Sunday, January 8, 2012

காஃபியா, கோப்பையா?

ரு பேராசியர் இருந்தார். அவரைச் சந்திக்க அவரோட பழைய மாணவர்கள் சிலர் வந்திருந்தாங்க. அவங்க எல்லாருமே வாழ்க்கையில் நல்ல நிலைமையில் இருந்தாங்க. அதாவது நல்ல வேலையில், நல்ல பதவியில், நல்ல சம்பளத்தில், இப்படி. பழைய நினைவுகளை சந்தோஷமா அசை போடுவதில் ஆரம்பிச்ச பேச்சு, எல்லோருடைய வாழ்க்கையிலும் எப்படி மன அழுத்தம் (அதாங்க, stress!) அதிகமாக இருக்கு என்பதில் வந்து நின்னுது. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க பிரச்சனைகளை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

“நீங்க பேசிக்கிட்டிருங்க, நான் போய் காஃபி கொண்டு வரேன்”, அப்படின்னு சொல்லிட்டு உள்ளே போனார், பேராசிரியர். வரும் போது எல்லாருக்கும் காஃபியும், பலவிதமான கோப்பைகளும் (அதாங்க, cups!) எடுத்துட்டு வந்தார். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி இருந்தது, வடிவமைப்பிலும், விலை மதிப்பிலும், வேலைப்பாட்டிலும், நிறத்திலும், தோற்றத்திலும், இப்படி…


எல்லாரும் ஆளுக்கொரு கோப்பையை எடுத்து அதில் காஃபியும் எடுத்துக்கிட்டு, குடிச்சுக்கிட்டே பேச்சை தொடர்ந்தாங்க.

“ஒரு நிமிஷம்”, அப்படின்னார் பேராசிரியர்.

“எல்லாரும் அவங்கவங்க கோப்பையைப் பாருங்க. நீங்க ஒவ்வொருத்தருமே நல்ல அழகான, விலை உயர்ந்த கோப்பையா பார்த்து எடுத்துக்கிட்டிருக்கீங்க. விலை குறைஞ்ச, பார்க்க அவ்வளவா நல்லா இல்லாத கோப்பையெல்லாம் யாருமே எடுக்கலை. இதிலிருந்து என்ன தெரியுது? எல்லாருமே எது மிகச் சிறந்ததோ அதுதான் வாழ்க்கைக்குத் தேவைன்னு நினைக்கிறீங்க. அதுதான் சந்தோஷம் தரும்னு நினைக்கிறீங்க. அதுதான் மன அழுத்தத்தின் மூல காரணம்”.

“அதோட மட்டுமில்லாம, ஒரு கோப்பையை எடுத்துக்கிட்ட பிறகும், மற்றவங்க எதை எடுத்திருக்காங்கன்னு பார்த்து அதை ஒப்பிட வேறு செய்யறீங்க. இதுக்கு பதில் அதை எடுத்திருக்கலாமோன்னுகூட சிலர் நினைக்கிறீங்க.”

“நம்ம வாழ்க்கைதான் காஃபின்னா, பணம், பதவி, சமூக அந்தஸ்து, இது எல்லாமே வெறும் கோப்பைதான்; அவை எல்லாம் வாழ்க்கையை நடத்தறதுக்காக நமக்கு கிடைச்ச கருவிகள். காஃபியோட ருசியையும் தரத்தையும், கோப்பையால தீர்மானிக்க முடியாது. அது போலத்தான் வாழ்க்கையின் சந்தோஷத்தையும், தரத்தையும், கருவிகளால தீர்மானிக்க முடியாது. பல சமயங்களில் நாம கோப்பையைப் பற்றிய கவலையில் காஃபியின் ருசியை அனுபவிக்க மறந்துடறோம்.”

“சிறந்த வாழ்க்கை வாழறதுக்கு சிறந்த கோப்பைதான் வேணுமென்கிறதில்லை. கோப்பை எப்படி இருந்தாலும், வாழ்க்கை சந்தோஷமா இருப்பதும், இல்லாததும், நம்ம கையில்தான் இருக்கு”, அப்படின்னு சொன்னார், பேராசிரியர்.

