Sunday, April 28, 2013

கத்தரிக்காயின் நடனம்


 வீட்டில் சமையல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பானையில் அரிசி, பருப்பு, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, இன்னும் காய்கறிகளெல்லாம் தண்ணீரில் கிடக்கின்றன. அடுப்பை மூட்டியதும் பானையில் சூடேறத் தொடங்குகிறது. தண்ணீர் கொதிக்கிறது. அரிசி, பருப்பு, காய்கறிகளெல்லாம் கொதிக்கும் தண்ணீரில் துள்ளிக் குதிக்கின்றன. அவற்றுக்கெல்லாம் ஒரே சந்தோஷம். “நான் எப்படி நடனமாடுகிறேன் பாரேன்”, என்று மீண்டும் மீண்டும் துள்ளுகின்றன. வீட்டுப் பிள்ளைகளெல்லாம் அதிசயமாய் அவற்றை வேடிக்கை பார்க்கின்றார்கள். “அட, ஆமாம்…. என்ன அருமையான நடனம்!”, என்று. அம்மா வந்து அடுப்பை அணைத்து பானையை இறக்கி வைத்ததும், ஆட்டமெல்லாம் நின்று விடுகிறது.

குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்கிறார், நமக்கும் கத்தரிக்காய்க்கும் வித்தியாசம் இல்லையாம். ஏன் அப்படி?

ஒரு காரியம் செய்து அது நன்றாக அமைந்து விட்டால், நாம் மிகவும் பெருமைப் பட்டுக் கொள்கிறோம். நாம் பெரிதாக சாதித்து விட்டதாக கர்வம் கூட வந்து விடுகிறது, சில சமயம். எவ்வளவு அழகாக ஆடுகிறேன் பார் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் கத்தரிக்காயைப் போல. கத்தரிக்காயின் நடனத்திற்குக் காரணம் என்ன? தண்ணீர் கொதிப்பது. தண்ணீர் கொதிப்பதற்குக் காரணம், அதன் அடியில் எரியும் நெருப்பு. இதை அறியாமல் பெருமைப்பட்டுக் கொள்ளும் கத்தரிக்காயைப் போலத்தான் மனிதர்களும்.

இறைவனின் அருள் என்ற நெருப்பில்லாமல் எதுவும் நடவாது. ஒரு இலை அசைவதற்குக் கூட அவனருள் வேண்டும். அவன் நினைத்தால் இந்த உலகை எது வேண்டுமானாலும் செய்யலாம். நிறுத்தலாம். அசைக்கலாம். ஆக்கலாம். அழிக்கலாம். அவனன்றி ஓரணுவும் அசையாது. நாம் செய்யும் காரியங்களுக்குப் பின்னால் இறைவனின் அருள் வேலை செய்கிறது. இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்த எளிய கதை மூலம் உணர்த்துகிறார்.

”நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம் என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது?இந்த பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மிடம் ஒரு சுவாசம்கூட இருக்கமுடியுமா. ஒருநாள், இதனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத் தனம்தான் என்று தெரியும். எத்தனைக்கெத்தனை இந்த அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும் நமக்குக் கிடைக்கும். “ என்கிறார் ஸ்ரீ மஹா பெரியவர். (‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம்).

அவனருளாலே அவன் தாள் வணங்கி…

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.colourbox.com/vector/cheerful-cartoon-eggplant-raising-his-hands-vector-3451338


19 comments:

  1. Replies
    1. வாங்க பார்வதி. நன்றி!

      Delete
  2. கத்தரிக்காய் நடனம் காண ஓடோடி வந்த என்னை இப்படி ஏமாற்றலாமா கவிநயா?

    ஆடு கத்தரிக்காய் ஆடு! :)))))

    ReplyDelete
    Replies
    1. //கத்தரிக்காய் நடனம் காண ஓடோடி வந்த என்னை இப்படி ஏமாற்றலாமா கவிநயா? //
      இப்படிச் சொன்னதாலதானே நீங்க அப்படி வந்தீங்க? :)

      //ஆடு கத்தரிக்காய் ஆடு! :)))))//
      படத்தைப் பார்க்கலையா அம்மா? :)

