உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Wednesday, July 20, 2011
வேண்டும்!
நதியோடு ஜதிபோட்டு நான்ஆட வேண்டும்
நட்சத்திரப் பூப்பறித்து நான்சூட வேண்டும்!
வான்நிலவைக் கைவிளக்காய் நான்ஏந்த வேண்டும்
வானவில்என் வாசலிலே தோரணமாய் வேண்டும்!
கதிரவன்என் கவிதையில்தன் கனல்மறக்க வேண்டும் - நான்
காற்றாகிக் குழல் நுழைந்து மனம்மயக்க வேண்டும்!
மணம்வீசும் மலராகி நான்சிரிக்க வேண்டும் - நான்
ரீங்கார வண்டாகித் தேன்குடிக்க வேண்டும்!
சின்னச்சிற் றோடையாய்ச் சிலுசிலுக்க வேண்டும் - நான்
புத்தம்புது வெள்ளமாய்ப் புவிதழுவ வேண்டும்!
வண்ணச்சிட்டுக் குருவியாய்ச் சிறகடிக்க வேண்டும் - நான்
சிறகடித்து மனம்விரித்து வான்அளக்க வேண்டும்!
பாறைக்குள் பச்சையாய் நான்துளிர்க்க வேண்டும் - நான்
பாசமுடன் உயிர்கள் தமைநேசிக்க வேண்டும்!
அன்பென்னும் ஆதார ஸ்ருதியாக வேண்டும் - நான்
ஆசைகளைக் கடந்துலகில் அறம்வளர்க்க வேண்டும்!
--கவிநயா
Subscribe to:
Post Comments (Atom)
அத்தனையும் நிறைவேற இறையருள் கூடட்டும்.
ReplyDeleteராகத்தோடு வாசித்திட வெகு இனிமை.
எங்களுக்கு இது போல கவி பல தொடர்ந்து தர ‘வேண்டும்’!!!
ஆஹா! அந்த எடுப்பு நான்கு
ReplyDeleteவரிகளும் கம்பீரமாக ஆரம்பிக்கின்றன. தொடுப்பு மட்டும் என்னவாம்?.. 'கதிரவன் என் கவிதையில் தன் கனல் மறக்கவேண்டும்' என்கிற பொழுது பொதுமை ஆசை பூத்துக் குலுங்குகிறது.
கவிதையின் ஆதார சுருதி, முடிப்பில் முழுமூச்சுடன் மனவெழுச்சியாய் திரண்டு,'பாசமுடன் உயிர் தமை நேசிக்கவும்,அன்பை அடித்தளமாய்க் கொள்ளவும்,ஆசைகளைக் கடந்து அறம் வளர்க்கவும்' பிறந்த வாழ்க்கையின் இலட்சியத்தை வெகு அடக்கமாய் எடுத்தோதுகிறது.
அற்புதம் கவிநயா! உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்..
'சின்ன சின்ன ஆசை'நினைவு வந்தது!
ReplyDeleteகற்பனை கரை புரண்டோடும் கவிதை!
இதே தலைப்பில் [வேண்டும்] முருகனைப்பற்றி என் பாட்டைப் படித்தாயா?கிட்டத்தட்ட இதே மீட்டரில் எழுதி இருந்தேன்!
பாசமுடன் உயிர்கள் தமைநேசிக்க வேண்டும்!
ReplyDeleteஅன்பென்னும் ஆதார ஸ்ருதியாக வேண்டும் - //
வேண்டும்.. வேண்டும் .. அருமையான கவிதையைப் பாராட்ட வேண்டும்..
வாங்க ராமலக்ஷ்மி!
ReplyDelete//எங்களுக்கு இது போல கவி பல தொடர்ந்து தர ‘வேண்டும்’!!!//
மண்டபத்துல தந்தா, நானும் தரலாம் :)
ச்சும்மா சொன்னேன்... ஊக்கத்திற்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)
வாங்க ஜீவி ஐயா. வெகு நாளுக்குப் பிறகு உங்களைப் பார்த்ததில் பரம சந்தோஷம் :) உங்களுடைய எழிலான பின்னூட்டம் படித்து இன்னும் சந்தோஷம். பல முறை வாசித்தேன்.
