Sunday, April 8, 2012

ரௌத்திரம் பழகு!

ப்படின்னா என்னன்னு இப்பதான் இலேசா புரிய ஆரம்பிச்ச மாதிரி இருக்கு!

கோபப்பட வேண்டிய விஷயத்துக்கு சரியான நேரத்தில் கோபப்படறதும், தேவையில்லாத விஷயத்தை உடனடியா விட்டுத் தள்ளறதும் மிகவும் அவசியம். ஒருத்தர் நம்மை கேவலமா நடத்தும் போது கோபப்படுவதுதானே நியாயம்? கண் முன்னாடி அநீதி நடக்கும் போது அதை எதிர்ப்பதுதானே தர்மம்? அந்த மாதிரி சமயங்களில் அமைதியா இருந்தா அது கோழைத்தனம்தானே? அதைத்தான் ‘ரௌத்திரம் பழகு’ன்னு சொல்றான், பாரதி.

இதுவே நம்ம தினசரி வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்துதுன்னு பார்ப்போம்.

கோபம் என்பது இயல்பான உணர்வு மட்டுமில்லை; சமயத்தில் வாழ்க்கைக்குத் தேவையான உணர்வும் கூட. மற்ற எல்லாவற்றையும் போலவே அதையும் நம்ம கையாளத் தெரிஞ்சுக்கணும். எப்ப கோபப்படணும், எப்படி கோபப்படணும், யார்கிட்ட நம்ம கோபம் செல்லாது, அந்த மாதிரி சமயத்தில் நம்ம அதிருப்தியை எப்படி வெளிப்படுத்தணும், இதெல்லாம் தெரியணும்.

சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப் பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்

அப்படின்னு கேள்விப்பட்டிருக்கோம். பாரதி சொல்வதைப் பார்த்தா, கோபம் கூட அப்படித்தான் போலருக்கு. அதுவும் ஒரு மனப் பழக்கம் மாதிரிதான் தெரியுது.

பழக்கம் என்பது என்ன? நாம ஒரு செயலை திரும்பத் திரும்ப செய்யும் போது, அதுவும் நம் மனசறிஞ்சு (conscious-ஆக) செய்யும் போது, அது பழக்கமா மாறிடுது. அப்படி பழக்கமாக மாறும் அந்த செயல் நமக்கு ரொம்ப நல்லா தெரிஞ்ச ஒரு செயலாகவும் ஆகுது. அது எப்படி ஆரம்பிக்குது, அதனோட முடிவு என்ன, நடுவில் உள்ள நெளிவு சுளிவுகள் என்ன, இதெல்லாம் ரொம்ப விவரமா நமக்கு புரிய ஆரம்பிக்குது.

எந்த ஒரு விஷயத்தையும் கத்துக்கிறவங்களுக்கு, பயிற்சி செய்யறவங்களுக்கு, இந்த நிலை நல்லாவே புரியும். பயிற்சி செய்யச் செய்ய, எதை எப்படி செய்தா என்ன ஆகும், அதனோட விளைவுகள் என்ன, நன்மைகள் என்ன, தீமைகள் என்ன, இப்படி எல்லாமே தெரிய ஆரம்பிக்கும்.

அதே போலத்தான் கோபமும். கோபம் வரும்போதே, நமக்கு கோபம் வருது என்ற உணர்வும், கோபமா இருக்கும் போது, நாம் கோபமா இருக்கோம், அப்படிங்கிற உணர்வும், அந்த சமயத்தில் நாம என்ன செய்யறோம், என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது, என்கிற உணர்வும் இருந்துட்டா போதும், கோபம் ஓரளவு நம்ம பழக்கத்துக்கு வர ஆரம்பிச்சிருச்சுன்னு தெரிஞ்சுக்கலாம். தன்னைத்தானே வேடிக்கை பார்க்கத் தெரிஞ்சவங்களுக்கு இது ரொம்ப சுலபம் :)

ரௌத்திரம் பழகு’வதில் இரண்டு விதம் இருக்கு. ஒண்ணு, நிஜமாகவே கோபமா இருக்கும் போது, அதை எப்படி கையாள்றதுன்னு தெரியணும். இரண்டு, கோபம் இல்லாத போது கூட சில சமயம் கோபமா இருக்கற மாதிரி காட்டிக்க வேண்டி இருக்கும்; அதுவும் எப்படின்னு தெரியணும்.

