ரொம்ப நாளைக்கு முன்னாடி
திகழ்மிளிர் அவர்கள் ‘வழக்கொழிந்த சொற்கள்’ பற்றி தொடர் பதிவு இட அழைத்திருந்தார். நானும் சிரமப்பட்டு பலவிதமா – அதாங்க, உக்காந்துகிட்டு, படுத்துகிட்டு, சாஞ்சுகிட்டு, நின்னுக்கிட்டு, நடந்துகிட்டு, இப்படில்லாம் - யோசிச்சுதான் பார்த்தேன். ஆனா அப்படி ஒரு சொல்லும் தோணல. என்னோட வழக்கிலிருந்தும் அவங்கல்லாம் மறைஞ்சு போயிட்டதனாலயோ என்னவோ :(
ஆனா ‘வழக்கொழிந்து கொண்டிருக்கும்’ சில சொற்களை நினைச்சு கவலை வந்துருச்சு. தினமும் நாம பேசும் பேச்சை கொஞ்சம் கவனிச்சாலே தெரிஞ்சிரும். முக்கியமா, “அம்மா”, “அப்பா”, இந்த சொற்களே வேகமா மறைஞ்சுகிட்டு வருது. இப்ப இருக்கிற பெற்றோர்கள் எல்லாருமே குழந்தைகளுக்கு, “மம்மி”, “டாடி”ன்னுதான் சொல்லிக் கொடுக்கறாங்க!
காலைல எழுந்து "brush பண்ணாம", "பல் விளக்கு"ங்க! “walking” போகாம, “நடக்கலா”மே. அப்படி இல்லன்னா “exercise” செய்யாம, “உடற்பயிற்சி” செய்யலாம். “காபி”யோ “டீ”யோ குடிக்காம, “குளம்பி”யோ, “தேநீரோ” குடிக்கலாம். “லஞ்சை” “டிபன் பாக்ஸ்”ல எடுத்துக்கிட்டு “பஸ்”ல “ஆபீசு”க்கு போகாம, “மதிய உணவை” ஒரு “சம்புடத்”துல எடுத்துகிட்டு “பேருந்து”ல “அலுவலகத்து”க்கு போகலாம். “ஈவினிங்” “பீச்”சுக்கு போக வேணாம்; “சாயந்திரம்” “கடற்கரை”க்கு போகலாம். அங்கே "கிளிஞ்சல்" பொறுக்கலாம்.
“சம்புடம்” னா டப்பா. டப்பா தமிழ் வார்த்தையா? எனக்கு தெரியல. யாரங்கே! குமரனைக் கூப்பிடுங்கள்! :)
நம்ம ஸ்ரீ காழியூரர் இருக்காரே, அவர் நகைச்சுவையிலும் கலக்குவார்னு எல்லாருக்கும் தெரியும். அவர் ஒரு முறை "ஆட்டோ"வை, "குலுக்கி"ன்னு குறிப்பிட்டிருந்தார்! :)
ஒரு நாள் முழுக்க ஆங்கிலம் கலக்காம தமிழ் பேச முயற்சி செய்தோம்னா, நமக்கே தெரியும்... என்ன தெரியும்னு கேட்கறீங்களா? வேறென்ன, நம்ம (பேசும் தமிழோட) இலட்சணம்தான் :)
“அடுப்படி”, “முகப்பு”, “முற்றம்”, “கொல்லைப் புறம்”, “தோட்டம்”, இந்த மாதிரி சொற்கள் கூட மறைஞ்சுகிட்டுதான் வருது. போகப் போக “கிச்சன்”, "கலர்", இதெல்லாம் தமிழ் வார்த்தை ஆயிடும் போல இருக்கு! அதே போல “கவுண்ட்டர் டாப்”பும்! “மேடை”ன்னு அழகா சொல்லுவோம் அப்போ. “அலமாரி” “உக்கிராணம்” இதெல்லாமும் நினைவு வருது. “உக்கிராணம்”கிறது மளிகை சாமான் வைக்கும் அறை. எங்க ஊர்ப்பக்கம் இப்பவும் புழக்கத்தில் இருக்கிற சொல்.
அடுப்படின்னா, அடுத்து சாப்பாடுதானே? :) “சோறு”ங்கிற சுத்தமான தமிழை விட்டுட்டு எல்லாரும் “சாதம்”னும், சில சமயம் அது கூட இல்லாம “ரைஸ்” னும் சொல்றோம். சோறு வச்சா, “வெஞ்சனம்” இல்லாம சாப்பிட முடியுமா என்ன? வெஞ்சனம்னா நாம சொல்றோமே, கூட்டு, பொரியல், அவியல், இந்த மாதிரி வகையறாக்களுக்கெல்லாம் பொதுவான பேரு. துணைக் கறின்னு சொல்லலாம்.
“அம்மி”, “ஆட்டுக்கல்”, “குழவி”, “உரல்”, “உலக்கை”, இதெல்லாம் நினைவிருக்கா?
எங்க ஊர்ப் பக்கம் காலணிக்கு “நடையன்” அல்லது “மிதியடி”ன்னு சொல்வாங்க. அழகா இருக்குல்ல? :)
தோழி ஒருத்தரோட பேசிக்கிட்டிருந்தப்ப “bore அடிக்குது” ங்கிறதுக்கு தமிழ்ல என்னன்னு கேட்டாங்க. எனக்கும் தெரியல. (தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!) ஒரு வேளை தமிழ் மக்களுக்கு bore-ரே அடிச்சிருந்திருக்காது, அதனாலதான் அதுக்கு சமமான சொல் இல்லை போலருக்குன்னு அவங்ககிட்ட சொன்னேன். ஆனா “பொழுதே போக மாட்டேங்குது” அப்படிங்கிற பயன்பாட்டை பார்த்திருக்கேன். ரெண்டும் ஒண்ணுதானோ?
