Sunday, June 24, 2012

ஆயிரம் பொற்காசுகளா?!


 ஹி…ஹி… இல்லைங்க, ஒரு ஒரு விருதுதான்! :) ஆனா அதோட மதிப்பு ஆயிரம் பொற்காசுகளுக்கும் மேலே! அள்ளித் தந்த தலைவி நம்ம தானைத் தலைவிதான்! அவங்கதான் எனக்கு ‘Versatile Blogger’ என்கிற விருதை பகிர்ந்து கொடுத்திருக்காங்க. இதிலிருந்தே தெரிஞ்சிருக்குமே, அன்பாலதான் கொடுத்திருக்காங்க, வேற ஒண்ணும் காரணம் இல்லைன்னு! :)

அவங்க முதல் முதலா பரதம் பற்றிய பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருந்தாங்க(ன்னு நினைக்கிறேன்).  (நானும் ரொம்ப நாளா இன்னொரு பரதம் பற்றிய பதிவிடணும்னு நினைச்சுக்கிட்டே…. இருக்கேன், எப்போ நிறைவேறப் போகுதோ?). வழக்கம் போல அவங்களைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமேன்னு அவங்க பதிவுக்குப் போய் பார்த்தேன். அப்பதான் அவங்களும் அம்பாள் பக்தை, அதுவுமில்லாம புதுக்கோட்டை புவனேஸ்வரி அவங்களுக்கும் ரொம்பப் பரிச்சயம், அப்படின்னு தெரிஞ்சது! அப்பவே அவங்க ‘நம்ம செட்’ ஆகிட்டாங்க! அவங்க எழுதறதும் அருமையா இருந்தது. சீரியஸான விஷயங்களும் எழுதுவாங்க; ஆன்மீகமும் எழுதுவாங்க; எல்லாத்துக்கும் மேலே, நகைச்சுவையா எழுதறது அவங்களுக்கு இயல்பாகவே கை வந்த கலையா இருக்கு! இப்பேர்ப்பட்ட பன்முக எழுத்தாளரா வளர்ந்துக்கிட்டிருக்கிற தானைத் தலைவிதான் இந்த விருதை எனக்கு (போய்) கொடுத்திருக்காங்க! ரொம்ப நன்றி தானைத் தலைவி!


இந்த விருதை வாங்குகிறவங்களுக்கு சில கடமைகள் இருக்காம். முதலில் விருது கொடுத்தவங்களுக்கு நன்றி சொல்லணும். (இயல்பாகவே எல்லாரும் செய்யறதுதானே இது? ஹி…ஹி… :)) அடுத்தது தன்னைப் பற்றி சில விஷயங்கள் பகிர்ந்துக்கணும். அடுத்தது, இன்னும் 5 பேருக்கு விருதை பகிர்ந்து கொடுக்கணும்; அவங்க பதிவுகளுக்கு போயி, அவங்களுக்கு விருது கொடுத்திருக்கிற விஷயத்தைச் சொல்லணும்! பரவாயில்லைல்ல? கொஞ்சம் சுலபம் மாதிரிதான் தெரியுது :)

‘நினைவின் விளிம்பில்…’ தொடர்ந்து வாசிக்கிறவங்களுக்கு என்னை பற்றி நல்லாவே தெரிஞ்சிருக்கும். புதுசா வாசிக்கிறவங்களுக்காக என்னைப் பற்றி ஒரு சிறு குறிப்பு:
-கவிநயா என்பது எழுதுவதற்காகவே முதல் முதலாக நானே புனைந்து, இட்டுக் கொண்ட புனை பெயர் (இப்போ கவிநயாங்கிற பெயர் பொதுவுடமை ஆகிக்கிட்டு வருது!)
-கணினி மென்பொருள் துறையில் வேலை
-பரதம் கத்துக்கிட்டிருக்கேன்; இன்னும் கத்துக்கறேன், சொல்லியும் தரேன்
-பேசாம வேணுன்னாலும் இருந்துருவேன், ஆனா எழுதாம இருக்கிறது ரொம்பவே கஷ்டம்
-ஆன்மீகத்திலும், அன்னை பராசக்தியிடமும், ஈடுபாடு அதிகம்
அவ்ளோதான்!

இந்த விருதை இவங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறேன்!

