Monday, March 18, 2013

மலேஷியாவின் செல்லப் பிள்ளை - 4

சென்ற பதிவின் தொடர்ச்சி...

குட்டி சைனீஸ் பிள்ளைகள் தேங்காய் உடைக்கத் தயாராக...



அன்று இரவு கோவிலில் இருந்து ஷட்டில் வண்டியில் மறுபடி தண்ணீர் மலைக் கோவிலுக்குப் போய் விட்டு வந்தோம். மறு நாள் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் பால்குடம் எடுத்துக் கொண்டு போகத் தொடங்கி விடுவார்கள் என்று தெரிந்து கொண்டு, தைப்பூசத்தன்று அதி காலையில் நானும் நாத்தனாரும் சிவன் கோவிலுக்கு வந்து விட்டோம். நாங்கள்தான் முதலில். யாருமே, அர்ச்சகர்கள் கூட வந்திருக்கவில்லை. பிறகுதான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். ஒரு அர்ச்சகர் ஒவ்வொரு சந்நிதியாகப் போய் அபிஷேகம் செய்தார்; இன்னொருவர் ஒவ்வொரு சந்நிதியிலும் அலங்காரம் செய்தார்.

அலங்காரம் செய்யும் அழகையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போல இருக்கிறது. கூட்டம் இல்லை என்பதாலோ என்னவோ, திரை போடாமலேயே அந்தக் கோவிலில் இருந்த குட்டி முருகனுக்கு அலங்காரம் செய்தார். அழகாக கண்களை எழுதி, இதழ்களை எழுதி, திலகமிட்டு, இப்படி நிமிடமாக எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டார்!

பால்குடங்கள்

பிறகு குடங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராக வந்தார்கள். பெயர் கொடுத்து, எண்ணிக்கை பார்த்து, பூஜை செய்து, அர்ச்சகரே பாலை ஊற்றித் தந்தார். பெரும்பாலும் பெண்கள்தான். வண்ண வண்ண மயமான ஆடைகளுடன் பலவித வயதுகளில் சிறுமி முதல் மூதாட்டிகள் வரை பால் குடம் எடுக்கிறார்கள்.

பால் குடங்கள் தண்ணீர் மலைக்குப் போய்ச் சேர்ந்த பின் அங்கே முருகனுக்கு அபிஷேகம் நடைபெறும். அலங்காரம், தீபாராதனையுடன், தைப்பூசக் கொண்டாட்டம் முடிவடையும்.

நாங்கள் இருவரும் பால்குடம் எடுப்பதைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து விட்டு, கொஞ்ச தூரம் பின்னால் சென்றோம். பிறகு ஹோட்டலுக்குப் போய் சப்பிட்டு விட்டு, கணவன்மார்களைக் கூட்டிக் கொண்டு மறுபடியும் ஷட்டில் பிடித்து தண்ணீர் மலைக் கோவிலுக்குச் சென்றோம். 

முருகனைச் சுமந்து கொண்டு நேற்று வந்த வெள்ளி ரதம் ஒரு அறை(?) (ஷெட்)டில் சமர்த்தாக அமர்ந்திருந்தது. இரவு இரண்டரை மணி ஆகி விட்டதாம் வருவதற்கு. இந்த அளவு தாமதமாக இது வரை வந்ததே இல்லையாம். தேங்காய் உடைப்பது அதிகமாகி விட்டதால் தாமதம் என்றார்கள். 

 வெள்ளி ரதத்தின் பக்கவாட்டில் வேலைப்பாடுகள்...

