பேர் வெக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும், சந்திரனுக்கு. இப்பன்னு இல்ல, சின்னப் புள்ளையில இருந்தே அப்படித்தான். ஒண்ணாங் கிளாஸ் படிக்கும் போதே ‘ஓகே மிஸ்’ அப்படின்னு இஞ்கிலீஷ் டீச்சருக்கு பேர் வச்சான்! ஏன்னா அவங்க “ஓகே? ஓகே?” அப்படின்னு மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்லுவாங்களாம்.
இப்ப குடும்பஸ்தனா ஆனபிறகும் அந்தப் பழக்கம் விடல. நண்பர்கள், உறவினர்கள், ஏன், பஸ்ல, ரயில்ல பழகறவங்களுக்குக் கூட பேர் வெச்சிருவான்.
அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. சாயந்திரம் நொறுக்கறதுக்கு உருளைக்கிழங்கு போண்டா பண்ணியிருந்தா, அவன் மனைவி ரமா. சுடச் சுட ஆனந்தமா சாப்பிட்டான்.
“ரமா, இந்த போண்டாவைப் பார்த்தோன்ன உனக்கு என்ன ஞாபகம் வருது, சொல்லு பார்ப்போம்”
போண்டாவை எண்ணெயில போட்டுக்கிட்டே “ரவி… ரவி… நீயும் வந்து போண்டா எடுத்துக்கோட கண்ணா. உனக்குப் பிடிக்குமே”, என்று மகனைக் கூப்பிட்டவள், “எனக்கொண்ணும் நினைவு வரலையே?” புருவத்தைச் சுருக்கினா, ரமா.
“நம்ம வீட்டுக்கு வந்த ஒத்தர் நீ பண்ணின போண்டாவெல்லாம் யாருக்கும் மிச்சம் வெக்காம தானே சாப்பிட்டாரே… நினைவில்லயா நம்ம போண்டா மாமாவை? அப்பாடி. என்னமா சாப்டார் மனுஷன்!”
“ஏங்க, என் போண்டா அவருக்கு அவ்வளவு பிடிச்சதில எனக்கு சந்தோஷம் தான். பாவம் அவர ஏன் நீங்க இன்னும் கிண்டல் பண்றீங்க?” சொல்லிக்கிட்டே மணக்க மணக்க காஃபியைப் பக்கத்தில வெச்சா.
“அதில்ல ரமா. அவர் பொண்டாட்டி அவருக்கு போண்டாவே செஞ்சு குடுத்திருக்க மாடாங்கன்னு நெனக்கிறேன்… ஆமா, அந்தம்மாவை நினைவிருக்கோ ஒனக்கு?”
“ஏன் நினைவில்லாம? நல்லா நினைவிருக்கே”
“அதானே. எதை மறந்தாலும் அந்த ஜி.ஆர்.டி. ஆண்ட்டியை எப்படி மறப்பே?”
“ஏங்க, அவங்க எக்கச்சக்கமா நகை போட்டுக்கிட்டு வந்தது உண்மைதான், அதுக்குன்னு இப்படியா பேர் வெப்பீங்க?” அப்படின்னு சொன்னாலும் இதழில் பிறந்த புன்னகையைத் தடுக்க முடியலை, ரமாவுக்கு.
“பின்ன என்ன ரமா? நம்ம பையன் பிறந்த நாளுக்கு வர்றவங்க இப்படியா வர்றது? பையனோட அம்மா, நீயே அவ்வளவு பிரமாதமா அலங்காரம் பண்ணிக்கல! வந்தவங்களுக்கே சந்தேகம் வந்திருக்கும், அது யார் வீட்டு விசேஷம்னு!”
அத்தனையும் பேசிட்டு, கூடவே மறக்காமல், “காஃபியும் போண்டாவும் சூப்பர் ரமா”, மனைவியையும் மனமாரப் பாராட்டும் போது அழைப்பு மணி அடிச்சது.
“நாம் பாக்கிறேம்மா”, ரவி எழுந்து வாசலுக்கு ஓடிப் போய் கதவத் தொறந்தான்.
“ஹாய் அங்கிள். ஹாய் ஆண்ட்டி”, என்றவன், “அப்பா, நீங்க பேசிக்கிட்டிருந்தீங்களே அந்த போண்டா மாமாவும், ஜி.ஆர்.டி. ஆண்டியும் வந்திருக்காங்க”, என்று உள்ளே திரும்பி சத்தமாக அறிவித்தான்!
**
பாடம் 1: புறம் பேசாமல் இருப்பது மிக மிக நல்லது.
பாடம் 2: அப்படியே பேசினாலும் குறைந்தது குழந்தைகள் முன்பு பேசாமல் இருப்பது நல்லது.
**
--கவிநயா