      Delete
  3. அருமையான அர்த்தமுள்ள பகிர்வுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. எல்லா கத்திரிக்காய்களுமா ஆடுகின்றன? சில கத்திரிக்காய்கள் எண்ணெய்க் குளியலோடு மினுமினுவென்று மின்னுகின்றன. சில கத்திரிக்காய்கள் கதறக் கதற பொடிப்பொடியாய் நறுக்கப்பட்டு பொடி போட்டு வதக்கப்படுகின்றன. சில கத்திரிக்காய்கள் நெய்ப்பூச்சு பூசிக்கொண்டு உள்ளுக்குள் நிறைய மசாலாக்களை அடைத்துக் கொண்டு உப்பிப் பெருத்துப் போயிருக்கின்றன. இன்னும் சில கத்தரிக்காய்கள் நெருப்பில் சுடப்பட்டு தோலுரிக்கப்பட்டு படாதபாடு பட்டு கொத்சாகின்றன. ஒவ்வொரு கத்திரிக்காய்க்கும் ஏன் இப்படி ஒவ்வொரு நிலை? என்ன காரணம்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிரா. கத்தரிக்காய் உங்களையும் (சமையல் கட்டுக்கு) இழுத்துருச்சா? :) வேடிக்கையா கேட்டீங்களா, இல்லை சீரியஸா கேட்டீங்களான்னு தெரியல, இருந்தாலும் நானு சீரியஸாகவே பதில் சொல்றேன்...

      நீங்க சொன்ன மாதிரி மினுமினுன்னு எண்ணெய்க்குளியலோட மினுக்கற கத்தரிக்காய், "நான் எவ்ளோ அழகு பாரேன்னு" சொல்லும். பொடிப் பொடியாய் நறுக்கிப் பொடி போட்டால், "நான் எவ்ளோ சுவையாய் இருக்கேன் பாரு"ன்னு கூப்பிடும். கொத்சாகிற கத்தரிக்காய்கள், "உனக்காக என் வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கேன்"ன்னு சொல்லக் கூடும். இந்த மாதிரியான அகங்காரத்தைப் பற்றிதான் பேசறோம் இங்கே. இதில் கத்தரிக்காயின் திறமை எங்கே இருக்கு? சமையல்காரரின் (உங்க) கையில்தானே அத்தனையும் இருக்கு!

      உஸ்... அப்பாடா! யாருப்பா அங்கே! ஒரு சோடா ப்ளீஸ்! :)

      Delete
    2. உங்களுக்கு பதில் சொல்ற ஜோர்ல நன்றி நவில மறந்துட்டேன். வருகைக்கு நன்றி தம்பீ!

      Delete
    3. எல்லாம் சமையல்காரன் கைவேலை. அப்போ கத்திரிக்காய்களுக்குன்னு ஒன்னுமே இல்லையா? எல்லாமே சமையல்காரன் கைவண்ணம்னா கத்திரிக்காய்கள் எதுக்கு?

      நன்றியெல்லாம் சொல்லக்கூடாது :) நான் தொடர்ந்து படிச்சிக்கிட்டுதான் இருக்கேன். கத்திரிக்காய்னு வந்ததால அப்படியொரு கேள்வி கேட்டேன் :)

      Delete
    4. கத்தரிக்காய் எதுக்கு? சமையல்காரன் கை வண்ணத்தைக் காட்டறதுக்குதான்!

      தொடர்ந்து வாசிக்கிறதுக்கு நன்றிப்பா. :)

      Delete
  5. மிக அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் கவிநயா. நல்ல பதிவு.

    இன்று உலக நடன தினமென அறிந்தேன். கத்திரிக்காய் நடனம் அதையொட்டியதோ என நினைத்து வந்தேன் நானும்:).

    Anyway, தங்களுக்கும் அனைத்து நடனக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. //இன்று உலக நடன தினமென அறிந்தேன். கத்திரிக்காய் நடனம் அதையொட்டியதோ என நினைத்து வந்தேன் நானும்:).//

      பதிவிட்ட பிறகுதான் தெரிந்தது ராமலக்ஷ்மி. :) வாழ்த்துகளுக்கும், வாசிப்பிற்கும் மிக்க நன்றி.

      Delete
  6. நல்ல ஒப்பீடு...

    ரசிக்க வைத்தது கத்தரிக்காய் நடனம்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் :) ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகளில் வாசித்தது...

      Delete
  7. @gragavanblog,

    ஆஹா, உட்கார்ந்து யோசிச்சிருப்பீங்க போல! :)))))))

    ReplyDelete
    Replies
    1. அம்மா, ஜிரா ஒரு சமையல் கலை வித்தகர். அதான் அப்படி! :)

      Delete
  8. "சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத் தனம்தான் "

    ஒரு சின்ன விஷயத்தில் வெற்றி கிடைத்தாலும் தன்னுடைய வெற்றியாநினைத்து மனசு ஆடும் ஆட்டமிருக்கே..அப்பப்பா!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அம்மா. மனசு இருக்கே... பொல்லாதது!
      வருகைக்கு நன்றி லலிதாம்மா.

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)