கு வரும் முன் தானே
விரைவாக அடியெடுத்து மகளிடம் செல்கிறார்.
“என்னம்மா கோதை? என்ன ஆயிற்று?”
மகளை வாரிக் கைகளில் எடுத்து, அவள் கண்ணீரைத் துடைக்கிறார்.
“ம்…ம்..”, விசும்பிக் கொண்டே
தந்தையில் தோளில் தலை சாய்த்துக் கொள்கிறாள், கோதை.
வீட்டிற்கு வந்து கை, கால், முகம்
அலம்பி, குடிக்கத் தண்ணீர் கொடுத்து, மகளை ஆசுவாசப் படுத்துகிறார்.
“அப்பா… அப்பா… இன்றைக்கு என்ன
ஆயிற்று தெரியுமா?”
“என்னம்மா ஆயிற்று? அதைத்தானே
நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்”
“அப்பா, இன்றைக்கு நானும் என்
தோழிகளும் மணலில் சிற்றில் கட்டி விளையாடினோம்… சரியாக அந்த நேரம் பார்த்து கண்ணன்
வந்து விட்டனப்பா! வந்ததும் இல்லாமல் எங்கள் சிற்றிலை எல்லாம் கலைக்கத் தொடங்கி விட்டான்”
ஆயர்பாடிக் கண்ணன் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு
வந்தானா? பெரியாழ்வாருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை…
“ம்… அப்படியா? அதனால்தான் அழுது
கொண்டே வந்தாயா?”
“ஆமாம் அப்பா. அவனிடம் எப்படியெல்லாம்
கெஞ்சினோம் தெரியுமா?”
“………….”
“சிற்றில் கட்டுவது அப்படி ஒன்றும்
சாதாரணமான வேலை இல்லை அப்பா.
ஆற்று மணலை அள்ளி வந்து கைகளாலேயே
சலித்துச் சலித்து மிக மென்மையாக ஆக்கினோம். பிறகு தண்ணீர் தெளித்துப் பதமாக்கி, ஒவ்வொரு
பகுதியையும் பார்த்துப் பார்த்து, முதுகு நோக, எவ்வளவு பொறுமையாகக் கட்டினோம் தெரியுமா
அப்பா?
ஆனால் அங்கே கண்ணன் வந்து விட்டான்.
வந்தவன் தன் அழகுக் கண்களால் எங்கள் சிற்றில்களை ஒரு முறையேனும் பார்த்துப் பாராட்டுவான்
என்று நினைத்தேன். அவன் என்னடாவென்றால் சிற்றில்களைக் கலைக்கத் தொடங்கி விட்டான்! இது
நியாயமா அப்பா?”
“ஆம் அம்மா… சின்னஞ்சிறுமிகள்
கட்டிய சிற்றில்களைக் கலைக்க அவனுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?”
“ ‘ஆதிமூலமே’ என்று அலறிய யானைக்காக
பறந்தோடி வந்தவன் அல்லவா அப்பா? ஆனால் ஏன் இந்தச் சிறுமிகளிடம் மட்டும் அவனுக்கு அன்பு
இல்லை?”
“அன்பே வடிவானவன் அம்மா, அவன்.
ஆனாலும் இந்தக் குறும்பு விளையாட்டுகள் எல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களைச்
சிணுங்க வைத்து வேடிக்கை பார்க்கத்தான் அப்படிச் செய்திருப்பான்!”
“உண்மைதான் அப்பா. ஆனால் ஒன்று.
அவன் என்னதான் இதைப் போல அநியாயம் செய்தாலும் ஏனோ அவனிடம் மட்டும் கோபமே வர மாட்டேனென்கிறது.
அவன் என்ன செய்தாலும் அதில் ஏதோ மாயம் இருக்கிறதப்பா… அது நம்மை அப்படியே மதி மயங்கச்
செய்து விடுகிறது; மந்திரம் போலக் கட்டிப் போட்டு விடுகிறது!
அதனால் அவன் செய்கையால் வருத்தம்
ஏற்பட்டாலும் அவனைத் திட்டவே மனம் வரவில்லை அப்பா. எப்பேர்ப்பட்ட கள்வன் அவன்!” கண்ணன்
மேல் கொண்ட அன்பைப் போலவே கோதையின் கண்களும் அகன்று விரிகின்றன.
“ம்… அப்புறம் என்னம்மா செய்தான்
கண்ணன்?”
“சிற்றில்களைக் கலைத்ததோடல்லாமல்
எங்களையும் எட்டிப் பிடிக்க வந்தான் அப்பா. நாங்கள் அவன் கைக்கு அகப்படாமல் ஓடினோம்.
உடனே அவன், என்னிடமிருந்தா தப்பி ஓடுகிறீர்கள், நான் யாரென்று தெரியுமா என்று கூறி,
சங்கு சக்ரதாரியாக நின்றான் அப்பா!”
“என்ன!”, திகைத்து நிற்கிறார்
பெரியாழ்வார்!