‘கோவம் வந்தா என்ன செய்யறேன்னு எனக்கே தெரியறதில்லை.’ அப்படின்னு பலரும் சொல்றதுண்டு. அப்ப என்ன சொன்னாலும், என்ன செய்தாலும், அது என்னவோ தன் தவறு இல்லைங்கிறது போலவும், கோவத்தோட தவறுதான் என்கிறாப் போலவும் பேசுவோம். பல சமயங்களில் கோபத்தில் ஏதேனும் சொல்லிட்டு, அல்லது செய்துட்டு, பின்னாடி ஏகத்துக்கு வருத்தப்படறவங்களும் உண்டு.

கோபப்படும்போது நாம எவ்வளவுக்கெவ்வளவு conscious-ஆ, தன்னுணர்வோடு இருக்கோமோ, அவ்வளவுக்கவ்வளவு நம்ம கோபத்தை கட்டுப்பாட்டோட வெளிப்படுத்தலாம். மற்றவர்கள் மனமும் புண்படாமல், நாமே பின்னாடி வருத்தப்படும் அளவிலும் இல்லாமல். இது முதல் விதம்.

குறிப்பா குழந்தைகளிடம், நிஜமாவே கோபப்படக் கூடாது; ஆனா கோபமா இருக்கிற மாதிரி காட்டிக்கலாம். குழந்தைகளிடம்னு இல்லை, பல சந்தர்ப்பங்களுக்கும் அது பொருந்தும். உதாரணத்துக்கு, சில பேர் சாதுவா இருப்பாங்க, எல்லாத்துக்கும் சரி சரின்னு போவாங்க. மொத்தத்தில் ‘பிழைக்கத் தெரியாதவங்களா’ இருப்பாங்க (என்னை மாதிரி :). அவங்களை மற்ற ‘சாமர்த்தியசாலிகள்’ advantage எடுத்துக்க வாய்ப்பிருக்கு. அந்த மாதிரி நேரங்களில் கோபமா இருப்பது மாதிரி காட்டிக்கிறது, தற்காப்புக்கு உதவும். இது இரண்டாவது விதம்.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன இந்தக் கதையைப் படிச்சா, இது சுலபமா புரியும்…

ஒரு காட்டுக்குள்ள ஒரு பொல்லாத பாம்பு இருந்துச்சு. யாரைப் பாத்தாலும் கடிச்சிரும். அந்த காடு வழியா போறதுக்கு பசங்கள்லாம் ரொம்ப பயப்படுவாங்க. அப்ப ஒரு நாள், ஒரு சாது அந்த காடு வழியா வந்தாரு. அதைப் பார்த்த பசங்க அவர்கிட்ட ஓடி வந்து, “அங்கே போகாதீங்க சாமீ. ஒரு பொல்லாத பாம்பு இருக்கு, அது உங்களைக் கடிச்சாலும் கடிச்சிரும்’னு சொன்னாங்க. அவர் அதைக் கண்டுக்காம, நடந்துகிட்டே இருந்தாரு. அவர்கிட்டதான் மந்திர சக்தியெல்லாம் இருக்கே. அந்த பாம்பு, அவரைப் பார்த்ததும் கடிக்க வந்திருச்சு. உடனே அவர் கண்ணை மூடிக்கிட்டு ஒரு மந்திரம் ஜெபிச்சார். அதுக்குக் கட்டுப்பட்டு, அதுவும் அடக்க ஒடுக்கமா அவர்கிட்ட வந்து நின்னுது.

