Monday, June 30, 2014

உயர்த்தி

இன்றைக்கு புதுசா ஒரு தமிழ் சொல் கத்துக்கிட்டேன். “elevator” க்கு தமிழில் “உயர்த்தி”யாம்!

சமீபத்தில் எங்க அலுவலகத்தை ஒரு புது கட்டிடத்துக்கு மாத்தினாங்க. அந்தக் கட்டிடத்தில் 6 தளங்கள் இருக்கு. முதல் தளத்தில் உணவுக் கூடம் இருக்கு. மற்ற தளங்களில் வெவ்வேறு அலுவலகங்கள் இருக்கு. இங்கே இருக்கிற உயர்த்திகள் நவீன தொழில் நுட்பத்தில் இயங்கறது. எப்படின்னா… என்னால உணவுக் கூடம் இருக்கிற 1-வது தளத்துக்கும், என் அலுவலகம் இருக்கிற 3-வது தளத்துக்கும் மட்டும்தான் போக முடியும். மற்ற தளங்களுக்குப் போக முடியாது. அதே போல மற்ற தளங்களில் வேலை செய்யறவங்க, எங்க தளத்துக்கு வர முடியாது. அந்த மாதிரி உயர்த்திகளை அமைச்சிருக்காங்க. மொத்தம் 6 உயர்த்திகள் இருக்கு.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு அடையாள அட்டை  குடுத்துருவாங்க. அந்த அட்டையை scan பண்ணினா, (ஆங்கிலம் கலக்காம எழுதணும்னு ரொம்ப முயற்சி பண்ணினேன், ஆனா scan-க்கு தமிழில் என்ன தெரியலை!) நாம எந்தெந்தத் தளத்துக்குப் போக முடியுமோ, அதை மட்டும் காண்பிக்கும் – எனக்கு 1, 3. அதில் எது வேணுமோ அதை அமுக்கினா, 6 உயர்த்திகள்ல எந்த உயர்த்திக்குப் போகணும்னு (A,B,C,D,E,F) சொல்லும். அதில் ஏறினா மட்டும்தான் போக வேண்டிய இடத்துக்குப் போக முடியும். உயர்த்திக்குள்ள ஏறின பிறகு நம்மால ஏதும் செய்ய முடியாது. அதுவா நின்னாதான் உண்டு! நம் கட்டுப்பாடு இல்லாம அதுவா போறது முதல்ல ஒரு மாதிரி இருந்தது… ஆனா இப்ப பழகிடுச்சு.

அது சரி… அதுக்கென்ன இப்ப, அப்படின்னு நீங்க கேக்கறது எனக்குக் கேக்குது. அடையாள அட்டையை scan பண்ணினப்புறம், எந்த தளத்துக்குப் போகணும்னு தேர்ந்தெடுத்ததுக்கப்புறம், ஒரு நொடிதான் ஆகும், நாம் எந்த உயர்த்தியில் ஏறணும்னு அது சொல்றதுக்கு. ஆனா, அந்த ஒரு நொடிக்குள்ள கவனம் சிதறிடுது! ஒரு முறை அது என்ன சொல்லிச்சின்னே கவனிக்காம வேறெதிலேயோ ஏறப் போயிட்டேன். ஏறுறதுக்கு முன்னாடியே சுதாரிச்சிட்டேன். வேறெங்கேயோ போனாலும், அடையாள அட்டையைப் பயன்படுத்தி திரும்பி வந்துரலாம்னு வைங்க. ஆனா… அந்த சில நொடிகள் கூட கவனத்தை ஒருமுகப்படுத்தி வைக்க முடியலையேன்னு எனக்கே வெறுப்பா இருந்தது. ஆனா, என்னை மாதிரியே சில பேர் “Oh, I wasn’t paying attention”, அப்படின்னு சொல்லிட்டு திரும்ப scan பண்றதையும் பார்த்திருக்கேன். அதுல ஒரு சின்ன ஆறுதல். (அந்த ஒரு முறைக்கு அப்புறம் இப்ப கவனமா இருக்கேன்)