ஏன் bore அடிக்கலை அப்படின்னு யோசிச்சப்ப, எனக்கு நினைவு வந்தவைதான், சில ‘வழக்கொழிந்த விளையாட்டுகள்’! போச்சுடா, மலரும் நினைவுகளான்னு யாரோ ஓடறது கேக்குது. கொஞ்சம் பொறுமை! சுருக்கமாதான் சொல்லப் போறேன் :)
நான் வளர்ந்தது மதுரைப் பக்கம் உள்ள ஒரு (குக்)கிராமத்துல. அங்க ஒரு ஆரம்ப நிலைப் பள்ளியும், (அஞ்சாப்பு வரை) ஒரு உயர்நிலைப் பள்ளியும் (பத்தாப்பு வரை) இருந்துச்சு. அப்பல்லாம் தொ(ல்)லைக் காட்சி, கணினி இதெல்லாம் என்னன்னே தெரியாது (அதுக்குன்னு நான் ரொம்ப குடுகுடு கெழவின்னு நினைச்சுக்க வேணாம்! :) அதனால எப்பவுமே வெளிலதான் ‘வெள்ளாடி’க்கிட்டிருப்போம். அதுல முக்கியமானவை சொட்டாங்கல், தட்டாமாலை, கண்ணாமூச்சி, நொண்டி, பாண்டி (சில்லு), ஜோடிப் புறா, அப்புறம் 4 வட்டம் போட்டு, நடுவுல ஒரு வட்டம் போட்டு, கல் வச்சு ஒரு விளையாட்டு உண்டு. அதுக்கு பேரு மறந்து போச்சு. உங்களுக்கு நினைவிருக்கா? அப்புறம் ஊஞ்சல், தாயம், பரமபதம், பல்லாங்குழி, இதெல்லாம் இருக்கவே இருக்கு.
சொட்டாங்கல் என்கிறது கூழாங்கற்கள் வச்சு விளையாடறது. கல் எண்ணிக்கையையும் விதிமுறைகளையும் பொறுத்து, இதுலயே விதவிதமான விளையாட்டுகள் இருக்கு. எங்க வழவழன்னு கல்லப் பாத்தாலும் சேத்து வச்சுக்கிறதுண்டு. விளையாட விளையாட அது இன்னும் வழவழப்பா அழகா ஆயிடும்! இந்த விளையாட்டைப் பத்தி தனிப் பதிவே போடலாம்!
மற்ற விளையாட்டெல்லாம் ஓரளவு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். விளையாடும்போது ஏமாத்தறவங்களை “கள்ளாட்டம்” ஆடறா, அல்லது “அழுகுணி ஆட்டம்” ஆடறா, அப்படின்னு சொல்வோம் :)
இப்ப சொன்னதுலயும் நெறைய வழக்கொழிந்த சொற்கள் இருக்குதானே? இதுல எனக்கு பிடிச்சது சொட்டாங்கல்லும், ஊஞ்சலும் :) ரொம்பப் பிடிச்சது தட்டாமாலை. இப்ப கூட ஆள் கெடச்சா இழுத்துகிட்டு சுத்தறதுண்டு! :)
அப்பாடி! தலைப்பு வச்சிட்டு ஆரம்பிச்சு, எப்படியோ தலைப்பை சம்பந்தப்படுத்தி எழுதிட்டேன்!
ஒரு பையன் பரீட்சைக்கு தென்னை மரத்தைப் பத்தி மட்டும் படிச்சுட்டு போனானாம். ஆனா பரீட்சையில மாட்டைப் பற்றி எழுத சொல்லியிருந்தாங்களாம். உடனே இந்தப் பையன் தென்னை மரத்தைப் பத்தி முழநீளக் கட்டுரை எழுதிட்டு, “இப்படிப்பட்ட மரத்தில்தான் மாட்டைக் கட்டுவார்கள்”னு முடிச்சானாம்! இது எப்படி இருக்கு? :)
இந்தத் தொடரைத் தொடர
தமிழ்ச் செம்மல், அ.உ.ஆ.சூ.
குமரனையும்தானைத் தலைவி
கீதாம்மாவையும்தமிழ் மணக்கும் மகரந்தத்துக்கு சொந்தக்காரர்
ஜிராவையும்வருக வருகவென வரவேற்கிறேன்!
அப்பாடா! நான் எழுதினதுலேயே நீ……ளமான பதிவு இது! யாருப்பா அங்கே! கொஞ்சம் சோடா கொண்டு வாங்க – (நிஜமாவே) இது வரைக்கும் படிச்சவங்களுக்கு மட்டும் குடுங்க!!
“போர்”, “வெறுப்பு” “வன்முறை”, “தீவிரவாதம்”, “பயங்கரவாதம்”, இது போன்ற சொற்களெல்லாம் விரைவில் வழக்கொழிந்த சொற்களாக ஆகி விட வேண்டும் என்ற என் சின்ன ஆசையை இங்கே தெரிவிச்சிக்கிட்டு (ஒரு வழியா) விடைபெறுகிறேன் அன்பர்களே!
அன்புடன்
கவிநயா