‘நீ ஏன் இப்படி மக்களை பயப்படுத்தறே? உனக்கு நான் மந்திரோபதேசம் செய்யறேன். அதை நீ தினமும் பயிற்சி செய்தா, ‘நல்ல’ பாம்பா மாறிடுவே’, அப்படின்னு சொல்லி, அதுக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தார். பாம்பும், பணிவா அவரை வணங்கி அதைக் கேட்டுக்கிச்சு.

பிறகு அதை தினம் ஜெபிச்சிக்கிட்டே இருந்ததுல, அது ரொம்ப சாதுவான பாம்பாயிடுச்சு. அதைத் தெரிஞ்சுக்கிட்ட பசங்கள்லாம், இப்ப அதுகிட்ட பயமே இல்லாமப் போனதோட, மேற்கொண்டு அதை அடிச்சு துன்புறுத்த வேற ஆரம்பிச்சிட்டாங்க. அந்தப் பாம்புக்குதான் இப்ப பசங்களைப் பார்த்தாலே பயம்கிற அளவு ஆயிருச்சு.

ஒரு நாள், அந்த பாம்பை வாலைப் பிடிச்சு சுத்தி, குற்றுயிரும் குலைஉயிருமா நல்லா அடிச்சுப் போட்டுட்டாங்க. அதில் அந்த பாம்புக்கு நினைவே தப்பிப் போச்சு. ரொம்ப நேரம் கழிச்சு லேசா பிரக்ஞை வந்த போது, மெதுவா நகர்ந்து ஒரு வளைக்குள்ள போயிருச்சு. அதுல இருந்து பயந்துகிட்டு, இரை தேடக் கூட வெளியில் வராம, இப்பவோ அப்பவோன்னு இருந்தது.

அப்ப ஒரு நாள், அதே சாது அதே வழியா வந்தாரு. அங்கே இருந்த பசங்ககிட்ட பாம்பைப் பற்றி விசாரிச்சாரு. ‘அது எப்பவோ செத்துப் போச்சு’ன்னு சொன்னாங்க பசங்க. ஆனா அவர் அதை நம்பலை. மந்திரத்தோட சக்தியால அது சாகாதுன்னு அவருக்கு தெரிஞ்சிருந்தது. அவர் காட்டுக்குள்ள போயி, அதை கூப்பிட்டுப் பார்த்தார். குருநாதரோட குரலைக் கேட்டதால, அந்த பாம்பு மெல்ல வெளிய வந்து அவரை வணங்கிச்சு.

அதோட நிலைமையைப் பார்த்து ரொம்ப வருத்தப்பட்ட சாது, ‘ஏன் இப்படி ஆயிட்டே?’ன்னு கேட்டாரு. பாம்புக்கு இதுக்குள்ள நடந்ததெல்லாம் மறந்து போயிருந்துச்சு. அதனால, ‘எனக்கு ஒண்ணும் இல்லையே சாமீ… நான் நல்லாத்தானே இருக்கேன்’ன்னு சொல்லுச்சு! சாது திரும்பத் திரும்பக் கேட்ட பிறகு, அதுக்கு லேசா நினைவு வந்தது. ‘பசங்க இப்படி பண்ணிட்டாங்க, ஆனா சின்னப் பிள்ளைங்கதானே தெரியாம பண்ணிட்டாங்க’ அப்படின்னு சமாதானம் வேற சொன்னது. அதுதான் இப்ப ‘நல்ல’ பாம்பா ஆயிருச்சே?

அதைக் கேட்ட சாது, ‘நான் உன்னை மற்றவர்களை கடிக்க வேண்டாம், துன்புறுத்த வேண்டாம்னு தானே சொன்னேன். உன்னை பிறர் துன்புறுத்தும் போது சீற வேண்டாம்னு சொல்லலையே? இவ்வளவு முட்டாளா இருக்கியே’ன்னு வருத்தப்பட்டாராம்.

