Sunday, February 24, 2013

மலேஷியாவின் செல்லப் பிள்ளை

(ஊர் சுத்திட்டு வந்தது பற்றி எழுத இவ்ளோ நாளாயிடுச்சு...)

இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது, மலேஷியாவிற்கும் ஒரு குட்டிப் பயணம். முருகனருளால் மலேஷியாவில் தைப்பூசத் திருவிழாவைப் பார்க்கக் கிடைத்தது. திருவிழா பற்றிப் பேசுவதற்கு முன்னால் மலேஷியாவைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்.

                  கோலாலம்பூரில் உள்ள மாரியம்மன் கோவில்

சிங்கப்பூருக்குப் போனதில்லை என்பதால் சிங்கப்பூரோடு ஒப்பிட முடியாவிட்டாலும், நம்மூரோடு ஒப்பிட்டால், சில விஷயங்களில் மலேஷியா கிட்டத்தட்ட நம்மூர் போல்தான் இருக்கிறது. ஆனால் நம்மூரைக் காட்டிலும் சுத்தமாக இருக்கிறது. கோலாலம்பூரை விட பினாங்கு இன்னும் நன்றாகவே இருக்கிறது. ஊரைச் சேர்ந்த மக்களுக்கு (locals என்று சொல்கிறார்கள்) வேற்று மொழி தெரியவில்லை. (ஆனாலும் தைப்பூசம் என்றால் எல்லோருக்குமே தெரிகிறது!). பினாங்கிலும் சரி, கோலாலம்பூரிலும் சரி, திருட்டு பயம் அதிகம் என்று ஏகத்திற்கு பயமுறுத்தி விட்டார்கள். நம்மூர் போலவே சங்கிலித் திருடர்கள் அதிகமாம். இதை அங்குள்ள ஒரு (தமிழ்) டாக்ஸி ட்ரைவரே சொன்னார். இருந்தாலும் அப்படிப்பட்ட அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இறையருளால் நலமாகவே ஊர் திரும்பினோம். 


                      பெட்ரோனாஸ் டவர்

ஒரு பக்கம் அப்படிச் சொன்னாலும், இன்னொரு பக்கம் அநியாயத்திற்கு நியாயமான, நேர்மையான மக்களும் இருக்கிறார்கள்! டாக்ஸிகள் அனைத்திலுமே மீட்டர் போடப்படும், பேரம் கிடையாது என்று கண்டிப்பான வாசகங்கள் காணப்படுகின்றன. என்றாலும் முக்கால்வாசி டிரைவர்கள் மீட்டர் போடுவதில்லை. முதலிலேயே தொகையைப் பேசிக் கொண்டுதான் ஏற வேண்டும். நாங்கள் இருந்த நான்கு நாட்களில், ஒரே ஒரு டாக்ஸி ட்ரைவர் மட்டும் மீட்டர் போட்டார். 4.90 ரிங்கெட்டுகள் (ரிங்கெட், ringgit என்பது மலேஷிய ரூபாய்) என்று வந்தது. 5 ரிங்கெட்டுகள் கொடுத்த போது 10 காசைத் திருப்பிக் கொடுத்து விட்டார்! அது வரைக்கும் அந்த மாதிரி தூரத்துக்கு குறைந்தது 10 அல்லது 15 ரிங்கெட்டுகள் கொடுத்துதான் போயிருக்கிறோம்! இப்படிக் கூட நேர்மையானவர்கள் இருப்பார்களா என்று ஆச்சர்யமாக இருந்தது.

இன்னொரு நாள் ‘ஆர்கிட் தோட்டம்’ பார்க்கப் போகலாம் என்று மெட்ரோவைப் பிடித்து அதற்குரிய ஸ்டேஷனில் இறங்கினோம். ஆனால் இறங்கிய பிறகு எந்தப் பக்கம் போவது, எவ்வளவு தூரம் இருக்கிறது, ஒன்றுமே தெரியவில்லை. வழியில் தென்பட்ட ஒரு பெண்மணியைக் கேட்டோம். (ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டுக் கொண்ட பின்). அந்தப் பெண்மணி எங்களைக் கூட்டிக் கொண்டு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் கூடவே நடந்து வந்து வழி காண்பித்தார். அதுவும் தான் போய்க் கொண்டிருந்த திசைக்குச் சரியாக எதிர்த் திசையில்! அவ்வளவு தூரம் அவர் திரும்பி நடந்து போக வேண்டும். இப்படி யாரேனும் இருப்பார்களா? நாங்கள் பார்த்த மிக நல்லவர்களின் வரிசையில் இவரும் சேர்ந்து கொண்டு விட்டார்!