“யாருக்கும் எளிதில் கிடைக்காத
அவன் தரிசனம் எங்களுக்குக் கிடைத்தது. ஆனாலும் நாங்கள் எங்கள் பிடிவாதத்தை விட்டுக்
கொடுக்கவில்லை. “நீ சங்குசக்ரதாரியாகவே இரு. ஆனால் எங்கள் மனம் இப்போது வருத்தத்தில்
இருக்கிறது. மனம் வருத்தத்தில் இருக்கையில் கருப்பஞ்சாறும் கசக்கும். நீ எங்களை இப்போது
என்ன சமாதானம் செய்தாலும் அது செல்லாது என்று சொல்லி விட்டோம் அப்பா”
“அப்படியா சொன்னீர்கள்?!”
“தெருவில் நின்று விளையாடினால்
அவன் தொந்தரவு செய்கிறான் என்று நாங்கள் எல்லோரும் அருகிலிருந்த என் தோழி ஒருத்தியின்
வீட்டினுள் புகுந்து, முற்றத்தில் ஒளிந்து கொண்டோம்.”
“கண்ணனிடமிருந்து ஒளிந்து கொள்வது
இயலாத காரியம் அம்மா!”
“சரியாகச் சொன்னீர்கள் அப்பா!
நாங்கள் அங்கிருக்கிறோம் என்பது அவனுக்கு எப்படித்தான் தெரிந்ததோ அவனுக்கு! அங்கும்
வந்து விட்டான்! வந்ததோடு அல்லாமல் அவனுடைய அந்த அழகிய பூவை வண்ணம் விகசிக்க, செவ்விதழ்கள்
கனிந்து நெளிய, மயிற்பீலி அசைந்தாட, கண்களில் குறும்பு கூத்தாட, எங்களை நோக்கி அப்படியொரு
பேரெழிலான புன் முறுவல் செய்தான். நாங்கள் அதைப் பார்த்து அப்படியே மயங்கி விட்டோம்!
அவன் முறுவலின் எழிலைக் கண்ட கண்களுக்கு வேறென்ன வேண்டும் அப்பா?” சொல்லும் போதே கோதையின்
கண்கள் செருகி கனவு நிலைக்குப் போகின்றன.
“ம்…அப்புறம்?” அவள் சொல்லச்
சொல்ல பெரியாழ்வாரின் கண்களின் முன்னேயும் காட்சிகள் விரிகின்றன. கண்ணனின் கனிமுகம்
தெரிகிறது.
“ஆனால் அவன் அப்படியே எங்களை
அணைக்க வந்த போது சட்டெனெ விலகி ஓடி வந்து விட்டோம். அக்கம் பக்கம் பார்த்தால் என்ன
சொல்வார்கள் அப்பா? இந்தக் கண்ணனுக்கு ஒன்றுமே தெரியவில்லை!”, அதிருப்தியுடன் உதட்டைச்
சுழிக்கிறாள் கோதை.
“சரிதானம்மா… அப்படியானால் இனி
சிற்றில் கட்டி விளையாடாதீர்கள். வேறு விளையாட்டு ஏதேனும் விளையாடுங்கள்”
“என்னப்பா அப்படிச் சொல்லி விட்டீர்கள்?
என் கண்ணன் வருவானென்றால், அவன் திருவடிகளால் கலைப்பானென்றால், அதற்காகவே எத்தனை சிற்றில்கள்
வேண்டுமானாலும் கட்டிக் கொண்டே இருப்பேனே!”
“எதிர்பார்த்ததுதான்”, என்பது
போல தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறார் பெரியாழ்வார்.
ஆடிப் பூர நாயகி ஆண்டாளின் திருவடிகளே
சரணம்!
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன்
கவிநயா
பி.கு.: நாச்சியார் திருமொழியில் இரண்டாம் திருமொழி பாடல்களை வைத்து எழுதியது.
அற்புதம் !
ReplyDeleteநன்றி தானைத் தலைவி!
Deleteசிற்றில் வந்து சிதையேன்டா:)
ReplyDeleteசிதையேல் - ”ஏல்” என்னும் எதிர்மறை வியங்கோள் வினைமுற்று விகுதி, ”ஏன்” என்று முன்னிலையில் மாறிவிட்டால், முன்னிலை உடன்பாடு ஆகிவிடுகிறது..
*செய்யேல் = செய்யாதே
*செய்யேன் = செய்ய மாட்டியா? செய்வாயாக!
அது போல், சிற்றில் வந்து சிதையேலே என்பதை, சிற்றில் வந்து சிதையேன்டா ஆக்கும் ஆண்டாள்:)
//அவன் வருவான் என்றால், அதற்காகவே எத்தனை சிற்றில்கள் வேண்டுமானாலும் கட்டிக் கொண்டே இருப்பேனே//
உண்மை தான் -க்கா..
அழகிய சிறுகதை, அழகிய ஆண்டாள்..
Happy Bday dee Kothai:)
//அது போல், சிற்றில் வந்து சிதையேலே என்பதை, சிற்றில் வந்து சிதையேன்டா ஆக்கும் ஆண்டாள்:)///
Deleteஅழகாச் சொன்னீங்க கண்ணா. வருகைக்கும் வாசிப்பிற்கும் மிகவும் நன்றி!
aadipuram anru engka uril irunthom.
ReplyDeleteவாங்க கீதாம்மா! எந்த ஊரு உங்க ஊரு? :)
Deleteகும்பகோணம் அருகே பரவாக்கரை தான். புகுந்த ஊர் அதானே. ஆடிப் பூரம் அன்று குலதெய்வம் கோயிலில் இருந்தோம். :)
Delete