நம் வாழ்வில் நமக்கு எத்தனையோ உயர்த்திகள் கிடைச்சிருக்காங்க. அம்மா, அப்பாவில் தொடங்கி ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், நாம முன் பின் பார்த்திராத ஆன்மீகப் பெரியவர்கள், குடுத்து வெச்சவங்களுக்கு அவங்களுக்கே அவங்களுக்குச் சொந்தமான ஆன்மீக குரு, இப்படி எத்தனை எத்தனையோ. அவங்க சொல்றதைக் கவனமா காதில் வாங்கிக்கிட்டு அதன்படி நடக்கறவங்க, வாழ்க்கையை நல்லபடியா வாழறாங்க. அவங்க ஏதோ சொல்லிட்டுப் போறாங்க, நாம பாட்டுக்குச் செய்யறதைச் செய்வோம்னு இருந்தா கஷ்டம்தான்.

சரியான உயர்த்தியில் ஏறுகிற வரைதான் நமக்குக் கொஞ்சம் வேலை. அதுக்குப் பிறகு அதை நாம கட்டுப்படுத்தவும் முடியாது, அதே சமயம் கவலைப்படவும் தேவையில்லை. அதுவே சரியா கொண்டு போய் சேர்த்திடும். நாமும் சரியான குருவை அடையற வரை நம்ம முயற்சியைப் போடணும். ஏன்னா சீடனாகிற தகுதி வந்த பிறகுதான் குரு அமைவாராம். அப்படிச் சரியான குருவை அடைஞ்சிட்டா, நம்ம சொந்தமா ஏதும் யோசிக்க வேண்டியதில்லை. அவர் சொல்வதைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்டுட்டாப் போதும், நாமும் தானாகவே நல்ல கதியை அடைந்து விடலாம்.

அதனால் உயர்த்திகள் சொல்றதைக் கவனிக்கணும், அதன்படி நடக்கணும். அதுதான் நமக்கு நல்லது!

(இந்தப் பதிவுக்கான தூற்றுதல் எல்லாம் எங்க அலுவலகத்து உயர்த்தியையே சேரும்!)

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா

Sunday, June 22, 2014

நல்ல பிள்ளை நானு!

கன்னங் கரு மேகமே!
கண்ண நிற மேகமே!
செல்வதெங்கே மேகமே!
சொல்லிச் செல்வாய் மேகமே!

காற்று உனக்கு அன்னையோ!
கை பிடித்துச் செல்கிறாய்!
கூட்டிச் செல்லும் இடமெல்லாம்
கருணை மழை பொழிகிறாய்!

தாகத்துக்குக் கடலின் நீரைத்
தயக்கமின்றிக் குடிக்கிறாய்!
கரிக்கும் நீரைக் குடித்த போதும்
இனிக்கும் நீரைக் கொடுக்கிறாய்!

கன்னங் கரு மேகமுந்தன்
உள்ளம் மிக வெள்ளையே!
உன்னைப் பார்த்துப் பாடங் கற்றேன்,
நானும் நல்ல பிள்ளையே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://anadequatemom.wordpress.com/2012/11/14/there-are-no-words-but-im-trying/

Sunday, June 15, 2014

என்று வருவாயென...

http://seventhfairy.deviantart.com/art/WaitiNG-FOr-yOu-336571481

காவல் இருக்கின்றேன்,

காத்துக் கிடக்கின்றேன்,

வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென…

வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென!நீண்டு கிடக்கும்

காலமெனும் பாதையில்

விழிகள் பதித்து –

முரண்டு பிடிக்கும்

புத்திக்குள் வித்தாக

உன்னை விதைத்து -

துவண்டு கிடக்கும்

மனக் குடிலின் வாயிலில்

மலர்கள் விரித்து –

வண்டு குடிக்கும்

மதுவாக உன்

அன்பை நினைத்து -மண்ணூடே ஓடி

நீர் தேடும் வேர் போல -

மரம் தேடி ஓடி

கிளை சுற்றும் கொடி போல -

மடி தேடி ஓடும்

பாலுக் கழும் கன்றாக -

கடல் தேடி ஓடும்

காதல் மிகு நதியாக -

உனைத் தேடி நானும்என்

உயிர் களைத்துப் போன பின்னே…இன்று,

என் மனக் கதவின்

ஒரு ஓரத்தில்…காவல் இருக்கின்றேன்,

காத்துக் கிடக்கின்றேன்,

வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென…

வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென!