                    Twin towers-ன் உள்ளே இருக்கும் ஷாப்பிங் மாலில்...


மலேஷியாவில் பார்த்த இன்னொரு வித்தியாசமான (அதிசயமான?) விஷயம், ஓட்டுநர்கள் ஹார்ன் பயன்படுத்துவதே இல்லை. பின்னால் கார் வருவது தெரியாமல் நாம் குறுக்கே மெதுவாக  நடந்து கொண்டிருந்தாலும், நம் பின்னாடியே தாமும் மெதுவாக (பொறுமையாக!) வந்து கொண்டிருக்கிறார்கள் :) அமெரிக்காவிலும் ஹார்ன் ரொம்ப பயன்படுத்துவதில்லை என்றாலும், இந்த அளவு பொறுமையெல்லாம் யாருக்கும் இல்லை. சிக்னலில் பச்சை வந்த பிறகு ஒரு விநாடி அதிகம் நின்றாலே ஹாங்க் பண்ணி விடுவார்கள்…

போய் இறங்கின அன்று கோலாலம்பூரை சுற்றிப் பார்த்தோம். பெட்ரோனாஸ் டவர் என்று சொல்லப்படும் இரட்டைக் கட்டிடங்களுக்குப் போனோம். 88 தளங்கள் இருக்கின்றனவாம். ரொம்ம்ம்ம்ப உயரம்! அதற்கு உள்ளே இருக்கும் ஷாப்பிங் மாலைச் சுற்றிப் பார்த்தோம். 

          மாரியம்மன் கோவிலில் இருக்கும் நடராஜர், சிவகாமி அம்மையுடன்...

கோலாலம்பூரில் இருக்கும் பழமை வாய்ந்த ஒரு மாரியம்மன் கோவிலுக்குப் போனோம். 1800-களில் கட்டியதாம். தைப்பூசத்திற்கென்று பத்து மலைக்குச் செல்லும் வெள்ளி ரதம் இந்தக் கோவிலில் இருந்துதான் புறப்படுமாம். திருவிழா முடிந்தவுடன் திரும்ப இங்கே வந்து விடுமாம். கோவில் மிக அழகாக இருந்தது. சரியாக அபிஷேக சமயத்தில் போனதால், நல்ல தரிசனமும் கிடைத்தது.

இரவே பினாங்கிற்கு பேருந்தில் பயணம்...

தைப்பூசத் திருவிழா பற்றி அடுத்த பதிவில்…

அன்புடன்
கவிநயா

Sunday, February 17, 2013

கண்டால் சொல்லு!


கண்ணன் என் காதலன்


காதோரம் கிசுகிசுக்கும் காற்றேநீ கண்டாயோ?
ஆற்றோரம் அசைந்திருக்கும் நாற்றேநீ கண்டாயோ?
வானெங்கும் வட்டமிடும் வெண்ணிலவே கண்டாயோ?
தேனெடுக்க சுற்றிவரும் சின்னவண்டே கண்டாயோ?


மூடியுள்ள கண்ணுக்குள்ளே மோகனமாய் சிரித்திடுவான்!
நாடியென்றன் நெஞ்சுக்குள்ளே நர்த்தனங்கள் புரிந்திடுவான்!
கண்திறந்து பார்த்துவிட்டால் கணத்தினில் மறைந்திடுவான்!
மண்மயங்கும் வண்ணக்கண்ணன் மாயம்பல புரிந்திடுவான்!


ஆடும்மயில் கண்டாலோ அவன்நினைவே வருகுதடி;
பாடுங்குயில் குரலினிலே வேய்ங்குழலே ஒலிக்குதடி;
கார்மேகம் கண்டாலோ கண்ணமுகம் தெரியுதடி;
பார்புகழும் அவன்நினைவே மார்த்துடிப்பாய் ஆச்சுதடி;


கால்கடுக்க சுற்றிவரும் காற்றேநீ கண்டால் சொல்லு…
கடலேறி விளையாடும் அலையேநீ கண்டால் சொல்லு…
ஊருக்கெல்லாம் ஒளிகொடுக்கும் சூரியனே கண்டால் சொல்லு…
பாருக்குள்ளே மணியாம்என் மன்னவனைக் கண்டால் சொல்லு!



