Sunday, March 3, 2013

மலேஷியாவின் செல்லப் பிள்ளை - 2

சென்ற பதிவின் தொடர்ச்சி...


மலேஷியாவின் செல்லப் பிள்ளை யாரென்று இந்நேரம் ஊகித்திருப்பீர்கள். நம்முடைய சொத்தும் சொந்தமுமான சிவசக்தி பாலன், நம் செல்லம் முருகனேதான் மலேஷியாவிற்கும் செல்லப் பிள்ளையாக இருக்கிறான். தைப்பூசம் சமயத்தில் அந்த 4 நாட்களில் மலேஷியாவையே ஒரு கலக்குக் கலக்கி விடுகிறான்! நாடே ‘ஜே, ஜே’ என்று இருக்கிறது; மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குத் ‘தடா’ போட்டு விடுகிறார்கள். எல்லா இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. நம் மக்கள் மட்டுமின்றி, சீன மக்கள், மலேஷிய மக்கள், எல்லோருமே முருகனை மிகப் பக்தியுடன் வணங்குகிறார்கள்!

மலேஷியாவில் தைப்பூசம் இரண்டு இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்று, கோலாலம்பூரில் உள்ள, எல்லோருக்கும் தெரிந்த பத்து மலையில்… அல்லது Batu caves-ல். இங்கு தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். இன்னொரு இடம் பினாங்கில் உள்ள தண்ணீர் மலையில்… இங்கு பலப்பல வருடங்களாக நகரத்தார்கள் தைப்பூசத் திருவிழாவைச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். நாங்கள் சென்றது இந்த தண்ணீர் மலைக்குத்தான்.

 தம்பிக்கு முன்னால் சென்ற வினை தீர்க்கும் விநாயகர்

பினாங்கில் நாங்கள் பேருந்தில் சென்று இறங்கிய போது இரவாகி விட்டது. மறு நாள் அதிகாலையில் வெள்ளி ரதம் நகரத்தார் விடுதியிலிருந்து கிளம்ப இருந்தது.  அதில்தான் முருகக் கடவுள் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி, தண்ணீர் மலையில் உள்ள கோவிலுக்குப் போவார். அன்றைக்கு இரவு பத்தரை மணி வரை விடுதி திறந்திருக்கும் என்றும், அதற்குள் போனால் உற்சவ மூர்த்தியைத் தரிசிக்கலாம் என்றும் கேள்விப்பட்டு, போய் இறங்கின உடனேயே அவசரமாக விடுதிக்குப் போனோம். ஆனால் பத்து மணிக்கெல்லாம் கதவை மூடி விட்டார்கள் :( அதனால் முருகனைப் பார்க்க முடியவில்லை.

அதன் பிறகுதான் அத்தனை நேரத்திற்குப் பிறகு எங்கே போய்ச் சாப்பிடுவது என்று யோசித்தோம். அப்போது விடுதியிலேயே அன்னதானம் நடந்து கொண்டிருந்த படியால், அங்கிருந்த ஒருவர், நீங்கள் இங்கேயே சாப்பிடலாமே என்றார்.

(சொல்ல மறந்து விட்டேனே… மலேஷியாவில் சைவ உணவு கிடைப்பது அரிதாக இருக்கிறது. எங்கே போனாலும் சோயாவைத்தான் (soy) சைவ சிக்கன், சைவ மீன் என்று சொல்லி ஆனால் அசைவம் சமைக்கும் அதே முறையில் சமைத்துத் தருகிறார்கள். ஒரு தரம் சாப்பிட்டதோடு சரி, பிறகு இறங்க மாட்டேனென்று விட்டது! நல்ல வேளை அன்னதானமும், சரவணபவனும், உட்லண்ட்ஸும் இருந்ததால் பிழைத்தோம்!)

சந்தோஷமாக காரசாரமான வற்றல் குழம்பும் கூட்டும் வைத்து திருப்தியாக சோறு சாப்பிட்டோம். தேவாமிர்தமாக இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

மறுநாள் (தைப்பூசத்திற்கு முதல் நாள்) காலை ஆறரை மணிக்கு வெள்ளி ரதம் புறப்படுவதாக இருந்தது. அதனால் ஹோட்டலுக்குப் போய் உறங்கி எழுந்து, குளித்து, அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் திரும்பவும் அதே இடத்திற்கு வந்து விட்டோம்.

கிட்டத்தட்ட ஐம்பது, அறுபது காவடிகள் ஏற்கனவே அங்கே இருந்தன. இருள் பிரியாத அந்த நேரத்திலும் கூட்டம் எக்கச்சக்கமாக இருந்தது. வெள்ளி ரதத்தில் முருகன் ஏறியதைக், கூட்டத்தில் இடித்துக் கொண்டு பார்த்தோம். ஏறிய பிறகு அவனுக்கு அர்ச்சனை, தீபாராதானைகள் நடந்தன. நிறையப் பேர் பெரிய பெரிய தாம்பாளங்களில் மாலைகளும், பட்டாடைகளும், பழங்களும் வைத்துக் கொண்டு வருகிறார்கள். அந்தக் கூட்டத்திலும் ஒருவரையும் விடாமல், அனைவருக்கும், தேங்காய் உடைத்து, அதிலேயே கற்பூரம் வைத்து தீபமிட்டு, விபூதி பிரசாதம் கொடுத்து விடுகிறார்கள். காவடிகள் எல்லோரும் பூஜையை முடித்துக் கொண்டு முன்னால் சென்று விட்டார்கள். 