இந்த விருதினால் இவருக்குப் பெருமை என்பதை விட, இவருக்குத் தருவதால் இந்த விருதுக்குப் பெருமை, என்று சொல்வார்களே. அதுவே இங்கும் பொருந்தும்! ராமலக்ஷ்மி, மிகச் சிறந்த எழுத்தாளராகவும், மிகச் சிறந்த புகைப்படக் கலைஞராகவும், வெகு வேகமாக வளர்ந்து வருபவர். எழுத்தென்றால், கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்புக் கவிதை, இப்படிப் பலப் பல வடிவங்களையும் புரட்டி எடுக்கிறவர்! பதிவுலகுக்கு வந்த ஆரம்ப காலத்தில் அவர் காட்டிய தோழமையும் அன்பும், இவ்வளவு வளர்ந்த பின்னரும் மாறாமல் இருப்பது ஆச்சர்யம். நட்பைப் பொறுத்த வரையில் என்றும் இதே போல் இருக்கவும், அவருடைய துறைகளில் அவர் மேலும் வளர்ந்து சிகரங்கள் தொடவும், என் மனமார்ந்த வாழ்த்துகள்! 


இவரைப் பற்றி அதிகம் தெரியாது என்றாலும், இவர் எழுத்துகளைத் தெரியும். நடைமுறை விஷயங்களை எளிமையாகவும், இனிமையாகவும், சற்றே வித்தியாசமான சிந்தனையுடனும், அதே சமயம் மனதில் பதியும் வண்ணமும் சொல்வதில் வல்லவர். இவர் பதிவுகளை தொடர்ந்து வாசித்தாலும், பின்னூட்டங்கள் எப்போதாவதுதான் இடுவேன். (அவருடைய பதிவுகளில் எப்போதும் பெரிய பின்னூட்டக் கூட்டம் இருக்கும்; அதில் என்னுடையது காணாமல் போய்விடக் கூடும் என்றுதான் :)).

மனதைச் சட்டென்று கவ்வி இழுக்கிற மாதிரியான கவிதைகளை எழுதுவது இவருடைய சிறப்பு. அரசியல், சினிமா, சமூக உணர்வுடனான கட்டுரைகள், சிறுகதைகள், இப்படிப் பலப் பல வடிவங்களையும் அருமையாக எழுதுபவர். பத்திரிகைகளிலும் நிறைய பிரசுரித்திருக்கிறார்.

முருகனடிமை. இவரை, கேயாரெஸ் எல்லாம் பற்றி நினைக்கும் போதெல்லாம், முருகன்தான் முதலில் நினைவுக்கு வருவான். ஜி.ராகவன் என்பதுதான் ஜிராவாக சுருங்கி இருக்கிறது. தமிழ் மற்றும் இலக்கிய ஆர்வத்துடன் சமையலிலும் ஆர்வம் காட்டுபவர். நான் வலைப்பூ உலகிற்கு வந்த புதிதில் கேயாரெஸ், குமரன், மற்றும் இவரது எழுத்துகளைத் தான் விடாமல் வாசிப்பேன்… ‘இனியது கேட்கின்’ என்ற வலைப் பூவில் தமிழும் ஆன்மீகமும் கலந்த இனிய இலக்கியப் பதிவுகள் நிறைய எழுதினார். குமரனும், இவரும் ‘சொல் ஒரு சொல்’ என்று தூய தமிழ் சொற்களுக்கான வலைப்பூ ஒன்று எழுதி வந்தார்கள். நடுவில் ரொம்ப நாள் காணாமல் போய் விட்டு இப்போது wordpress-ல் எழுத ஆரம்பித்திருக்கிறார்! கட்டுரைகள் மட்டுமின்றி, கதைகளும் அருமையாக எழுதுவார். நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்.

இசைஞானி இளையராஜா அவர்களின் பரம பக்தர். இப்போதெல்லாம் அவ்வளவாக பதிவெழுதக் காணோம். ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை எழுதினாலும், சொல்ல வந்ததைத் தெளிவாகவும், சுவையார்வத்துடனும் சொல்வதில் கை தேர்ந்தவர். முக்கியமாக ‘நினைவின் விளிம்பில்…’ பதிவுகளை தொடர்ந்து வாசித்து, பின்னூட்டி, ஊக்கமளித்து வருகின்ற அன்புத் தம்பி!


விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Monday, June 18, 2012

வல்லமையாளர்

வல்லமை மின்னிதழில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர்களில் ஒருவரை வாரம் ஒரு முறை, அந்த வார 'வல்லமையாளரா'கத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.

பாப்பா பாடல்கள் எழுத முதல் தூண்டுகோலாக அமைந்த ஜீவி ஐயாவிற்கும், வல்லமையாளராக்கிய திவாகர் அவர்களுக்கும், மற்றும் வல்லமை நிர்வாகக் குழுவிற்கும், இந்த சமயத்தில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!


அன்புடன்
கவிநயா

Sunday, June 17, 2012

தேடிப் பாரு!



மழை மழை மழை மழை பாரு!
மேகத்துல போயி ஓட்டை போட்டதாரு?

சிலு சிலு சிலு சிலு காத்து பாரு!
காத்துக்குள்ள ஏசியை வெச்ச தாரு?

பள பள பள பள மின்னல் பாரு!
வானத்துல வெள்ளிக் கோடு போட்டதாரு?

டம டம டம டம இடி பாரு!
மேலே போயி பட்டாசு வெச்சதாரு?

பகலுக்கு சூரியனைத் தந்ததாரு?
இராத்திரிக்கும் கூட நிலா உண்டு பாரு!

காடெல்லாம் மரஞ்செடி நட்டதாரு?
கடலெல்லாம் உப்பக் கொட்டிப் போட்டதாரு?

பூவுக்குள்ள தேனை வெச்சுப் பாத்ததாரு?
பூமிக்குள்ள மூச்சுக் காத்த வெச்சதாரு?

சிப்பிக்குள்ளே முத்தக் கொண்டு சேத்ததாரு?
சிந்திச்சாக்க பதில் உண்டு தேடிப் பாரு!


--கவிநயா 

நன்றி: வல்லமை


Sunday, June 10, 2012

முளை கட்டுவது எப்படி?


ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்பிடறதும் அதிகமா பரவிக்கிட்டிருக்கு. இரண்டும் ஒண்ணுக் கொண்ணு முரணா இருக்குல்ல? ம், சரி அதை விடுங்க. அதைப் பற்றி இன்னொரு நாள் பேசிக்கலாம்.

உடம்பை நோய் நொடி இல்லாம நல்லா வச்சுக்கணும்கிற அக்கறை வளர்ந்துகிட்டு வர்றது நல்ல விஷயம் தான். அதுக்கு முதல்ல நாம வீட்டில், ஆரோக்கியமான உணவு வகைகளை சமைச்சு சாப்பிடணும். அடிக்கடி வெளியில் சாப்பிடறது நல்லதில்லை. ஆரோக்கிய உணவுன்னாலே காய்கறிகள், பழங்கள், இவற்றை நிறைய சேர்த்துக்கணும்னு எல்லோருக்கும் தெரியும். அதோட முளை கட்டிய பயறு வகைகளையும் மனசில் வச்சுக்கலாம்.

முளை கட்டிய பயறில், அசைவத்துக்கு இணையான புரதச் சத்து இருக்காம். சைவம் மட்டுமே சாப்பிடறவங்களுக்கு இது ரொம்பவே அவசியம். முளை கட்டிய பயறு வகைகள் இப்ப கடைகளிலேயே வித விதமான அளவுகளில் கிடைக்குதுங்கிறது உண்மைதான். ஆனா, என்ன இருந்தாலும் நாமளே செய்து சாப்பிடறதில் இருக்கிற திருப்தியே தனிதானே?

முளை கட்டறது பெரிய வேலையாக்கும் நினைச்சு நானுமே முன்னெல்லாம் செய்யாம இருந்தேன். அதுக்கு மெல்லிசான வெள்ளைத் துணி வேணும்னு வேற சொல்வாங்க, ஆனா என்கிட்ட அது கைவசம் இல்லை. அந்தக் காரணத்துக்காகவே ரொம்ப நாள் செய்யாம இருந்தேன். பிறகுதான் வெள்ளைத் துணி கூட தேவையில்லைன்னு தெரிஞ்சது :)

(நானே) முளை கட்டிய பச்சைப் பயறு :)
முதல் முதலா முயற்சி செய்யறவங்க, பச்சைப் பயறில் செய்யலாம். அது ரொம்ப சுலபமா முளை விடும். முளை கட்டறதுக்கு, பயறும் , தண்ணியும், பாத்திரமும் இருந்தா போதும்! மெலிசான வெள்ளைத் துணி வேணும்ன்னா, இருந்தா பயன்படுத்திக்கலாம், இல்லைன்னா பரவாயில்லை.