ReplyDelete//'கதிரவன் என் கவிதையில் தன் கனல் மறக்கவேண்டும்' என்கிற பொழுது பொதுமை ஆசை பூத்துக் குலுங்குகிறது.//
எனக்குப் பிடித்த வரியையே நீங்கள் எடுத்துக் காட்டியிருப்பது மகிழ்ச்சி தருகிறது :)
//உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்..//
ஆசிகளுக்கு மிக்க நன்றி ஐயா.
//'சின்ன சின்ன ஆசை'நினைவு வந்தது!
ReplyDeleteகற்பனை கரை புரண்டோடும் கவிதை!//
:)
//இதே தலைப்பில் [வேண்டும்] முருகனைப்பற்றி என் பாட்டைப் படித்தாயா?கிட்டத்தட்ட இதே மீட்டரில் எழுதி இருந்தேன்!//
இப்போதான் படிச்சேன் அம்மா. அழகா எழுதியிருக்கீங்க. நான் இந்தக் கவிதை எழுதி சில வருஷங்கள் ஆச்சு! :)
வருகைக்கு மிக்க நன்றி லலிதாம்மா.
//வேண்டும்.. வேண்டும் .. அருமையான கவிதையைப் பாராட்ட வேண்டும்..//
ReplyDelete:) மிக்க நன்றி, இராஜராஜேஸ்வரி.
கதிரவன் என் கவிதையில் தன் கனல் மறக்க வேண்டும்.
ReplyDeleteஆகா தங்கள் கவிதையைக்கண்டு நான் என்னையே மறந்து
விட்டேன்.ஒருவேளை என்போல் கதிரவன் தன் கனல்மறந்தால் எம்
நிலை என்ன தோழி!....அருமையான தங்கள் கவிதையால் இந்த
பிரபஞ்சத்தைக் காக்கும் கதிரவனைக் கட்டிப் போட்டுவிடாதீர்கள்....
வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பான கவிதைகளைப் படைக்க....
கதிரவனின் இயல்பு வெம்மை. அந்த இயல்பு நிலை வெகுவாகக் கூடி சுட்டெரிக்கும் சூரியனாக மாறுகின்ற நேரத்து, கொண்டலாய்த் திரளும் உங்கள் கவிதை ஈரம், தண்ணெனும் குளிர்ச்சியாய் பொழிந்து கதிரவனின் அதிகபட்ச கனல் வெம்மையை உயிர்வாழும் இனங்களுக்குக் குறைத்துக் குளிர்விக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் நீங்கள் எழுதியிருப்பதாக எடுத்துக் கொண்டேன்.
ReplyDeleteவாருங்கள் அம்பாளடியாள்.
ReplyDeleteநீங்கள் சுட்டிய வரியை ஜீவி ஐயா தந்திருக்கும் பொருளிலேயே எழுதினேன் :)
உங்கள் முதல் வருகையும் கவிதையில் உங்களை மறந்ததும், மகிழ்ச்சி தருகிறது :) வருகைக்கு மிக்க நன்றி.
ஜீவி ஐயா, என்னாலேயே இவ்வளவு தெளிவாக விளக்கி இருக்க முடியாது. நீங்கள் மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி, மீள் வருகைக்கும் சேர்த்து :)
ReplyDeleteஇயற்கையோடு இரண்டரக் கலந்து
ReplyDeleteஅதில் உள்ள அழகை நன்மைகளை மட்டுமே வேண்டும்
கவிதை அருமையிலும் அருமை
"பொறுமையுடன் நினது திருவடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்.." எனத் துவங்கும்
வள்ளலாரின் பாடலை நினைவுறுத்திப் போகுது
இப்பாடலின் சந்த அமைப்பு
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
வாருங்கள் ரமணி. கவிதை உங்களுக்கு பிடித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)
ReplyDelete/நதியோடு ஜதிபோட்டு நான்ஆட வேண்டும்
ReplyDeleteநட்சத்திரப் பூப்பறித்து நான்சூட வேண்டும்!