--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://seventhfairy.deviantart.com/art/WaitiNG-FOr-yOu-336571481


Monday, June 2, 2014

வார்த்தை ஜாலங்கள் வேண்டாமே!

“ஏம்மா அழற புள்ளைய இடுப்புல வெச்சிக்கிட்டு இப்படிக் கஷ்டப்படற? அவன் என்கிட்டயும் வர மாட்டான்… நீ போயி அவனுக்கு என்ன வேணும்னு கவனி. நான் அடுப்பு வேலையக் கவனிக்கிறேன்”, மாமியாரின் குரலில் தேனொழுகும். ஹாலில் உட்கார்ந்திருக்கிற அப்பாவுக்கு இதெல்லாம் காதில் விழும். “ஆஹா, நம் பெண்ணை என்னாமா கவனிச்சுக்கிறாங்க”, என்று குளிர்ந்து போவார். அவர் போன பிறகுதானே  அன்பான அத்தையின் சுயரூபம் வெளிப்படும்!

“அச்சோ… ஒன்னைப் பாத்தா பாவமா இருக்கு. ஏன் அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு கஷ்டப்படறே? அப்படியே போட்டுட்டு நீ போய் படு. நான் பாத்துக்கறேன்”, அருமையாகச் சொல்வாள் விருந்துக்கு வந்த உறவினப் பெண். சரியென்று போட்டு விட்டுத் தூங்கி எழுந்து வந்த பின் பார்த்தால், பாத்திரங்கள் இன்னும் அப்படியே முழித்துக் கொண்டு கழுவாமல் கிடக்கும்.

“அந்த பில்லுதானே.. அதென்ன பிரமாதம். நாங்கூட நாளைக்கு அந்தப் பக்கம் போக வேண்டியிருக்கு. நானே உங்ககிட்ட வந்து வாங்கிட்டுப் போய்க் கட்டிர்றேன்”, என்று சொல்லி விட்டுச் சென்ற நண்பன் மறுநாள் வருவான் வருவான் என்று உட்கார்ந்திருந்தால், அவன் “அடடா, மறந்தே போச்சே, அப்படியே போயிட்டேனே, ரொம்ப ஸாரி”, என்பான் மறுபடி பார்க்கும் போது.

இதைப் போல எத்தனையோ பேர்களை நீங்களும் அறிந்திருக்கலாம். இனிக்க இனிக்கப் பேசுவார்கள்; பாராட்டு மழைதனில் நனைத்துக் குளிர வைப்பார்கள். ஆனால் காரியம் என்று வந்தால்தான் உண்மை சொரூபம் தெரிய வரும். என்னைப் பொறுத்த வரையில், செய்ய முடிந்தால் சொல்வேன், சொல்லி விட்டால் எப்பாடு பட்டேனும் சொன்ன  வார்த்தையைக் காப்பாற்ற முயற்சிப்பேன். அதனால்தானோ என்னவோ மற்றவர்கள் சொல்வதையும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நம்பி எடுத்துக் கொள்ளும் வழக்கம் வந்து விட்டது. இது வரை எத்தனையோ முறை சூடு பட்டுக் கொண்டு விட்டாலும், அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட வார்த்தைகள் கேட்க இதமாக இனிமையாக இருப்பதும் காரணமாக இருக்கலாம்.

உண்மையிலேயே  நம் நலனை விரும்புபவர்கள் கொஞ்சம் சூடாகச் சொன்னாலும், உண்மையைச் சொல்வார்கள். மற்றவர்கள்தான் காரியம் ஆக வேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் குஷிப்படுத்தத் தயாராக இருப்பார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை இனங்கண்டு கொள்வதும், யார் பேசுவதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்வதும் அவசியம். நாமும் நம்பிக் கெடாமல் இருக்கலாம்.

எண்ணமும், சொல்லும், செயலும் ஒன்றாக இருப்பது உத்தமம். அப்படியிருந்தால் நமக்கும் தொல்லை இல்லை, பிறருக்கும் தொல்லை இல்லை. நம் வரையிலாவது முடிந்த வரையில் அதைக் கடைப்பிடிக்க முயற்சிப்போம்.


அன்புடன்
கவிநயா