எவ்வளவு உண்மை! பல சமயங்களில் வாழ்க்கையில் எது முக்கியம் என்பதே மறந்து போயிடுது. தேவையானதை விட்டுட்டு, தேவையில்லாத விஷயங்களில் நம்ம கவனத்தைச் செலுத்தி, அதுக்காக கவலைப்படறதே அதிகமா இருக்கு.

அதோட மட்டுமில்லாம. குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும்போது, ஒருத்தரோட ஒருத்தர் ஒப்பிடக் கூடாதுன்னு சொல்றோம், ஆனா நாமே பல சமயம் நம்ம வாழ்க்கையை பிறருடைய வாழ்க்கையோட ஒப்பிட்டுப் பார்த்து நம்மை நாமே வருத்திக்கிறோம். அந்த வருத்தத்தில் நமக்கு ஏற்கனவே கிடைச்சிருக்கிற நல்ல விஷயங்களெல்லாம் அமாவாசையில் நிலவு மாதிரி மறந்து, மறைஞ்சு, போயிடுது.

இதை அழகா விளக்கற, ஆங்கிலத்தில் படிச்ச ஒரு செய்தியைத்தான் மேலே தமிழில் தந்தேன். முந்தி படிச்சதுதான்; ரொம்ப நாள் கழிச்சு இப்போ தற்செயலா மறுபடியும் வாசிச்சேன். நீங்களும் படிச்சிருக்கலாம். இருந்தாலும் நல்ல விஷயங்களை அவ்வப்போது நினைவு படுத்திக்கிறது நல்லது என்பதால் இங்கே பகிர்ந்துக்கலாம்னு தோணுச்சு.

"The happiest people don't have the best of everything. They just make the best of everything."

இனிமேலாவது கோப்பையில் கவனம் செலுத்தறதை விட்டுட்டு, காஃபியை அனுபவிக்க பழக்கிக்குவோம். என்ன சொல்றீங்க?

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

14 comments:

 1. //கோப்பை எப்படி இருந்தாலும், வாழ்க்கை சந்தோஷமா இருப்பதும், இல்லாததும், நம்ம கையில்தான் இருக்கு//

  மிகச்சரி.

  அருமையான பதிவு.

  நன்றி கவிநயா.

  ReplyDelete
 2. One could even say, " the happy ones do not have everything, they learn to live happily with anything God gives them."

  subbu rathinam

  ReplyDelete
 3. நல்ல பகிர்வுக்கு அக்கா ;-)

  ReplyDelete
 4. நல்ல மெசேஜ் அக்கா.

  ReplyDelete
 5. //அருமையான பதிவு.//

  நன்றி ராமலக்ஷ்மி :)

  ReplyDelete
 6. //One could even say, " the happy ones do not have everything, they learn to live happily with anything God gives them."//

  சரியாகச் சொன்னீர்கள் தாத்தா.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 7. //நல்ல பகிர்வுக்கு அக்கா ;-)//

  நன்றி கோபி :)

  ReplyDelete
 8. //நல்ல மெசேஜ் அக்கா.//

  நன்றி குமரன் :)

  ReplyDelete
 9. once again a very nice post. wish you and your family a very happy pongal.

  ReplyDelete
 10. மிக அழகான கருத்து. தெளிவாக விளக்கியிருக்கின்றீர்கள். நன்றி :)

  ReplyDelete
 11. //once again a very nice post. wish you and your family a very happy pongal.//

  நன்றி தானைத் தலைவி. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

  ReplyDelete
 12. //மிக அழகான கருத்து. தெளிவாக விளக்கியிருக்கின்றீர்கள். நன்றி :)//

  அட, ஜிரா! வருக வருக. நலந்தானே? உங்களை இந்தப் பக்கம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி :) வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 13. //good one!!!.//

  நன்றி, வெங்கடேஷ் ரத்தினம். முதல் வருகைக்கும் நன்றி :)

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)