வீட்டில் சமையல் நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு பானையில் அரிசி, பருப்பு, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, இன்னும் காய்கறிகளெல்லாம்
தண்ணீரில் கிடக்கின்றன. அடுப்பை மூட்டியதும் பானையில் சூடேறத் தொடங்குகிறது. தண்ணீர்
கொதிக்கிறது. அரிசி, பருப்பு, காய்கறிகளெல்லாம் கொதிக்கும் தண்ணீரில் துள்ளிக் குதிக்கின்றன.
அவற்றுக்கெல்லாம் ஒரே சந்தோஷம். “நான் எப்படி நடனமாடுகிறேன் பாரேன்”, என்று மீண்டும்
மீண்டும் துள்ளுகின்றன. வீட்டுப் பிள்ளைகளெல்லாம் அதிசயமாய் அவற்றை வேடிக்கை பார்க்கின்றார்கள்.
“அட, ஆமாம்…. என்ன அருமையான நடனம்!”, என்று. அம்மா வந்து அடுப்பை அணைத்து பானையை இறக்கி
வைத்ததும், ஆட்டமெல்லாம் நின்று விடுகிறது.
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
சொல்கிறார், நமக்கும் கத்தரிக்காய்க்கும் வித்தியாசம் இல்லையாம். ஏன் அப்படி?
ஒரு காரியம் செய்து அது நன்றாக
அமைந்து விட்டால், நாம் மிகவும் பெருமைப் பட்டுக் கொள்கிறோம். நாம் பெரிதாக சாதித்து
விட்டதாக கர்வம் கூட வந்து விடுகிறது, சில சமயம். எவ்வளவு அழகாக ஆடுகிறேன் பார் என்று
பெருமைப் பட்டுக் கொள்ளும் கத்தரிக்காயைப் போல. கத்தரிக்காயின் நடனத்திற்குக் காரணம்
என்ன? தண்ணீர் கொதிப்பது. தண்ணீர் கொதிப்பதற்குக் காரணம், அதன் அடியில் எரியும் நெருப்பு.
இதை அறியாமல் பெருமைப்பட்டுக் கொள்ளும் கத்தரிக்காயைப் போலத்தான் மனிதர்களும்.
இறைவனின் அருள் என்ற நெருப்பில்லாமல்
எதுவும் நடவாது. ஒரு இலை அசைவதற்குக் கூட அவனருள் வேண்டும். அவன் நினைத்தால் இந்த உலகை
எது வேண்டுமானாலும் செய்யலாம். நிறுத்தலாம். அசைக்கலாம். ஆக்கலாம். அழிக்கலாம். அவனன்றி
ஓரணுவும் அசையாது. நாம் செய்யும் காரியங்களுக்குப் பின்னால் இறைவனின் அருள் வேலை செய்கிறது.
இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்த எளிய கதை மூலம் உணர்த்துகிறார்.
”நாம் இதைச் சாதித்தோம்,
அதைச் சாதித்தோம் என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நாம் எதையும் சாதிப்பதற்கான
புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது?இந்த பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற
ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால்
நம்மிடம் ஒரு சுவாசம்கூட இருக்கமுடியுமா. ஒருநாள், இதனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற
நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம்
நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு
சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது
அசட்டுத் தனம்தான் என்று தெரியும். எத்தனைக்கெத்தனை இந்த அநுபவத்தில் தெரிந்துகொண்டு
அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும்
நமக்குக் கிடைக்கும். “ என்கிறார் ஸ்ரீ மஹா பெரியவர். (‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம்).
அவனருளாலே அவன்
தாள் வணங்கி…
எல்லோரும் நன்றாக
இருக்க வேண்டும்.
அன்புடன்
கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.colourbox.com/vector/cheerful-cartoon-eggplant-raising-his-hands-vector-3451338