Saturday, August 16, 2014

குக்கூ கனவு

அனைவருக்கும் குட்டிக் கிருஷ்ணனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!


சுப்புத் தாத்தாவின் குரலில், இசையில்... மிக்க நன்றி தாத்தா! கேட்டுக்கிட்டே வாசிங்க!



ஒற்றைக் குயிலொன்று ஒருமரத்தில் நின்று
குக்கூ கூவென்று கூவுதடி;
கண்ணன்கை வேய்ங்குழல் தானென்று மயங்கி
சின்னக் குயில்கூத் தாடுதடி!

புற்றுக்குள் ளிருந்து நாகமொன்று வந்து
சீறிப் படமெடுத் தாடுதடி;
சென்னியில் நர்த்தனம் செய்வான் கண்ணனென்று
கற்பனை அதற்கு ஓடுதடி!

கானமயில்களு திர்த்திட்ட தோகைகள்
காற்றினி லேறிவிரை யுதடி;
மாயக்கண்ணன் தன்னைச் சூடிக்கொள்வா னென்ற
எண்ணத்தி லேவிளை யாடுதடி!

வானமெங்கும் சின்னச் சின்னக் கருமேகம்
சூல்கொண்டு மெள்ளவே நாணுதடி;
நீலகண்ணன் தன்னைப் போர்த்திக் கொள்வானென்ற
நிச்சயத் துடனே தோணுதடி!

பட்டுப் பூச்சிகளும் இட்டமுடன் வந்து
பட்டுத் துகிலாக வேண்டுதடி;
இட்டமுடன் அந்தக் குட்டிக் கண்ணன்தம்மை
ஆடையாக்கிக் கொள்ள ஏங்குதடி!

மல்லிகை மந்தாரம் பாரிஜாத மெல்லாம்
மலர்ந்திதழ் விரித்துச் சிரிக்குதடி;
தங்கஎழில் கண்ணன் வண்ணமணி மார்பில்
தவழ்ந்திடக் கனவு காணுதடி!

--கவிநயா

முன்பு ஒரு முறை கண்ணன் பாட்டு தளத்தில் இட்டது...

5 comments:

  1. வணக்கம்

    சுப்புத்தாத்தாவின் குரலில் பாடியபாடல் நன்றாக உள்ளது அதற்கு ஏற்ற வகையில் இசையும் கொடுத்து அருமையாக பாடியுள்ளார் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்!

      Delete
  2. சூரி சாரின் குரலில் பாடல் அருமை. குயிலின் கூவல், நாகத்தின் சீற்றம், பட்டாம் பூச்சியின் படபடப்பு ஆகியவற்றை அழகாகக் கொண்டு வந்துள்ளார்.
    பகிர்வுக்கு நன்றி.

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமால்ல? :)

      மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)