பச்சைப் பயறை எடுத்துக் கழுவிட்டு, முதல் நாள் இரவு தண்ணில ஊறப் போட்டுருங்க. மறு நாள் நல்லா ஊறியிருக்கும். அப்ப அந்தத் தண்ணியை வடிச்சிட்டு, மெல்லிசு துணி இருந்தா அதுல கட்டி, அதே பாத்திரத்தில் போட்டு இறுக்கமா மூடி வச்சிருங்க. துணியோட ஈரம் காயாம அப்பப்ப, ஒரு மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம் லேசா தண்ணி தெளிச்சுக்கிட்டே இருக்கணும். மறு நாள் துணியை தொளைச்சுக்கிட்டு முளை விட்டிருக்கும் பாருங்க, பாத்தாலே அவ்ளோ சந்தோஷமா இருக்கும்! முதல் தரம் இந்த மாதிரி முளை விட்டு பார்த்த போது, எங்க வீட்டு நாய்க்குட்டி கிட்டக் கூட பெருமையா காட்டினேன்! :)

சரி, துணி இல்லாட்டினா என்ன பண்றது? அப்பவும், ஊற வெச்ச தண்ணீரை வடிச்ச பிறகு, சும்மா அதே பாத்திரத்தில் அப்படியே போட்டு, நல்லா மூடி வச்சிருங்க. மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம், பயறைக் கழுவி, தண்ணீரை வடிச்சுட்டு வைக்கணும்.  மறு நாள் பார்த்தீங்கன்னா, பயறு முளை விட்டு இரண்டு மடங்கா ஆயிரும்! படத்தில் இருக்கிற பயறு துணியில்லாம முளை கட்டினதுதான்.

பயறை காய விடாம ஈரப் பதத்தோட வைக்கணும் என்கிறதுதான் முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம். முளை விட்டவுடனே உபயோகிச்சா நல்லது. அன்னிக்கே பயன்படுத்த முடியலைன்னா, குளிர்பெட்டியில் வெச்சுடணும்; அதன் பிறகு ரெண்டு அல்லது மூணு நாள் வரை வெச்சுக்கலாம்.

பச்சைப் பயறைத் தவிர, வெந்தயம், வெள்ளைக் கொண்டைக் கடலை, நிலக் கடலை, காஞ்ச பட்டாணி, இதெல்லாமும் முளை கட்டலாம்.

அதெல்லாம் சரி… முளை கட்டின பயறை எப்படி சாப்பிடறது?

முளை கட்டின பச்சைப் பயறு காய்கறி கலவைக்கு (salad) ரொம்ப நல்லாருக்கும். பச்சையாகவே காய்கறிகளோட எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத் தூள் போட்டு சாப்பிடலாம். சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை நிற குட மிளகாய், காரட், தக்காளி, முள்ளங்கி, வெள்ளரிக்காய், மாங்காய், தக்காளி, இதெல்லாம் சேர்க்கலாம். பார்க்கவே அவ்வளவு வண்ண மயமா அழகா இருக்கும். 'என்னைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பாரேன்! அப்படின்னு அழைப்பு விடுக்கும் :) பச்சையாக சாப்பிட பிடிக்காதவங்க, லேசா ஆவியில் அரை வேக்காடாக வேக வெச்சு சேர்த்துக்கலாம். 

பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, இதெல்லாம் சுண்டல் செய்யலாம். முளை கட்டின வெந்தயத்தை குழம்பு வைக்கலாம். ஏன், நாம சாதரணமா செய்யற பச்சைப் பயறு குழம்பு, சப்பாத்திக்கு செய்யற வெள்ளைக் கடலை மசாலா (channa masala), இதுக்கெல்லாம் கூட முளை கட்டி சேத்துக்கலாம்…

என்ன, பயறு ஊற வைக்க கிளம்பிட்டீங்களா? :)

எல்லோரும் ஆரோக்கியமா, சந்தோஷமா, இருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Sunday, June 3, 2012

சிப்ஸும் சூர்யாவும் :)


நடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா? ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவும், அதற்கும் மேலே நல்ல மனிதனாகவும், சூர்யாவை எனக்கும் பிடிக்கும். அதுவும் இப்ப விஜய் தொலைக்காட்சியில் வர்ற கோடி ரூபா நிகழ்ச்சியை அவர் நடத்தற விதத்திலிருந்து (பொதுவா இந்த மாதிரி விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தவிர்க்கும் எனக்கே) இன்னுமே பிடிச்சிருக்கு! 