 காவடிகள்

அண்ணன் கணேசனும் ஒரு குட்டி வண்டியில் எழுந்தருளியிருந்தார். அவர் முன்னால் போக, தம்பி முருகன், பின்னால் சென்றார். வெள்ளி ரதத்தில் முருகன், அர்ச்சகர் தவிர, கிட்டத்தட்ட 10 பேர்கள் இருந்திருப்பார்கள். இரண்டு பெரிய மாடுகள் அந்த ரதத்தை இழுத்துச் சென்றன. பக்தர்கள் அவைகளுக்கும் சாப்பிட ஏதாவது கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இருந்தாலும், பாவம்தான் அந்த மாடுகள். வெயிலில், பத்தடிக்கு ஒரு முறை நின்று நின்று இழுத்துச் செல்ல வேண்டும். எங்களுக்குத் தெரிந்தே மாலைக்குள் 3 முறை மாடுகளை மாற்றினார்கள். அதற்குப் பிறகும் மாற்றியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த வரை பரவாயில்லை. முருகனிடம் அந்த மாடுகளுக்காகத்தான் முதலில் வேண்டிக் கொண்டேன். ஆனால் அவை செய்த புண்ணியம்தான் என்னே! என்றும் நினைத்துக் கொண்டேன்…. முருகன் இங்கிருந்து தண்ணீர் மலை போய்ச் சேர நள்ளிரவாகி விடும் என்று பேசிக் கொண்டார்கள்.

வெள்ளி ரதம் மிக அழகாக இருந்தது. உள்ளே இருந்த வேலனோ அதை விட அழகாக இருந்தான். புருவம் தீட்டி, பொட்டிட்டு, செவ்விதழில் புன்னகை மிளிர, வண்ண வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, பலவிதமாக நகைகள் அணிந்து, சொல்ல முடியாத அழகுடன் ஜொலித்துக் கொண்டிருந்தான். அவனைக் கஷ்டப்பட்டு அவ்வப்போது மின்னல் கீற்று மாதிரிதான் பார்க்க முடிந்தது, கூட்டம் அதிகம் இருந்தபடியால். நானும் என் நாத்தனாரும் எப்படியோ முண்டியடித்து ரதத்திற்கு அருகில் சென்று விட்டோம். எங்கள் இருவரின் கணவர்களும் பின் தங்கி விட்டார்கள். அவர்களிடம்தான் தொலைபேசி இருந்தது. எங்களிடம் தொலைபேசியும் இல்லை; தொலைந்து போனால் திரும்பிப் போகப் பணங்காசும் இல்லை! இதற்கெல்லாம் சேர்த்து திட்டு வாங்கிக் கொண்டே முருகனைத் தரிசித்தோம்.

அதிகாலையில் வெள்ளி ரதம்

ரதத்திற்கு பின்னேயே நடந்து போக ஆசையாகத்தான் இருந்தது, ஆனால் பிறகு கோவிலுக்குப் போக நேரம் இருக்காதென்பதால், கொஞ்ச தூரம் மட்டும் ரதத்தோடு போய்  விட்டு, திரும்பி விட்டோம். திரும்பி வந்து வாடகை வண்டி எடுத்துக் கொண்டு தண்ணீர் மலை முருகன் கோவிலுக்குப் போனோம்.

(தொடரும்...)


10 comments:

  1. யாமிருக்க பயமேன்...? என்னும் ஒரு கைபேசியையும் கையில் வைத்து கொள்வது நல்லது...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தனபாலன் :) நீங்கள் சொல்வது சரியே. நம்ம முருகன் பார்த்துப்பான்னு ஒரு தைரியம்தான் :) வாசித்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
  2. பத்து மலைத் திருமுத்துக்குமரனைப் பார்த்துக் களித்த வைபவத்தை அருமையாகச் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். கட்டுரையில் விவரங்களை அடுக்கும் அழகும் நேர்மையும் (///திட்டு வாங்கிக் கொண்டே முருகனைத் தரிசித்தோம்.////) மிகவும் கவர்ந்தன. மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையில் விவரங்களை அடுக்கும் அழகும் நேர்மையும் (///திட்டு வாங்கிக் கொண்டே முருகனைத் தரிசித்தோம்.////) மிகவும் கவர்ந்தன. மிக்க நன்றி.
      ditto
      parvathiji has photo copied my mind

      Delete
    2. பத்து மலைக் காரனை (தைப்பூசம் முடிந்த பின்) பார்த்தோம் என்றாலும் தண்ணீர் மலை தைப்பூசத் திருவிழாவிற்குத்தான் (இரண்டாவது பத்தி) போனோம், பார்வதி. விவரங்கள் அடுத்த வாரம்... :) வாசித்தமைக்கு நன்றி பார்வதி.

      Delete
    3. நன்றி லலிதாம்மா!

      Delete
  3. அருமையான பகிர்வு. படங்களுக்கும் நன்றி.

    தெரியாத இடங்களில் கைபேசி இல்லாமல் இருக்காதீர்கள். சைவச் சாப்பாடுக்கு மலேசியாவில் திண்டாடதான் வேண்டும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். நம் ஊர் உணவுவிடுதிகள் மட்டுமே கை கொடுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராமலக்ஷ்மி! :)

      Delete
  4. எளிய, இனிய தமிழ். பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் திரு.முருகானந்தம்! வலைப்பூவிற்கு மறக்காமல் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி! :)

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)