Monday, September 24, 2012

ரோஜா நேரம்!



ரு நாள் சாயந்திரம் என்ன பண்றதுன்னு தெரியாம, தொ(ல்)லைக் காட்சியைப் போட்டுப் பார்த்துக்கிட்டிருந்தேன். ஏதோ ஒரு சானல்ல ஏதோ ஒரு படம் போய்க்கிட்டிருந்தது. கொஞ்சம் வித்தியாசமான படமா இருந்தது. எதைப் பற்றிய படமா இருக்கும்னு தெரிஞ்சுக்கிற ஆவலில் தொடர்ந்து பார்க்க ஆரம்பிச்சேன். புரிந்தும் புரியாமலும் காட்சிகள் ஓடிக்கிட்டே இருந்தது. இது என்ன மாதிரிப் படம், எதைப் பற்றிய படம், அப்படின்னு அனுமானிக்கிறதுக்கு முன்னாடி படமே முடிஞ்சிருச்சு!

இப்படித்தானே நம்ம வாழ்க்கையும் ஓடுது, அப்படின்னு தோணுச்சு. நாம வந்த வேலை என்னன்னு தெரியறதுக்கு முன்னாடியே வாழ்க்கையே முடிஞ்சிரும் போல இருக்கு. எதுக்காக வாழறோம்னு தெரியாமலேயே ஒவ்வொரு நாளையும் கழிக்கிறோம். ஏதோ ஒரு சுழற்சியில் அகப்பட்டுகிட்டு, எதுக்குன்னு தெரியாமலேயே பல செயல்களைச் செய்யறோம். நம்ம இலக்கு என்ன என்கிறதைப் பற்றி சிந்திக்கக் கூட நேரம் இருக்கறதில்லை. அப்படியே இலக்கு என்னன்னு ஓரளவு தெரிஞ்சிருந்தாலும் அது இந்த சுழிக்காற்றின் வேகத்தில் கண்ணுக்குத் தெரியாமலேயே மறைஞ்சு, மறந்தே போயிடுது.

சமீபத்தில் நடந்த ஒரு இளம் உறவினரின் திடீர் மரணம் மனசுக்கு பெரிய பாதிப்பா இருந்தது; பலப்பல விஷயங்களையும் சிந்திக்க வெச்சது. முடிஞ்சா அதைப்பற்றி இன்னொரு நாள் பேசலாம். ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேர் இறந்தாலும், இருக்கிறவங்கல்லாம் நாம மட்டும் என்னவோ சாஸ்வதம் மாதிரியே நினைச்சுக்கிட்டிருக்கோம். பாரதத்தில் தருமன் சொன்ன மாதிரி உலகத்திலேயே மிகப் பெரிய அதிசயம்தான், இது.  இந்த உலகத்துக்கு வந்த எத்தனையோ அரிய பெரிய மகான்கள் எல்லோரும் மறைஞ்சு போயிட்டாங்க. அப்படின்னா நாமெல்லாம் எந்த மூலைக்கு? எத்தனை நாளைக்கு? இதை நான் சொல்லலை, சுவாமி விவேகானந்தர் சொல்றார்.

இதை நினைவில் வச்சுக்கிட்டு, சண்டை சச்சரவில்லாம, போட்டி, பொறாமை இல்லாம, கோப தாபம் இல்லாம, முடிஞ்ச வரை அன்பை மட்டுமே தந்தபடி, வந்த வேலையை மட்டும் கவனிப்போம்.

அப்பப்ப நிதானிச்சு, வாழ்க்கையில் எது முக்கியம் என்பதையும், இலக்கை நோக்கித்தான் போறோமா என்பதையும் நிச்சயப்படுத்திக்கிட்டு, பிறகு மறுபடி ஓட்டத்தை தொடருவதும் அவசியம். அதோட கூடவே கண்டிப்பா, மறக்காம, Take the time to smell the roses!

இப்போதைக்கு ‘நினைவின் விளிம்பில்…’ இருந்து உங்களுக்கு (எனக்கும்!) கொஞ்சம் ஓய்வு! இன்னும் கொஞ்ச நாளைக்கு கணினி நேரம் கிடைப்பது அரிது என்பதால் தற்காலிக விடுமுறை. இறை விருப்பம் இருந்தால் நவராத்திரி சமயத்தில் மீண்டும் சந்திக்கலாம்!

