Sunday, February 24, 2013

மலேஷியாவின் செல்லப் பிள்ளை

(ஊர் சுத்திட்டு வந்தது பற்றி எழுத இவ்ளோ நாளாயிடுச்சு...)

இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது, மலேஷியாவிற்கும் ஒரு குட்டிப் பயணம். முருகனருளால் மலேஷியாவில் தைப்பூசத் திருவிழாவைப் பார்க்கக் கிடைத்தது. திருவிழா பற்றிப் பேசுவதற்கு முன்னால் மலேஷியாவைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்.

                  கோலாலம்பூரில் உள்ள மாரியம்மன் கோவில்

சிங்கப்பூருக்குப் போனதில்லை என்பதால் சிங்கப்பூரோடு ஒப்பிட முடியாவிட்டாலும், நம்மூரோடு ஒப்பிட்டால், சில விஷயங்களில் மலேஷியா கிட்டத்தட்ட நம்மூர் போல்தான் இருக்கிறது. ஆனால் நம்மூரைக் காட்டிலும் சுத்தமாக இருக்கிறது. கோலாலம்பூரை விட பினாங்கு இன்னும் நன்றாகவே இருக்கிறது. ஊரைச் சேர்ந்த மக்களுக்கு (locals என்று சொல்கிறார்கள்) வேற்று மொழி தெரியவில்லை. (ஆனாலும் தைப்பூசம் என்றால் எல்லோருக்குமே தெரிகிறது!). பினாங்கிலும் சரி, கோலாலம்பூரிலும் சரி, திருட்டு பயம் அதிகம் என்று ஏகத்திற்கு பயமுறுத்தி விட்டார்கள். நம்மூர் போலவே சங்கிலித் திருடர்கள் அதிகமாம். இதை அங்குள்ள ஒரு (தமிழ்) டாக்ஸி ட்ரைவரே சொன்னார். இருந்தாலும் அப்படிப்பட்ட அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இறையருளால் நலமாகவே ஊர் திரும்பினோம். 


                      பெட்ரோனாஸ் டவர்

ஒரு பக்கம் அப்படிச் சொன்னாலும், இன்னொரு பக்கம் அநியாயத்திற்கு நியாயமான, நேர்மையான மக்களும் இருக்கிறார்கள்! டாக்ஸிகள் அனைத்திலுமே மீட்டர் போடப்படும், பேரம் கிடையாது என்று கண்டிப்பான வாசகங்கள் காணப்படுகின்றன. என்றாலும் முக்கால்வாசி டிரைவர்கள் மீட்டர் போடுவதில்லை. முதலிலேயே தொகையைப் பேசிக் கொண்டுதான் ஏற வேண்டும். நாங்கள் இருந்த நான்கு நாட்களில், ஒரே ஒரு டாக்ஸி ட்ரைவர் மட்டும் மீட்டர் போட்டார். 4.90 ரிங்கெட்டுகள் (ரிங்கெட், ringgit என்பது மலேஷிய ரூபாய்) என்று வந்தது. 5 ரிங்கெட்டுகள் கொடுத்த போது 10 காசைத் திருப்பிக் கொடுத்து விட்டார்! அது வரைக்கும் அந்த மாதிரி தூரத்துக்கு குறைந்தது 10 அல்லது 15 ரிங்கெட்டுகள் கொடுத்துதான் போயிருக்கிறோம்! இப்படிக் கூட நேர்மையானவர்கள் இருப்பார்களா என்று ஆச்சர்யமாக இருந்தது.

இன்னொரு நாள் ‘ஆர்கிட் தோட்டம்’ பார்க்கப் போகலாம் என்று மெட்ரோவைப் பிடித்து அதற்குரிய ஸ்டேஷனில் இறங்கினோம். ஆனால் இறங்கிய பிறகு எந்தப் பக்கம் போவது, எவ்வளவு தூரம் இருக்கிறது, ஒன்றுமே தெரியவில்லை. வழியில் தென்பட்ட ஒரு பெண்மணியைக் கேட்டோம். (ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டுக் கொண்ட பின்). அந்தப் பெண்மணி எங்களைக் கூட்டிக் கொண்டு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் கூடவே நடந்து வந்து வழி காண்பித்தார். அதுவும் தான் போய்க் கொண்டிருந்த திசைக்குச் சரியாக எதிர்த் திசையில்! அவ்வளவு தூரம் அவர் திரும்பி நடந்து போக வேண்டும். இப்படி யாரேனும் இருப்பார்களா? நாங்கள் பார்த்த மிக நல்லவர்களின் வரிசையில் இவரும் சேர்ந்து கொண்டு விட்டார்!


                    Twin towers-ன் உள்ளே இருக்கும் ஷாப்பிங் மாலில்...