ஒருத்தர் ஆன்மீகத்தில் ஈடுபட ஈடுபட, அவர் ‘சாது’வாக ஆகி விடுவார். மனநிலை சமன்பட்டுக்கிட்டே வரும்போது கோபம் போன்ற உணர்வுகள் குறைஞ்சிடறதும், அடியோட போயிடறதும், சகஜம். அந்த மாதிரி இருக்கவங்களை மற்றவங்க சுலபமா ஏமாத்த நிறைய வாய்ப்பிருக்கு. அதனாலதான் ஸ்ரீராமகிருஷ்ணர், “சாதுவா இருக்கலாம்; அதுக்காக முட்டாளா இருக்கணும்னு பொருள் இல்லை. தன்னைத்தானே காத்துக் கொள்ளத் தெரியணும்”, அப்படின்னு சொல்லுவார். அதை விளக்கத்தான் இந்தக் கதையைச் சொன்னார்.

தற்காப்பு கோபம்னா என்ன, ரௌத்திரம் பழகறதுன்னா என்ன, இதெல்லாம் பற்றி தெளிவா குழப்பிட்டேனா இப்போ?

ரௌத்திரம் பழகுங்க! சந்தோஷமா இருங்க!

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

நன்றி: வல்லமை

பி.கு.: ஊருக்குப் போறேன். மறுபடியும் ஒரு மாசத்துக்கு உங்களுக்கு விடுமுறை, என் பதிவுகளிலிருந்து :) அதுக்குன்னு ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம்! திரும்பவும் வருவேன்!

8 comments:

  1. /‘ரௌத்திரம் பழகு’வதில் இரண்டு விதம் இருக்கு. ஒண்ணு, நிஜமாகவே கோபமா இருக்கும் போது, அதை எப்படி கையாள்றதுன்னு தெரியனும். இரண்டு, கோபம் இல்லாத போது கூட சில சமயம் கோபமா இருக்கற மாதிரி காட்டிக்க வேண்டி இருக்கும்; அதுவும் எப்படின்னு தெரியணும்./

    அருமையாக விளக்கியுள்ளீர்கள். நல்ல பதிவு.

    எந்த ஊருக்கு என சொல்லவில்லையே:)! விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துகள்:)!

    ReplyDelete
  2. //அருமையாக விளக்கியுள்ளீர்கள். நல்ல பதிவு.//

    நன்றி ராமலக்ஷ்மி :)

    //எந்த ஊருக்கு என சொல்லவில்லையே:)! விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துகள்:)!//

    நம்மூருதான்! :)

    ReplyDelete
  3. //Geetha Sambasivam said...

    :)))))//

    இந்த புன்னகை என்ன விலை கீதாம்மா :) வருகைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  4. //கோபிநாத் said...

    நல்ல பகிர்வு ;-)//

    நன்றி கோபி!

    ReplyDelete
  5. சின்னவயதில் பசுமரத்து ஆணி போல் பதிந்தகதை பாம்புக்கதை!
    ஆனாலும் அதை சரியான காண்டெக்ஸ்டில் படிக்கும்போது புதுசா படிக்கராப்லே தோணறது!அருமையான பதிவு!நன்றி!

    தமிழ்ப் புத்தாண்டு நம்மூரிலா?

    ReplyDelete
  6. //சின்னவயதில் பசுமரத்து ஆணி போல் பதிந்தகதை பாம்புக்கதை!
    ஆனாலும் அதை சரியான காண்டெக்ஸ்டில் படிக்கும்போது புதுசா படிக்கராப்லே தோணறது!அருமையான பதிவு!நன்றி!//

    மகிழ்ச்சி லலிதாம்மா :) மிக்க நன்றி.

    //தமிழ்ப் புத்தாண்டு நம்மூரிலா?//

    இல்லை, புத்தாண்டு கழித்துத்தான் போறேன் அம்மா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)