அது வரைக்கும்… go enjoy the roses! :)

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Tuesday, September 18, 2012

கணபதி தாள்கள் போற்றி!

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!
நம்பிக்கை வைத்தோரைத் தும்பிக்கையான் காப்பான்.




கற்பகக் கணபதி பாடலை அற்புதமாகப் பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு நன்றிகள் பல! நீங்களும் கேட்டு, பாடி, விக்ன விநாயகனின் அருளைப் பெறுங்கள்!


பெரும்பானை வயிற்றுக்குள் பேருலகை வைத்திருக்கும்
பெருமகனே போற்றி போற்றி!
வரு வினையைத் தடுக்கின்ற வந்த வினை தீர்க்கின்ற
வல்லபனே போற்றி போற்றி!

சிவனாரின் மகனாகிச் சேந்தனுடன் சேர்ந்துலகைக்
காப்பவனே போற்றி போற்றி!
சிந்தையிலே வைத்தவர்க்கு சிந்திக்கா தருள் புரியும்
செல்வனே போற்றி போற்றி!

சுழி போட்டுத் தொடங்கி விட்டால் தடையேதும் வாராமல்
செயல்முடிப்பாய் போற்றி போற்றி!
வழி கேட்டு உன்னடிகள் பணிந்து விட்டால் வழித்துணையாய்
வந்திடுவாய் போற்றி போற்றி!

மழுவேந்தி மாந்தர் தமைக் காக்கின்ற மூஞ்சூறு
வாகனனே போற்றி போற்றி!
பழுவெல்லாம் தந்து விட்டால் பரிந்தெம்மைக் காக்கின்ற
புண்ணியனே போற்றி போற்றி!

அகத்தியருக் கருள்செய்த அத்திமுக நாயகனே
ஆனைமுகா போற்றி போற்றி!
அருகம்புல் பூசையிலும் அகம்மகிழ்ந்து அருள்செய்யும்
எளியவனே போற்றி போற்றி!

வியாசருக் கருளிடவே ஒருதந்தம் உடைத்தவனே
உத்தமனே போற்றி போற்றி!
மாசற்ற மன்னவனே மஞ்சளிலும் இருப்பவனே
மூத்தவனே போற்றி போற்றி!

கந்தனுக் குதவிடவே களிறாக வந்தவனே
கற்பகமே போற்றி போற்றி!
சங்கரனின் புத்திரனே சங்கடங்கள் களைபவனே
சுந்தரனே போற்றி போற்றி!

நம்பிக்கு அருள் செய்த தும்பிக்கை நாதனே
ஐங்கரனே போற்றி போற்றி!
நம்பிக்கை வைத்துன்னைப் பணிகின்றோம் தூயவனே
திருவடிகள் போற்றி போற்றி!

--கவிநயா

நன்றி: வல்லமை

Sunday, September 2, 2012

பூஞ்சிரிப்பூ!




 
சின்னச் சின்ன ரோஜாப்பூ!
வண்ண வண்ண ரோஜாப்பூ!
முள்ளின் நடுவே இருந்தாலும்
மலர்ந்து சிரிக்கும் ரோஜாப்பூ!

கொடியில் பாரு முல்லைப்பூ!
கொத்துக் கொத்தாய் முல்லைப்பூ!
கொஞ்ச நேரம் இருந்தாலும்
கொஞ்சிச் சிரிக்கும் முல்லைப்பூ!

குண்டு குண்டு மல்லிப்பூ!
செண்டு போல மல்லிப்பூ!
மனங்கள் மகிழ மலர்ந்தேதான்
மணம் பரப்பும் மல்லிப்பூ!

குளத்தில் பாரு தாமரைப்பூ!
குனிந்து பாரு தாமரைப்பூ!
சேற்றின் நடுவே இருந்தாலும்
சிரித்து மகிழும் தாமரைப்பூ!

பூக்கள் போல நீ இரு!
பூஞ்சிரிப்பில் மலர்ந்திடு!
சங்கடங்கள் மறந்திடு!
சந்தோஷமே பரப்பிடு!


--கவிநயா

நன்றி: வல்லமை