--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://www.radhagopaljiutempel.com/srikrishnasriradhe.htm 

 

Sunday, February 10, 2013

மூன்று வாசல்கள்




பேசுவது என்பது பற்றி நாம் அதிகம் சிந்திப்பதில்லை. சர்வ சாதாராணமாக எதையாவது பேசிக் கொண்டேதான் இருக்கிறோம். சுஃபி மதம் சொல்வதாக சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன் – நாம் பேச நினைப்பது வார்த்தைகளில் வெளிப்படும் முன் மூன்று வாசல்களைக் கடக்க வேண்டுமாம்.

முதல் வாசல் – உண்மை. “நாம் சொல்லவிருப்பது உண்மையா?” என்று நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டும். ஆம் என்றால், அடுத்த வாசலுக்குப் போகலாம்.

இரண்டாம் வாசல் – அவசியம். “நாம் இதனை அவசியம் சொல்லித்தான் ஆக வேண்டுமா?” என்று கேட்டுக் கொள்ள வேண்டும். அந்தச் செய்தியால் யாருக்கேனும் ஏதேனும் பலன் இருக்கும் என்றால் மட்டுமே அடுத்த வாசலுக்குப் போகலாம்.

மூன்றாம் வாசல் – அன்பு. “நாம் சொல்லவிருக்கும் சொற்களில் அன்பு இருக்கிறதா?” என்று கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் சொல்வது எவரையேனும் எந்த விதத்திலேனும் எதிர்மறையாகப் பாதிக்கும், புண்படுத்தும் என்றால் இந்த வாசலைக் கடக்கக் கூடாது, நம் வாயிலிருந்து அந்தச் சொற்கள் வெளியெறக் கூடாது.

எவ்வளவு எளிமையாகவும், அழகாகவும் பேச்சைப் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது!

பேச்சில் அப்படி என்னதான் இருக்கிறது என்று நாம் முன்பு ஒரு முறை பேசியது இங்கே...

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://linked2leadership.com/2010/11/23/think-before-you-speak/

Sunday, February 3, 2013

திருச்சி ஐயப்பன் கோயில்

நலம். நலமறிய ஆவல் :) ஊருக்குப் போயிட்டு வந்தாச்! இரண்டு திருமணங்கள், மலேஷியாவில் தைப்பூசத் திருவிழா. இப்படியாக, போன இடமெல்லாம் ஒரே மக்கள் கூட்டம்தான்! பல வருடங்களாகப் பார்க்காத உறவினர் பலரையும் பார்த்தேன். நாள் தவறாம ஏதாவது ஒரு கோயிலுக்காவது போனேன். ரொம்பச் சுருக்கமா இருந்தாலும், இறையருளால் நிறைவான பயணமாக அமைந்தது.
 
தங்கையுடன் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்குப் போன போது அங்கே இருக்கிற ஐயப்பன் கோவிலுக்குப் போயிருந்தேன். (கீதாம்மா அடிக்க வராதீங்க! அரை நாள்தான் இருந்தது!) பல வருஷங்களா இருக்காம், அந்தக் கோயில். ஆனால் இப்போதான் எனக்கு அங்கே போக வாய்ப்பு கிடைச்சது. ஊரில் கல்யாணத்திற்குப் போயிருந்த போது, உறவினர் சிலர், இது அவசியம் பார்க்க வேண்டிய கோயில் என்று வலியுறுத்தி அனுப்பினாங்க. அவங்க சொன்னது உண்மைதான். அந்த மாதிரி ஒரு கோயிலை நம்மூர்ல பார்க்கிறது அபூர்வம்தான்.

மரங்களும், செடி கொடிகளுமா, ஏதோ ஒரு பூந்தோட்டத்துக்குள் கோயில் அமைத்தது போல இருக்கு. ரொம்பச் சுத்தமா இருக்கு. அமைதியா இருக்கு. உள்ளே வர்ற எல்லோருமே அமைதி காப்பது மிகப் பெரிய விஷயம். உண்டியல் கிடையாது, ஆனா நன்கொடை கொடுத்தா வாங்கிக்கறாங்க. ஒரு ஐயப்பன் சேவா சங்கத்தினரால் நடத்தப்படற கோவிலாம். அந்தந்த நேரத்துக்கு சரியா பூஜைகளை முடிச்சிடுவாங்களாம். நாம ஏதாவது பூஜைக்கு பணம் கட்டிட்டு, நாம வரதுக்குக் கொஞ்சம் தாமதமாயிடுச்சுன்னாலும், நமக்காகக் காத்திருக்க மாட்டாங்களாம்; நேரத்துக்கு ஆரம்பிச்சிடுவாங்களாம்.