சந்நிதியில் மூலவருக்கு அருகில், அவருக்கு சரியாக முன்னால், உற்சவ மூர்த்தியை வைத்திருந்தார்கள். அதனால் இருவரையும் சில குறிப்பிட்ட கோணங்களில் மட்டும்தான் பார்க்க முடிந்தது. அதுவும், அந்த மலைக் கோவிலில் அழகாக வரிசைப் படுத்தி விட்டது போல் இங்கே செய்யாததால், முருகனின் தரிசனம் பெறுவது அத்தனை எளிதாக இல்லை. கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லாத் திசைகளிலும் போய் முயற்சித்த பின், ஒரே ஒருவர் இரக்கப்பட்டு, நீங்களும் பாருங்கள் என்று இடம் கொடுத்தார். அங்கே போய் நாங்கள் ஒவ்வொருவராக அபிஷேகத்தைப் பார்த்தோம்.

அலங்காரம் முடிய நேரம் ஆகும் என்று தெரிந்தது. மதியம் மறுபடியும் கோலாலம்பூர் செல்லும் பேருந்தைப் பிடிக்க வேண்டியிருந்தது. அதனால் அங்கிருந்த அன்னதான வரிசையில் சென்று நின்று கொண்டோம். தீபம் பார்க்காமல் சாப்பிடப் போகிறோமே என்று கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. தகரத்தில் மூடி மிகப் பெரிய கொட்டகை போட்டிருந்தார்கள். ஒரே சமயத்தில் 700 பேர் சாப்பிடும் படி மேசை நாற்காலிகள் போட்டிருந்தார்கள். ஒரு பந்தி (700) முடிக்க 20 நிமிடங்கள் என்று கணக்கு. சரியாக 700 பேர்களை உள்ளே விட்டார்கள். குறைந்தது 3 அல்லது 4 மணி நேரம் வரை பந்தி நடக்குமாம். எக்கச்சக்க தொண்டர்கள், குட்டிப் பிள்ளைகள் எல்லோரும் பரிமாற, உதவி செய்யத் தயாராக இருந்தார்கள். மின் விசிறிகள் போடப்பட்டிருந்தன. டி.வி. மானிட்டர்கள் ஆங்காங்கே முருகனின் கர்ப்பக்கிருகம் தெரிகிற மாதிரி அமைக்கப்பட்டிருந்தன.

தண்டாயுதபாணிக்கு அலங்காரம் முடிந்து தீபம் காண்பித்த பின்னர், அன்ன பதார்த்தங்களுக்கு தீபம் காண்பிக்கப்பட்டு, பிறகே தொடங்குவார்களாம். இதனால் நாங்கள் உள்ளே சென்று ரொம்ப நேரம் சும்மா உட்கார்ந்திருந்தோம். அலங்காரம் முடிந்த பின் தீபத்தை டி.வி. மானிட்டர்களிலேயே பார்த்தோம். தீபம் பார்க்காமல் போகிறோமே என்ற குறையைக் குமரன் இப்படியாகத் தீர்த்து வைத்தான்!

அன்னதானம் அமர்க்களமாக இருந்தது, பருப்பு நெய் முதல் பாயசம் வரையில் ஒன்று விடாமல் செய்து விருந்து படைத்தார்கள். சாப்பிட்டு முடிந்த பின் மறுபடியும் வந்து முருகனைப் பார்த்து விட்டு பினாங்கிலிருந்து கிளம்பி, கோலாலம்பூருக்கு இரவு வந்து சேர்ந்தோம்.

மறுநாள் காலையில் தான் ‘பத்து மலை’ முருகனைப் போய்ப் பார்த்தோம். முதல் நாள்தான் தைப்பூசம் முடிந்திருந்த படியால் அதன் பாதிப்பு எல்லா இடங்களிலும் தெரிந்தது – குப்பைகள், மலையாகக் குவிந்திருந்த செருப்புகள், இப்படி. பிரபலமான அந்தப் பெரீய்ய முருகன் முன்னால் நின்று கொண்டிருந்தான். 