மலேஷியாவில் பார்த்த இன்னொரு வித்தியாசமான (அதிசயமான?) விஷயம், ஓட்டுநர்கள் ஹார்ன் பயன்படுத்துவதே இல்லை. பின்னால் கார் வருவது தெரியாமல் நாம் குறுக்கே மெதுவாக  நடந்து கொண்டிருந்தாலும், நம் பின்னாடியே தாமும் மெதுவாக (பொறுமையாக!) வந்து கொண்டிருக்கிறார்கள் :) அமெரிக்காவிலும் ஹார்ன் ரொம்ப பயன்படுத்துவதில்லை என்றாலும், இந்த அளவு பொறுமையெல்லாம் யாருக்கும் இல்லை. சிக்னலில் பச்சை வந்த பிறகு ஒரு விநாடி அதிகம் நின்றாலே ஹாங்க் பண்ணி விடுவார்கள்…

போய் இறங்கின அன்று கோலாலம்பூரை சுற்றிப் பார்த்தோம். பெட்ரோனாஸ் டவர் என்று சொல்லப்படும் இரட்டைக் கட்டிடங்களுக்குப் போனோம். 88 தளங்கள் இருக்கின்றனவாம். ரொம்ம்ம்ம்ப உயரம்! அதற்கு உள்ளே இருக்கும் ஷாப்பிங் மாலைச் சுற்றிப் பார்த்தோம். 

          மாரியம்மன் கோவிலில் இருக்கும் நடராஜர், சிவகாமி அம்மையுடன்...

கோலாலம்பூரில் இருக்கும் பழமை வாய்ந்த ஒரு மாரியம்மன் கோவிலுக்குப் போனோம். 1800-களில் கட்டியதாம். தைப்பூசத்திற்கென்று பத்து மலைக்குச் செல்லும் வெள்ளி ரதம் இந்தக் கோவிலில் இருந்துதான் புறப்படுமாம். திருவிழா முடிந்தவுடன் திரும்ப இங்கே வந்து விடுமாம். கோவில் மிக அழகாக இருந்தது. சரியாக அபிஷேக சமயத்தில் போனதால், நல்ல தரிசனமும் கிடைத்தது.

இரவே பினாங்கிற்கு பேருந்தில் பயணம்...

தைப்பூசத் திருவிழா பற்றி அடுத்த பதிவில்…

அன்புடன்
கவிநயா

14 comments:

 1. very interesting;
  waiting for thaippoosam pathivu

  ReplyDelete
 2. /// அநியாயத்திற்கு நியாயமான, நேர்மையான மக்களும் இருக்கிறார்கள் ! ///

  தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன்! நன்றி...

   Delete
 3. ஆஹா!! அருமையான பயணக்கட்டுரை. தைப்பூசத் திருவிழாவைப் பற்றிய பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 4. படங்களும் பகிர்வும் மிக அருமை கவிநயா. //அதுவும் தான் போய்க் கொண்டிருந்த திசைக்குச் சரியாக எதிர்த் திசையில்! // சிங்கப்பூரிலும் இதுபோலத் தாமாக முன்வந்து உதவிய பலரைக் காண முடிந்தது. மதிப்பிற்குரியவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராமலக்ஷ்மி! உங்க சிங்கப்பூர் பதிவுகளை நேரம் கிடைக்கிற போது இன்னொரு முறை வாசிக்கணும்...

   Delete
 5. அழகான படங்கள் + அசத்தலான விளக்கங்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஐயா. முதல் வருகைக்கும், வாசிப்புக்கும் மிக்க நன்றி!

   Delete
 6. //அமெரிக்காவிலும் ஹார்ன் ரொம்ப பயன்படுத்துவதில்லை என்றாலும், இந்த அளவு பொறுமையெல்லாம் யாருக்கும் இல்லை. சிக்னலில் பச்சை வந்த பிறகு ஒரு விநாடி அதிகம் நின்றாலே ஹாங்க் பண்ணி விடுவார்கள்…//

  அப்படீங்கறீங்க. நீங்க சொல்லறது சரியாவே இருக்கும். ஆனால் இப்படி ஹார்ன் அடிச்சு நாங்க பார்க்கலை! முந்தாநாள் மதுரையிலே இருந்து வரச்சே பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து கிளம்பறச்சே காதே செவிடாயிடுச்சு! :(

  ReplyDelete
  Replies
  1. தெரியலை அம்மா, ஒரு வேளை ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்... போக்குவரத்தைப் பொறுத்தும் இருக்கு...

   //முந்தாநாள் மதுரையிலே இருந்து வரச்சே பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து கிளம்பறச்சே காதே செவிடாயிடுச்சு! :(//

   ஹ்ம்... :( நம்மூர்ல கேட்கவே வேண்டாம்! ஹார்ன்லேருந்து கையே எடுக்க மாட்டாங்களே....

   Delete
 7. பயணக்கட்டுரை சிக்கென்று முக்கியமான விஷயங்களோடு அருமையா இருக்கு. அடுத்துக் காத்திருக்கேன்.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)