 

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு நல்ல கருத்து (message), அல்லது நல்ல விஷயம் கற்றுத் தரக் கூடிய ஏதாவது ஒரு நிகழ்வு, இப்படி ஏதாவது சொல்றார். அதே போல, முடிக்கும் போதும் ஏதாவது ஒரு நல்ல சிந்தனையோட முடிக்கிறார்.

போட்டியாளர்கள்கிட்ட அவங்களுக்குத் தகுந்த மாதிரி, அல்லது அவங்க வாழ்க்கையின் நிலைமைக்குத் தகுந்த மாதிரி, கனிவாவும், பொறுப்பாவும் பேசறார். பேசற விஷயத்துக்குத் தகுந்த மாதிரி தன்னோட அனுபவங்களையும் பகிர்ந்துக்கறார். சில சமயம் இலவச அறிவுரைகளும் கிடைக்கும்…

மொத்தத்தில் சூர்யா ரொம்ப நல்ல பிள்ளை அப்படிங்கிற எண்ணம் இன்னும் உறுதிப்படற மாதிரி நடந்துக்கறார். தமி’ழ்’ உச்சரிப்பு மட்டும் இன்னும் கொஞ்சம் அ’ழு’த்தமா இருக்கலாம்னு தோணுது :) நேரங் காட்டியை (அதாங்க ‘timer”!) “மணி அண்ணே”ன்னு கூப்பிடறது க்யூட் :)

அதெல்லாம் சரி… சிப்ஸுக்கும் சூர்யாவுக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு உங்களுக்குத் தோணுமே?

அதொண்ணுமில்லீங்க… உருளைக்கிழங்கு வறுவல் (சுத்தத் தமிழில் ‘சிப்ஸ்’!) எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கும்தானே? அதுவும் இப்ப பிரபலமா இருக்கிற ஒரு brand (brand-க்கு தமிழில் என்ன?) சிப்ஸ்ல – ‘ஒண்ணே ஒண்ணு சாப்பிடுங்க, அப்புறம் நிறுத்தவே மாட்டீங்க’ அப்படின்னு போட்டிருப்பாங்க. என்னை வச்சுத்தான் அப்படிப் போட்டாங்களோ என்னவோ? நான் சிப்ஸ் சாப்பிட ஆரம்பிச்சாலும் அப்படித்தான். நிறுத்தவே முடியாது! 

என்னடா இது, அப்படின்னு எனக்கு என் மேலேயே வெறுப்பு. இந்த சிப்ஸ் இவ்ளோண்டா இருந்துக்கிட்டு நமக்கு இவ்வளவு தொந்தரவு குடுக்குதே, என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்…
ஒரு நாள் ‘டக்’குன்னு தீர்மானம் பண்ணி, சிப்ஸ் சாப்பிடற பழக்கத்துக்கு ஒரு பெரீய்ய்ய முற்றுப் புள்ளி வச்சிட்டேன். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாவது இருக்கும்னு நினைக்கிறேன், இப்பல்லாம் சிப்ஸை தொடறதில்லை. (touch wood).

ஆனா என்ன, இப்ப இந்த சிப்ஸ் மாதிரிதான் சூர்யா நிகழ்ச்சியும் ஆகிக்கிட்டிருக்கு. பார்க்க ஆரம்பிச்சிட்டா, பாதில நிறுத்த முடியலை! அதுவும் இங்கே விஜய் டி.வி.ல விளம்பரங்களே இல்லாம வேற நிகழ்ச்சிகள் போடறாங்களா, அதனால பார்க்கணும்கிற எண்ணத்தை இன்னும் தூண்டி விடுது… இப்ப தலைப்பு வந்திருச்சா? :)

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://cinema.dinakaran.com/cinema/TelevisionDetail.aspx?id=6165&id1=6