பத்து மலை முருகன்

பத்து மலைப் படிகள் குறுகலாகவும் உயரமாகவும் இருந்தன. அதனால் ஏறுவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது, தண்ணீர் மலையைக் காட்டிலும். ஒரு பெண்மணி வேண்டுதலுக்காக முழங்கால்களால் படி ஏறினார். குரங்குகள் வேறு அதிகம் இருந்தன. கோலாலம்பூரில் அடிக்கடி மழை பெய்து கொண்டே இருந்தது. அதுவும் அடை மழை! அதனால் பத்து மலைக் குகைக்குள்ளும் ஆங்காங்கே தேங்கிய தண்ணீர். மிதியடிகளைப் போட்டுக் கொண்டேதான் மேலே போனோம். தனியாக விட இடம் இல்லை. பலரும் அர்ச்சனைக்குப் பொருட்கள் வாங்கி விட்டு அங்கேயே விட்டுச் சென்றார்கள். கூட்டத்தைப் பார்த்து, நாங்கள் அர்ச்சனைக்கெல்லாம் வாங்கவில்லை.  அங்கிருந்த பையன், “வாங்கணும்னு இல்லை, இப்படியே போட்டுட்டுப் போங்க” என்றான். 

பத்து மலைக் குகை வாயில்                    பத்து மலைக் குகைக்குள்ளே...

அன்றைக்கு மதியம் செம்பருத்தி தோட்டமும், ‘ஆர்கிட்’ தோட்டம் பார்த்தோம். இன்னும் சில பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கின்றன என்றார்கள், ஆனால் நேரமின்மையின் காரணமாக போக முடியவில்லை.

அன்றைக்கு மாலை தோழியின் மகளுடைய திருமண வரவேற்புக்குப் போய் விட்டு, மறு நாள் காலை சென்னை!

நடுவில் சைனா டவுனுக்குப் போய் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணினோம். அங்கே நன்றாக பேரம் பேசலாம் என்று சொன்னதால். ஆனால் அப்படி ஒன்றும் பேரம் பேச முடியவில்லை. ஒரு அளவிற்கு மேல் குறைக்கவே இல்லை. வேண்டாம் என்று வந்து விட்டால், “சரிதான் போய்க்கோ”, என்று விட்டு விடுகிறார்கள். பின்னாடியே வந்தெல்லாம் கெஞ்சவில்லை! 


 ஆர்கிட் தோட்டத்திலிருந்து சில மலர்கள்...

மலேஷியா போகிறோம் என்றவுடனேயே என் தங்கை அங்கே அருமையான தோசைக் கல் கிடைக்கிறதாம், வாங்கிக் கொண்டு வா என்று சொல்லியிருந்தாள். கடை பெயரெல்லாம் கூட (ரமணி ஸ்டோர்ஸ்!) விசாரித்துச் சொல்லி விட்டாள்! அந்தக் கடையைத் தேடிப் பிடித்துப் போனால், அவள் சொன்னது போல் இல்லை. ஆனால் இரும்பிலேயே இலேசான கல் இருந்தது. அந்தக் கடையிலிருந்த பையன், ‘ஏன்க்கா, இங்கே இருக்கறதெல்லாம்  நம்மூர்ல இருந்துதான் வருது; நீங்க என்னடான்னா அங்கேருந்து இங்கே வந்து, அதையே வாங்கிட்டுப் போறீங்களே!” என்றான் :) கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த போது, “எப்படா ஊருக்குப் போவோம்னு இருக்குக்கா”, என்றான். அதைக் கேட்ட போது வருத்தமாக இருந்தது :( அந்தப் பையனின் கனவுகள், கடமைகள் சீக்கிரம் நிறைவேறி அவன் ஊர் திரும்ப முருகன் அருளட்டும்.

தண்டாயுதபாணியின் திருவடிகள் சரணம். தண்டாயுதபாணியின் மேலான ஒரு பாடலை இங்கே கேட்கலாம்... எழுதும்படி ஊக்குவித்து, பிறகு பாடியும் இட்ட சுப்பு தாத்தாவிற்கு மிக்க நன்றி!