கோயில் முழுக்க நிறைய பயனுள்ள வாசகங்களையும், செய்திகளையும், குட்டிக் கதைகளையும் எழுதிப் போட்டிருக்காங்க. எல்லாத்தையும் வாசிக்க எங்களுக்கு நேரம் இருக்கலை. சபரிமலைக்குப் போறவங்க இருக்க வேண்டிய விரத விதிகளையும் விரிவா எழுதிப் போட்டிருக்காங்க. 


அங்கே படிச்ச ஒரே ஒரு குட்டிக் கதையை நினைவிலிருந்து சொல்றேன்…

ஒரு முறை ஒரு முனிவர் (பேர் மறந்துட்டேன்) அன்னை பராசக்தியைப் பார்க்கப் போனாராம். அப்போ, அவளுடைய பாதங்களே தெரியாத அளவிற்கு மலை மாதிரி அழகழகான அபூர்வமான மலர்கள் அவள் பாதங்கள் மேலே குவிஞ்சிருந்ததாம். அதைப் பார்த்ததும் அசந்தே போயிட்டாராம், அந்த முனிவர்.

“என்னம்மா இது? இவ்வளவு அரிய, அழகான மலர்களால் உனக்குப் பூஜை செய்தது யாரு? நீ ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாயே?”ன்னு கேட்டாராம்.

“இந்தப் பூஜையால் நான் எந்த அளவு மகிழ்ச்சி அடைஞ்சிருக்கேன்னு உனக்குத் தெரியணும்னா, இந்த மலர்களை கொஞ்சம் விலக்கிப் பாரு”ன்னு சொன்னாளாம், அம்மா.

முனிவரும் மலர்களை விலக்கி அவள் பாதங்களைப் பார்த்தாராம். பார்த்தவருக்கு ரொம்ப அதிர்ச்சியாயிடுச்சாம்! ஏன்னா, அம்மாவுடைய பாதங்கள் முழுக்க சின்னச் சின்னதா கொப்புளங்கள் ஏற்பட்டிருந்ததாம்.

“அம்மா, உனக்கா இந்த நிலைமை? ஏன் இப்படி ஆச்சு?”ன்னு பதறிப் போய் கேட்டாராம்.

“இந்த மலர்களால் என்னை அர்ச்சித்தவன் இந்திரன். என் மேல் உள்ள அன்பினால் இந்த அர்ச்சனையை அவன் செய்யவில்லை; ஒவ்வொரு மலரால் அர்ச்சிக்கும்போதும் சுயநலத்துடன் ஒவ்வொரு வேண்டுதல் வைத்திருந்தான். அதனால் என் பாதங்கள் இப்படி ஆகி விட்டன”, என்றாளாம் அம்மா.

யாராக இருந்தாலும் பலன் எதிர்பாராத அன்பே செலுத்தணும்; முக்கியமா இறைவனிடம். அப்படிப்பட்ட தூய்மையான அன்பே இறைவன் விரும்புவது என்பதை இந்தக் கதை அழகாக உணர்த்துகிறது.

நாங்க போனது சரியாக உச்சிக்காலம் ஆகிற சமயம். உச்சிக்காலம் முடிஞ்சு வெளியே வரும்போது, குட்டிக் குட்டி எவர்சில்வர் தட்டுகளில் சுடச் சுட சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் வச்சுத் தந்தாங்க. சாப்பிட்டு முடிச்சதும் கழுவறதுக்கு, தண்ணீர்க் குழாய்கள் இருக்கு; பக்கத்தில் சோப்புத் தண்ணீரும் இருக்கு. சோப்புப் போட்டுக் கழுவி அங்கேயே இருக்கிற shelf-ல எல்லோரும் கவிழ்த்து வெச்சிடறாங்க! எவ்வளவு நல்ல system பாருங்க! இங்கேல்லாம் கூட இப்படிச் செய்யறதில்லை. எத்தனையோ disposables தான் பயன்படுத்தி, இயற்கையை நாசம் பண்ணிக்கிட்டு இருக்கோம் :( கத்துக்க வேண்டியதும், மாற்றிக்க வேண்டியதும், எவ்வளவோ இருக்கு!

நீங்களும் வாய்ப்பு கிடைச்சா இந்தக் கோயிலுக்கு போயிட்டு வாங்க!

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.madurawelcome.com/tiruchirapalli/trichy_placesofinterest.htm