வான்நிலவைக் கைவிளக்காய் நான்ஏந்த வேண்டும்
வானவில்என் வாசலிலே தோரணமாய் வேண்டும்!
கதிரவன்என் கவிதையில்தன் கனல்மறக்க வேண்டும் - நான்
காற்றாகிக் குழல் நுழைந்து மனம்மயக்க வேண்டும்!/
வேண்டும் வேண்டும்
இன்னும் இதுபோல்
இன்பம் பொங்கும் கவிதைகள்
இன்னும் பல...
/மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்,/
என்றே பாரதியும்
/
எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும்
எழுத்தெல்லாம் சுடராகி எரிய வேண்டும்
பெண்ணென்றால் தாயென்று பார்க்க வேண்டும்
.....
.....
கண்ணோடு வாய்மைத் தீ கனல வேண்டும்
கருதுவதை உரைக்கின்ற வன்மை வேண்டும்
பண்கொண்ட இசைப்பாடல் பயில வேண்டும்
பறவைகளுக் கிருக்கின்ற சிறகு வேண்டும்
நன்மைகளைச் சுரண்டாத நட்பு வேண்டும்
நாளைக்குக் கலங்காத செல்வம் வேண்டும்!
எப்போதும் சிரிக்கின்ற உதடு வேண்டும்
வெறுந்தரையில் படுத்தாலும் உறக்கம் வேண்டும்
மழை பாடும் சங்கீதம் ருசிக்க வேண்டும்
சிலரோடு கவிதைகளைத் துய்க்கவேண்டும்
சிந்தனையைக் காற்றாகப் பரப்ப வேண்டும்
நிலவோடு நதி நீரில் குளிக்க வேண்டும்
நித்திரையைக் கலைக்காத கனவு வேண்டும்
பலரோடும் ஒன்றாகப் பழக வேண்டும்
/
வைரமுத்து வரியும்
வாசிக்கும் பொழுது
வலம் வருகின்றன.
வாழ்த்துகள்
வாருங்கள் திகழ். பொருத்தமான கவிதைகளை நினைவு வைத்து எடுத்துத் தருவது உங்களுக்குக் கை வந்த கலையாக இருக்கிறது :) உங்கள் ரசனையும் கவிதை மீதான காதலும் மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி.
ReplyDeleteஅக்கா,
ReplyDeleteமற்ற எல்லா வரிகளையும் ஆண் பெண் இருபாலரும் எழுதிவிடலாம். ஆனால் இந்த குழல் புகுந்து இளம்காற்று மனம் மயக்குவதை குழலிகள் தான் எழுத முடியும்! :-)
//அக்கா,
ReplyDeleteமற்ற எல்லா வரிகளையும் ஆண் பெண் இருபாலரும் எழுதிவிடலாம். ஆனால் இந்த குழல் புகுந்து இளம்காற்று மனம் மயக்குவதை குழலிகள் தான் எழுத முடியும்! :-)//
:) வருக குமரா. ஏன் அப்படி சொல்றீங்கன்னு புரியலையே?
கூந்தலில் குளிர் காற்று நுழைந்து மனம் மகிழ்விப்பதற்கு நிறைய முடி இருக்க வேண்டுமே அக்கா. அதனைத் தான் சொல்கிறேன்.
ReplyDelete//கூந்தலில் குளிர் காற்று நுழைந்து மனம் மகிழ்விப்பதற்கு நிறைய முடி இருக்க வேண்டுமே அக்கா.//
ReplyDeleteஓ... நீங்க அப்படி வரீங்களா? சரி, சரி... :)
குறுநகை புரியாமல்
ReplyDeleteஇருக்க முடியவில்லை
:)))))))))))))
(Advance)
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள்
//குறுநகை புரியாமல்
ReplyDeleteஇருக்க முடியவில்லை
:)))))))))))))//
வாங்க திகழ், மிக்க நன்றி! :)
//(Advance)
பிறந்த நாள் வாழ்த்துகள்//
இதற்கும் சேர்த்து :)