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

முற்றும்.
(யாருப்பா அங்கே அப்பாடா’ன்னு சொன்னது?! :)

10 comments:


  1. அதற்குள் பயணத்தை முடித்து விட்டீர்களே என்று தான் தோன்றுகிறது... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு ரொம்ப நல்ல மனசா இருக்கே :) நன்றி தனபாலன். ஆமாம், மொத்தமே 4 நாள்தான் போனதால் பயணம் சீக்கிரம் முடிந்து விட்டது, அதனால் கட்டுரையும்... :)

      Delete
  2. கூடவே அழைத்துக் கொண்டு போய் வந்த மாதிரி இருந்தது. சீக்கிரமே முடிந்த மாதிரி தான் எனக்கும் தோன்றியது. கட்டுரையின் படங்கள் ரொம்ப அழகாக இருந்தன. 'தோசைக்கல்' விஷயத்தில் கடைப்பையன் சொன்னது போல் எனக்கு இங்கேயே நடந்திருக்கிறது. தாம்பூல செட் ஒன்று 30 ரூபாய் என்று வாங்கி விட்டு, திருச்சி போனால், அதே செட் ரூ18க்கு விற்றார்கள். கேட்டதற்கு, 'இங்கிருந்துதான் ஒங்க ஊருக்கே அனுப்புறோம்' என்றார்கள்.

    உங்களால் நாங்களும் மானசீகமாகவே தரிசனம் செய்து விட்டோம். மிக்க நன்றி. தங்களின் பாடலும்,('தண்டம் ஒரு கையிலே') சுப்புத் தாத்தாவின் இசைப்பாடலும் சூப்பர்!!.அடுத்த பயணக் கட்டுரைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கூடவே வந்ததற்கும், விரிவான பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி, பார்வதி! 'தண்டம் ஒரு கையிலே' பாடலைக் கேட்டு ரசித்தமைக்கும் நன்றிகள் பல.

      இன்னொரு பயணக் கட்டுரையா! நான் அதிகமாக எங்கேயுமே போறதில்லை! ரிச்மண்டே கதி எனக்கு. அப்படி மறுபடி அதிசயமா எங்கேயும் போனா, கண்டிப்பா நீங்க சொன்னதை நினைவு வச்சுக்கிறேன் :) உங்க ஆர்வம் எனக்கு ஊக்கமா இருக்கு; அதனால, நன்றி!

      Delete
  3. தனபாலன் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன். அப்பாடா என்றெல்லாம் இல்லை:)! அத்தனை அழகாகத் தொகுத்து வழங்கியிருந்தீர்கள்! ஆர்கிட் மலர்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி! உங்களைத்தான் நினைச்சுக்கிட்டேன், புகைப்படங்கள் எடுத்து ஒரு கலக்குக் கலக்கியிருப்பீங்க! அவ்ளோ அழகான மலர்கள், பல வித வண்ணங்களில்! இன்னும் கொஞ்சம் படங்கள் இருக்கு, அடுத்த பதிவில் பகிர்ந்துக்கறேன்...

      Delete
  4. அப்பாடா இல்லை!
    எப்போடா அடுத்தது?

    ReplyDelete
    Replies
    1. இது நல்லாருக்கே :) எப்போடா, அப்படின்னு அந்தக் குட்டிப் பயலைத்தான் கேட்கணும். ரசித்து வாசித்தமைக்கு நன்றி லலிதாம்மா!

      Delete
  5. நல்ல பயணம்...
    பத்து மலையை நேரில் வந்து ரசித்தது போல் உங்கள் எழுத்து எங்களை கட்டிப் போட்டுவிட்டது..
    அருமை...
    அடுத்த பயணக் கட்டுரை எப்போது?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சே.குமார். ரசித்தமைக்கு மிக்க நன்றி. மறுபடி எங்கேயேனும் போக வாய்ப்பு கிடைச்சா, அப்போ பார்க்கலாம்... :)

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)